ஊடக அறிக்கை: 19-5-2020


ஹிஸ்புல்லாவின் கைது மற்றும் தடுப்புக்காவல் முற்றுமுழுதான மனித உரிமை மீறலும், சட்டத்துறையினர் சுதந்திரம் மற்றும் நேர்மையான நீதிவிசாரணை மறுப்புமாகும்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஓர் பிரபல்யமான மனித உரிமைகள் வழக்கறிஞர். அதிகாரத்திலிருப்பவர்களின் முறையற்ற செயற்பாடுகளை பல தடவைகள் தட்டிக் கேட்டிருந்தவர். எவ்வகையான இனவாதம், தீவிரவாதம் மற்றும் அநீதியான செயல்களையும் எப்பொழுதும் வெளிப்படையாகக் கண்டிப்பவர். 14 ஏப்ரல் 2020 அன்று அவர் திடீரென கைதுசெய்யப்பட்டு குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் ஏன் கைதுசெய்யப்பட்டார் என்பது பற்றி அவருக்கோ அவர் குடும்பத்தினருக்கோ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஒருசில நாட்களின் பின் பொலிசார் திரு ஹிஸ்புல்லாஹ் 2019 ஈஸ்டர்தினத் தாக்குதல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட "புதிய விசாரணைகளின் போது" இதற்கான சாட்சியம் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இலங்கை உயர் நீதிமன்றத்தில் பின்தங்கிய சமூகங்களின் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பந்தமாக அதிகம் வாதிடும் வழக்கறிஞர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் கைதுக்கான அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றி பல்வேறு சர்வதேச அமைப்புகள் உட்பட பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த  அடாத்தான அவரது கைதானது அரசாங்கத்துக்கு அரசியல் எதிர்விளைவுகளைத் தரக்கூடிய நீதிமன்றச் சவால்களைத் தவிர்ப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படுகிறது.  
திரு ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மனிதாபிமானம் மிக்க ஓர் சமூக செயற்பாட்டாளரும்கூட. சில நாட்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கருதப்படுபவர்களின் உடல்கள் அவர்களது சமய சம்பிரதாயங்கள் எதுவாயினும் கட்டாயமாக எரிக்கப்படவேண்டுமெனக்கூறி, 'தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தை' வர்த்தமானி அறிவித்தல் மூலம் மாற்றியமைத்ததை வன்மையாகக் கண்டித்திருந்தார். சட்டத்தரணிகள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞான ஆலோசகர்களின் எதிர்ப்பையும் கருத்திலெடுக்காமல் அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படுவதை அவர்களது சமய மற்றும் கலாச்சார நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தடைசெய்ததானது, இரக்கமற்றதும், மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்காததும், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அரசியல் லாபமீட்டும் குறுகிய நோக்குடன் செய்யப்பட்ட செயலுமாகும். 
    
ஒரு சட்டத்தரணியைக் கைது செய்யமுன் பொலிஸார் சட்டமாஅதிபருக்கும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் தெரிவிப்பது இதுவரை நடைமுறையில் இருந்த வழக்கமாகும். ஆயினும் பொலிஸார் இதையும் கடைப்பிடிக்கவில்லை.
திரு ஹிஸ்புல்லாவின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு, பொலிசாரும் உளவுத்துறையினரும் அவரைக் கைது செய்வதற்கென எவ்வாறு கோவிட்-19 கண்காணிப்பு நடவடிக்கைகளை துஷ்ப்பிரயோகம் செய்தனர் என்பதை வெளிக்காட்டுகிறது. பொதுச்சுகாதார பரிசோதனைகள் செய்வதாகக் கூறிக்கொண்டு சுகாதார அதிகாரிகள் வேடத்தில் அவர் வீட்டுக்குள் புகுந்த CID அதிகாரிகள், அவரைக் கைவிலங்கிட்டபின் சட்ட அலுவலகத்துள் நுழைந்து தேடுதல் நடத்தி, அவர் தோற்றியிருந்த இரு நீதிமன்ற வழக்குகளுக்கான சட்டக்கோவைகளை தம்முடன் எடுத்துச் சென்றனர். அத்துடன், எகிப்தியரான அவர் மனைவியிடமிருந்து சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலமொன்றில் கையெழுத்து வாங்கிச் சென்றனர். அவர் கணவரது கைதுக்கான காரணமோ, தடுத்து வைப்பதற்கான உத்தரவுப் பத்திரமோ காண்பிக்கப்படவில்லை. மேலும் அவரது கைது நடவடிக்கைகளை கண்காணித்த CID அதிகாரி இச்சம்பவம் பூராவும் அவர்களது குடும்பம் தமது தாய்மொழியல்லாத சிங்களத்தில் மட்டுமே உரையாடவேண்டுமெனவும் பணித்திருந்தார். இவையாவுமே ஒரு வழக்கறிஞரின் மனித உரிமைகள் மற்றும் சட்டத்துறைசார் சுதந்திரங்களை முற்றிலும் மீறும் செயலாகும். அவரது இந்தக் கைதானது ஒரு வழக்கறிஞர் தனது கடமையை எவ்வித தடையோ, பயமோ, பக்கசார்போ இன்றி, சுதந்திரமாக செய்வதற்குள்ள உரிமையில் தலையிடுவதாக மட்டுமின்றி, வழக்கறிஞர்––வழக்காளி சிறப்புரிமையை கடுமையாக மீறும் செயலுமாகும்.
இதனைத் தொடர்ந்து, குற்றவியல் விசாரணைப் பிரிவினர் திரு ஹிஸ்புல்லாஹ் அவர்களை பயங்கரவாதச் செயல்களில் தொடர்புபடுத்தும் நோக்குடன் பல சிறுவர்களை கட்டாயப்படுத்தி விசாரித்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது. இவ்வாறு சிறுவர்களை விசாரித்தமை தொடர்பான விபரங்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல வழக்குகளிலிருந்து வெளிவந்துள்ளது.

திரு ஹிஸ்புல்லாவின் குடும்பத்தினர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மக்கள் கருத்தை தவறாக இட்டுச்செல்லும் வகையில் மோசமான ஒரு ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றும், "அவரைக் கைப்பற்றி வைத்திருப்பவர்களால் திரித்துப் புகுத்தப்படும் மிகத்தவறான, மூர்க்கத்தனமான பொய்களின் அடிப்படையில் ஓர் பக்கசார்பான ஊடக விசாரணை நடப்பதை நாம் விரும்பவில்லை. ஒரு மாதமாக அவருக்கு தமது சட்டத்தரணிகளுடன் பேசக்கூட அனுமதி தரப்படவில்லை. தன்னை விடுவிக்கக்கூடியதென அவர் நம்புகின்ற சாட்சியங்கள் அவரிடம் உள்ளன" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 2018 இல் இலங்கைப் பாராளுமன்றம் அரசியல் சட்டத்திற்கு மாறாகக் கலைக்கப்பட்ட விடயத்தை திரு ஹிஸ்புல்லாஹ் வெகுவாகக் கண்டித்திருந்ததும், தற்போதைய கோட்டாபய ஜனாதிபதி ஆட்சியின் சட்டபூர்வத்தன்மை பற்றிக் கேள்வியெழுப்பியிருந்ததும் பலரும் அறிந்ததே. அவரது தற்போதைய கைதானது, அரசுசார் ஊடகமொன்றின் ஒத்துழைப்புடன்    தீவிரதேசியவாத உணர்வுகளை சிங்கள சமூகத்தினரிடையே தூண்டி, மீண்டும் ஒருமுறை அரசியல் லாபம் பெறுவதற்கான சதியாகவே பார்க்கப்படுகிறது. 
நாடு மிகமோசமான சுகாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் இவ்வேளையிலும், சகல மக்களினங்களிடையேயும் பொறுமை, புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவேண்டிய நேரத்திலும், அரசு இவ்வாறான சந்தர்ப்பவாத தந்திரோபாயங்களில் ஈடுபடுவது மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை அமைப்பு திரு ஹிஸ்புல்லாஹ் மீதான குற்றச்சாட்டுகளை இலங்கை அதிகாரிகள் தாமதமின்றி தெளிவுபடுத்த வேண்டுமென்றும், முறையான நீதிவிசாரணைக்கான விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதுடன், சட்டத்தரணிகளை ஈடுபடுத்துவதற்கான அவரது உரிமையை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
திரு ஹிஸ்புல்லாவுக்கு எதிரான எந்த விசாரணையையும் நியாயமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதுடன், 'வழக்கறிஞர் பணி தொடர்பான ஐ.நா. அடிப்படைத் தத்துவங்களுக்கு' அமைய அவரது சட்டத்துறையினர் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதித்தும் அதற்கு இசைவாகவும் செயற்படவேண்டுமென்றும், இலங்கை அரசாங்கத்தை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
திரு ஹிஸ்புல்லாவின் சட்டவிரோதமான கைதையும், கோவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின்னர் இலங்கை முஸ்லீம் மக்களுக்கெதிராக அதிகரித்துவரும் பகைமை மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை கருத்தில்கொண்டும், மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கம், இலங்கைப் பல்லினதேசம் ஆபத்தான அரசியல் உந்துதலால் ஓர் சமூகப் பேரழிவில் மூழ்குவதைத் தவிர்க்க தக்க இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். 
ஐ.நா. பொதுக்காரியதரிசி அன்ரோனியோ கிற்ரேரஸ் கூறியதுபோல், நாம் "பகைமை எனும் நோய்க்கிருமியிலிருந்து எமது சமுதாயங்களின் எதிர்ப்புச்சக்தியைப் பலப்படுத்த இப்போதே செயற்பட வேண்டும்."
கையொப்பமிடப்பட்டது:

கலாநிதி லயனல் போபகே
தலைவர்
இலங்கையில் நல்லாட்சிக்கான அவுஸ்திரேலிய அனுசரணை (இணை)
மெல்பன், ஆஸ்திரேலியா
மோபைல்:     +61 405 452 130
மின்னஞ்சல்:   lionel.bopage@gmail.com



No comments: