ஆருமே கொரனோவை பெரிதாக எண்ணவில்லை ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

     
        கொரனோவின் கூடவே வாழ்வென்று சொல்லுகிறார்
        கொரனோவோ விட்டகன்று போவதாய் தெரியவில்லை
        மரணித்தோர் பார்க்கையிலே மனக்கலக்க மாகிறது
        வாழவேண்டு மெனுமெண்ணம் மேலெழுந்து நிற்கிறது 

        கடைதிறக்கக் கட்டளைகள் விரைவாக வருகிறது
        கையுறைகள் முகக்கவசம் காணாமற் போகிறது
        அடைத்துவிட்ட தடையாவும் அகன்றுமே செல்கிறது
        ஆருமே கொரனோவை பெரிதாக எண்ணவில்லை 

        கடற்கரை உலாப்போக கைகோர்த்துப் போகின்றார்
        இடைவெளிகள் எனும்பேச்சோ காற்றோடு போயாச்சு
        கொண்டாட்டம் செய்வதற்கு போடுகிறார் திட்டமெலாம்
        கொரனோவை எதிரியாய் கொள்ளாமல் திரிகின்றார்

        பேருந்து தொடர்வண்டி தன்வழியில் போகிறது
        விமானமும் மேலெழும்ப விருப்பாமாய் காத்திருக்கு
        உருத்தெரியாக் கொரனோவை ஒருவருமே நினையாமல்
        உவப்புடனே தெருவெங்கும் ஓடியோடித் திரிகின்றார்

        அணையாத நெருப்பாக கொரனோவும் இருக்கிறது
        அரசியலோ அதன்மேலே ஆட்சிசெய்ய முனைகிறது 
        அகோரத்தை உணராமல் அனைத்தையுமே திறந்துவிடல்
        ஆட்டங்காண வைக்குமென சொல்லுகிறார் வல்லுனர்கள் 


        திறந்துவிட்ட இடங்களிலே எழுகிறது திரும்பமுமே
        சென்றுவிட்டோம் எனநினைத்த சிக்கலான கொரனோவும் 
        என்னதான் செய்தாலும் விடமாட்டேன் நானென்று
        மிடுக்குடனே கொரனோவும் புறப்பட்டு நிற்கிறதே 









No comments: