இணையத் திரை: ஹாலிவுட்டில் ஒரு தமிழ்ப் பெண்! - அ.முத்துலிங்கம்


சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள். கனடா நாட்டின் டொரண்டோ நகரில் வசிக்கும் என் வீட்டுக்குத் தன் தாயாருடன் அந்தச் சிறுமி வந்தார். அப்போது நாங்கள் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக உலகளாவிய தமிழ் மக்களிடம் நன்கொடைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தோம். அதற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த அந்தச் சிறுமிக்கு அப்போது 14 வயது. புன்னகைக்கு நடுவில் அவர் அணிந்திருந்த பல்லுக்கூடு மின்னியது; அவருடைய கூரான கண்களும் மின்னின. சிறுமியின் தமிழ்ப் பற்றும், ஆர்வமும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவ்வளவு திருத்தமாக, அழகாகத் தமிழ் பேசினார்.
இன்று அவருக்கு வயது 18; பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். உலகப் புகழ் நடிகையாகிவிட்டார். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சர்வதேச இணையத் தொடரே அதற்கான காரணம். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், எழுத்தாளருமான மிண்டி காலிங் (Mindy Kaling) எழுத்து, இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் வரிசையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப்
பெற்றிருக்கும் அந்தத் தொடர்நெவர் ஹாவ் எவர்’ (Never Have I Ever). நான்கு ஆண்டுகளுக்கு முன் தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளிக்க வந்த சிறுமி, இன்று ஹாலிவுட் தொடர் ஒன்றின் கதாநாயகி என்றதும் எங்களுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.
அத்தொடரின் உருவாக்கமும் கதையமைப்பும் மட்டுமல்ல; அதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கும் மைத்திரேயியின் வெகு யதார்த்தமான நடிப்பு எங்களைப் பிரமிக்க வைத்தது. இணையத்தில் வெளியான 15 நாட்களில் இரண்டு கோடிப் பார்வையாளர்களை ஈர்த்திருக்கும் இந்தத் தொடரால், கனடாவைத் தாண்டி, உலகமெங்கும் மைத்திரேயிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. சமூக வலைத்தளப் பக்கங்களில் அவரை மில்லியன்களில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.
கனடாவில் அவர் படித்த உயர்நிலைப் பள்ளியில் பல நாடகங்களில் நடித்தும், சிலவற்றை எழுதி இயக்கியுமிருந்தார். ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருடைய பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். முறையாக நடிப்பு பயிற்சி பெறாத ஒருவரால் எப்படி இத்தனை சிறப்பாக நடிக்க முடிந்தது என்பதுதான் ஆச்சரியம்.
வாழ்த்துவதற்கும்இந்து தமிழ்நாளிதழுக்காக அவரை நேர்காணல் செய்யவும் தொலைபேசியில் அழைத்தபோது மைத்திரேயியின் குரலில் அதே இனிமையும் பண்பும். இனி அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

ஒரு ஹாலிவுட் தொடருக்கான நட்சத்திரத் தேர்வு எப்படியிருந்தது? அதற்கு விண்ணப்பிக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
என்னுடைய தோழி ஒருத்தி விண்ணப்பம் அனுப்பினார். என்னையும் அனுப்பச் சொல்லி வற்புறுத்தினார். சும்மா இருக்கட்டும் என்று நானும் அனுப்பிவைத்தேன். என் வயதையொத்த 15,000 மாணவிகள் விண்ணப்பித்திருந்ததை அறிந்தேன். சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. தேர்வுக் குழுவினர் தொடரின் முதல் அத்தியாயத் திரைக்கதைப் பிரதியை அனுப்பி அதில் ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்து, வசனத்தைப் பேசி நடித்து, வீடியோவாகப் பதிவுசெய்து அனுப்பச் சொன்னார்கள்.
அனுப்பினேன். இப்படி ஆறு பிரதிகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அனுப்பினார்கள். சளைக்காமல் எல்லாவற்றுக்கும் நடித்து அனுப்பினேன். ஒவ்வொரு சுற்றிலும் 1000, 2000 பேர் நீக்கப்பட்டார்கள். இறுதிச் சுற்றிலும் தேர்வாகி, ஹாலிவுட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொன்னார்கள். நானும் எதிர்பார்ப்பு ஒன்றுமில்லாமல் போய்க் கலந்துகொண்டேன். எனக்குத் தெரியும் இறுதித் தேர்வில் என்னுடன் பலர் போட்டியிடுவார்கள் என்று.
மீண்டும் கேமரா முன்பு பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடித்தேன். எல்லாம் முடிந்த பின்னர், தொலைபேசியில் முடிவை கூறுவதாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சரி.. அவர்களது செலவில் ஹாலிவுட்டையும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் நன்கு சுற்றிப் பார்த்துவிட்டோம் என்ற திருப்தியுடன் கனடாவுக்குத் திரும்பிவிட்டேன். பள்ளி வாழ்க்கை வழக்கம்போல ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் வீட்டில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
தொலைபேசி ஒலித்தது. எடுத்து காதில் வைத்து எதிர்முனையில் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன். ‘அவர்களுக்குப் பைத்தியம். அவர்களுக்குப் பைத்தியம்என்று பைத்தியம்போல் நான் கத்தினேன். என் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தைகள் அவைதாம். என் வீட்டில் அப்பா, அம்மா என எல்லோரும் துள்ளிக் குதித்தார்கள். ஆடினார்கள், பாடினார்கள். நான் தேர்வுபெற்றதை அப்படிக் குடும்பம் கும்மாளமிட்டுக் கொண்டாடியது.
முதல் சீசனில் வரும் பல அத்தியாயங்களில் நீண்ட வசனங்கள் பேசும் காட்சிகளை எப்படிக் கையாண்டீர்கள்?
படப்பிடிப்பு என்பது மேல்நிலைப்பள்ளி வகுப்பறை போலத்தான். அடுத்தநாள் நடக்கப் போகும் படப்பிடிப்புக்கான காட்சிகளின் வசனப் பிரதியைத் தந்துவிடுவார்கள். படப்பிடிப்பு பள்ளி நேரத்தைப்போலவே காலை 9 மணிக்குத்தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். இரவில், இது பள்ளிக்கூடப் பாடம் என்று நினைத்துக்கொண்டு கடமையுணர்வுடன் உட்கார்ந்து நான் எனது வசனங்களை மனப்பாடம் செய்தேன். மூன்றாம், நான்காம் நாள் எல்லாம் பழகிவிட்டன.
மூளையைப் பழக்கவேண்டும் அவ்வளவுதான். வசனங்கள் மனதுக்குள் தயாராக காத்திருக்கும்போது கேமிரா முன் எனக்குப் பிரச்சினையாகவே இல்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் ஒரு புது மகிழ்ச்சி என்னை ஆட்கொள்ளும். ஏதாவது புதிய விஷயம் கற்கும்போது அது பிரமிப்பூட்டும். எவ்வளவு கடினமான காட்சி என்றாலும் அதைத் திருப்தியாக நடித்து முடிக்கும்போது கிடைக்கும் பரவசத்துக்கு அளவே இல்லை.

நீங்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள். ஆனால், நீங்கள் நடித்திருப்பது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய தமிழ்ப் பெற்றோரின் மகளாக. வித்தியாசம் உணர்ந்தீர்களா?
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உச்சரிப்பு கொஞ்சம் வேறுபடும். நடை, உடை பாவனையில் சின்ன மாற்றம். அவ்வளவுதான். தமிழையும் தமிழர்களையும் நில எல்லைகள் பிரிப்பதில்லையே.
உங்கள் உண்மையான வாழ்க்கை, நீங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையிலிருந்து பெரிதாக மாறுபடுகிறதா?
நான் நீதிக்காகவும், சம உரிமைக்காகவும் போராடும், கல்விக்கு முதலிடம் கொடுக்கும் பெண். அந்த வகையில் என் வாழ்க்கையுடன் கதாபாத்திரம் ஒத்துப் போகிறது. இக்கதை ஓர் அமெரிக்க இந்தியத் தமிழ்ப்பெண், வெள்ளைக்காரர்கள் படிக்கும் ஓர் உயர்நிலைப்பள்ளியில் தன்னை நிரூபிக்கப் பாடுபடுவதைச் சொல்கிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயாருடன் பிரச்சினை; நண்பர்களுடன் பிரச்சினை. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொய்க்கு மேல் பொய் சொல்கிறாள். அது அவல நகைச்சுவையாகச் சூழலில் விழுந்து தெறிக்கிறது. ஆனால், பொய் பேசுவதும், பெற்றோரிடம் சண்டை போடுவதும், பையனுக்காக அலைவதும் என் வாழ்க்கையில் இல்லை. ஏனென்றால், நான் தமிழ்ப் பெண்.
தொடரில் ஒரு காட்சியில் கடலிலே உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் இடம் கலங்க வைத்துவிட்டது. அதில் நடித்தபோது என்ன உணர்ந்தீர்கள்?
எனக்கு உறவினர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும், ஜெர்மனியிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளனர். நான் நிறைய சாவுகளைக் கண்டிருக்கிறேன். சாவை எதிர்கொள்வதில் ஒரு குடும்பத்துக்கு உள்ள சங்கடம் எனக்குத் தெரியும். சாம்பலைக் கடலில் கரைத்து என் அப்பாவுக்கு விடுதலை கொடுத்தேன். அவர் என்னை விட்டுப் பிரிந்த கோபத்தை ஆற்ற எனக்கு ஒரு வழி கிடைத்தது. அவர் இயற்கையோடு கலந்த அந்த நேரம் எனக்கு இயல்பாகவே அழுகை உடைத்துக்கொண்டு வந்தது. கிளிசரின் தேவைப்படவில்லை.
ஹார்வர்டு தமிழ் இருக்கை அமையும் சமயத்தில் நீங்கள் என் வீட்டுக்குச் சிறுமியாக வந்தீர்கள். இப்போது பிரபல நட்சத்திரம். இப்போது டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி நடக்கிறது. நிதியும் கணிசமான அளவு சேகரித்தாகிவிட்டது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசும் ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வதில் இருக்கும் மகிழ்ச்சி, அதே நாட்டில் உள்ள முதன்மைப் பல்கலைக்கழகத்தில் நம் மொழிக்கு இருக்கை அமைய இருப்பதுபற்றிக் கேட்டபோது இரட்டிப்பானது. தமிழ்தான் நம் அனைவரது அடையாளமும். ஹாலிவுட்டில் எனது பெயரை மாற்றக்கேட்டபோது மறுத்துவிட்டேன். என் பெயர்தான் நான் தமிழ்ப் பெண் என்பதைக் கூறும். உலக மொழியான தமிழ், இக்காலக்கட்டத்தில் உண்மையாகவே உலக மொழிகளில் ஒன்றாகும் கனவை நனவாக்கும் காலம் வெகு அருகில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இதை முன்னெடுக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
பேட்டியாளர், கனடா வாழ் தமிழ் எழுத்தாளர், தமிழறிஞர்.
தொடர்புக்குamuttu@gmail.com






No comments: