அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 15 – மகுடம்


மகுடம் – தோற்கருவி
அமைப்பு

தமிழ்நாட்டின் பறையை ஒத்த அமைப்புடையது மகுடம்
. பூவரசு, வேம்பு, மஞ்சணத்தி மரங்களில் ஏதேனும் ஒரு மரத்தின் கட்டையால்  வளைவு செய்து, பெண் எருமையின் ஈரப்பதம் நிறைந்த தோலை அந்த சட்டத்தில் வைத்து புளியங்கொட்டை பிசினால் ஒட்டவேண்டும். பின்னர் இழுத்துக்கட்டி சூரிய ஒளியில் ஒருநாள் முழுதும் வைத்திருக்க வேண்டும். இதுவே பாரம்பரிய மகுடம் செய்முறை.

நாதம் பொங்கும் இந்த இசைக்கருவி
, ஓசையின் அடிப்படையில் உச்சம், மந்தம் என இரு பெயர்களில் அழைக்கப்படும். உச்சத்தை ‘தொப்பி அல்லது இடந்தலை என்கிறார்கள். இது தொம் தொம் என்கிற ஒசையை தரவல்லது. சற்று பெரிய அளவு உள்ளது. கடினமான எருமைத் தோலால் செய்யப்படும். மென்மையான மந்த இசைக்குப் பெயர் வலந்தலை. அளவில் சிறியது. இதற்கு மென்மையான எருமைத்தோல் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு

தொல்காப்பியர் ஒவ்வொரு நிலத்துக்குமான தோல்கருவியை இனம் காட்டுகிறார். அவை ‘பறை’ என்ற பொதுப் பெயரால் குறிக்கப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் வசித்தவர்கள் தொண்டகம், முருகியம், துடி ஆகிய பறைகளையும், முல்லை நிலத்தில் வசித்தவர்கள் பம்பை, ஏறங்கோட்பறையையும், மருத நிலத்தில் வாழ்ந்தவர்கள் கிணை என்ற பறையையும், நெய்தலில் வாழ்ந்தவர்கள் சாப்பறையையும், பாலை நிலத்தவர்கள் துடி என்ற பறையையும் இசைத்தார்கள் என்று வகைப்படுத்துகிறது தொல்காப்பியம். இவ்விதம், வாழ்க்கையின் கருப்பொருட்களில் ஒன்றாகக் கலந்த தோல் இசைக்கருவிகளில் ஒன்றுதான் மகுடம். ‘குறிஞ்சி நிலத்துக்கு உரிய தொண்டகப் பறையின் மருவிய வடிவம் இது’ என்கிறார் இசை ஆய்வாளர் சுப்புலட்சுமி(சென்னை இசைக் கல்லுரி). மகுடம் இசைக்கும் கலைஞர்களின் சிற்பங்கள் தமிழக கோவில்களில் பல இடங்களிலும் நாம் இன்றளவும் காணலாம்.

தென்மாவட்டங்களில் அழிவின் விளிம்பில் உள்ள கணியான்கூத்து நிகழ்ச்சியில் வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவி மகுடம். இதை கைகளால் மட்டுமே இசைக்க வேண்டும்.
இக்கருவி பார்க்க எளிமையாக இருந்தாலும் செய்வதும் இசைப்பதும் மிகவும் சிரமம். ‘‘அந்தக் காலத்தில் பலர் மகுடம் செய்வதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தார்கள். இப்போது இக்கருவியை முறையாகச் செய்துதரக்கூட ஆளில்லை. இலக்கணம் அறிந்து வாசிக்கும் ஆட்களும் குறைந்து விட்டார்கள்’’ என்கிறார் வடக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த கணியான் கலைஞர் திரு கனேசமூர்த்தி அவர்கள். இவரே முறையாக தரமான மகுடங்களை செய்தும் வருகிறார். ஆசாரிகள் மகுடத்தை செய்யும் தொழிலை பெரும்பாலும் விட்டு விட்டார்கள் என்கிறார் இவர். இவர் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆசாரி மட்டுமே தொழிலை தொடர்ந்து செய்து வருவதாக கூறுகிறார் A.கணேசமூர்த்தி அவர்கள். மேலும் கணேசமூர்த்தியிடம் (தொடர்புக்கு +919488861200)  மந்த மகுடம் 2000 இந்திய ரூபாய்க்கும் உச்ச மகுடம் 2500 இந்திய ரூபாய்க்கும் தரமான முறையில் கிடைக்கும் என்ற தகவலையும் கூறுகிறார். சட்டங்களை தனித்தனியாக செய்து கோர்த்து, பிறகு விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள இசைக்கருவிகள் அங்காடியில் கிடைக்கும் தரமான எருமை தோல்களையும்(readymade) புளியங்கொட்டை பசையையும் பயன்படுத்தியே இவர் மகுடம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.
தென் தமிழகத்தில் கணியான் சாதி மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தான் மகுடம் இசைத்து கணியான் கூத்து ஆடுபவர்கள். சாதி  பட்டியலில் இவர்கள் பட்டியல் இனத்தில் இருக்கிறார்கள். திருவிழா காலங்கள் தவிர மற்ற காலங்களில் பெரும்பாலும் விவசாய தொழில்களுக்கும் மற்ற வேலைகளுக்கும் செல்கிறார்கள். அவர்களின் சாதி சான்றிதழ் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள் இச்சமூக மக்கள். இதனால் கல்வி வேலைவாய்ப்பு போன்ற தளங்களில் இவர்கள் மிகவும் பின்தங்கியே உள்ளனர். எல்லா பட்டியலின சாதியினர் போல் இவர்களுக்கும் சாதிசான்றிதழ் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளதாக கூறுகிறார் கணியான் கலைஞர் ஒருவர். கணியான் கூத்துக்கலை என்பது கோவில், வழிபாடு, கோவில் திருவிழா ஆகியவற்றை சார்ந்த கலையாக இருப்பதாலும் இந்த கொரானா நோய் பாதிப்புக் காலத்தில் திருவிழாக்கள் தடைப்பட்டுள்ளதாலும் கணியான் கலைஞர்களும், விழாக்களை நம்பி வாழும் அனைத்து கலைஞர்களும் பெரும் இடருக்கு ஆளாகியுள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த முன்பணத்தை திரும்பக் கொடுக்கும்படி நெருக்கடி கொடுப்பதால் இவர்கள் செய்வதறியாது உள்ளனர்.
 பெரும்பகுதி தமிழ்மக்களுக்கு மகுடம் என்ற இசைக்கருவி பற்றி தெரியாது. கணியான் கூத்தில் பக்கவாத்தியக் கருவியான இந்த மகுடம் ஒரு நாட்டுப்புற இசைக் கருவியாக மட்டுமே இக்கலையைத் தெரிந்த ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். இதையும் தாண்டிய ஒரு அடையாளம் மகுடம் என்ற இசைக்கருவிக்கு இல்லை. ஆனால், இந்த மகுடம் ஒரு செவ்வியல்கூறு நிறைந்த இசைக் கருவியாகும் . இது கடத்துக்கு இணையான ,மிருதங்கதுக்கு இணையான, பேலாவுக்கு இணையான, தவிலுக்கு இணையான ஒரு இசைக் கருவியாகும். இன்னபிற தோலிசைக் கருவிகளில் வாசிக்கப்படும் அனைத்துப் பாடங்களையும் இந்த இசைக்கருவியில் வாசிக்க முடியும். வாசித்தும் வருகின்றனர் கணியான் மக்கள். மகுடக் கலைஞர்கள் மிகவும் தேர்ந்த இசைக் கலைஞர்கள். இவர்கள் தங்களது குருவான அண்ணாவியிடம் இசை கற்கின்றனர். பரம்பரை பரம்பரையாக இக் கலையை நிகழ்த்தியும் வருகிறார்கள். பிராமணர்கள் எப்படி வேதத்தை எழுதி படிப்பதில்லையோ அதே போன்று தான் கணியான் பாடல்களும். ஏட்டில் எழுதாமல் கேட்டல் கற்றல் பாணியிலியே இக்கலை வாழ்ந்து வருவதாக கூறுகிறார் வரலாற்று அறிஞர் முனைவர் அ.கா.பெருமாள் அவர்கள். வேதத்தையும்  அதை ஒதுபவர்களையும் நமது மண்ணும் இந்த மண்ணின் அரசர்களும் மக்களும் ஆதரித்த அளவு வேறு எதையும் ஆதரித்தாக வரலாறு நம்மிடையே இல்லை. அப்படி ஒரு நிலை இருந்து இருந்தால் இன்று நம்மிடையே இன்னும் பல கலைகளை அழியாமல் வாழ்ந்து இருக்கும்.

சுண்ணாம்பு கேட்ட இசக்கி என்கிற அ.கா.பெருமாள் அவர்களின் நூல் இக்கலையை பற்றியும் கணியான் கலைஞர்களின் வாழ்வியல் பற்றியும் நிறைய பேசுகின்றது.மகுடம் ஓசையின் அடிப்டையில் உச்சம், மந்தம் என வகைப்படுத்தப்படும். உச்ச மகுடக்காரர் பாடகரின் வலதுபக்கமும், மந்த மகுடக்காரர் இடது பக்கமும் நிற்பார். கணியான் கூத்து என்ற கலை, பாட்டு, மகுடம், இசை, ஆட்டம், விளக்கம் என நான்கும் கலந்தது. தொடக்கத்தில் இரண்டு கணியான்களே பெண் வேடமிட்டு மகுடமும் இசைத்து தெய்வக்கதை பாடலைப் பாடி ஆடினர். நாளடைவில் பாடுவதற்கு ஒருவர், பின்பாட்டு (பக்கபாட்டு) பாட ஒருவர், மகுடம் இசைக்க இருவர், பெண் வேடமிட்டு ஆட இருவர், சிங்கித் தாளம் இசைக்க ஒருவர் என மொத்தம் ஏழு பேர் கொண்ட குழுவாக மாறினர். குழுவின் தலைவர் அண்ணாவியார் எனப்படுவார். அண்ணாவி இடதுகையால் இடது காதைப் பொத்திப் பாடும்போது ஆட்டக்காரர்கள் ஆடுவர். இது நேர்கோட்டு ஆட்டம். அண்ணாவி விளக்கம் கூறும்போது ஆட்டக்காரர்கள் அண்ணாவியின் இடதுபுறமும் நிற்பார்கள். அண்ணாவியின் விளக்கம் கூட ராகத் தன்மையுடன் இருக்கும். கணியான் ஆட்டம் பெரும்பாலும் நேர்கோட்டு ஆட்டமாயினும் கும்மிப்பாட்டின் போது வட்ட வடிவ ஆட்டமாக மாறும். கரகாட்டம் போன்றே இந்த ஆட்டமும் தொடக்கம், வேகம், அதிவேகம் என மூன்று நிலைகளில் நடப்பது. அதிவேக நிலையில் மகுடம் உச்சமாய் ஒலிக்கும். நாட்டார் கலைக்கே உரிய பாவகைகளும் இதில் இடம் பெறும். கணியான் ஆட்டக் கலைஞர்களில் உன்னதமான கலைஞர் திருநெல்வேலி மாவட்டம், சேரமாதேவி வானமாமலை. இவர் இப்போது கலை நிகழ்த்த முடியாத நிலையில் இருக்கிறார். இவரது மகன் முத்து பெருமாள் 24 ஆண்டுகளாகப் பாடுகிறார். 36 கதைப் பாடல்கள் இவருக்கு மனப்பாடம். இவருடன் இவரது தம்பி மணிகண்டன் பின்பாட்டுப் பாடுகிறார். இவரது ஒரு மகன் பொறியாளர்; மகள் வழக்குரைஞர். இந்தக் கலை இவரைப் போன்றவர்களுடன் தொய்வுற்று விடும்” - என்கிறார் முனைவர் திரு அ.. பெருமாள் அவர்கள். தற்காலத்தில் வாழும் பிரபல கணியான் கூத்து கலைஞர்கள் - நெல்லை தங்கராஜ், இவர் திருநெல்வேலி பழையபேட்டையைச்  சேர்ந்தவர் , சேரன்மாதேவி முத்துக்குமார் மற்றும் திருநெல்வேலி தங்கசாமி ஆகியோர்.
கணியான் கூத்தின் தோற்றம் சிவபெருமான் பிரம்மனின் தலையை கொய்தலில் ஆரம்பிக்கிறது. வடதமிழகத்தில் பெரியாண்டவர் அங்காளம்மன் போன்ற தெய்வங்களுடன் தொடர்புடையதாகவும்,  நிறுவன சமயங்களான  சைவ சமய கோயில்களிலும் வைணவ திவ்ய தேசங்கள் இரண்டிலும் இந்த நிகழ்வை ஒட்டிய தலபுராணங்கள் வழக்கிலுள்ளது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தான் சுடலைமாடன் கதையும் இருக்கின்றது. சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் அதை சார்ந்ததும் ஆக வரும் நிகழ்வுகளை தென்தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் சுடலைமாடன், முண்டன், மாயாண்டி மற்றும் பிரம்மகுல பேச்சியம்மன் ஆகிய நாட்டார் தெய்வங்களின் கதைகளாகும்.  இக்கதைகளில் வரும் முண்டன் உடன் தோன்றியவரே முத்துபுதியவன் எனப்படும் தெய்வக்கணியான் ஆவார். தற்காலத்தில் வாழும் கணியான் சாதியினர் தங்களை இத்தெய்வக்கணியானின் வாரிசுகளாக கருதிக் கொள்கிறார்கள். மகுடமும் கணியான் கூத்தும் இத்தெய்வ வழிபாட்டில் இருந்து பிரிக்க முடியாத அங்கங்களாக விளங்குகின்றது.
சுடலைதான் தென் மாவட்டங்களில் இடுகாட்டில் காவல் நிற்கிறார். சதுரமான ஒரு உருவம். கீழே அகலத்துடனும் மேலே செல்ல செல்ல ஒடுங்கியும் இருக்கும். நல்ல பெரிய கருப்பட்டியின் வட்டமான பாகத்தைப் போன்ற ஒரு தலை. மழையிலும் வெயிலிலும் கூரையில்லாமல் கிடக்கும் சுடலைக்கு தினமும் பூசை கிடையாது. செவ்வாயும் வெள்ளியும் உடலுக்கு களபம் சாத்தி, முகத்துக்கு மஞ்சணை தடவி, அரளிப்பூ மாலையோ, செவ்வந்தி மாலையோ போட்டு, தலையில் பிச்சிப்பூவை பரிவட்டமாகக் கட்டி, சந்தனத்தை அரைத்து கண் மூக்கு வைத்து, வசதி இருந்தால் வெள்ளியில் கண் மலடு வைத்து சுடலைக்கு அலங்காரம் நடக்கும். கோழியோ ஆடோ என வசதிக்குத் தகுந்தபடி பலி உண்டு. பெட்டைக் கோழியையும் கிடாரியையும் (பெண் ஆடு) பலி கொடுப்பதில்லை. பல ஊர்களில் பங்குனியில் ஒரு முறையும் கார்த்திகையில் ஒரு முறையும் என ஆண்டுக்கு இரண்டு கொடை நடத்துகிறார்கள். மண் சுண்ணாம்பு, செம்மண் கலந்து கும்மாயம் எனப்படும் பசையுள்ள சாந்தால் செய்யப்பட்ட சுடலை இப்போது குறைந்து விட்டது. எல்லா ஊரிலும் சுடலை கற்சிலைக்கு மாறியாகிவிட்டது. பெரிய கோபுரங்கள் பிராமணர் பூசை யாகம் என்று சுடலையும் மிகவும் மாறிவிட்டார். சுடுகாட்டில் கூட விமானமும் கோபுரமும் கொண்ட கோவில்கள் எழுந்து விட்டன.
சுடலை மாடன் கோவில்களில் வியாழக்கிழமை இரவு குடி அழைப்புடன் கொடை தொடங்கும். சனிக்கிழமை அதிகாலை முடியும். வியாழன் இரவு, வெள்ளிக்கிழமை பகல், வெள்ளிக்கிழமை இரவு என தொடர்ந்து கணியான் கூத்து நடக்கும். இயற்கைக் கடன்களை முடிக்கவும் சாப்பிடவும் மட்டுமே அவர்கள் செல்வார்கள். கச்சேரிகளில் அதிகபட்சமாக 2 மணி நேரம் நடக்கும் கச்சேரிகளை மட்டுமே கேட்டு வரும் நமக்கு, எப்படித்தான் இந்த கணியான் கூத்து அண்ணாவி விடிய விடிய பாடுகிறாரோ, மகுடம் வாசிப்பவர் கைக் கடுக்காமல் வாசிக்கிறாரோ என்று தோன்றும்.
கணியான் கூத்து தொடங்கும் போது கணியான் பாடுவதற்கும் ஆடுவதற்கும் இடம் விட்டு சுற்றி ஊர்க்காரர்கள் அமர்ந்து கொள்வார்கள். சிறுவர்கள் சுற்றி வட்டமாக இருப்பார்கள். பனை ஒலையைக் கொளுத்தி , அது “சடக் சடக்” என வெடிப்புடன் எரியும் போது, அதில் உச்சத்தையும் மந்தத்தையும் சூடாக்கி சுதி சேர்ப்பார்கள். “கணங் கணங்” “பிளாங் பிளாங்” என்று சத்தம் கேட்டதுமே உள்ளத்தில் ஒரு துள்ளல் பிறக்கும். இடுப்பில் மேளத்தை சுற்றிக் கட்டி விட்டு, ஒரு கையை மேல் பக்கமாக வைத்தும் இன்னொரு கையை நேரடியாக வைத்தும் வாசிப்பார்கள். உச்சம் வாசிப்பவருக்கும் மந்தம் வாசிப்பவருக்கும் மன அளவில் ஒரு ஒத்திசைவு இருக்கும்.
ஒன்பது மணி அளவில் கணியான் பாட ஆரம்பிப்பார். அதற்கு முன்னதாக மகுடம் வாசிப்பவர்கள் இருவரும் சேர்ந்து வாசித்து ஒரு முத்தாய்ப்பு வைப்பார்கள். அண்ணாவி கணபதி காப்பை ஹம்சத்வனியில் பாடுவார். சாஸ்தா உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு, சுடலைமாடன் கதைக்கு வருவார்கள். நேரம் ஆக ஆக, பாட்டும், வாசிப்பும் ஆட்டமும் களை கட்டும். உரத்த குரலில்,

மாயாண்டி சுடலை அய்யா
சத்திராதி முண்டசாமி
தாயான பேச்சியோடு
கச்சை வருஞ்சி பூட்டி,
கருத்த கச்சை சுண்டலிட்டு
ஒட்டு கச்சை சல்லடமாம்...

 என்று பாடுவார்கள். கணியான்கள் சுழன்று ஆடும் போது கோவிலின் முன்னால் கொடைக்காக விரிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணல் அல்லது கடல் மணல் முன் வரிசையில் இருப்பவர்கள் மீது வாரி இறைக்கப்படும். துரித காலத்தில் பாடும் போது சுற்றி வந்து ஆடி விட்டு, பின்னர் பாட்டுக்காரரின் அருகில் வந்து, நின்ற இடத்திலேயே ஆடிக் கொண்டிருப்பார்கள். இரவு 12 மணிக்கு பூசை தொடங்கும். சுடலை மாடன் கைலாய மலையை விட்டு இறங்கி, காசி கடந்து மற்றுள்ள ஊர்களையெல்லாம் சுற்றி கொடை நடக்கும் ஊர் இடுகாட்டை நோக்கி வருவதை அண்ணாவி பாடிக் கொண்டிருப்பார்.

வாரானே சுடைலைக் கண்ணு, கைலாசம் தான் கடந்து, தான் கடந்து”
பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்”
மாயாண்டி சுடலை ஐயா….கொள்ளையிட வருகிறாரே. ஏ ஏ ஏ..
சந்தன கட்டையிலே சவம் கிடந்து எரியுதய்யா.. ஆ ஆ ஆ
பூவரசம் கட்டையிலே பிணம் கடந்து வேகுதய்யா. ஆ ஆ ஆ.”

பிறகு பூசை தொடரும். பறை (தனியாக இதற்கென வருவார்கள்) முழங்க, கருங்கொம்பு ஊதப்படும்.  பலி, சாமியாட்டம்,அருள்வாக்கு என்று தொடரும் கொடை மீண்டும் கணியான் கூத்துடன் விடிய விடிய நீளும். ஆகம மயமாதல் மற்றும் பிற காரணிகளால் சுடலை மாடன் கோவில்களில் இருந்து கணியான் கூத்து மெல்ல வழக்கொழிந்து வருகிறது. ரெக்கார்ட் டான்ஸ், ஆர்கெஸ்ட்ரா, ஆட்டம் பாட்டம், பட்டிமன்றம் போன்று வேறு கேளிக்கைகளும் கொடை விழாக்களில் இடம்பெறுவதால் கணியான் கூத்து மிகவும் பின்னுக்கு தள்ளப்படுகின்றது. இக்கலைகள் என்றும் வாழ அந்த சுடலை மாடன் தான் அருள் செய்ய வேண்டும்.
ஆடு மேய்த்தலை தலையாய தொழிலாக கொண்டவரகள் தமிழக/கருநாடக/ஆந்திர மாநிலங்களில் வாழும் குரும்பர் பழங்குடியினர். மகுடத்தை போன்றும் அதைவிட சற்று பெரியதுமான இசைக்கருவியை இம்மக்கள் இசைக்கிறார்கள். தப்பட்டை என்று சொல்கிறார்கள். இவை ஆட்டு மற்றும் மாட்டுத் தோல்களில் வேங்கை மரத்தில் செய்யப்படுவதாக கூறுகிறார் குரும்பர் இனத்த சார்ந்த திரு சி.மீனாட்சிசுந்தரம் அவர்கள். குரும்ப சேவையாட்டம் என்னும் அவர்களின் தொன்மையான நடனத்தில் மகுடத்தை இசைக்கிறார்கள். வீரபத்திரர், சாமுண்டி, மாரியம்மன், மகாலட்சுமி(கெப்பியம்மன்) ஆகியோர் இவர்கள் வழிபடும் முக்கிய தெய்வங்கள். இத்தெய்வங்களின் விழாக்களில் மகுடத்தை இசைத்து அடவுகளுடன் சேர்ந்த நடனத்தை ஆடுகிறார்கள். பலகையாட்டம் என்னும் ஆட்டமும் உண்டு. இது ஒரு பலகையில் தெய்வத்தை வைத்து தலையில் சுமந்து ஆடும் ஆட்ட வகையாகும். கோட்டை கொம்பு என்னும் கொம்பு வகை கருவியும் இவர்களின் முக்கிய இசைக்கருவி. குரும்ப சேவையாட்த்தில் 12 வகையான ஆட்ட வகைகள் உண்டாம். மகுடத்தை இசைத்து ஆடுவோர் நீண்ட பாவாடை அணிந்தும் ஆடுகளின் முடியை தொங்கவிட்ட படியும் ஆடுகிறார்கள். சேவையாட்டம் தவிர இவர்களின் அனைத்து வழிப்பாட்டு சடங்குகளிலும் மகுடம் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
தமிழகம் மற்றும் கருநாடகத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களும் மகுடம் போன்ற கைகளால் தட்டி இசைக்கப்படும் கருவியை பயன்படுத்துகிறார்கள். இவையும் கன்னியம்மன் போன்ற தெய்வ வழிபாட்டிலேயே இசைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் மகுடம் போன்று கைகளால் இசைக்கப்படும் இசைக்கருவியை தப்பு மேளம் என்று அழைக்கிறார்கள். தரையில் உட்கார்ந்து இசைக்கப்படுகிறது. அம்மன் கோவில்களில் தவறாமல் இடம்பெறுகிறது. படையனி என்பது தாய் தெய்வத்தை முன்னிறுத்தி ஆடப்படும் கேரளக் கலை வடிவம் ஆகும். இதில் தப்பு மேளம் தான் முக்கிய இசைக்கருவி. தாளமும் உண்டு.
மகுடமும் கணியான் கூத்தும் இந்த மண்ணில் என்றும் வாழ வேண்டும்.அதற்கு நமது ஆதரவும் ஊக்கமும் தேவை.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
தமிழக தென் மாவட்டங்கள்திருநெல்வேலி, துத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசிசுடலைமாடன், சிவணைந்த பெருமாள், முனியசாமி, முண்டசாமி, முத்துப்பட்டன், பட்டவராயன், தளமாய் மாடன், கரடி மாடன், பன்றி மாடன், வண்ணாரமாடன், சங்கிலிபூதத்தார், கருப்பசாமி, இருளப்பசாமி, பலவேசசாமி, சப்பாணிமாடசாமி, இசக்கியம்மன், பேச்சியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன், உச்சினிமாகாளி, தங்கம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், மாடத்தியம்மன், சந்தனமாரியம்மன் மற்றும் தன் உயிரை நீத்து தெய்வமாக இருக்கும் கிராம  தெய்வங்களுக்கான விழாக்களில் கணியான் கூத்து இருக்கும்.
குரும்பர் பழங்குடியின மக்களிடம்
இருளர் பழங்குடியின மக்களிடம்
காணொளி:
கணியான் கூத்து:
குரும்பர்:
-சரவண பிரபு ராமமூர்த்தி
1.     வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2.     மகுட புகைப்படங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் உதவிதிரு கணேசமூர்த்தி அவர்கள், வடக்கன்குளம்.
3.     திரு சி மீனாட்சிசுந்தரம் அவர்கள், ஈரோடு , குரும்பர் தகவல்கள்
4.     கணியான் கூத்துதிருசெல்வம், சொல்வனம்



2 comments:

Unknown said...

கணியான் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்( ST)

குறிஞ்சி TRB தமிழ் ஆண்டகளூர்கேட் said...

சார் வணக்கம் எனக்கு மகுடம் தேவை படுகிறது