இலங்கைச் செய்திகள்


கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு

முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த 

தென்கொரியா, இத்தாலியிலிருந்து வந்த 181 பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பிற்கு

நான்காவது வருடத்தில் காலடி வைத்துள்ள தொடர் போராட்டம்

மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு

வவுனியா கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு 213 பேர் வருகை

ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்

வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை இன்று முதல்



கோவிட் 19 பரவுவதை தடுக்க ஒத்துழைப்பு வழங்க கோருகிறது அரசு




கொரோனா தொற்றுள்ள முதலாவது நபர் கொழும்பில் கண்டுபிடிப்பு
சிலாபத்திலிருந்தும் பெண்ணொருவர் ஐ.டி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று கொழும்பில் கொரோனா தொற்றியுள்ள முதலாவது நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்தார்.
அத்துடன் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுள்ள சகல அறிகுறிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நேற்று அம்பியூலன்ஸ் மூலம் உடனடியாக ஐ.டி.எச் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்
உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், இதைத் தடுக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் 52 வயதையுடைய வரென்றும் இந்நபர் இத்தாலி சுற்றுலாக் குழுவினருக்கு வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு தற்போது நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் டொக்டர் அனில் ஜாசிங்ஹ குறிப்பிட்டார். இத்தாலி சுற்றுலாக் குழு பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான சகல அறிகுறிகள் இருந்தமை உறுதியானதையடுத்தே கொழும்பு ஐ.டிஎச் தொற்று நோயியல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிலாபம் வைத்தியசாலைக்கு நேற்றுக் காலை 10 மணியளவில் வந்த இந்தப் பெண் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் ஏனையோருடன் சேர்ந்து சுமார் அரை மணி நேரமாக காத்திருந்தார்.
அப்பெண்ணுக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததையடுத்து வைத்தியசாலையிலிருந்த அனைவரும் அவரை விட்டு ஓடி ஒளிந்ததாக கூறப்படுகிறது. எவரும் அப்பெண்ணுக்கு சிகிச்சையளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் வைத்தியசாலையின் பணிப்பாளரே முன்வந்து அவருக்கான சோதனைகளை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலை பணிப்பாளருடைய இச்செயற்பாடு அங்கே குழுமியிருந்த அனைவரிடமும் வரவேற்பை பெற்றது.
கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ள அப்பெண் 56 வயதுடையவராவார். இத்தாலியிலிருந்து கடந்த 03 ஆம் திகதி இலங்கை வந்த அவர், சிலாபத்திலுள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருகின்றார். அத்துடன் அண்மையில் அவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்துபசாரம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.
இப்பெண்ணுக்கு அனைத்து சோதனைகளையும் செய்த பின்னரே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டிருப்பதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். இப்பெண் சென்ற இடங்கள் மற்றும் பழகிய நபர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அரசு முறையான திட்டத்துடன் கூடிய பரந்துபட்ட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதற்கென 10 ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தருபவர்களை நோய்தடுப்பு செயற்பாட்டுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.வெளிநாட்டிலிருந்து வருவோர் மற்றும் பொதுமக்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம், புத்தளம் மாவட்ட குறூப் நிருபர் 
நன்றி தினகரன் 









முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த 




லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் மாவட்ட முதன்மை வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுவில் ஒப்பமிட்டனர்.குருநாகல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒப்பமிடுவதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்களையும் படத்தில் காணலாம்.  நன்றி தினகரன் 









தென்கொரியா, இத்தாலியிலிருந்து வந்த 181 பேர் தனிமைப்படுத்தலுக்காக மட்டக்களப்பிற்கு




தென்கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து இன்று (10) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ள இலங்கைப் பிரஜைகள் 179 பேர் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 02 பேரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  
இக்குழுவினர், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  
தென்கொரியா, ஈரான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் நபர்கள் அவசியம் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள். இதற்கமைய அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்வாங்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏனைய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்கு வீடுகளில் தங்கியிருக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.   நன்றி தினகரன் 










நான்காவது வருடத்தில் காலடி வைத்துள்ள தொடர் போராட்டம்




நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும் பல இன மக்களது வாழ்விலும் துன்பங்களை விட்டுச் சென்றுள்ளது.
போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இழப்புக்களை அதிகம் சந்தித்தவர்களாக முல்லைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீள்குடி​ேயற்றப்பட்ட நிலையில் தமக்கு ஏற்பட்டஇழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடுகின்றனர்.
அங்கவீனர்களாகியவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் தமது இளமை வாழ்வைத் தொலைத்தவர்களாக இன்றும் நடைப்பிணங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இதேசமயம் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியாமல் பலர் கவலையுடன் வாழ்கின்றனர்.இது வேதனையான விடயம்.
காணாமல் போனவர்களை அவர்களது உறவுகள் பத்து வருடங்களுக்கு மேலாகத் தேடி வருகின்றார்கள்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலம் தொடக்கம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கையிலுள்ள பல்வேறு சிறைச்சாலைகள், புனர்வாழ்வு நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் தங்களுடைய உறவுகளை தேடி அவர்கள் அலைகின்றனர். காணாமல் போனவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கூட அறிய முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
இலங்கையில் முன்னர் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் 2010 ஆம் ஆண்டு மே மாதம் உண்மையறியும் விசாரணை ஆணைக் குழுவாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) . உருவாக்கப்பட்டது இது இலங்கையில் 2002 பேச்சுவார்த்தை தோல்வியில் இருந்து 2009 மே வரையான இறுதிக் கட்டப் போர் வரையிலான நடந்த நிகழ்வுகளையும் தோல்விகளையும் முரண்பாடுகளையும் விசாரித்து, அந்த மாதிரி தோல்விகளும் முரண்பாடுகளும் மீண்டும் நடைபெறாதவாறு தடுக்க என அமைக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுவானது விசாரணைகளை முன்னெடுத்த போது காணாமல் போனோரின் உறவினர்கள் மிகவும் ஆர்வமாக ஆணைக்குழுவில் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். ஆனால் இந்த ஆணைக்குழு மூலம் இவர்களுக்கான தீர்வுகள் நேரடியாகக் கிடைக்கவில்லை.இருந்த போதும் இதனுடாக குறித்த விடயங்கள் தொடர்பாக பரிந்துரைகள் சில முன்வக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் பரணகம ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த காணாமல்போனோர் ஆணைக்குழுவின் பதவிக் காலமானது 2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2016 ஜூலை மாதம் 15 ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்த நிலையிலேயே 2016.-08-.12 இது தொடர்பான அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தக் குழுவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச ஆலோசனைகளை வழங்க சர்வதேச நிபுணர் குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம கருத்து வெளியிட்ட போது "முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வர எமக்கு கால அவகாசம் போதுமானதாக இருக்கவில்லை. அதனால் நாம் கடந்த ஜூலை 15 ஆம் திகதி வரை என்ன செய்தோம் என்பதை விளக்கி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்தோம். இது முழுமையான அறிக்கை என்று கூற முடியாது. எமக்கு இன்னும் 12 மாத காலம் வழங்கியிருந்தால் நாங்கள் பெரும்பால பிரச்சினைகளுக்கு முடிவினைக் கொண்டு வந்திருப்போம்" என்றார்
இந்த ஆணைக்குழுவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளுக்குஅவர்கள் திருப்தியடையும் முகமாக தீர்வுகளை வழங்கவில்லை.
இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. பரணகம ஆணைக்குழு 21000 முறைப்பாடுகளையும் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவானது 16000 பேர் காணமல் போயுள்ளதாக ஆவணப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஆணைக்குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் வேறுபட்ட தரவுகளைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் இரண்டு அரசாங்கங்களால் இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களாலும் எந்த தீர்வுகளும் கிடைக்காத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் இவ்வாறான ஆணைக்குழுக்கள் மற்றும் அரசின் குழுக்களை நிராகரிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகள் எங்கும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் குதித்தனர். இந்நிலையில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை என அனைத்து இடங்களிலும் தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017.-03-.08 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த தொடர் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவியது. ஏற்கனவே பல ஆணைக்குழுக்களைக் கண்டு ஏமாந்து போன உறவுகள் இந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை வேண்டாம் என்றும் போராடினர்.
போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னைய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இவை அனைத்தும் பலன் தராத நிலையில் போராட்டம் கடந்த 08.-03-.2020 திகதியுடன் 3 வருடத்தை கடந்து நான்காவது ஆண்டிலும் தொடர்கிறது.
முல்லைத்தீவில் தொடர் போராட்டம் ஆரம்பித்து இன்றுவரை தமது உறவுகளைத் தேடிய 16 பெற்றோர் இறந்துள்ளனர். இதேவேளை வடக்கு, கிழக்கில் தமது பிள்ளைகளைத் தேடிய பெற்றோரில் இதுவரை 60க்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கின்றனர். இவ்வாறு உறவுகளை பறிகொடுத்த பலர் உயிரிழந்து வருகின்றனர்.அதேவேளை தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறும், நீதி பெற்றுத் தருமாறும் கோரி தொடர்ந்து போராட உள்ளதாக உறவுகள் கூறுகின்றனர்.
இவ்வாறான துன்பங்களின் மத்தியில் தமிழ் அரசியல் தலைமைகள் கூட தமது விடிவுக்காக குரல் கொடுப்பதாக தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
சண்முகம் தவசீலன்...  (முல்லைத்தீவு குறூப் நிருபர்)
நன்றி தினகரன் 










மறு அறிவித்தல் வரை திரையரங்குகளுக்கு பூட்டு



இன்று(14) முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியிலுள்ள சினிமா திரையரங்குகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.    நன்றி தினகரன் 









வவுனியா கொரோனா கண்காணிப்பு தடுப்பு முகாமுக்கு 213 பேர் வருகை



வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு நேற்று  மாலை 7மணியளவில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வரும் இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் 14நாட்கள் தடுத்து வைத்து கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு இவ்வாரம் முதல்பகுதியில் சிலர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வவுனியா தடுப்பு முகாமுக்கு 05 பஸ்களில் 265 பேர் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் விமான பயணிகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். வவுனியா பம்பைமடு பெண்கள் இராணுவ முகாமில் அமைந்துள்ள தடுப்பு முகாமுக்கே தற்போது அவர்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இச் செயற்பாட்டுக்கு முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா விசேட நிருபர் -  நன்றி தினகரன் 












ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்



ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்-Europe Visa Suspended for 2 Weeks
கொரோனா பரவலை தடுக்க ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் பல தீர்மானங்கள்
  • ஐரோப்பாவிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில்
  • பொதுமக்கள் போக்குவரத்து சேவை, கிருமி தொற்று ஒழிப்புக்கு நடவடிக்கை
  • வைரஸ் தடுப்புக்கு சீனா மேற்கொண்ட வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வு
  • கொரோனா தடுப்பு செயலணிக்கு நிரந்தர நிலையம்
  • மக்கள் ஒன்றுகூடுவதை குறைப்பதற்கு ஆலோசனை
  • சேவை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு இணையத்தை பயன்படுத்த அவதானம்
கொரோனா வைரஸ் (Covid –19) பரவுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளில் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருப்பதால், ஐரோப்பியர்களுக்கு வீசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்-Europe Visa Suspended for 2 Weeks
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்பணிப்புரையை விடுத்துள்ளனர்.
அரசாங்கம் ஜனவரி முதல் பின்பற்றிய வழிமுறைகளின் மூலம் நோய் நாட்டிற்குள் வருவதை தடுப்பதற்கு முடியுமாகவிருந்தது. வைரஸ் பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது. அம்முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமானளவில் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளனர்.
ஐரோப்பியர்களுக்கான வீசா இரு வாரங்களுக்கு நிறுத்தம்-Europe Visa Suspended for 2 Weeks
வைரசின் பூகோள பரவுதல் தொடர்பாக தெளிவூட்டிய ஜனாதிபதி, ஐரோப்பாவில் பல நாடுகளில் வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மிகப் பாரதூரமான நிலைமை காணப்படுகின்றது.  அது தொடர்பாக கொரோனா தடுப்பு செயலணியின் அவதானத்திற்குட்படுத்திய ஜனாதிபதி, ஐரோப்பியர்களுக்கு வீசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை சந்தித்தவர்களை அடையாளம் காணுவது  தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களை கண்காணிப்புக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அவர்கள் பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் பற்றி தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை நோய்த் தடுப்பு கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
நாட்டினுள் பரவுவதை தடுப்பதற்கு மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், விழாக்களை இயலுமானளவு குறைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
செயலணிக்கு நிலையான அலுவலகமொன்றை ஸ்தாபித்து தகவல்களை ஒன்றுசேர்த்து தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். நோயை கண்டுபிடிப்பதற்காக  மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை துரிதப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் உதவிகளுடன் பரிசோதனை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கை நோய் பரவுவதை தடுப்பதற்கு மேற்கொண்ட வழிமுறைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
முகக் கவசங்களை எந்தவொரு இடத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையில்  முறையாக விநியோகிப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்னெடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது. கட்டுப்பாட்டு விலையின் கீழ் எந்தவொரு நபருக்கும் முகக் கவசத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை கொண்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
நாளை (14) தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து மற்றும் புகையிரதங்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அதற்காக பாதுகாப்பு பிரிவினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.சீனா தற்போது மிக சிறப்பாக கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தியுள்ளது. சமூக செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நோய்த் தடுப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க சீனா முக்கியத்துவம் கொடுத்தது. அந்நாடு பின்பற்றிய வழிமுறைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டது.
அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை முன்னெடுத்தல், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக வீட்டிலிருந்து செயற்படுத்தலை பரீட்சித்துப் பார்க்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் நோய்ப் பற்றி மக்களை தெளிவுபடுத்த வேண்டுமே தவிர சமூகத்தில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.    நன்றி தினகரன் 










வெள்ளவத்தை – பத்தரமுல்லை படகு சேவை இன்று முதல்



மு.ப. 6.00 –பி.ப. 6.00 மணி வரை; ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு
வெள்ளவத்தைக்கும் பத்தரமுல்லைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை இன்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் படகுச் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி சபை தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ.டி.சொய்சா தெரிவித்தார்.
இதற்காக 04 படகுகள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இச்சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்குரிய கட்டணமாக 60 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு ஒன்றில் 16 பயணிகள் வரையில் பயணிக்க முடியும் எனவும் படகுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 














No comments: