அழிவின் விளிம்பில் உலக உயிரினங்கள்!




மனித செயற்பாடுகளின் விளைவினால் புவியில் தாவரங்கள், பிராணிகள் வாழ்வுக்கு ஆபத்து
சர்வதேச உயிர் பல்வகைமை தினம்
உயிரியல் பல்வகைமை பற்றிய சர்வதேச தினம் மே 22ஆம் திகதியான இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. உயிரியல் என்பது 'உயிர் வாழ்வன' பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், உயிரினங்களின் தோற்றம், அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இத்தினத்தின் முக்கிய நோக்கம் உயிர்ப் பல்வகைமை பற்றிய விடயங்களை ஆராய்வதும் அவை எதிர்நோக்கக் கூடிய சவால்களையும் கவனத்திற் கொண்டு அவை பற்றிய ஆய்வுகளையும், விளக்கங்களையும் முன்வைப்பதாகும்.

உயிர்ப் பல்வகைமை இழப்புக்கு காலநிலை மாற்றமானது நேரடிப் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. 2100 ஆண்டளவில் புவி வெப்பநிலையானது 1.4 பாகை செல்சியஸிலிருந்து 5.8 பாகை செல்சியஸாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கால நிலை மாற்றம் காரணமாக ஒரு மில்லியனுக்கு கூடிய இனங்கள் உலகில் அழிவுறும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மனிதன், பிராணிகள், தாவர இனங்களின் அழிவையும், காலநிலை மாற்றத்தையும் முறைப்படி எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்குச் செயற்படின் அடுத்து வரும் காலங்களில் இந்நிலையை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும்.
புவி வெப்பமடைவதும், இதனால் உயிரினங்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களும் எம்மால் தீர்மானிக்கக் கூடியதே. உலகத்தின் சனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் புவிச் சூடேற்றத்தை மிகையாக்க இடமுண்டு.
சில தசாப்தங்களுக்குள் கிலிமன்ஞாரோ சிகரத்தில் பனிச்சரிவுகள் எதுவுமில்லாமல் போகலாம் எனவும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், சுவிட்சர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன, அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின, அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிமலைகள் உருகிக் கரைந்து விட்டன, நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்கடித்து நாசமாக்கி நகர மக்களை புலப்பெயர்ச்சி செய்து விட்டன.

வன்முறைகளுக்கும் யுத்தங்களுக்கும் மட்டும் தான் மனிதன் பயப்பட வேண்டும் என்று பொருளில்லை காலநிலையும் அதைவிடப் பயங்கரமானதே
புவி என்று நாம் கூறும் போது மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்து மைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட வெப்ப அதிகரிப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓசோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி வெப்ப அதிகரிப்பு இடம்பெற்று விடும்.
வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் அனைத்துமே பாதிக்கப்படும் பச்சை வீட்டு வாயுக்கள் பூமியில் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரின வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, எண்ணெய் போன்ற எரிப்புகளால் பச்சை வீட்டு வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூமியின் வெப்பம் வேகமாக உயர்கின்றது.
மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்பட்டுள்ளது. உலகில் அதிகமான விஞ்ஞானிகள் புவிச் சூடேற்றத்தை உண்மையென ஏற்றுக் கொண்டாலும் அம்மாறுதலை ஏற்றுக் கொள்ளாத அறிஞர்களும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புவிச் சூடேற்றத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் உண்மையாகவே உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.
டபுவியின் வெப்பநிலை அதிகரிப்பதினால் காலநிலை கோர விளைவுகளை கண்ணூடாகக் காண்கின்றோம். துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் அதிகரிப்பதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகள், நில அதிர்வுகள், எரிமலை வெடிப்புகள், போன்றவற்றைக்காண்கின்றோம். நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் ஐயம் இன்று ஏற்பட்டு விட்டது. உதாரணத்திற்காக அண்மைக் காலங்களாக காலநிலைமாற்றத்தால் ஏற்பட்ட சில கோர விளைவுகள் இதற்கான உதாரணங்களாகும்.
மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் இன்று பரவி விட்டது. மேலும் தொடர்ந்தும் புவியின் வெப்பநிலை அதிகரிப்பதனால் கீழ்க்காணும் அபத்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு, அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும், கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம், 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம், 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய் விடலாம், வெப்பக்கனற் புயலடிப்புகள் உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம், நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத்தீகளும் அடிக்கடி உண்டாகலாம்..
புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் எழுகின்ற இந்த பிரச்சினைகளை நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமையாகவும் உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் இப்போது வந்து விட்டது. புவிச் சூடேற்றத்தை நாங்கள் கட்டுப்படுத்தாவிடின் இன்னும் சில தசாப்தங்களில் பாரிய உயிரின இழப்புகள் ஏற்பட இடமுண்டு. அதன் பிறகு இன்றுள்ள உயிரினங்களை படங்களில் மட்டுமே எம்மால் பார்க்க முடியும். இதனை இத்தினத்தில் நினைவிற் கொள்வோம்.   நன்றி தினகரன் 


No comments: