உலகச் செய்திகள்


கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு உச்சம்: இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறது சீனா

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 4000ஐ தாண்டியது: முழு இத்தாலியும் முடக்கம்

கொரோனா வைரஸ்: வடக்கு இத்தாலியில் 16 மில். மக்களை தனிமைப்படுத்த உத்தரவு

ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புகளின் வாபஸ் ஆரம்பம்

சவூதியில் மற்றொரு இளவரசர் கைதானார்

பிரபல ஹொலிவுட் தம்பதிக்கு வைரஸ்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா


கொரோனா வைரஸ்: இத்தாலியில் உயிரிழப்பு உச்சம்: இயல்பு வாழ்வுக்கு திரும்புகிறது சீனா





கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115,000 ஆக அதிகரித்திருப்பதோடு 4,200 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் அதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன.
குறிப்பாக இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் கடும் நடவடிக்கைகளை அமுல்படுத்தி இருக்கும் இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்றினால் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இத்தாலியில் பரவ ஆரம்பித்தது தொடக்கம் பதிவான அதிக உயிரிழப்பாக இது உள்ளது. இத்தாலியில் 10,149 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவில் அது பரவும் வேகம் குறைந்துள்ளது. எனினும் சீனாவில் பல நாட்கள் குறைவடைந்து வந்த வைரஸ் தொற்று நேற்று சற்று உயர்ந்திருந்தது. கடந்த திங்கட்கிழமை 19 பேருக்கு மாத்திரம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 24 பேருக்கு நோய்த் தொற்று பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தனிநபர்களாலேயே தற்போதும் சீனாவில் அதிக வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்தில் வர்த்தகங்கள் படிப்படியாக வழமைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டிருப்பதோடு பொதுப் போக்குவரத்துகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண அரசு நேற்று அறிவித்தது.
ஹுபெயில் இருந்து வெளியேற மற்றும் உள்நுழைபவர்களை கண்காணிக்க சோதனைச்சாவடிக்கள் தொடர்ந்து இயங்குவதோடு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவதற்கு அரசு உதவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணத்தில் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த மாகாணத்தில் வைரஸ் தொற்று கணிசமாக வீழ்ச்சிகண்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன் இந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் அங்கு செவ்வாயன்று 14 பேருக்கு மாத்திரமே புதிதாய் வைரஸ் பதிவாகியுள்ளது.
சீனாவில் 80,778 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் 61,475 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கு 3,158 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் மோசமாக பாதிப்புற்றிருக்கும் இத்தாலி முழுவதும் திங்கட்கிழமை முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்ந்து நீடிக்கிறது. இத்தாலியை ஒட்டி ஐரோப்பாவில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது.
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் முதியவர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலியில் பலியான 168 பேரில் 77 பேர் 70 முதல் 89 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 16 பேர் மட்டுமே 50 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள். உலகில் அதிகம் முதியவர்களை கொண்ட நாடாக இத்தாலி இருப்பதால், அந்த நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் கொரோனாவால் மட்டும் இறக்கவில்லை எனவும் அவர்கள் ஏற்கனவே வேறு சில நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் எனவும் இத்தாலி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இத்தாலியை அடுத்து ஐரோப்பாவில் 1,784 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு 33 பேர் உயிரிழந்திருப்பதோடு ஸ்பெயினில் 1,689 பேருக்கு பரவி 36 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் வைரஸ் தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அதிகரித்திருந்தது. ஜப்பானில் 54 சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அங்கு ஒரே நாளில் அதிக வைரஸ் தொற்று பதிவான தினமாகவும் இது உள்ளது.
மறுபுறம் 242 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பதிவான நிலையில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,755 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் மத்திய கிழக்கில் வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் உயிரிழப்பு 354 ஆக உயர்ந்துள்ளது.
ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் இந்த வைரஸ் பரவி இருக்கும் நிலையில் அந்நாட்டில் சுமார் 9,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஈரான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கெங்கும் இந்த வைரஸினால் மொத்தம் 9,700 க்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் நிலை மோசமடைந்திருப்பதோடு அந்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை 1,000ஐ எட்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸினால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிவியா மற்றும் துருக்கியில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் இந்தோனேசியாவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
நன்றி தினகரன் 












கொரோனா வைரஸ் உயிரிழப்பு 4000ஐ தாண்டியது: முழு இத்தாலியும் முடக்கம்





சீனா, தென் கொரியாவில் தொடர்ந்து முன்னேற்றம்
கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவி வரும் நிலையில் இத்தாலி முழு நாட்டையும் முடக்கியிருப்பதோடு, உலகளாவிய ரீதியில் அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கடந்த திங்கட்கிழமை மோசமான சரிவை சந்தித்த வர்த்தகம் நேற்று மீட்சி பெற்றது.
கொவிட்–19 என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தற்போது 100க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவி இருப்பதோடு இதனால் உலகெங்கும் 4,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 113,000ஐ நெருங்கியுள்ளது.
எனினும் இந்த வைரஸ் தோன்றிய சீனாவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அங்கு தற்போது வைரஸ் தொற்று வீழ்ச்சி கண்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த வைரஸ் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சீனாவில் தற்போது ஸ்திரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை எடுத்துக் காட்டும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றின் மையப் புள்ளியாக இருக்கும் வூஹான் நகருக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் பயணம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
சீனாவில் புதிதாக 19 பேருக்கே வைரஸ் தொற்றி இருப்பதோடு இதில் 17 பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மேலும் இரு சம்பவங்கள் வெளிநாட்டில் இருந்து பரவியதாகும். இதன்மூலம் வூஹானை தலைநகராகக் கொண்ட ஹுபெய் மாகாணத்திற்கு வெளியில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக உள்நாட்டில் இருந்து வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகவில்லை.
சீனாவில் மொத்தம் 80,754 நோயாளிகள் பதிவானதோடு இவர்களில் சுமார் 60,000 பேர் சுகம்பெற்று விடுகளுக்கு சென்றுள்ளனர்.
மற்றைய ஆசிய நாடான தென் கொரியாவிலும் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. தேசிய அளவில் நோய் ஆய்வை மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக 190,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் நேற்று மிகக் குறைவான வைரஸ் தொற்று சம்பவங்களே பதிவாகியுள்ளன.
தென் கொரியா தனது வைரஸ் தொற்று உச்ச வரம்பை கடந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பார்க் நியுகு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தென் கொரியாவில் நேற்று 35 புதிய கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானதோடு அந்நாட்டில் மொத்தம் 7,513 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று மேலும் மூவர் உயிரிழந்த நிலையில் மொத்தம் 54 பேர் பலியாகி இருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான கொரிய மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் வைரஸ் தற்போது தீவிரம் கண்டுள்ள மேற்குலகுக்கு ஆறுதலான ஒன்றாக உள்ளது.
கொரோனா வைரஸை ஒட்டி அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதோடு நோயாளி ஒருவருடன் தொடர்புபட்ட பாராளுமன்ற உறுப்பினர் தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். ஐரோப்பாவில் தீவிரம் அடைந்திருக்கும் இந்த வைரஸ் பிராந்தியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அண்டை நாடான ஜெர்மனியில் வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை வரலாற்றிலேயே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய தொற்று நோயாக மாறி அச்சுறுத்தல் விளைவித்து வருகிறது என்பது உண்மையே ஆனால், இது கட்டுப்படுத்தக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தாலி முடக்கம்
முன்னெப்போதும் இல்லாத மற்றும் சட்டரீதியான ஒரு நடவடிக்கையாக ஒட்டுமொத்த இத்தாலியும் அதன் 60 மில்லியன் மக்களும் முடக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் கியுசெப் கொண்டே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியமான லொம்பாடி மற்றும் 14 மாகாணங்கள் ஏற்கனவே தனிமைப்பத்தப்பட்டுள்ளன. புதிய உத்தரவின்படி இந்தக் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இத்தாலி மற்றும் ஐரோப்பிய பெருநிலத்தில் தொடர்ந்து பரவி வருகிறது.
பயணக் கட்டுப்பாடுகள், பொது நிகழ்ச்சிகளுக்கான தடை, திரையரங்கு போன்ற பொது வெளிகள் மற்றும் பாடசாலைகளுக்கு பூட்டு மற்றும் இறுதிச் சடங்குகள் மற்றும் திருமணங்கள் உட்பட மத வழிபாடுகள் இடைநிறுத்தம் உட்பட பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் மீதான தடையை அமுல்படுத்தும் வகையில் இராணுவ பொலிஸ், ரயில்வே பொலிஸ் சுகாதார பணியாளர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் நிலையங்களில் சோதனைச்சாவடிகளை நிறுவியுள்ளனர்.
சீனாவுக்கு வெளியில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் கடுமையான நடவடிக்கையாக இவை உள்ளன.
இத்தாலியின் ஒரு பகுதி, குறிப்பாக வடக்குப் பிராந்தியத்தில் நிலைமை மோசமாக இருப்பதோடு அலையலையாக நோயாளிகள் குவிவதால் அங்கு சுகாதார கட்டமைப்பு சரிவை சந்தித்திருப்பதாக லொம்பார்டி நெருக்கடி பிரிவின் தீவிர பராமரிப்பு இணைப்பாளர் அன்டோனியோ பெசன்டி தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இதுவரை 9,172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சீனாவுக்கு வெளியில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய நாடாக இத்தாலி மாறியுள்ளது.
கட்டுப்படுத்த ஈரான் போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பதிப்புற்றிருக்கும் மற்றொரு நாடான ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் ஈரானில் தீவிரமடைந்த இந்த வைரஸினால் அந்நாட்டில் குறைந்தது 237 பேர் உயிரிழந்திருப்பதோடு 7,161 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையை விடவும் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.
பாடசாலைகளை மூடி, பயணங்களை தவிர்க்கும்படி மக்களை அறிவுறுத்தி கொவிட்–19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஈரான் நிர்வாகம் முயன்று வருகிறது.
எனினும் சீனா மற்றும் இத்தாலி போன்று இந்த வைரஸ் தீவிரமடைந்திருக்கும் பகுதியை தனிமைப் படுத்தும் நடவடிக்கையை ஈரான் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுடன் தொடர்புபட்டு ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், ஈராக், குவைட், லெபனான், ஓமான், பாகிஸ்தான், கட்டார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் போன்ற நாடுகள் பல வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. நாட்டுக்குள் வரும்போது தமது சுகாதார நிலை மற்றும் பயண விபரங்களை வெளிப்படுத்தாதவர்களுக்கு 133,000 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று சவூதி அறிவித்துள்ளது.
அமெரிக்கா எங்கும் பரவல்
அமெரிக்காவில் குறைந்தது 20 மாநிலங்களில் புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருக்கும் நிலையில் அமெரிக்காவெங்கும் இந்த வைரஸ் தொற்றியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது 36 மாநிலங்கள் மற்றும் தலைநகர் வொசிங்டன் டி.சியில் 717 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் வொசிங்டன் மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவில் பதிவான 26 உயிரிழப்புகளில் 22 இந்த மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு 180 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. வொஷிங்டன் உட்பட குறைந்தது 10 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது மாநில அரசு அவசர நிதி மற்றும் அதிகாரங்களை பெற உதவும். மறுபுறம் இந்த வைரஸ் தொற்று அமெரிக்க மத்திய அரசு மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.
வெள்ளை மாளிகை பணியாளர்கள் குழு தலைவரும் வடக்கு கரோலினா பிரதிநிதியுமான மார்க் மீடோஸ் தனிமைப்படுத்தப்பட்டு அவரது உடல்நிலை கண்காணிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நபருடன் அவர் தொடர்பில் இருந்ததால் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும், முன்னெச்சரிக்கையாக புதன்கிழமை வரை அவர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்படுகிறார்.
அண்டை நாடான கனடாவில் கரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் நாட்டுக்குள் நுழையும் அனைவரும், 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
வர்த்தகங்கள் மீண்டன
கொரோனா வைரஸ் அச்சத்தினால் கடந்த திங்களன்று எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி கண்டதோடு பங்குச் சந்தைகள் அதிர்ச்சிதரும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ரஷ்யா மற்றும் சவூதிக்கு இடையிலான விலைப் போட்டி காரணமாகவே எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டிருந்தது.
எனினும் நேற்றைய வர்த்தகத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஒரு சுமாரான மீட்சியை பதிவுசெய்துள்ளது.
மறுபுறம் மசகு எண்ணெய் விலையும் ஏறுமுகத்தைக் கண்டது. நேற்று பிற்பகல் அளவில் மசகு எண்ணெய் விலை 6.1 வீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 33 டொலராக இருந்த விலை நேற்று 36 டொலராக உயர்ந்தது.
கோவிட்–19 பீதி காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்க்கான தேவை குறைந்து வருவதால் மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என ஒபெக் அமைப்பில் உள்ள நாடுகள் சில கோரின. ஆனால் இந்த கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
இதனை அடுத்து சவூதி எண்ணெய் விலையை 30 வீதம் குறைத்ததை அடுத்தே சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை பெரும் சரிவை கண்டது.
எனினும் சவூதி அரேபியாவின் விலை குறைப்பு ஒரு குறுகியகால அதிர்ச்சி நடவடிக்கை மட்டுமே என்று எண்ணெய் சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.   நன்றி தினகரன் 











கொரோனா வைரஸ்: வடக்கு இத்தாலியில் 16 மில். மக்களை தனிமைப்படுத்த உத்தரவு





கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த போராடி வரும் இத்தாலி 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
லொம்பார்டி மற்றும் மேலும் 14 மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் முக்கிய நகரங்களான மிலான் மற்றும் வெனிஸ் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன.
நாடெங்கும் பாடசாலைகள், உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்கள், இரவு விடுதிகள் மற்றும் ஏனைய இடங்கள் மூடப்படுவதாக பிரதமர் கியுசெப்பே கொடே அறிவித்துள்ளார்.
சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸுக்கு எதிராக கடும் நடவடிக்கையாக உள்ள இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 3 வரை நீடிக்கவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் உள்ள உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளி விட்டு அமர வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் பொழுபோக்கு நிகழ்ச்சிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பாவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள இத்தாலியில் கடந்த சனிக்கிழமையாகும்போதும் இந்த வைரஸ் தொற்றின் வேகம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையால் இத்தாலி மக்கள் தொகையில் கால் பகுதியினர் பாதிக்கப்பட்டிருப்பதோடு நாட்டின் பொருளாதரத்தில் பலம்மிக்க பகுதிகளான வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றினால் இத்தாலியில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 230 ஆக அதிகரித்திருப்பதோடு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 36 பேர் உயிரிழந்திருப்பதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதில் மேலும் 1,200 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு கடந்த சனிக்கிழமையாகும்போது வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,883 ஆக உயிர்ந்துள்ளது“எமது மக்களின் சுகாதாரத்தை நாம் உறுதி செய்யவேண்டிய உள்ளது. இந்த நடவடிக்கையால் சில நேரம் மிகப் பெரிய அளவிலும் சில நேரம் சிறிய அளவிலும் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டி இருக்கும் என்பது எமக்குத் தெரியும்” என்று பிரதமர் கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஐரோப்பிய நகரங்களில் இருந்து நேற்று மிலான் நகரை நோக்கி ஏழு விமானங்கள் வந்துள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியமான லொம்பார்டியில் இருந்து அவசர நிலை தவிர்த்து வெளியேறவும் உள்ளே நுழையவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் பிரதான நகராக மிலான் உள்ளது. இதே கட்டுப்பாடுகள் 14 மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
“பணி நிமித்தமான அவசர காரணம் அல்லது சுகாதார காரணம் தவிர்த்து இந்த பகுதியில் உள்ளே வருவது வெளிச்செல்வது முடியாது” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலகெங்கும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 102,000 ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதுவரை சுமார் 3,500 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பரில் இந்த வைரஸ் தோன்றிய சீனாவிலேயே அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
எனினும் சீனாவில் புதிதாக வைரஸ் தொற்று பதிவானவர்களின் எண்ணிக்கை அதிகம் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை புதிதாக 40 பேருக்கே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமை பதிவானதை விடவும் பாதியாகும்.
வைரஸினால் 27 பேர் உயிரிழந்திருப்பதோடு இது கடந்த ஒரு மாதத்தில் மிகக் குறைவான எண்ணிக்கையாகும். இவர்கள் அனைவரும் இந்த வைரஸின் மையப் புள்ளியாக உள்ள வூஹானைச் சேர்ந்தவர்களாவர்.
மறுபுறம் சீனாவுக்கு வெளியில் மோசமாக வைரஸ் தொற்றினால் பாதிப்புற்றிருக்கும் நாடுகளில் ஒன்றான ஈரானில் தற்போது சுமார் 6000 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவில் புதிதாக 367 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தென் கொரியா நேற்று அறிவித்தது. இதன்மூலம் அந்த நாட்டில் நோய்த் தொற்று ஏற்பட்டிவர்களின் எண்ணிக்கை 7,134 ஆக உயர்ந்துள்ளது.
இந்த வைரஸ் பரவுவது அதிக கவலையை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ், அனைத்து நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 400க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 19 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க்கில் வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 44 இல் இருந்து 77 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது
3,533 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் தென் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 64 வயதான ஆர்ஜன்டீன நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததன் மூலம் அந்நாட்டில் வைரஸினால் உயிரிழந்தவர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் எண்ணிக்கை அதிகரித்த நாடுகள் வரிசையில் பிரான்ஸ் (949), ஜெர்மனி (795), ஸ்பெயின் (441), பிரிட்டன் (209), நெதர்லாந்து (188) ஆகிய நாடுகள் உள்ளன.
கொலம்பியா, பல்கேரியா, கொஸ்டா ரிகா, மோல்டா, மாலைதீவுகள் மற்றும் பரகுவே ஆகிய நாடுகளில் முதல் கொரோனா வைரஸ் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா வைரஸால், சர்வதேச அளவிலான வர்த்தகம், சுற்றுலா, விளையாட்டுப் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் 30 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஸ்கொட்லாந்து, பிரான்ஸ் மகளிர் ரக்பி போட்டி, பார்சிலோனா மரதன் ஓட்டம், சர்வதேச ஐஸ் ஹொக்கி சம்பியன் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 











ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புகளின் வாபஸ் ஆரம்பம்





ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக தலிபான்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாக ஆப்கானில் இருந்து தமது துருப்புகளை அமெரிக்கா வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.
இந்த உடன்படிக்கையின்படி அடுத்த 135 நாட்களுக்குள் தமது துருப்புகளை 12,000 இல் இருந்து 8,600 ஆக குறைப்பதற்கு அமெரிக்கா உடன்பட்டது.
தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே கடந்த பெப்ரவரி 29 ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் துருப்புகளை வாபஸ் பெறுவது நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையில் ஆப்கான் அரசு அங்கம் வகிக்காதபோதும் அது தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளது. இதில் தலிபான்களுடனான நேரடிப் பேச்சுவார்த்தைக்கு முன்னிபந்தனையாக தலிபான் கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கையை கடைப்பிடிக்கப்போவதில்லை என்று ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரண்டாவது தவணைக்காக பதவி ஏற்ற கானி குறைந்தது 1,000 தலிபான் கைதிகளை விடுவிக்கும் ஆணை ஒன்றை இந்த வாரம் பிறப்பிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
எனினும் ஹல்மாண்ட் மாகாணத்தில் ஆப்கான் படையினர் மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள் மீது அமெரிக்க இராணுவம் வான் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த அமைதி உடன்படிக்கை கடந்த வாரம் கேள்விக்குள்ளாகி இருந்தது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பதற்றத்தை தணிக்கும் அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்ட நிலையிலேயே முதல்கட்டமாக படைகளை வாபஸ் பெறும் அறிவிப்பை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கான பேச்சாளர் கேர்ணல் சொனி லெகெட் வெளியிட்டார். எனினும் ஆப்கானில் தமது அனைத்து இராணுவ கடப்பாடுகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி 14 மாதங்களுக்குள் அனைத்து துருப்புகளையும் வாபஸ் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ உடன்பட்டுள்ளன.  நன்றி தினகரன் 












சவூதியில் மற்றொரு இளவரசர் கைதானார்





சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவூதி அரேபிய மன்னர் சல்மானின் மகனும் முடிக்குரிய இளவரசருமான முஹமது பின் சல்மான் ஆட்சி அதிகாரத்தை கவனித்து வருகிறார். இந்த நிலையில் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியதாக மன்னர் சல்மானின் இளைய சகோதரர் அஹமது பின் அப்துலாஸீஸ், முன்னாள் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப், அவரது சகோதரர் நவாப் பின் நயெப் ஆகியோர் 2 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இராணுவ முன்னாள் புலனாய்வுத் தலைவரான இளவரசர் நயெப் பின் அஹமது கைது செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  நன்றி தினகரன் 





பிரபல ஹொலிவுட் தம்பதிக்கு வைரஸ்



ஒஸ்கர் விருது வென்ற பிரபல ஹொலிவுட் நடிகர் டொம் ஹெங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் இருவரும் கொவிட்–19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
63 வயது ஹெங்ஸும் அதே வயதான வில்சனும் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். திரைப்படப் பணிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது ஹெங்ஸுக்கு வைரஸ் தொற்றியது உறுதியானது.
அவர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் பலரையும் பாதித்துள்ள கொவிட்–19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள முதல் ஹொலிவுட் பிரபலம் இவராவார்.    நன்றி தினகரன் 



கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா
தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கேமரான் அகமது தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவ பரிந்துரைகளைத் தொடர்ந்து, சோபி கிகோரிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார். அவருக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. நன்றாக இருப்பதாகவே உணர்கிறார். இலேசான அறிகுறிகள் தென்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
அதேசமயம் பிரதமர் ட்ரூடோவுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். எனினும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரிலும், அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். தற்போது அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால், இப்போது அவருக்கு எந்த பரிசோதனையும் செய்யப்பட மாட்டாது. எனவே, சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.   நன்றி தினகரன் 



No comments: