இலக்கியப்பலகணி ---03 இலக்கிய உலகில் அற்பாயுளும் மேதாவிலாசமும் - ரஸஞானி


எமது  தமிழ்  சமுதாயத்தில்  எம்மவர்   மத்தியில்   அடிக்கடி                உதிர்க்கப்படும்  வார்த்தைகள்:
ஊழ்வினை, தலைவிதி,  விதிப்பயன், தலையெழுத்து. கர்மவினை!
அதாவது   இறைவன்   ஓர்   உயிரைப்படைக்கும்பொழுதே  
அதன்  தலையில்  அதன்விதியை  எழுதிவிடுவானாம்.  அதன்   பிறகு  அந்தவிதிப்படிதான்  யாவுமே  நடக்குமாம் என்பது  நம்பிக்கை. அதேசமயம்    விதியை  மதியால்  வெல்லமுடியும்   என்றும்        ஒத்தடம்தரும் வார்த்தைகளையும்    சொல்லிக்கொள்வார்கள்.


ஆல்பேர்ட் காம்யூ என்ற அல்ஜீரியாவில் பிறந்த எழுத்தாளர் நோபல் விருதும் பெற்றவர். இவரது அந்நியன் நாவலை நாம் தமிழிலும் படிக்கலாம். உயிர் வாழ்ந்த காலம் 47 ஆண்டுகள்தான்.
.
சுந்தரராமசாமியின்   ஜே.ஜே.  சில  குறிப்புகள்   நாவலும்  ஆல்பேர்ட் காம்யூவின் அகால   மரணம்   பற்றிய   செய்தியுடன்தான்   ஆரம்பிக்கிறது.   சுந்தரராமசாமி    தனது    நாவலின் நாயகன்,   ஜோசஃப்  ஜேம்ஸ்   (ஜே.ஜே)   பற்றிச்சொல்லும்போது,   மேதாவிலாசத்திற்கும்              அற்பாயுளுக்கும்   அப்படி   என்னதான்   நமக்கு   எட்டாதபடி ரகசிய   உறவோ?   என்றும்   ஆதங்கப்படுகிறார்.   தமிழில்          பாரதி,   புதுமைப்பித்தன்,   கு.ப.ராஜகோபாலன்,                                      கு. அழகிரிசாமி,   மு. தளையசிங்கம்   என்று அற்பாயுளில்   மறைந்துவிட்ட   படைப்பாளிகளின்   பட்டியலையும்    தருகின்றார்.
ஆல்பேர்ட்   காம்யூவின்   எதிர்பாராத   திடீர்   விபத்து   மரணம்,   எமக்கு   தமிழில் மேலும்    ஐந்து     படைப்பாளிகளை   நினைவுக்கு    கொண்டு

வருகிறது.


தமிழகத்தில்    சுப்பிரமணிய   ராஜூ,    மேத்தாதாஸன்,                  சு.சமுத்திரம்   இலங்கையில்   அங்கையன்    கைலாசநாதன்    லண்டனில்  நவசோதி.    இவர்கள்   ஐவரும்   வாகன    விபத்தில்    கொல்லப்பட்டவர்கள்.   சென்னையில்   சுப்பிரமணிய   ராஜூ    விபத்தில்    மறைந்த   இடத்தை   மல்லிகை    ஆசிரியர்                  டொமினிக்ஜீவாவுக்கு    காண்பித்தவர்   கவிஞர் மேத்தாதாசன்.

புதுக்கவிதை வீச்சாகியிருந்த 1970 காலப்பகுதியில்,  கவிஞர் மேத்தாவின் கவிதாளுமையால் கவரப்பட்டு விஜயராகவன் என்ற தனது இயற்பெரை மேத்தாதாசன் என மாற்றிக்கொண்டவர்.  ஹைக்கூ கவிதைகளும் எழுதியிருப்பவர். முதிர்கன்னிகள் பற்றி அவர் எழுதிய கவிதை இது:
கனம் குறையும் காலண்டர்

கதவோரம்
கல்யாணமாகாத பெண்!

மேத்தாதாசன், வயது முதிராமலேயே அற்பாயுளில் வாகனவிபத்தில் கொல்லப்பட்டார்.

மற்றும் ஒரு படைப்பாளி சு.சமுத்திரம்.   இந்திய சாகித்திய அகடமி விருதும் பெற்றவர்.   இவரும்  ஒரு  வாகனவிபத்தில்  படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை    பலனின்றி   மறைந்தார்.


கடல்காற்று  நாவல் உட்பட கவிதைகள், மெல்லிசைப்பாடல்கள்   பல எழுதியவர்  அங்கையன் கைலாசநாதன்.   இலங்கை    ஒலிபரப்பு    கூட்டுத்தாபனத்தில்   பணியாற்றியவர். கொழும்பு பம்பலப்பிட்டியில்   வாகனவிபத்தில்   கொல்லப்பட்ட ஒருவரின்   சடலம்   கொழும்பு   அரச   மருத்துவமனை  சவச்சாலையில்    அடையாளம்    காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது    என்ற    செய்தியினை    வீரகேசரியில்  பார்த்துவிட்டு  இரண்டு நாட்களின்   பின்னர் அங்கையனின்   மனைவிதான்  உடலை அடையாளம்   காட்டினார்.
எழுத்தாளரும் இலங்கை தேசிய சுவடிகள் திணைக்களத்தில் பிரதி பணிப்பாளராகவும் பணியாற்றிய க.   நவசோதி   இலண்டனில்    வாகன    விபத்தில் கொல்லப்பட்டார்.

ஒரு குழந்தை பிறக்கப்போகும்  நேரத்தையும்  எம்மால் முற்கூட்டியே    குறிக்க    முடியாதிருப்பதுபோலவே  மரணத்தையும்     சொல்லமுடியாதுதான்.


பட்டினத்தார்    பாடலை   அடியொற்றி    கண்ணதாசன்    ஒரு    பாடலை பாதகாணிக்கை     திரைப்படத்திற்காக    எழுதியிருக்கும் பாடல் இப்படித்தொடங்கும்:   

   “ ஆடிய ஆட்டம் என்ன…?     பேசிய வார்த்தை என்ன…?    தேடிய    செல்வம்    என்ன…?  கூடுவிட்டு    ஆவி   போனால்    கூடவே   வருவதென்ன…?  “


வாழ்க்கையின்   புதிர்   பிறப்பிலும்  மறைவிலும்  ஆழமாக               புதைந்திருக்கிறது.  அந்தப்புதிர்   பிறப்பிலும்    மறைவிலும்          துளிர்த்துக்கொண்டு  வெளியே    தெரிகிறது.

 ஆனால்,  வாழும்    காலத்தில்  அந்தப்புதிர்    மறைந்தே    இருக்கிறது.

ஏராளமான படைப்பாளிகள்,   கலைஞர்கள்    என்னதான்    புகழடைந்திருந்தாலும் மக்களிடம் பிரபலமடைந்திருந்தாலும் துயரம்  மண்டிய    கசப்பான அனுபவங்களை    உள்வாங்கிக்கொண்டவர்களாகவே   தமது  வாழ்வை  கடந்து வந்திருக்கிறார்கள்.



இலக்கியப் படைப்புலகில்    லியோரோல்ஸ்ரோய்,   ஹெமிங்வே, ஆங்கிலத்திரையுலகில்  சார்லி  சப்லின்,   மர்லின்   மன்றோ,   இந்தித்திரையுலகில்  குருதத்,   மதுபாலா,   மீனாகுமாரி,    தமிழில்  தியாகராஜ    பாகவதர்,     சாவித்திரி,     சந்திரபாபு,     மலையாள   நடிகர்  விஜயன்,   மற்றும்   தற்கொலைசெய்துகொண்ட   ஷோபா,   படாபட் ஜெயலட்சுமி,    கோழிகூவுது விஜி,   ஸ்ல்க்சுமிதா,   என்று பலரதும்  அந்திமகாலம்     துயரம்கப்பிய    வரலாற்றையே                     எமக்குத்    தந்துள்ளது.  

 ( நடிகைகளின் தற்கொலைப்பட்டியல்   நீளமானது)

வசதியாக    வாழ்ந்திருக்கவேண்டிய    லியோரோல்ஸ்ரோய்   அநாதரவாக ஒரு ரயில் நிலையத்தில்  இறந்து கிடந்தார், எத்தனையோ விபத்துக்களில்   

சிக்கி  உயிர்தப்பி வாழ்ந்து,    இறுதியில்    இனி   வாழ்ந்து   என்ன   பயன்..?     என நினைத்து    தன்னைத்தானே    துப்பாக்கியால்    சுட்டுக்கொண்டு   மடிந்தார்    ஏர்ணஸ்ட்   ஹெமிங்வே.


திரையுலகில்    இலட்சம்    இலட்சமாக    சம்பாதித்த     தியாகராஜபாகவதர்  ஒரு சத்திரத்தில் அநாதராவாக  இறந்துகிடந்தார்  ஜெயகாந்தன்     அந்தக்கலைஞனின்     மறைவை    பின்னணியாகக்கொண்டு    ஒரு     சிறுகதையே    படைத்திருக்கிறார்.
நாளை    மற்றுமொரு   நாளே,   குறத்தி   முடுக்கு   முதலான     நாவல்களையும்  சில   சிறுகதைகளையும்    எழுதியுள்ள               ஆற்றலும்    ஆளுமையும்   மிக்க   ஜி.நாகராஜனின்    அந்திமகாலமும்    மிகுந்த   கவலைக்குரியது.



இலங்கையில்    கவிஞி  சிவரமணியும் அவுஸ்திரேலியாவில்  வாசுதேவனும்  தற்கொலை   செய்துகொண்ட     கவிஞர்கள்.

இவ்வாறு  இங்கே   குறிப்பிடப்படும்   கலைஞர்கள், கவிஞர்கள்,  படைப்பாளிகள்  தலையில்  எழுதப்பட்ட   எழுத்து   இதுதானா?   அவர்கள்   தமது படைப்பிலக்கியம் மற்றும்    கலைவெளிப்பாடுகள்    ஊடாக   மக்களிடம்    வந்தவர்கள்.    மக்களிடம்  பேசப்பட்டவர்கள்.

மக்களை   தமது   எழுத்துக்களினால்   நடிப்பினால்   வசீகரித்தவர்கள்.

    சிலர்  வாகன    விபத்துக்களில்   கொல்லப்பட்டிருக்கிறார்கள்.   விபத்துக்கள்   எதிர்பாராதவை.    ஆனால்,    தற்கொலைகள்    அவர்களாலேயே  உருவாக்கப்பட்டவை.  எதிர்பார்க்கப்பட்டவை.   தலைவிதிக்கும்     கணங்களுக்கும்   இடையே  ஒற்றுமை  இருக்கக்கூடுமா?  என்றும்  யோசிக்கவேண்டியிருக்கிறது.

தற்கொலைக்குத் தயாராகும்   ஒருவர்   அந்தக்கணம்   வேறுவிதமாகச்சிந்தித்திருந்தால்  சிலவேளை    உயிர்தப்பியிருக்கமுடியும்.

கணினி  வந்த   பிறகு  ஏராளம்    நன்மைகள்  இருப்பதாகவும்    உலகமே    கைக்குள்    அடங்கிவிட்டதாகவும்தான்                            நம்பிக்கொண்டிருக்கிறோம்.  உடலைவருத்தாமல் எளிதான  முறையில் தற்கொலை செய்வது  எப்படி?  என்றும்  இந்தக்        கணினி பாடங்களை    நடத்துகிறது    என்பதையும்                           அறியமுடிகிறது.
இந்தக்கணினி   அறிவே  அற்ற   பாமரனான   ஏழை  விவசாயிகளும் நுண்கடன் தொல்லையால்    பட்ட கடனை  அடைக்க    முடியாமல்    தற்கொலை    செய்துகொள்பவர்களையும்  விரக்தியின்  விளிம்பிற்குச்சென்று    தற்கொலை    செய்பவர்களையும்   கருத்தில்கொண்டு   விழிப்புணர்வு                  முகாம்களும்    நடத்தப்படுகின்றன.
ஆனாலும்     விதி    விளையாடுகிறது.    இறந்தவுடன்                                              “ எல்லாம் தலையெழுத்து,    விதிப்பயன்” என்று    சொல்லிவிட்டு  அடுத்த
பொழுதுக்கு    நகர்ந்துவிடுகிறோம்.
வாழ்க்கை   வாழ்வதற்குத்தான்.   வாழ     நினைத்தால்               வாழலாம்….வழியா   இல்லை  பூமியில்….. என்றும்  சொல்லிக்கொள்வோம்.

கழுத்திலே    சயனைற்    குப்பிகளை   அணிந்தவாறும், உடலில்  குண்டுகளை பொருத்திக்கொண்டும்    தற்கொலைக்குத்தயாராகிய     போராளிகளின்   தலையெழுத்தும்   எம்மை   யோசிக்கவைக்கிறது.
நோக்கத்திற்கான   தற்கொலை,    நோக்கம்   எதுவும்   அற்ற               தற்கொலை   என்று பகுத்துப்பார்க்க    முடியாமலிருக்கிறது.
ஏனென்றால்   உயிர்   பெறுமதியானது.
மரணம்    எப்போது    வரும்   என்பது  தெரியாமலிருப்பதுபோன்றே…. மரணத்தின்  பின்னர்    அந்த    ஆத்மாவுக்கு    என்ன   

நடக்கிறது    என்பதும்  தெரியாத  புதிரான    வாழ்வில்தான்   
கணங்களை    கடந்து    செல்கின்றோம்.
(  நன்றி:  யாழ். ஈழநாடு வார இதழ் )
    















No comments: