அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை 14 ஆம் திகதி வழங்கப்பட்டது.
கடந்த 32 வருடங்களாக அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வவுனியா மாவட்டத்தின் நீண்ட கால தொடர்பாளர் அமைப்பான நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பணிமனையில் அதன் தலைவர் திரு. த. கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமகாலத்தில் எதிர்பாராத வகையில் தோன்றியிருக்கும் கொரனோ வைரஸ் தாக்கம் தொடர்பாக மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் விழிப்புணர்வு விளக்கமும் அளிக்கப்பட்டது.
நிறுவனத்தின் முகாமைக் குழு உறுப்பினர் திரு. அறிவழகன், கள உத்தியோகத்தர் திருமதி பிரேமா ஆகியோர் மாணவர்களுக்கான 2020 ஆண்டிற்கான முதல் நான்கு மாதங்களுக்கான நிதியுதவிகளை வழங்கினர்.
பாடசாலைகள் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி வரையில் இயங்கமுடியாத சூழல் தோன்றியிருப்பதனால், இந்த நிகழ்வு இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவிலிருந்து மூன்று தசாப்த காலமாக தங்கு தடையின்றி இயங்கி, இலங்கையில் நீடித்த போரில் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் மாணவர்களினதும் கடந்த சில வருடங்களாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களினதும் கல்வி இடைநிறுத்தப்படலாகாது என்ற நோக்கத்துடன் ஆதரவுக்கரம் நீட்டிவரும் அவுஸ்திரேலியா வாழ் அன்பர்களுக்கும் இன்றைய நிகழ்வில் மாணவர்கள் – தாய்மார் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட வவுனியா நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம், இலங்கை மாணவர் கல்வி நிதியத்தினால் உதவி வழங்கப்படும் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட மாணவர்கள் சிலரதும் கண்காணிப்பாளர் அமைப்பாகவும் இயங்கிவருகிறது.
No comments:
Post a Comment