Thursday, March 12, 2020 - 6:00am
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. ஆனால் இதுவரை அதற்குத் தடுப்பு மருந்து எதுவும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மருந்து குறித்தும், பாதுகாப்பாக இருப்பதும் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதில் மிகவும் ஆபத்தானது முதல் ஆபத்தில்லாதது வரை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பரவி வரும் சில வதந்திகளும் உண்மையில் அறிவியல் கூறுவதும் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம்.முகநூலில் பெரிதும் பகிரப்படுவது, கொரோனாவிலிருந்து தப்பிக்க வெள்ளைப்பூடு(பூண்டு) சாப்பிடுங்கள் என்பதாகும். பூண்டு சாப்பிடுவது நல்லது . அது நுண்ணுயிரை எதிர்க்கும் தன்மையுடையது. ஆனால் அதை சாப்பிட்டால் புதிய கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இது போன்ற மருந்துகள் ஆபத்தானவை இல்லை. ஆனால் மருத்துவ ரீதியாக இவை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்றும் என்பதும் இல்லை.
'தி சௌத் சைனா ேமார்னிங் போஸ்ட்' என்ற சீனப் பத்திரிகை ஒரு பெண் 1.5 கிலோ பூண்டை சாப்பிட்டதால் தொண்டை எரிச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதும், தண்ணீர் நன்றாகக் குடிப்பதும் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஆனால் இந்த குறிப்பிட்ட உணவு இந்த வைரஸிலிருந்து காப்பாற்றும் என்று எதுவும் இல்லை.
அற்புத உலோகங்கள்:
ஜோர்டன் சாதர் என்னும் யூ டியுப் வீடியோ தயாரிப்பவர், மிராகில் மினரல் சப்லிமெண்ட் (அற்புத உலோக சத்து) எனப்படும் எம்.எம்.எஸ் கொரோனாவைரஸை அழிக்கும் எனக் கூறியுள்ளார். இவரை ஆயிரக்கணக்கானோர் அதனைப் பின்தொடர்கின்றனர்.
இவர் குறிப்பிடும் இந்த அற்புத உலோகச் சத்து குளோரின் டை ஒக்ஸைடைக் கொண்டது.
ஜோர்டன் சாதர் இதை கொரோனா பரவத் தொடங்கியதற்கு முன்னர் ஜனவரி மாதமே ட்வீட் செய்தார். க்ளோரின் டை ஒக்ஸைடு புற்றுநோயை மட்டுமல்ல கொரோனாவையும் அழிக்கும் என அவர் ட்வீட் செய்திருந்தார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் இந்த எம்.எம்.எஸ் குடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எச்சரித்தது. பல நாடுகளின் சுகாதார அதிகாரிகளும் இது குறித்து எச்சரித்துள்ளனர்.
இந்தப் பொருளை சாப்பிடுவது பாதுகாப்பானது என எந்த ஓர் ஆராய்ச்சியும் இல்லை என அமெரிக்க உணவுத்துறை கூறியுள்ளது. மேலும் இதைக் குடிப்பதனால் மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம். மேலும் நீர்ச்சத்து குறையும் எனவும் எச்சரித்துள்ளனர்.
வீட்டில் தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பான்:
கை சுத்திகரிப்பானுக்கு தட்டுப்பாடு இருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. ஏனென்றால் கை கழுவுவது வைரஸிலிருந்து தப்பிக்கும் ஒரு வழி என்பதால் இந்நிலை நிலவுகிறது.
இத்தாலியில் கை சுத்திகரிப்பான் தட்டுப்பாடு இருப்பதைத் தொடர்ந்து வீட்டிலேயே அதை எவ்வாறு தயாரிப்பது என்ற செய்முறை சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது.ஆனால் அவ்வாறு தயாரிக்கப்படுவது, தரையை சுத்தப்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு பிரபல நிறுவனத்தின் பொருளின் செய்முறை என்றும் அதை வெறும் கையால் தொட வேண்டாம் எனவும் விஞ்ஞானிகள் பரிந்துரைசெய்துள்ளனர்.
பொதுவாக அல்கேஹால் கலந்திருக்கும் 'ஹேண்ட் ஜெல்' பதார்த்தமானது எமொலியண்ட் என்னும் தோலை மென்மையாக்கும் ஒரு இரசாயனப் பொருளைக் கொண்டிருக்கும்.
கை சுத்திகரிப்பானை வீட்டில் தயாரிக்க முடியும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என பேராசியர் சாலி ப்ளூம்ஃபீல்ட் கூறுகிறார்.
தரையை சுத்தப்படுத்த சாதாரண சுத்திகரிப்பான் போதும் என்கின்றது அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம்.
கொலாடியல் சில்வர் என்னும் வெள்ளித் திரவம்:
கோலாடியல் சில்வர் பயன்படுத்துவதை தொலைக்காட்சியில் மத பிரசாரம் செய்யும் ஜிம் பேக்கர் தன்னுடைய நிகழ்ச்சியில் ஊக்கப்படுத்தி வருகிறார்.
மிக நுண்ணிய வெள்ளித் துகள்கள் உள்ள ஒரு திரவத்தையே கொலாடியல் சில்வர் என்கின்றனர். ஜிம் பேக்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் 12 மணி நேரத்தில் கொலோடியல் சில்வர் கொரோனா பாதிப்பிலிருந்து காப்பாற்றும் எனக் கூறியுள்ளார். ஆனால் இதுவரை அது கோவிட்-19 பாதிப்புக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
இது தொடர்பான செய்தி ஃபேஸ்புக்கில் பெரிதும் பகிரப்படுகிறது. அதுவும் 'மெடிகல் ஃப்ரீடம்' என்னும் குழுவால் பகிரப்படுகிறது. அந்தக் குழு மருத்துவ பரிந்துரை அளிப்பது சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த கோலாடியல் சில்வர் அனைத்து உடல் நிலைக்கும் ஏற்றது எனவும், அண்டிசெப்டிக் போல செயல்படும் எனவும், எதிர்ப்புத் திறனை வளர்க்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் இதை பயன்படுத்துவதால் சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு, அர்ஜீரியா( தோல் நீலமடைதல்) போன்றவை ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இரும்பு, துத்தநாகம் போல் வெள்ளி உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கவில்லை.
இப்போது இது போன்ற உலோகங்களைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கும் பதிவுகளுக்கு மேல் பேஸ்புக் எச்சரிக்கை செய்தி ஒன்று தோன்றுகிறது.
15 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிப்பது:
ஒரு ஜப்பான் மருத்துவரின் பரிந்துரை என்ற பெயரில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பது வாய் வழியே உள்ளே செல்லும் வைரஸை தங்கவிடாமல் செய்யும் என ஒரு பதிவு பெரிதும் பகிரப்பட்டது. இந்த கூற்றின் அரபு மொழி பெயர்ப்பு 2,50,000 முறை பகிரப்பட்டுள்ளது.
ஆனால் பேராசிரியர் ப்ளூம்ஃபீல்டு இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார்.
காற்று வழியாக பரவும் வைரஸ்கள் சுவாசிப்பதால் உடலுக்குள் செல்லும். அவற்றில் சில வாய் வழியே உள்ளே செல்லும். ஆனால் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வழி செய்யாது.ஆனால் தண்ணீர் அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது.
சிலர் வெப்பம் வைரஸைக் கொல்லும் என்கின்றனர். இதனால் வெந்நீர் குடிப்பது, வெந்நீரில் குளிப்பது அல்லது ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது போன்றவை பரிந்துரை செய்யப்படுகின்றன.
வெந்நீர் குடிப்பது மற்றும் வெயிலில் நிற்பது போன்றவை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிறந்த வழி. மேலும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என யுனிச்செஃப் கூறியதாகச் சொல்லி வெளியாகும் பதிவுகள் பல்வேறு நாடுகளில் பகிரப்பட்டன.இதெல்லாம் உண்மையானவை அல்ல என்கிறார் யுனிசெஃப் அமைப்பை சேர்ந்த சார்லட் கோர்னிக்ஸ்.
வெயில் காலத்தில் ஃப்ளூ வைரஸ் உடலின் வெளிப்புறத்தில் நிலைத்திருக்காது ஆனால் இது கொரோனா மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் இவர்.
உடல் வெப்பத்தை அதிகப்படுத்துவது அல்லது வெயிலில் நிற்பது போன்றவை அவ்வளவு பயனுள்ளதாக தெரியவில்லை என பேராசிரியர் ப்ளூம்ஃபீல்ட் கூறியுள்ளார். வைரஸ் உடலுக்குள் வந்துவிட்டால் உடலின் எதிர்ப்பு சக்தியே அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் அவர்.
ஒரு வைரஸை கொல்ல 60 பாகை வெப்பநிலை தேவை. இதனால் துணி துவைக்க 60 டிகிரி வெப்பநிலையுள்ள நீரை பயன்படுத்துவது நல்ல யோசனை. ஆனால் நாம் 60 டிகிரி வெப்பநிலை கொண்ட நீரில் குளிப்பது நல்லது கிடையாது. வெந்நீரில் குளிப்பது, வெந்நீர் குடிப்பது போன்றவற்றால் நம் உடலின் வெப்பநிலை மாறாது.
(BBC) நன்றி தினகரன்
No comments:
Post a Comment