கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -14 ஈழத்து பேனா மன்னர்கள் தொடரில்… என்னை விதந்து எழுதிய “ நடமாடும் நூலகம் “ இரசிகமணி கனகசெந்திநாதன்யாழ்ப்பாணத்தில்  ஈழகேசரி என்ற பெயரில் ஒரு பத்திரிகை 1930 களில் வெளிவந்திருப்பது உங்களுக்குத் தெரியுமா..?  மூத்த தலைமுறையினர் அறிந்திருக்கக்கூடும். அதன் ஆசிரியராக இருந்தவர் நா. பொன்னையா என்ற அன்பர். குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்.  
1955 ஆம் ஆண்டில் ஒருநாள் எனது பெயருக்கு இரண்டு ஈழகேசரி பத்திரிகை பிரதிகள் தபாலில் வந்தன. வழக்கத்தில் அதில் நான் சிறுகதையோ அல்லது கவிதையோ எழுதியிருந்தால்தான் அவ்வாறு பிரதி அனுப்புவார்கள்.
ஆனால், அந்த வாரம் அவ்வாறு நான் அந்தப்பத்திரிகையில் எழுதியதாக  எனக்கு நினைவில் இல்லை. தற்செயலாக அதனை அனுப்பியிருக்கலாம் என எனது மனதை சமாதானஞ் செய்துகொண்டு, தபாலில் வந்த ஈழகேசரி பத்திரிகை பிரதிகளை பிரித்துப்பார்க்கின்றேன்.
அதில்  நான் கண்ட கட்டுரைகளில் ஒன்று என்னைப் பிரமிக்கச் செய்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் வாசித்தேன்.
கரவைக்கவி கந்தப்பனார் என்னும் எழுத்தாளர்  “ஈழத்துப்பேனா மன்னர்கள்  “ என்ற தொடரில் தமது 39 ஆவது கட்டுரையை எழுதியிருந்தார். என்னைப்பற்றிய கட்டுரை அது. பேரார்வத்தோடு அக்கட்டுரையை  வாசித்தேன். அதில் இருந்தது இதோ ஒரு பகுதி:
       “ புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
                  பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
     மெத்த வளருது மேற்கே – அந்த
                மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.
          சொல்லவுங் கூடுவதில்லை. – அதைச்
       சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
 என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ !
         இந்த வசையெனக் கெய்திட லாமோ
  சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
          செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !
இவ்வாறு நூறு வருடங்களுக்கு முன்பே, அமரகவி பாரதி தமிழ்த்தாய் கட்டளை இட்டதுபோல் தனது மனக்கருத்தை பாட்டாக வடித்தார். இதைப் படியாத எழுத்தாளர்கள் இல்லை. இரசிக்காத ஆட்கள் இல்லை. பேசாத பேச்சாளர் இல்லை. ஆனால், செயல்தான் சூனியமாக இருந்தது. இருக்கிறது.
வெளிநாட்டு இரண்டாந்தர நாவல்கள் மாத்திரம்தான் கலைச்செல்வங்களாக – பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களாக -  ‘முழி ‘  பெயர்க்கப்பட்டு வாசகர் தலையிற் கட்டப்பட்டன. கட்டப்படுகின்றன.
இராஜாஜி அவர்கள்  “  சொல்லாக்க மகா நாடு “   கூட்டி ஆராய்ந்தும்,  “ தமிழில் முடியுமா..?   “ என்ற நூல் எழுதி வெளியிட்டும் முயற்சி செய்து பார்த்தார். “ தமிழில் விஞ்ஞானத்தைப்பற்றிக் கட்டுரை எழுதமுடியும் என்பது இந்த நூலால் வெளியாகிறது. ஆனால், “  தமிழில்  விஞ்ஞானத்தைப் படிப்பித்தல் முடியுமா..? என்பது இனிமேல்தான் தெரியவேண்டும்.  “ என்று தி.ஜ.ர. அவர்களே கேலி செய்தார்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் , டாக்டர் உ.வே. சாமிநாதையர் காலத்துப் பழைய கலைமகள் சஞ்சிகையும், பெ. நா. அப்புஸ்வாமி அவர்களும் இத்துறையில் செய்த தொண்டைத் தமிழ்நாடு மறக்கமுடியாது. சென்ற நாலைந்து வருடமாக தமிழில் விஞ்ஞானக்கலையை அறியவும் படிக்கவும் பலர் துடிக்கிறார்கள்.
                              கலைக்கதிர், விஞ்ஞானி போன்ற பத்திரிகைகள்  அதற்காகவே நடத்தவும்படுகின்றன. ஈழநாட்டில் இத்துறையில் இப்போது வேலை செய்து வருபவர்தான்  “ அம்பி  “  என்ற பெயருடைய                                                இ. அம்பிகைபாகன். அவர்களாவர்  “
இதை வாசித்தபொழுது, எனக்கு என்னை அறியாத ஒரு பெருமையும் மன நிறைவும் ஏற்பட்டது.   அச்சமயத்தில், இருபத்தைந்து வயதான என்னை,   ஈழத்து பேனா மன்னர் என்ற வரிசையிலே சேர்த்து எழுதியவர் யாரென அறிதல்வேண்டும் என்ற அவா ஒன்று. அவர் யாரென அன்றுவரை யான் அறியேன். அதே வேளை  “  நான் அப்படி என்ன செய்துவிட்டேன்..? “ எனவும் சந்தேகம் ஒன்று மனதில் எழுந்தது.
நாலைந்து ஆண்டுகளாக எழுதினேன் என்பது உண்மைதான். அதனாலே, யானும் ஓர் பேனா மன்னனா..? அத்தொடரை எழுதுபவர் யாரென அறியும் ஆவல் ஒருபுறம் அழுத்தியபோதும்,  என்னை அறிமுகப்படுத்திய அந்தப்பகுதியை பலமுறை மௌனமாக வாசித்து இன்புற்றேன். பின்பு மேலும் தொடர்ந்து வாசித்தேன்.
 “தாய் மொழி மூலம் சகல பாடங்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய இந்தக் காலத்திலே, தமிழில் விஞ்ஞானத்தை எப்படி சொல்லிக்கொடுக்கலாமென்று ஆசிரியர்கள் தயங்குகின்ற இந்த நேரத்திலே விஞ்ஞானப்பாடங்களை பயிற்றுவதில் அனுபவம் உள்ளவரான அம்பிகைபாகன் – இதர துறைகளைக் கைவிட்டு, “  மாணவர் விஞ்ஞானம்  “என்ற பகுதியை தொடர்ந்து எழுத முன்வந்தது கல்லூரி மாணவரின் அதிர்ஷ்டமே ஆகும்  “
இந்த வாக்கியம் எனது சந்தேகத்தை நீக்கியது.  “ மாணவர் விஞ்ஞானம்  “ என்ற பகுதியை நான் “ ஈழகேசரி”  யில் தொடர்ந்து எழுதிவந்து காலம் அது. பாடநூல்கள் இன்றி ஆசிரியர்கள் அல்லற்பட்ட காலத்திலே, ஈழகேசரி ஆசிரியர் இராஜ அரியரத்தினம் வற்புறுத்தியதற்கு இணங்கித்தான் நான் அக்கட்டுரையை  எழுத அன்று உடன்பட்டேன். அதனாலே அவரையும் மௌனமாக வாழ்த்தினேன்.
ஆனால்,  “ இந்தக் கரவைக்கவி கந்தப்பனார் யார்…?  “
அதுபற்றி இராஜஅரியரத்தினம் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது,  அவர் என்னை அந்த கரவைக்கவிக்கு அறிமுகஞ்செய்து வைத்தார். அதன்பின்புதான் அவரை நான் யாரென அறிந்துகொண்டேன். இரசிகமணி கனக செந்திநாதன் எனப்பிற்காலத்தில் அறியப்பட்ட கனக செந்திநாதனே அவராவார். என்னைப்பற்றிய தகவல்களை அவர் எப்படிப்பெற்றார்..?
இந்த ஆய்வில் இறங்கியபோதுதான், இரசிகமணி பற்றி முழுமையாக அறியமுடிந்தது. ஒவ்வொரு எழுத்தாளனும் எழுதிப் பிரசுரமாக்குகின்ற கதை, கவிதை, கட்டுரை போன்ற ஆக்க இலக்கியப்படைப்புகளைச் சேகரித்து வைக்கின்ற பழக்கம் அவருக்கு இருந்ததெனவும், அதனாலே “  நடமாடும் வாசிக சாலை  “ என அவரை மற்றவர்கள்  குறிப்பிடுவர் எனவும் அறிந்துகொண்டேன்.
நான் எழுதிய சிறுகதைகளுட் சிலவற்றை விமர்சனஞ் செய்தபின்னர்,  அவர் தமது கட்டுரையில் எனது கவிதைகள் பற்றியும் எழுதியிருந்தார். அன்னார் கூறியவற்றுள் ஒரு பகுதி இதுவாகும்.
“ ……. அன்பரவர்களுடைய கதைகளிலே கவிதை நடையைக் கண்டவர்கள், அவர் ஒரு கவிதை மன்னருந்தான் என்று நான் சொன்னால் ஆச்சரியப்படமாட்டார்கள். தற்காலப் பிரச்சினையாகிய தமிழ்த் தலைவர்களின் போக்கைக் கண்டு அவர் உள்ளம் வெதும்பிப் பாடுவதைக்கேளுங்கள்:
  “ ஓடிடும் தமிழா நில், நீ
 உறங்கும் உள் மனதைத் தட்டு
 நாடெலாம் சுற்றிப்பார் போ
 நந்தமிழ்க் கன்னிப் பெண்ணை
வீடிலாக் கைம்பெண் போன்று
வீதியில் விரட்டு வோரை
 மாடுபோல் தொடரும் நீ ஓர்
மனிதனாய் வாழ்கின் றாயே !
இத்தொடரிலே வந்த சுதந்திரம் இழக்கின்றாயே என்ற கவிதை பலரால் பராட்டப்பட்டது.
ஆம், காலம் மாறியது. ஆயினும் கோலம் இற்றைவரையில் மாறவில்லை. ஐம்பது ஆண்டுகளின் பின்பும் ஈழத்து தமிழ்த் தலைவர்கள் இன்றும் அதே  கோலத்திலேதான் நிற்கின்றார்கள். தமிழர் ஆழியில் மூழ்கும் நிலையிலும் சுயநலன் தூரவில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற ஞானம் பிறந்ததாகத்  தெரியவில்லை.
இனி, தெள்ளு தமிழ்க் காரிகையை விளித்து அவர் பாடியதில் ஒரு சிறுபகுதி எனக்குறிப்பிட்டு தரப்பட்டுள்ளதைத் தருவோம்.
                             “  பொங்கும் எனது ணர்வைப்
                             பொதிந்த கவிச்சுவையால் – நான்
                                              சங்கப்புலவர் களைச்
                            சாகடிக்கும் வேளையிலே
                                             கானக் குயில் போல
                           கனிவாய் இசை பாட – நீ
                                              வானிற் குதித்தோடி
                            வாராய் என் காதலியே …!
சங்கப்புலவர்களைச் சாகடிக்கும் வேளையிலே… என்ற ஆழ்ந்த கருத்தும் அருமையான   ஹாஸ்யமும் உள்ள வரிக்காக அன்பர் அவர்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் என்னும் இரசிகமணி, பின்வரும் குறிப்புடன் தமது கட்டுரையை முடித்துள்ளார்.
விஞ்ஞான விளக்கங்களும், அருமையான கதைகளும் அமைதியான கவிதைகளும் பாடும் அம்பிகைபாகன், பிரபல எழுத்தாளர்கள் பிறந்த ஊராகிய நாவற்குழியைச் சேர்ந்தவர். பண்பாட்டிலும் ஒழுங்கிலும்பிரசித்திபெற்ற யூனியன் கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறார்.  இளைஞராகிய இவரது எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்று இப்பொழுதே கூறிவிடலாம். “ 
- இந்த வாழ்த்துரை என் முயற்சிகளுக்கெல்லாம் பின்னை நாளிலே உந்துசக்தி அளித்தது என்பது உண்மை.
இனி, இன்னொரு சந்தர்ப்பத்தில் இரசிகமணி தனது விமர்சனத்தின் மூலம் என்னைத் தட்டிக்கொடுத்த பாங்கினையும் குறிப்பிடுதல் பொருத்தமானதாக அமையும் என்பது எனது எண்ணம்.
அது 1962 இல் வேலணையிலே நடைபெற்ற திருக்குறள் மகா நாட்டைத் தொடர்ந்து, கலைச்செல்வி என்னும் மாசிகையில் எழுதிய கட்டுரையாகும். குறி தறவில்லை என்ற அந்தக்கட்டுரையில், ஈழத்துப்பேனா மன்னர் என்ற தொடரிலே இளஞ்சந்ததி எழுத்தாளனான என்னை சேர்த்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அக்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி பின்வருமாறு:
“  ஈழத்துப் பேனா மன்னர்கள் என்ற வரிசையை நான் எழுதிவருகையில் ஒரே ஒரு இளஞ் சந்ததி எழுத்தாளரை மற்ற முதியவர்களுடன் சேர்த்திருந்தேன். தமிழில் விஞ்ஞானக்கட்டுரைகள் எழுதுபவர் என்ற சிறப்பு அதற்கொரு காரணம். ஆனால், அந்த ஒரு காரணம் மாத்திரமல்ல, அருமையான சிறுகதைகள் பலவற்றையும் அவர் படைத்திருந்தார். அவர் பாடிய  இரண்டொரு கவிதைகளையும் விமர்சித்துவிட்டு ,  இறுதியில் ஈழகேசரி இலக்கியப்பண்ணையிலே பக்குவம் பெற்று வரும் இளைஞராகிய இவருடைய எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்று இப்போதே கூறிவிடலாம் என்று முடித்திருந்தேன். என் குறி தவறவில்லை. இதயம் பூரிப்படைகிறேன். அந்தப் பழைய இளம் எழுத்தாளரும் தற்போது வேகமாக முன்னேறி முன்னணிக் கவிஞராக விளங்கி வருபவரும் யார்..? அவர்தான் அம்பி என்ற அம்பிகைபாகன்.
 “ சமீபத்தில் வேலணையில் நடந்த திருக்குறள் மாநாட்டுக் கவியரங்கத்தில் பிரபல கவிஞராகிய மு. செல்லையா, யாழ்ப்பாணன், மஹாகவி , முருகையன், தில்லைச்சிவன் என்பவர்களோடு அம்பியும் சேர்க்கப்பட்டு இருந்தார்.
வள்ளுவர் வகுத்த அரசியல் என்ற கடினமான தலைப்பில் அவரைப் பாடும்படி கேட்டிருந்தார்கள். எப்படி முடியப்போகிறதோ..? என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
இரந்தும் உயிர்வாழ்தல்… என்ற குறளுக்கு அரிய விரிவுரையை கவிதைக்கனி பிழிந்து கற்கண்டுச் சொல்லாலே அருமையாகப் பாடினார். அவையோர் முகம் மலர கைதட்டி வரவேற்றனர். ஆம், என் குறி தவறவில்லை. அம்பி – அம்பியாக இராமல் அண்ணலாக உயர்ந்துவிட்டார்… இதோ இது வளரும் முளை என்று காட்டுவதும் வளர்ந்து வருவதை அவதானிப்பதும்,  வளர்ந்து பூத்துக்காய்க்கும்போது நான் வளர்த்த செல்வம் என்று பொங்கிப் பூரிப்பதும் விமர்சகரின் கடமை. அந்தக் கடமையில் அம்பிக்கு கைகொடுத்து உதவினேன். தன்காலில் நின்று தனிமரமாகிக் குளிர்மை தருகிறார் அவர்.  “
இவ்வாறு  எழுதியவர் இரசிகமணிதான் என்பதை நான் அறியாத காலம் , அதற்கு முந்திய 1955 ஆம் ஆண்டுக்காலம். அந்தக்காலம் முதலாக எனது வளர்ச்சியை கூர்ந்து அவதானித்து வந்தவர் இரசிகமணி.
என் எழுத்துலக வளர்ச்சியில் மிக  அக்கறை காட்டி, காலத்துக்குக் காலம் என்னை தட்டிக்கொடுத்து உற்சாகமூட்டியவர இரசிகமணி.
      கஞ்சியு மின்றி யுண்ணக்
              கவளமு மின்றி நித்தம்
    பஞ்சமும் பசியுமே  இப்
             பாரினிற் கண்டோ ராகிக்
கெஞ்சியும் இரந்தும் நின்று
          கேவல நிலையில் வாழ்வோர்
சஞ்சலம் தீர்த்து வைக்கச்
               சற்று நீ சிந்திப் பாயா…?
                                                        இந்தக்கவிதையைச் சுட்டிக்காட்டிவிட்டு,   “ முற்போக்கருக்கெல்லாம் முற்போக்கராக அடி எடுத்து வைக்கின்றார். ஆனால், இவர் இங்கு முற்போக்குப்பேசுவோர்,  வகுப்புவாதக் கட்சி என்று கூறும் தமிழரசுக் கவிஞர் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.
அது மட்டுமல்ல, மகாசக்தி என்ற எனது கவிதை ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறார். அதிலே…


        “ தாழ்வு மனச்சுமைச் சஞ்சலத்தில் – சக்தி
தாங்கு மனப்பலம் தந்து நிற்பாள்
          வாழ்வுப் பொருள் விளங்காது நிற்பின் – அவள்
வண்ணப் பொருள்மிக சொல்லி நிற்பாள்
             பூதங்கள் ஐந்திலும் பூத்து நிற்பாள்
நாதங்கணீரென மீட்டு நெஞ்சில் – அவள்
              நல்ல பணிக்கருச் சேர்த்து நிற்பாள்  “
என்ற வரிகளை விமர்சித்த பின்னர், அவர்  “தமிழிலே விஞ்ஞானம் “  எழுதிய ஆசிரியரா…  இக்கவிஞர் என்று நம்பமுடியாமல் இருக்கிறது “  என்கிறார்.
குழந்தைப்பாடல்கள் எழுதுவதிற் சிறப்பாக கவனஞ்செலுத்துதல் ஓர் தேவையென வேண்டிக்கொண்டவரும் அவரே! எனது முதலாவது குழந்தைப்பாடல் தொகுதியான அம்பிப்பாடல் வெளிவந்த பொழுது அன்னார் எழுதிய நூலாக வெளிவந்த அருமைக் குழந்தைகளுக்கு ஓர் அம்பிப்பாடல் என்னும் விமர்சன நூல் பற்றியும், தமிழ்நாட்டில்  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு  நடத்தப்பெற்ற புகாரில் ஒரு  நாள் கவிதைப்போட்டியில் முதலமைச்சர் அண்ணாவின் ஏற்பாட்டில் மக்கள் திலகம் எம். ஜீ. ஆர் அளித்த தங்கப்பதக்கமும் பாராட்டும் பெற்றபோது எழுதிய உரிமை பாராட்டும் உரை பற்றியும் பிறிதோர் இடத்திற் குறிப்பிடுவோம்.
இவ்வாறு அவரை நன்கு அறிந்த பின்பு பல வழிகளில் எனக்குத்துணை நின்றவர் இரசிகமணி.  “நன்றி மறப்பது நன்றன்று  “ என்றார் திருவள்ளுவர். ஆம். அன்னாரின் தன்னலமற்ற சேவையை என்றும் மறந்துவிட முடியாது.
ஆசிரியராக பணியாற்றிய இரசிகரரி கனகசெந்திநாதன், மாதச்சம்பளம் எடுத்தவுடன் முதலில் செல்வது புத்தகக் கடைகளுக்குத்தான், புதிதாக வந்துள்ள தமிழ் இலக்கிய நூல்களை   வாங்கிக்கொண்டு அடுத்து  அவர் செல்லும்  இடம் யாழ்ப்பாணம் முற்றவெளி.
அங்கே உதைபந்தாட்டத்தில் பங்குபற்றும் இளைஞர்களை உரத்த குரல் கொடுத்து உற்சாகப்படுத்துவார்.  மற்றவர்களின் ஆற்றல்களை இனம் கண்டு ஊக்குவித்து பெருமைகொள்ளும் அவர்,  அந்திமகாலத்தில் நீரிழிவு உபாதையினால் நடமாட முடியாமல் குரும்பசிட்டியில் வீடடங்கி வாழ்ந்தார்.
தன்னைப்பார்க்கவரும் இலக்கியவாதிகளை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து உற்சாகப்படுத்துவார்.
அன்னாரின் மணிவிழா இலங்கையில்  பல பாகங்களில் நடைபெற்றபோதிலும் அவரால் வரமுடியவில்லை. நடக்கமுடியாமல் அவர் சிரமப்பட்ட காலங்கள் அவை.
நீர்கொழும்பிலும்,  கொழும்பிலும் நடந்த இரசிமணி விழாவில் நானும் கலந்துகொண்டு அவருடை சிறப்பியல்புகளை எடுத்துரைத்துப்பேசியிருக்கின்றேன்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற  தாம் எழுதிய நூலிலும் என்னைப்பற்றி அவர் எழுதியுள்ளார்.
( தொடரும் )
No comments: