மருந்து கண்டுபிடிக்கும் முன்னரே கொரோனா அழிந்து போய் விடும்!
உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி கரோல் சிகோரா நம்பிக்கை
மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் உலகில் இருந்து தானாகவே அழிந்து விடும் என்று உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி ஒருவர் கூறி உள்ளார். சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய பெருந்தொற்று நோயான கொரோனாவுக்கு உலகம் முழுவதும் சுமார் 3 இலட்சத்து 18 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். சுமார் 48 இலட்சம் பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த 2002-ம் ஆண்டு உருவான ‘சார்ஸ்’ நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதேபோல் 2012-ம் ஆண்டில் மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகி பரவிய உயிர் இழப்பை ஏற்படுத்திய ‘மெர்ஸ்’ நோய்க்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆனால் அவ்விரு நோய்களும் உலகில் பெரிதும் தணிந்து போய் விட்டன.
அந்த நோய்க் கிருமிகளைப் போலவே தற்போது உலகம் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான உயிர்ப்பலிகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவுக்கும் முடிவு கட்ட மருந்து இல்லை. ஆனால் சார்ஸ், மெர்ஸ் நோய்க் கிருமிகளை விட கொரோனா மிகவும் ஆபத்தானது என்பதால் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் சீனாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அதை மனித உடலில் செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மருத்துவ ரீதியாக 8 பேரின் உடல்களில் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தி சோதனை நடைபெற்று வருவதாகவும், மேலும் 100 பேர் மருத்துவ பரிசோதனைக்கு முந்திய நிலைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்தைக் கண்டுபிடித்து, அதை பயன்படுத்துவதற்கான ஒப்புதலை பெறுவதில் அமெரிக்காவும் தீவிரமாக இருக்கிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அது பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில் கண்டுபிடிக்கப்படும் மருந்து கொரோனா வைரசை ஒழிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். அதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். புதிய மருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் இதுதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனவே இதற்கான சோதனைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது.
இதனால் கொரோனாவுக்கான மருந்து இன்னும் சில மாதங்களில் கண்டுபிடிக்கப்படுமா? அல்லது சில ஆண்டுகள் ஆகுமா? என்பது பற்றி விஞ்ஞானிகளால் கூட கணிக்க முடியாத நிலை உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் தலைவர் அந்தோனி பாஸி கருத்துத் தெரிவிக்கையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றி எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றார்.
இதற்கிடையே, ஆறுதல் அளிக்கும் இன்னொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முன்பே அந்த நோய்க் கிருமி தானாக இயற்கையாகவே அழிந்து விடும் என்று உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமான கரோல் சிகோரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக நாம் கணிப்பதை விட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தாம் கருதுவதாகவும், எனவே கொரோனா தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினாலே நோய்க் கிருமி படிப்படியாக தானாகவே அழிந்து விடும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
கரோல் சிகோராவின் இந்த டுவிட்டர் பதிவு வெளியானதும், உடனடியாக அதுபற்றிய விமர்சனங்களும் எழுந்தன.
உடனே தனது கருத்து குறித்து அவர் விளக்கமும் அளித்தார். எதுவுமே கணிக்க முடியாத தற்போதைய சூழ்நிலையில், இப்படி ஒரு சாத்தியம் உள்ளது என்ற வகையில் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தியதாகவும் கரோல் சிகோரா தெரிவித்து உள்ளார்.
எதிர்காலத்தில் நிச்சயமாக என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்றும், எனவே நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இதுஇவ்விதமிருக்க கொரோனா வைரசை தடுப்பூசி இல்லாமலேயே தாங்கள் கண்டுபிடித்துள்ள மருந்தை வைத்து தடுக்க முடியும் என்று சீன ஆய்வகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் பெக்கிங் பல்கலைக்கழக ஆய்வகத்திலும் தடுப்பு மருந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. அவர்கள் கண்டுபிடித்த மருந்து மூலம் கொரோனா வைரஸிலிருந்து, பாதிக்கப்பட்ட நபர் குணமடைவது மட்டுமல்லாமல் கொரோனாவிலிருந்து குறுகிய கால நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற முடியும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பெக்கிங் பல்கலைக்கழகத்தின் மரபியல் நிலையத்தின் பணிப்பாளர் சன்னி ஸி கூறுகையில் இந்த குறிப்பிட்ட மருந்தை விலங்குகள் மீது சோதனை செய்ததில் வெற்றிகரமான முடிவைத் தந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட எலியின் மீது மருந்தை செலுத்திய போது, வைரசின் தாக்கம் பெருமளவு குறைந்து விட்டது. அப்படியென்றால் இந்த மருந்து நல்ல பயனைத் தந்துள்ளது என்று அர்த்தம் என்றார்.
மனித எதிர்ப்பு சக்தியிலிருக்கும் அன்டிபொடிகளை நடுநிலையாக்குவதற்கு இந்த மருந்து பயன்படுத்துகிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்த 60 நபர்களிடமிருந்து இந்த சோதனையை சன்னி ஸியின் குழு நடத்தியுள்ளது.
“இந்த ஆண்டு இறுதிக்குள் மருந்து மனித பயன்பாட்டிற்குத் தயாராகி விடும். மருத்துவ பரிசோதனைகளுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மருந்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் தடுக்கப்படும் என நம்புகிறோம். சீனாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால் அது குறித்து ஆராய்ச்சி செய்ய எங்களுக்கு அதிக நேரம் இருந்தது. கொரோனா வைரஸ{க்கு எதிராக போராடி வரும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு எங்கள் மருந்து அதிகம் பயன்படும். அவர்களுக்கு நோயிலிருந்து சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை இந்த மருந்து பாதுகாப்புத் தரலாம். தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா பரவலை நம்மால் இந்த மருந்து மூலம் நிறுத்த முடியும் என நம்புகிறோம்”. இவ்வாறு அவர் கூறினார்.
அதேசமயம் கொரோனாவில் இருந்து 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டறிந்துள்ளதாக பங்களாதேஷ் டொக்டர்கள் அறிவித்துள்ளனர்.
பங்களாதேஷ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த தரெக் ஆலம் என்ற டொக்டரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்துக் கலவையை கண்டறிந்துள்ளது. தரெக் ஆலம் தலைமையிலான குழுவினர் கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்ட இவர்கள் மெக்டின் மற்றும் டொக்ஸி-சைக்ளின் ஆகிய மருந்துகளை கலந்து அளித்தும் சோதித்துள்ளனர்.
60 பேரிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில் 4ம் நாளிலேயே 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். அவர்களுக்கு முதல் 3 நாட்களில் சுவாசப் பிரச்சினை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.   நன்றி தினகரன் No comments: