சுபாஷினி, வழக்கத்தை விட முற்கூட்டியே எழுந்ததும், அபிதா உறங்கும் வீட்டின் களஞ்சிய அறைக்கு வந்து, அபிதாவை தட்டி எழுப்பினாள்.
அவள் அவ்வாறு அபிதாவை தட்டித்துயில் எழுப்பாதுவிட்டாலும், இன்னும் சற்று நேரத்தில் வழக்கம்போன்று எழுந்திருப்பவள்தான்.
“ என்ன… சுபா… ஏன்… என்ன விஷயம்..? “ படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்து, கூந்தலை சரிசெய்து முடிந்து கட்டிக்கொண்டு கேட்டாள்.
சுபாஷினியும் அவளருகில் அமர்ந்துகொண்டாள்.
“ ரீ போட்டு எடுத்து வரட்டுமா…? “ எழுந்திருக்க முயன்ற அபிதாவின் கைபற்றி, “ வேண்டாம்… உங்களுடன் ஒரு விடயம் பேசவேண்டும். இன்றைக்கு நான் நுவரேலியாவுக்கு போகலாம் என்றிருக்கிறேன். வெளியூர்களில் வேலைசெய்பவர்கள் தங்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் போவதற்கு பஸ் வசதி செய்து கொடுப்பதாக நான் வேலை செய்யும் இடத்தின் மனேஜரிடமிருந்து நேற்று நடு இரவு கோல் வந்தது. கிடைத்திருப்பது நல்ல சந்தர்ப்பம். அதுதான் போய்விட்டு வரலாம் என்று வெளிக்கிடப்போகிறேன். அதற்கு முன்பு உங்களிடம் ஒரு முக்கிய விசயம் பேசவேண்டும். “ என்றாள் சுபாஷினி.
அவளது திடீர் முடிவை எதிர்பார்க்காமல், அபிதா சற்று திகைத்தாள். என்றாவது ஒருநாள் அபிதாவும் சுபாஷினியுடன் செல்வதற்கே விரும்பியிருந்தவள். அவளுக்கு நுவரேலியா, சீத்தா எலிய, றம்பொடை அனுமார் கோயில், ஹக்கல ரோஜாப் பூந்தோட்டம் யாவும் பார்க்கவேண்டும் என்பது நெடுநாள் ஆசை.
தற்போதுள்ள சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. சுபாஷினியின் அம்மாவும் நுவரேலியாவில் சுகமில்லாமல் இருப்பவர். இவளது வருகைக்கு நீண்டநாட்களாக காத்திருப்பவர். கொரோனா வைரஸ் வந்து எல்லாத்திட்டங்களையும் மாற்றி எழுதிவிட்டது.
மஞ்சுளாவும் அந்தப்பயணத்தில் இணையவிருந்தவள். அவளை நுவரேலியாவில் வங்கி ஒன்றில் வேலை செய்யும் தனது தம்பிக்கு மணம் முடித்துக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சுபாஷினி இருந்ததும், அதற்காக அவளையும் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தவும், அந்த திருமண பேச்சுவார்த்தைக்கு அபிதாவையும் துணைக்கு அழைக்க சுபாஷினி விரும்பியிருந்ததும் அபிதாவுக்குத் தெரியும்.
“ ஓம்… சுபா… இந்த ஊரடங்கு எப்போது முற்றாக முடிவுக்கு வரும், நாடு என்றைக்கு வழமைக்குத்திரும்பும் என்பதை சொல்லமுடியாதிருக்கும் இவ்வேளையில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம். கற்பகம் ரீச்சரும் பாவம். ஊருக்குப்போகமுடியாமலும் இங்கே எம்முடன் நிற்கமுடியாமலும், ஓடிப்போய் அந்த மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டில் நிற்கிறாங்க. உங்கட அம்மாவும் பாவம். நீங்கள் போவதுதான் சரி. போய் பார்த்திட்டு வாங்க. ஆனால், கவனம் அந்தப்பக்கம் கடும்மழை, மண்சரிவு என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. பார்த்துப்போங்க.. “ அபிதா, சுபாஷினியின் நெடிய கூந்தலை வருடியவாறு சொன்னாள்.
சுபாஷினி, அபிதாவின் படுக்கையில் தனது சுட்டுவிரலினால் கோலம் வரைந்தவாறு, “ உங்களிடம்தான் இந்த விடயத்தையும் பேசவேண்டும். அதுதான் எல்லோரும் எழும்புவதற்கு முன்பே எழுந்து இங்கே உங்களிடம் வந்துவிட்டேன் “ பீடிகையுடன் பேச்சை தொடரந்தாள்.
“ என்ன சொல்லுங்க… ஏதும் பிரச்சினையா…? “ தலைகுனிந்திருந்தவளின் நாடியை உயர்த்திக்கேட்டாள் அபிதா.
“ பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. மஞ்சுளா மிகவும் குழம்பியிருக்கிறாள். அவளின் அம்மா, அதுதான் அந்த சுந்தரி, தன்னைத்தேடி வரப்போகிறா என்ற பதட்டம் அவளுக்கு வந்துவிட்டது. தனது போன் நம்பரை எடுத்திருப்பது போன்று, இருக்கும் வீட்டு முகவரியையும் தனது பேங் மனேஜரிடம் கேட்டுப்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் மஞ்சுளாவுக்கு வந்துவிட்டது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க அபிதா… சொல்லுங்க…. “
“ இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது. பெற்றமனம் பித்து. அவ்வளவுதான். இவள் மஞ்சுளா, இனிமேல் தனது தாய் தனது வாழ்வுக்கும் இல்லை. சாவுக்கும் இல்லை என்று பிடிவாதத்துடன் தனிமரமாகிவிட்டாள். எப்போதாவது சிங்கப்பூரிலிருக்கும் அப்பாவுடன் பேசுவதாகத் தெரியுது. அதுவும் அவர் கோல் எடுத்தால்தான் பேசுகிறாள். இவளுக்கு தகப்பனுடன் பெரிதாக கோபம் ஒன்றும் இல்லை. தாயை, இவளுக்கு கண்ணிலும் காண்பிக்கக் கூடாதளவுக்கு வெறுப்பு முற்றியிருக்கிறது. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. “
“ இதுவும் ஒருவகையில் இடியப்பச்சிக்கல்தான். அடி எது முடிவு எது என்பதை கண்டுபிடிக்கமுடியாது. இன்றைய எனது பயணத்தில் மஞ்சுளாவையும் அழைத்துப்போக முடியாது. பஸ்காரனும் காவலுக்கு நிற்கும் பொலிஸ்காரரும் ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள். அபிதா… முன்னர் ஒரு தடவை உங்களிடம் சொல்லியிருக்கிறேன். நினைவிருக்கிறதா…? எனது உறவினர் ஒருவருக்கு என்னை மணம் முடித்துவைக்க அங்கே ஏற்பாடு நடக்கிறது. அத்துடன் எனது தம்பிக்கும் திருமணம் செய்து வைத்துவிடத்தான் நான் விரும்புகின்றேன். நான் பார்த்துவைத்திருப்பது மஞ்சுளாவைத்தான். எனக்கு வரவிருப்பவருக்கு எனது பழைய கதைகளை சொல்லிவிட்டுத்தான் முடிவு கேட்பேன். அவர், எனது தம்பிக்கும் உறவு முறைக்கு அப்பால் நல்லதோர் சிநேகிதன். தம்பி எனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை தேடித்தருவதற்கு முயற்சிசெய்யும்போது, நானும் தம்பிக்கு ஏதும் நல்லது செய்யவிரும்புகிறேன்… என்ன சொல்றீங்க அபிதா..? “
“ இன்றைய காலைப்பொழுது நன்றாக விடியவேண்டும். நல்ல செய்திகளுடன் வந்து என்னை எழுப்பியிருக்கிறீங்க சுபா. நல்லதே நடக்கும் என நம்புவோம். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்…? சொல்லுங்கள். “ அபிதா, படுக்கையிலிருந்து எழுந்தவாறு கேட்டாள்.
“ சிலவேளை மஞ்சுளாவின் தாய், இங்கே வரக்கூடும். வந்தால், நீங்கள்தான் அவவுடனும் மஞ்சுளாவுடனும் பக்குவமாகப்பேசி சமாதானப்படுத்தவேண்டும். கஷ்டமான விடயம்தான். ஜீவிகாவின் பெரியப்பாவும், நிலைமை படிப்படியாக சீரடைந்ததும் யாழ்ப்பாணம் போய்விடுவார். அந்தநேரத்தில் மஞ்சுளாவின் தாய் இங்கே வந்தால் நல்லது. உங்களிடம் அவவின் நம்பர் இருக்கிறதுதானே..? அதற்கு முன்னர் அவவின் தற்போதைய நிலைமை என்னவென்று கேட்டு அறியப்பாருங்கள்.. “
இதென்னடா… புதிய வேலை. நான் இந்த வீட்டின் வேலைக்காரியா..? சமையல்காரியா..? பணிப்பெண்ணா..? அல்லது இதற்கும் மேல் கிருஷ்ணபரமாத்மாவைப்போன்ற சமாதானத்தூதுவரா…? இந்தப்பாத்திரம் எவ்வாறு எனது தலைமீது ஏறியது. சமையலறையில் தினமும் காலை முதல் இரவு வரையில் பாத்திரங்களை கழுவிக்கழுவி, கை விரல்கள் தேய்ந்து சிவந்ததுதான் மிச்சம். இனிமேல் சுமத்தப்படவிருக்கும் பாத்திரத்தில் நடிப்பதற்கும் பயிற்சி தேவைப்படும்.
அபிதா மனதிற்குள் யோசித்தவாறு சுபாஷினியின் கூந்தலை ரசித்தாள். அவளது கூந்தல் நீளமானது.
“ இந்த ராணியைப் பார்க்கப்போகும் அந்த நுவரேலியா மன்னர், இந்தக்கூந்தலின் மனம் இயற்கையா..? செயற்கையா…? எனக்கேட்கப்போகிறார். மறக்காமல் ஷம்பும் வாங்கிக்கொண்டு போங்கள் … நான் தேநீருக்கு தண்ணீர் சுடவைக்கப்போறன். உங்களுக்கு ரீயா… கோப்பியா…? “
“ என்ன அபிதா, நான் சீரியஸாய் பேசுறன். நீங்கள் விளையாட்டுத்தனமாகப் பேசுறீங்க… என்ன சொல்றீங்கள்..? “
“ என்ன சொல்லக்கிடக்கிறது சுபா. இந்த வீட்டுக்கு ஒரு வேலைக்காரியாத்தான் வந்தேன். உங்கள் எல்லோருடனும் நெருக்கமாகி உரிமையோடும் பேசிப்பழகிவிட்டேன். படிப்படியாக எனது தொழிலே மாறிக்கொண்டிருக்கிறது. அதுதான் யோசிக்கிறேன். ஒரு மாதிரியாக லண்டன்காரரையும் கற்பகம் ரீச்சரையும் சமாதானப்படுத்தி பேச வைத்தாயிற்று. அவரும் தன்னை திருத்திக்கொண்டிருப்பதாகத் தெரியுது. ஆனால், மஞ்சுளாவின் அம்மாவின் விவகாரம் சிக்கலானது. அது பெரிய இடியப்பச்சிக்கல்தான். “ சுபாஷினியும் அபிதாவுடன் பேசிக்கொண்டு வெளியே வந்தாள்.
வீட்டின் கூடத்திலிருந்து ஜீவிகாவின் மூச்சுவிடும் ஒலி சன்னமாக கேட்டுக்கொண்டிருந்தது. மஞ்சுளாவும் துயில் எழுந்துவிட்டது , அவளது அறையிலிருந்து அவளது வாட்ஸ்அப்பிற்கு வந்த ஏதோ ஒரு இணைப்பிலிருந்து வரும் கொரோனா மீம்ஸ் பாடலிலிருந்து தெரிகிறது.
முகம் கழுவிக்கொண்டு வந்த அபிதா, முகத்தை துடைத்துவிட்டு, அடுப்பில் கேத்திலை ஏற்றி பற்றவைத்துவிட்டு, மஞ்சுளாவிடம் சென்று, காலை வணக்கம் சொல்லிவிட்டு, “ ரீயா… கோப்பியா…? “ எனக்கேட்டாள்.
“ குட்மோர்ணிங்… வந்ததும் வந்தது இந்தக்கொரோனா… மீம்ஸ்களின் கற்பனைக்கும் எல்லை இல்லாமல் போய்விட்டது. வீடடங்கிய புருஷன்மாரின் சமையலைப்பற்றித்தான் கூடுதலாக மீம்ஸ் வருது. இந்தா பாருங்க… “ எனச்சொன்ன மஞ்சுளா, அதுவரையில் வாட்ஸ் அப்பில் பார்த்துக்கொண்டிருந்த மீம்ஸை மீண்டும் ஓடவிட்டாள்.
ஒரு குழந்தை தந்தையிடம் வந்து “ அப்பா, பசிக்குது சாப்பாடு தாங்க “ எனக்கேட்கிறது. “ அம்மா என்ன செய்யிறாங்க… அம்மாவைப் கூப்பிடு “ என்கிறார். அதற்கு குழந்தை, “ அம்மா பிஸி. அவுங்க ஃபேஸ் புக்கில் அவவின்ர சிநேகிதியுடன் ஷட் பண்ணிக்கொண்டிருக்கிறாங்க அப்பா…. “ அப்படி என்ன தலைமுழுகும் ஷட்… ? “ அப்பா கேட்கிறார்.
அதைத்தான் அப்பா நானும் கேட்டேன்.
அப்படியா என்ன சொன்னா..?
Women Liberation பற்றி டிஸ்கஸ் பண்றாவாம். எனக்கு பசிக்குது அப்பா. “ என்கிறாள் குழந்தை.
“ இந்த மீம்ஸையும் ஒரு ஆம்பிளைதான் பதிவேற்றியிருப்பான். சம்சார பந்தத்தில் நொந்துபோனவனாக இருக்கவேண்டும். எழும்பி வாங்க மஞ்சு. இன்றைக்கு சுபா, நுவரேலியாவுக்கு புறப்படுறா. அவ வேலைசெய்யும் இடத்தில் பஸ் ஒழுங்கு செய்து விடுறாங்களாம்…. “
சுபாஷினி பயணத்திற்கான ஏற்பாடுகளில் மூழ்கிவிட்டாள். அபிதா தேநீரும் கோப்பியும் எடுத்துக்கொண்டு வந்து பரிமாறினாள். ஜீவிகாவையும் தட்டி எழுப்பி, சுபாஷினியின் பயணத்தைச் சொன்னாள்.
“ அப்படியா… இன்றைக்கே போகிறாவா…? எப்போது திரும்புவா...? ஏதும் சொன்னாவா…? “
“ சுபா… பேக் அடுக்கிக்கொண்டிருக்கிறா. புறப்படும்போது உங்களிட்ட சொல்வா. இன்றைக்கு காலைச்சாப்பாடு என்ன செய்யட்டும்…? நேற்றே தோசைக்கு அரைத்துவைத்துவிட்டேன். தோசையே சுடட்டுமா..? “
“ ஓகே… “ எனச்சொன்ன ஜீவிகா, பல்விளக்கி முகம் கழுவிக்கொண்டு வந்து அபிதா, டீப்போவில் வைத்திருந்த தேநீரை எடுத்து அருந்தியவாறு கைத்தொலைபேசியில் முகநூல் பார்க்கத் தொடங்கினாள்.
சுபாஷினி, அவளது அறையிலிருந்து அபிதாவுக்கு குரல் கொடுத்தாள். அடுப்பில் தேசைத்தட்டை ஏற்றிவிட்டு, அங்கே விரைந்தாள். குனிந்து தனது பாதங்களையும் பார்த்துக்கொண்டாள்.
சக்கரம் ஏதும் பூட்டியிருக்கவில்லை.
மஞ்சுளா மீம்ஸ்களுடன் சங்கமித்திருந்தாள்.
லண்டன்காரர் லண்டன் நேரத்திற்கு உறங்குகிறார். எழுவதற்கு இன்னமும் அவருக்குரிய நேரம் வரவில்லை. அது அபிதாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
“ உங்களிடம் வாட்ஸ் அப் இல்லையல்லவா…? இதனைப்பாருங்க.. இதுதான் என்ர தம்பி செல்வகுமார். மஞ்சுளாவுக்கு பொருத்தமாக இருக்கும்தானே..? “ சுபாஷினி காண்பித்த இளைஞனின் படத்தைப்பார்த்தாள். சுருள் முடி. சிவந்த முகம். சுபாவின் தோற்றமும் தென்பட்டது. பார்க்க அழகாக இருந்தான்.
“ எங்கட வசந்தமாளிகை வாணிஶ்ரீக்கு ஏற்ற சோடிதான். பேசிப்பார்ப்போம். “
“ உங்களிடம் வாட்ஸ் அப் இருந்தால், படத்தை அனுப்பலாம். “
“ கவலைவேண்டாம். எனக்கு விரைவில் லண்டன் அய்யா லெப்டொப் வாங்கித்தரப்போகிறார். அதுக்குப்பிறகு ஒரு ஈ.மெயிலும் ரெடி பண்ணிவிடுறன். பிறகு இந்த கலியாண புரோக்கர் வேலைக்கும் ஒரு வெப்ஸைட் திறக்கிறன். ஒரு கலியாணத்தை பேசி முற்றாக்குவதற்கு எவ்வளவு சார்ஜ் அறவிடலாம்….சொல்லுங்க…சுபா… எஞ்சிய காலத்தில் அந்தத் தொழிலையும் ஒரு கை பார்த்துவிடுகிறேன். “ அபிதா சிரித்துக்கொண்டே சொன்னாள்.
சுபாஷினிக்கும் சிரிப்பு வந்தது.
“ நல்ல விடயங்களை நாளைக்குப் பார்க்கலாம் என்று ஒத்திவைக்கக்கூடாது என்று, என்ர அவர் அடிக்கடி சொல்வார். எங்கட திருமணமும் அப்படித்தான் நடந்தது. குழந்தை பிறந்ததும் அப்படித்தான். ஆனால், அதன்பிறகு வந்த உக்கிரமான போரும் நாளைக்கு நாளைக்கு என்று பின்போகாமல் கெதியாவே வந்து எல்லாவற்றையும் அழித்துக்கொண்டு கெதியாவே போய்விட்டது. அப்படி ஒரு காலம் இனிமேலும் வரக்கூடாது சுபா. இப்போது வந்திருக்கும் வைரஸ் தொந்தரவும் சொல்லிக்கொண்டு வரவில்லை. அடுத்து இது எவ்வளவு காலம் நீடிக்குமோ தெரியவில்லை. ஒரு நீடித்த போர் முடிவதற்கே முப்பது ஆண்டுகள் கடந்தது. காலா காலத்தில் நல்ல விடயங்களை செய்துவிடுவது நல்லது “
அபிதாவை இடைமறித்த, சுபாஷினி “ இப்பொழுது நான் புறப்படும் அவசரத்தில் இருக்கிறன். நான் போனதன்பிறகு மஞ்சுளாவிடம் பேசிப்பாருங்க. பிறகு இது பற்றி ஜீவிகாவுடனும் பேசுங்க. நான் அங்கே போய் உங்களுக்கு கோல் எடுக்கிறன். ஜீவிகாவுடனும் மஞ்சுளாவுடனும் பேசுவன். சாதகமான முடிவு வந்தால் சொல்லுங்க. அதன்பிறகு மஞ்சுவுக்கே வாட்ஸ் அப்பில் தம்பியின் படம் அனுப்புறன். “ என்றாள்.
“ ம்… சரி…. வெளிக்கிடுங்க…. தோசை சுடப்போறன். சாப்பிட்டுப்போங்க…சரியா… எதுக்கும் யோசிக்கவேண்டாம் சுபா…. எல்லாம் நல்லபடியா நடக்கும். “
அபிதா, தோசை பிரட்டும் சட்டகப்பையை தேடினாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment