பெண்குழந்தை - கார்த்திகா கணேசர்

.




  அண்மையில் கேட்ட செய்தி இது. இந்திய பெரிய நகரங்களான மும்பையிலும் டெல்லியிலும் குழந்தைகளின் பிறப்பு விகிதாச்சாரத்தில் ஆண் குழந்தைகளின் விகிதமே அதிகமாகவும் பெண்குழந்தைளின் விகிதம் குறைந்துமே காணப்படுகிறது. இதனால் வருங்காலத்தில் பெண்கள் பற்றாக்குறையால் சமூகம் பல பிரச்சனைகளை எதிர்நோக்கவேண்டிவரும். பெண் குழந்தைகளின் குறைந்த பிறப்புவிகிதம் இயற்கையாக ஏற்பட்டதா? இல்லை, தற்போதைய மருத்துவத்தில் குழந்தை உருவாகி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளதா என அறிய scanning மூலம் அறியும் பரிசோதனையில் குழந்தை ஆணா பெண்ணா எனவும் தெரியவரும். பெண் குழந்தை என தெரிய வந்ததும் பல பெற்றோர் பெண் குழந்தை வேண்டாம் என கருக்கலைப்பு செய்துவிடுகிறார்கள்.

  ஏன் பெண் குழந்தைகள் விரும்பப்படுவதில்லை? கவிஞர்களும் ஓவியர்களும் பெண்ணின் அழகை வர்ணிக்கிறார்கள். அழகான பெண்களின் படங்களை கவர்ச்சிகரமாக விளம்பரப் படுத்துகிறார்கள். அப்படி இருக்க, பெண்ணைப் பெற்றெடுக்க ஏன் தயக்கம்? சந்தேகமே இல்லாமல் வருங்காலத்திலே பெண்ணுக்குத் திருமணத்திற்காக சீதனம் என ஒரு பெரிய தொகையை கொடுக்கவேண்டும், அதற்காக பணம் சேர்த்து திருமணம் செய்து வைப்பது பெற்றோருக்கு ஒரு பெரிய பளுவே. அதில் இருந்து நழுவுவதற்கு வழி உண்டானால் அதைக் கையாள்வதற்கு பெற்றோர் ஆகப்போகிறவர் தயார். நான் சென்னையிலே வாழ்ந்த எண்பதுகளில் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில் பெண் எழுச்சி இயக்கங்கள் இதை வெகுவாக சாடி ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடாத்தினார்கள். சில தனியார் மருத்துவமனைகள் கொட்டை எழுத்துகளில் விளம்பரங்கள் செய்தார்கள். நாளைலட்சமாக உருவாகப் போகும் பிரச்சனையை இன்று 1500 உடன் தீர்த்துவிடலாம். பெண் குழந்தை எனக் கண்டறிந்தால் இன்றே கருக்கலைப்பு செய்யுங்கள் போன்ற விளம்பரங்களும் காணப்பட்டன. பெண் எழுச்சி இயக்கங்களின் தூண்டுதல் காரணமாக மாநில அரசுகள் இத்தகைய விளம்பரங்களுக்குத் தடை விதித்தன.



  நான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் எமது குடும்ப நண்பர் தெய்வ நாயகம் குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்கு சிவானி லண்டனில் இருந்து வந்திருந்தாள். மேற்கு நாட்டில் பிறந்து வாழ்ந்தவள் என்பதால் இவள் கீழைத்தேய இந்திய நாகரீகத்தை அறிவதில் மிகுந்த ஆர்வம் உடையவளாக இருந்தாள்.

  இவள் தமிழகம் வருவதற்கு முன்பே தமிழ்நாடு பற்றி வாசித்து அறிந்து கொண்டே வந்திருந்தாள். வந்து சில நாட்களிலேயே திருமதி தெய்வநாயகத்திடம் இங்கு பெண் குழந்தைகளை பிறந்து சில நாட்களிலேயே கொன்றுவிடுவார்களா? இவ்வாறு நான் அறிந்திருந்தேன் என்றாள். அந்த அம்மா திடுக்குற்று யார் இப்படி எல்லாம் உன்னிடம் கூறியது? இவ்வாறுதான் மேற்கு நாடுகளிலே எம்மையும் எமது நாட்டையும் பற்றி அவதூறுகள் பரப்புகிறார்கள் எனக் கூறி கொதிப்படைந்தார். அவருக்கும் மூன்று பெண்கள் இருந்தார்கள். எனது வீட்டைப் பார். எனக்கு மூன்று பெண்கள் இல்லையா? நாம் அவர்களை அன்பாக வளர்க்கவில்லையா? டாக்டரான எனது கணவர் பலதரப்பட்ட மக்களுடன் பழகுபவர். அவர் கூட இப்படி ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதே இல்லை. அப்படி நடப்பதில்லை என அடித்துக் கூறினார்.

  இவள் கலாச்சாரத்தை அறிய வந்தவள். என்னிடம் பரதம் கற்றுக்கொண்டாள். நாம் இருவரும் பல  விஷயங்களையும் அலசி ஆராய்வோம். பல ஊர்களையும் சுற்றிப் பார்த்தோம். அவளது துறுதுறுப்பான மனோபாவம் என்னைக் கவர்ந்திருந்தது. சென்னையிலே நாம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொடர்வண்டிப் பெட்டியிலே பயணம் செய்தோம். இப்படி பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட வண்டியில் பயணிப்பதை சிவானி விரும்புவதில்லை. இப்படியே உங்கள் ஊரில் பெண்களை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பாள். ஒரு நாள் எமக்கு முன் ஒரு வயோதிகப் பாட்டி அமர்ந்திருந்தார். மேல்சட்டை அணியாத, காதுகளின் துவாரம் நீண்டு தொங்கும் வயோதிக நாட்டுக்கட்டை. சிவானி என்னிடம் இவர்கள் ஊரில் பெண் சிசுக்களைக் கொல்வது உண்டா எனக் கேட்கும்படி தூண்டினாள். முதலிலே தயங்கினேன். அவளோ விடுவதாக இல்லை. அவளது தொணதொணப்பு தாங்காது நானும் கேட்டுவைத்தேன். அந்தப் பாட்டியோ, நானே இந்தக் கையால் எத்தனைக் குழந்தைகளைக் கொன்றுள்ளேன் என, திடுக்குற்ற நான் அதை எப்படி செய்வீர்கள் என வினவ, அவர் குழந்தை பிறந்து ஒரு வாரத்திற்குள் குழந்தையின் தொண்டையிலே ஒரு நெல்மணியைப் போட்டால், குழந்தைக்கு சளிபிடித்தது போல மூச்சுத் திணறல் வரும். நுரை தள்ளும், ஓரிரு நாட்களில் குழந்தை போய்விடும். பெற்றவளுக்குத் தெரியாமல்தான் இதை செய்யவேண்டும். பாவம், அவள் குழந்தை வியாதியில் போய்விட்டதாக அழுவாள். ஏன் இப்படி உயிர்க்கொலை செய்தீர்கள், பாவம் இல்லையா எனக் கேட்டேன். கிழவியோ என்ன அப்படிக் கேட்கிறாய், அந்தப் பெண் ஜென்மம் வளர்ந்து சந்தோஷமாகவா வாழப்போகிறது, வளரும்போது பெற்றோருக்கு பாரம். வளர்ந்தபின் புருஷனிடம் அடியும் உதையும். நான் என்ன வாழ்ந்துவிட்டேன், என்னைப் பார், அவன் இருக்கும் வரை அடி உதை. இந்த அல்லல் பட்ட வாழ்க்கையை இன்னொரு பெண் வாழ வேண்டுமா? எனக் கேட்டு தான் செய்வது ஒரு சமூக சேவை போல கூறினார் கிழவி. நான் கொதிப்படைந்து நீ செய்வது கொலை இதை போலீசார் அறிந்தால் உன்னை கைது பண்ணி தண்டிக்கி முடியும் என்றேன். ஆமா, உன்னைப் போல படித்தவங்க, பணம் உள்ளவங்க இப்படிதான் பினாத்துவீங்க, உங்களுக்கு தெரியுமா எமது கஷ்டம் எனக் கூறிவிட்டு ஓடும் ரயிலில் இருந்து வெளியே நோக்கினாள் கிழவி. சிவானி மட்டுமல்ல, நானும் ஒரு கசப்பான உண்மையை அறிந்து பேச நா எழாது அமர்ந்திருந்தோம்.

  இத்தனைக்கும் சமூக காரணம் ஸ்ரீதனம் என்ற பிசாசே. ஸ்ரீ என்றால் லக்ஷ்மி. தனம் பணம். வருபவள் அதாவது வீட்டிற்கு மருமகளாக வருபவள் ஸ்ரீயாய லக்ஷ்மியாக தனத்துடன் பணத்துடன் வரவேண்டும் என்பதே பொருள். அதுதான் பணம் படைத்த பெற்றோர்கள் பெண்ணுடன் பணத்தையும் கொடுத்து ஆடம்பர திருமணமும் செய்கிறார்கள். பணம் இல்லாத ஏழ்மையால் சிசுக்கொலை கூட நியாயப்படுத்தப்படுகிறது.

  எமது நாட்டு நிலைமை இவ்வாறு இருக்க, மத்தியக் கிழக்கிலோ ஆண்மகன் திருமணம் செய்து கொள்வதற்கு பெண்ணைப் பெற்றவர்கட்கு பணம் கொடுக்கவேண்டும். நமது நாட்டிலே பெண்ணைப் பெற்றவர்கள் படும் பாட்டைப் பார்க்கும் பொழுது இதைக் கேட்க நன்றாகவே உள்ளது. இங்கும் பெண் என்பவள் அல்லல் படாமல் இல்லை, அங்கு நிலவும் நிலைமையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டும் ஒரு சினிமாவைப் பார்த்தேன். ஒரு வயோதிக பணக்காரருக்கு தனது மகளை திருமணம் செய்துவைக்க ஆயத்தமாகிறார் தந்தையார். காரணம் பெண்ணை அவருக்கு மணம் முடித்து வைப்பதால் பெரும் தொகை பணம் கிடைக்கும். அந்த பணத்தைப் பெறுவதால் பெண்ணின் சகோதரர் தொழில் ஆரம்பிக்கலாம். இந்த செயலுக்கு பெண்ணின் சகோதரர்களும் உடந்தையாக இருக்கிறார்கள். சகோதரி மூலம் வரும் பணத்தில்தான் அவர்கள் கவனம். தங்கையின் நல்வாழ்விலல்ல. சர்வதேச ரீதியாக பொருளாதாரப் பின்தங்கிய குடும்பங்களில் பாதிக்கப்படுபவள் பெண்ணேன. பண்டமாற்று பொருள் போன்று, ஏன் அடிமை போன்று பெண் விற்கவும் வாங்கவும் படும் கொடுமையை இங்கு காண்கிறோம்.


2 comments:

Murugapoopathy said...

பாரதிராஜா இயக்கி வெளியிட்ட கருத்தம்மா படத்தின் திரைக்கதையே இந்த சிசுக்கொலை சம்பந்தமானது. அன்று தொடங்கிய சிசுக்கொலை தற்போது ஆணவக்கொலைகளாக மாறியிருக்கிறது. இந்த வாரம் ஒரு புதிய தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். சாதிதான் சமூகம் என்றால் விஷம் காற்றில் வீசி பரவட்டும் என்ற செய்தியுடன் முடிந்தது. சிசுக்கொலை _ ஆணவக்கொலை -
போர்க்கொலைகளைக்கண்டு சகியாமல்தான் இயற்கை ஒரு விஷத்தை பரப்பிவிட்டதோ...?
முருகபூபதி

Murugapoopathy said...

பாரதிராஜா இயக்கி வெளியிட்ட கருத்தம்மா படத்தின் திரைக்கதையே இந்த சிசுக்கொலை சம்பந்தமானது. அன்று தொடங்கிய சிசுக்கொலை தற்போது ஆணவக்கொலைகளாக மாறியிருக்கிறது. இந்த வாரம் ஒரு புதிய தமிழ்த்திரைப்படம் பார்த்தேன். சாதிதான் சமூகம் என்றால் விஷம் காற்றில் வீசி பரவட்டும் என்ற செய்தியுடன் முடிந்தது. சிசுக்கொலை _ ஆணவக்கொலை -
போர்க்கொலைகளைக்கண்டு சகியாமல்தான் இயற்கை ஒரு விஷத்தை பரப்பிவிட்டதோ...?
முருகபூபதி