“ மலையகம் என்ற உணர்வுடனும், உறவுடனும் ஒலிக்கும் குரல் திலகருடையது “
தெளிவத்தை ஜோசப்
அரசியலாளரும் எழுத்தாளருமான மல்லியப்புசந்தி திலகர் எழுதிய “மலைகளைப் பேசவிடுங்கள்” நூல் வெளியீடும் மற்றும் மூன்று நூல்களின் அறிமுகமும் அண்மையில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது.
“சாகித்ய ரத்ன” தெளிவத்தை ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், வரவேற்புரையை திலகரின் மகள் ஓவியா வழங்க, மலைகளைப் பேசவிடுங்கள், ‘சென்றுவருகிறேன் ஜென்ம பூமியே’ ‘இலங்கை சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன்’ ‘காலம் தெளிவத்தை சிறப்பிதழ்’ ஆகியவற்றின் அறிமுகத்தை எம். வாமதேவன் வழங்கினார்.
நூலாசிரியர்களான திலகர், தெளிவத்தை ஜோசப், அரு.சிவானந்தன் ஆகிய மூவரையும் அறிந்தவர் என்றவகையில் அவரது உரை நூலின் உள்ளடக்கம் மற்றும் நூலாசிரியர்களின் வகிபாகம் குறித்த பதிவாக அமைந்தது.
நூலின் சிறப்பு பிரதிகளை பாக்யா பதிப்பக உரிமையாளரும் நூலாசிரியரின் தாயாருமான திருமதி. பாக்கியம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அதிதிகளுக்கு வழங்கினர்.
தலைமையுரை ஆற்றிய தெளிவத்தை ஜோசப், “ மலைகளைப் பேசவிடுங்கள் என அறைகூவல் விடுக்கும் திலகர், மலையக அரசியலில் புதுக்குரல். பேசவே மாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அந்த மக்களின் பிரதிநிதிகள் மத்தியில் அந்த மக்களின் பிரச்சினைகளை அனுபவித்து, அலசி ஆராய்ந்து உரிய முறையில் பாராளுமன்றில் எடுத்துரைத்து தீர்வைத் தேடுவதில் அவர் தனித்துவம் பெறுகிறார். மலையகம் என்ற உணர்வுடனும், மலையகம் என்ற உறவுடனும் அவர் எழுப்பும் குரல் யார் இந்த திலகர்? எனும் கேள்வியை எழுப்பி நிற்கிறது. அவரது புதுக்குரல் போற்றுதற்குரியது என தெரிவித்தார்.
நூல்விமர்சன உரை ஆற்றிய வசந்தி தயாபரன், “ நான் சிறு வயதில் சேர்ந்து விளையாடிய என பால்ய சிநேகிதி ஒருவர் திடீர் என இந்தியா சென்றுவிட்டார். இனி திரும்பிவரமாட்டார் என்ற செய்தி எனக்குள் பல கேள்வியை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் என சொல்லப்பட்டாலும், அதன் அர்த்தம் என்னவென்று பின்னாளில் புரிந்தது. ஒரு முறை இந்தியா சென்றபோது வாகன வாடகை சாரதி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களைக் காட்டி இவர்களைப் பாருங்கள். சிலோனில் இருந்து வந்தவர்கள். எம்.ஜி.ஆர் இவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். எங்களுக்குத்தான் ஒன்றும் இல்லை என அலுத்துக் கொண்டார்.
ஆனால், திலகரின் இந்த ஆய்வு நூல் அவர்கள் ஒன்றும் அங்கே அப்படி வாழவைக்கப்படவில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வன்னிக்கும் என பண்டங்களாகப் பரிமாற்றப்பட்ட வரலாற்றை பல்வேறு ஆவணங்களுடன் இந்த நூலிலே சேர்த்துள்ளார். எங்களுக்கு அரசியல் தெரியாது என்றோ வேண்டாம் என்றோ ஒதுங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இலகுவான மொழிநடையில் அரசியல் விவகாரங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல் இந்த மலைகளைப் பேசவிடுங்கள். இந்த நூலின் சிறப்பு அது உண்மையை வெளிப்படைத்தன்மையுடன் பேசுகின்றது என்பதே ஆகும் “ என்றார்.
விமர்சனவுரை ஆற்றிய ஆய்வாளர் சிராஜ் மஷ்ஷூர், கவிதை நூலையும் சிறுகதைகளையும்
நாவலையும் படிக்கும்போது நாம் உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கலாம். ஆனால், திலகரின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் பல இடங்களில் நமக்கு கண்ணீரை வரவழைக்கின்றன. துயரம் தோய்ந்த அந்த மக்களிடையே இரண்டறக்கலந்து வாழக்கிடைத்த அவரது அனுபவங்களும் அவரது சமூக பிரக்ஞையும் அந்த மக்களின் விடுதலை குறித்த அவரது அவாவும் இந்த நூலிலே வெளிப்பட்டு நிற்கின்றன.
இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக அமைந்த மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை அதற்கான போராட்டம் தனியானதாக இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் வலியுறுத்தி நிற்கின்றது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் வேறானவை அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான நியாயப்பாடுகள் அவர்களுக்கானது என்பதனை நாம் மறுதலிக்க முடியாது. அதே நேரம் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறானவை, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் வேறானவை என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டியது.
மலையக மக்களின் பிரச்சினைகள் என்ன? அவை எவ்வாறு தீர்க்கப்படல் வேண்டும் என்பதுபோன்ற விடயங்களை இந்த நூல் தாங்கி நிற்கிறது. அதேநேரம் தீர்கப்படாதிருந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட காலமாக 2015 பாராளுமன்ற காலத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி கையாண்டது என்கிற உண்மையையும் ஏற்றுக் கொண்டாகவேண்டும். அந்த பதிவுகள் இந்த நூலிலே இடம்பெறுகின்றன.
1994- 2000 ஆண்டு கால பாராளுமன்றத்தை மர்ஹூம் அஷ்ரப் எவ்வாறு தனது முஸ்லிம் சமூகத்துக்குபயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே கடந்த பாராளுமன்றத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணி பயன்படுத்திக்கொண்டது. அதில் திலகரின் வகிபாகம் அளப்பரியது. பிரதேச சபைசட்டத் திருத்தம், பிரதேச செயலக அதிகரிப்பு, பிரதேச சபை அதிகரிப்பு, அதிகார சபை உருவாக்கம், புதிய கிராம உருவாக்கம் போன்றன அரசியல் சாதனைகள். அத்தகைய அதிகார சபை பற்றிய விபரமான கட்டுரையையும் இந்த நூல் தாங்கி வருவது பலதரப்பட்ட வாசகர்களையும் இலக்கு வைத்து எழுதப்பட்டதை காட்டுகிறது. மலையக மக்களின் அரசியல் இலக்கு குறித்து ஆவல்கொள்ளும் எவரும் வாசிக்க வேண்டிய நூல் மலைகளைப் பேசவிடுங்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு விமர்சகர்களுமே நூலில் இடம்பெற்ற கூறியது கூரல் இடம்பெற்றிருப்பதை ஒரு குறையாக சுட்டிக்காட்டிய அதேவேளை பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரைகளை தொகுக்கும்போது இந்தத் தவறு இடம்பெறுவது வழமை என்றும் செவ்விதாக்கத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் இதனைத் தவிர்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், “ திலகராஜ் இத்தகைய ஒரு நூலை எழுதியிருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. அவர் பாராளுமன்றம் வருவதற்கு முன்பே நாங்கள் ஒருவரை ஒருவர் அறிவோம். அவரை முழுநேர அரசியலுக்குள் நாங்கள் உள்வாங்கி இருக்காவிட்டால் இதனைவிட அதிகளவான ஆய்வுகளையும் நூல்களையும் எழுதி இருப்பார். அதற்கான ஆற்றல் அவரிடம் நிறையவே இருக்கிறது. பாராளுமன்றில் அவரது துணிச்சலான உரைகள், துடிப்பான செயற்பாடுகள், அரசியலில் அவரது தூர நோக்க சிந்தனை எங்களது பயணத்துக்கு பலம் சேர்ப்பன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
எழுத்து, இலக்கியம், அரசியல், செயற்பாடுகள் என தன்னை மலையக சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்ட கோ.நடேசய்யர் அவர்களைப் போன்று அரசியலில் துணிவுடன் களமிறங்கி தான்சார்ந்த மலையக சமூகத்துக்காக எழுத்து, இலக்கியம், அரசியல் என அனைத்துத் தளங்களிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் திலகர் சமகால மலையக மக்களின் மனசாட்சியாக திகழ்கிறார். நான் தொடர்ச்சியாக அரசியலில் இருக்கப்போவதில்லை. விடைபெறும் காலம் நெருங்கி வருவதாக உணர்கிறேன். அவ்வாறு விடைபெறும் போது எங்களது இடைவெளியை நிரப்புவதற்கு திலகர் போன்ற திறமை கொண்ட இளைஞர்கள் இரண்டாம் கட்ட தலைமைகளாக எமது அணியில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக உறுதியாக கூறி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.
ஏற்புரையாற்றிய நூலாசிரியர் திலகர் தன்னுடைய நூல் வெளியீட்டுக்கு ஒத்துழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்ததுடன் முதல் பதிப்பை வெளியிட்ட தமிழகத்திற்கு தாயகம் திரும்பிய உறவுகள், அவ்வாறு தாயகம் திரும்ப கட்டாயமாக்கப்பட்டபோது கப்பலில் தன் கண்ணீரை கரைத்துவிட்டுச் சென்ற கவிஞர் அரு. சிவானந்தனின் “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதையை அறிமுகம் செய்த அந்தனி ஜீவா, அந்த நூலின் மறுபதிப்புக்கான தேவை அதை தான் பொறுப்பேற்றுச் செய்த விதம் ஆகியவற்றையும் நினைவு கூர்ந்தார்.
மலையக அதிகார சபை உருவாக்கத்தில் எம்.வாமதேவனின் பங்களிப்பை நினைவு கூர்ந்ததுடன் அத்தகைய அதிகார சபை பற்றிய முழுமையான விபரம் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இளைய சமூகத்தினர் முகநூலுக்கு வெளியே ஆற்றவேண்டிய பணிகள் நிறையவே இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் நமக்கு முன்னே சென்றவர்களின் அடியொற்றி நடப்பதும் அவர்களை கனம் பண்ணுவதும் தேவைப்படும் பண்புகளாக உள்ளன என்றும் “மலைகளைப் பேசவிடுங்கள்” நூல் முற்றுப்பெறாத நூல் என்றும் அதனை அடுத்த அத்தியாயங்களை எழுதும் பொறுப்பு எதிர்கால மலையக சந்ததிக்கு உரியது என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிகளை குரல் கலைஞரும் ஊடகவியலாளருமான பிரதாஸ் ஆக்சுஞயா சுவைபட தொகுத்தளித்தார்.
No comments:
Post a Comment