அபிதா, அன்றும் வழக்கம்போன்று கணினி பயிற்சிக்குச் சென்று திரும்பினாள். மதியம் பன்னிரண்டு மணியும் கடந்திருந்தது.
ஜீவிகா, பெரியப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். அபிதாவைக்கண்டதும், அவளை அவர் ஏறிட்டுப்பார்த்துவிட்டு தலையை தாழ்த்திக்கொண்டார்.
“ அய்யா… நீங்கள் நல்லவேளை தப்பிட்டீங்க… “ அபிதா அவரைப்பார்த்துச் சொன்னாள்.
“ எதிலிருந்து…!? “ என்ற ஆச்சரிய – கேள்விக்குறிகளுடன் ஜீவிகாவும் பெரியப்பா சண்முகநாதனும் அவளை நோக்கினர்.
“ கொரோனோ வைரஸ் தாக்கத்தின் அச்சுறுத்தலினால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை மட்டக்களப்பு பக்கம் அழைத்துச்சென்று தனிமைப்படுத்துகிறார்களாம். இந்த நடைமுறை நீங்கள் வந்து இறங்கிய பின்னர் ஆரம்பமாகியிருக்கிறது. நல்லவேளை , நீங்கள் அதிலிருந்து தப்பிவிட்டீர்கள். “ என்றாள் அபிதா.
பெரியப்பா ஆழ்ந்த பெருமூச்சை விட்டார்.
“ உன்னைப்பற்றி ஜீவிகா சொன்னாள். ஏ. எல். வரையும் படித்திருக்கிறாயாம். அப்படியிருக்க, எதற்காக இந்த வீட்டு வேலைக்கும் சமையல் வேலைக்கும் வந்தாய். வந்தவிடத்திலும், கம்பியூட்டர் வகுப்புக்கு போகிறாய். உன்ர மனதில் அப்படி என்னதான் திட்டம்…? “
வீட்டுக்கு அவர் வந்து சேர்ந்த பின்னர், இவைதான் முதல் தடவையாக அபிதாவை ஏறிட்டுப்பார்த்து பேசும் வார்த்தைகள்.
“ வீட்டு வேலையெல்லாம் செய்த பிறகு, சும்மாதான் இருக்கிறேன் அய்யா. பொழுது போவதற்கு ஏதும் படித்தால் நல்லதுதானே..? அதுதான். “ சண்முகநாதனின் முகத்தை பார்ப்பதும் தாழ்த்துவதுமாக தயங்கித்தயங்கி அவளது உதடுகளிலிருந்து சொற்கள் பிறந்தன.
சண்முகநாதன் உரத்து சிரித்தார். இடதுபுறம் ஒரு தங்கப்பல் தெரிந்தது. பல்தான் தங்கம். மனதும் தங்கமா…? அபிதா தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
ஜீவிகா, அவர்கள் இருவரையும் பேசுவதற்கு விட்டுவிட்டு, தனது மடிக்கணினியை திறந்து ஏதோ எழுதத் தொடங்கிவிட்டாள்.
மஞ்சுளாவும் சுபாஷினியும் கற்பகமும் வேலைக்குப்போயிருந்தனர். பெரியப்பா சண்முகநாதனுடன் மேலும் பேசுவதற்கு அபிதா ஊன்றுகோல் வார்த்தைகளைத் தேடினாள்.
“ அய்யா, உங்களுக்கு ஏதும் குடிப்பதற்கு எடுத்து வரட்டுமா..? காலையில் சாப்பிட்டீங்களா..? உங்களுக்கு இப்போது நேரம் வித்தியாசமாக இருக்கும் இல்லையா..? “ அபிதாவின் அக்கறையில் சண்முகநாதன் சற்று நெகிழ்ந்ததை, அவரது புன்முறுவலிலிருந்து அபிதாவுக்கு புலனாகியது.
“ தேங்ஸ்… தேசிக்காய் இருக்கா..? இருந்தால், ஜூஸ் செய்து எடுத்துவா… “ என்றார்.
“ அபிதா… எனக்கும் வேண்டும். கொரோனோ அச்சுறுத்தலை தேசிக்காய் தண்ணீரும் சமாளிக்குமாம். வந்ததே வந்தது இந்த மீம்ஸ் போடுபவர்களுக்கு பெரிய கொண்டாட்டமாகிவிட்டது. சனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக போட்டாலாவது பரவாயில்லை. விவஸ்தை கெட்ட சமூகம். “ ஜீவிகா பொரிந்து தள்ளினாள்.
அபிதா, உடை மாற்றிவிட்டு, இருவருக்கும் எலுமிச்சை பிழிந்து சீனி கலந்த ஜூஸை எடுத்துவந்து கொடுத்தாள்.
சண்முகநாதனின் முகத்தில் கனிவு தென்பட்டது.
“ ஏன்…. அபிதா… நீ… இந்த காணமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் மனைவிமார் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளவில்லையா…? உன்ர புருஷனும் சரணடைந்தபோதுதானே காணாமல் போனதாக இவள் ஜீவிகா சொன்னாள். உண்மையா..? “
தான் கம்பியூட்டர் வகுப்புக்கு சென்றிருந்த வேளையில் ஜீவிகா தனது முழு சாதகத்தையும் பெரியப்பாவிடம் சமர்ப்பித்திருப்பது புலனாகியது.
தலைகுனிந்து தரையில் கால் விரலால் கோலம் வரைந்தவாறு சண்முகநாதன் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாள்.
“ என்னய்யா செய்யிறது…? அவர் யாராலும் காட்டிக்கொடுக்கப்பட்டு, பிடிபட்டாரா, தானாகச்சென்று சரணடைந்தாரா… என்பதுதான் தெரியவில்லை. போர் உக்கிரமாகியிருந்தபோது, நாங்கள் வேறு வேறு பகுதிகளுக்கு இடம்மாறியிருந்தோம். குழந்தை பங்கருக்குள் உறங்கிக்கொண்டிருந்தாள். அவர், இயக்கத்தின் ஊடகப்பிரிவில் இருந்தவர். கெமராவும் கையுமாகத்தான் அலைபவர். சுற்றிவலைப்பில் கைதானாரா, அல்லது சரணடைந்தாரா என்பதும் தெரியாது. ஷெல் வீச்சில் பங்கருடன் என்ர…. என்ர…. “ அபிதா விம்மத் தொடங்கினாள்.
ஜீவிகா, பதற்றத்துடன் எழுந்துவந்து, அபிதாவை அணைத்து, “ போதும்… போதும்…. பெரியப்பா… சும்மா இருங்க…. அவளுக்கு அந்தக்கொடுமைகளை நினைவூட்டி அழவைக்கவேண்டாம். அபிதா, நீங்க போய், உங்கட வேலையை பாருங்க…” என்றாள்.
“ பரவாயில்லை…. அம்மா….. அய்யா… சும்மாதானே கேட்டார். என்னாலதான் அழுகையை அடக்கமுடியாமல் போகிறது. “ அபிதா கண்களை துடைத்தவாறு ஓரக்கண்ணால் சண்முகநாதனையும் பார்த்துக்கொண்டு அங்கிருந்து அகன்று சமையலறைக்குள் சென்றாள்.
“ பாவம் “ எனச்சொன்னவாறு சண்முகநாதன் நீண்ட பெருமூச்சை உதிர்த்தார்.
உணவருந்தும் மேசையிலிருந்த ஜீவிகாவின் கைத்தொலைபேசி சிணுங்கியது.
“ அபிதா, அதை எடுத்துத் தாங்க… “ ஜீவிகா மடியிலிருந்த கணினியில் நிலைகுத்தியிருந்த பார்வையை அகற்றாமலே கேட்டாள்.
“ ரீச்சர்தான் எடுக்கிறாங்க.. “
ஜீவிகா, அதனை வாங்கி, “ சொல்லுங்க… என்ன ஸ்கூல் நேரத்தில் எடுக்கிறீங்க…? “
மறுமுனையில் கற்பகம் பேசினாள்.
“ என்ன.. ஜீவிகா… உங்களுக்கு செய்தி தெரியுமா…? நாளையில் இருந்து ஒரு மாத காலத்திற்கு ஸ்கூல்கள் எல்லாம் மூடப்போறாங்க. இப்பதான் அதிபர் ஸ்டாஃப்ஸ் அனைவரையும் அழைத்து சொல்கிறார். உங்களுக்கு இந்த செய்தி தெரியவரவில்லையா…? நான் காலையில் ஸ்கூல் புறப்படும்போது நீங்கள் சோபாவில் நல்ல தூக்கம். “
“ நான் பெரியப்பாவின் யாழ்ப்பாண பயண ஒழுங்குகளை கவனிக்கவேண்டியிருந்தது. செய்திகளை சரியாக கவனிக்கவில்லை. முகநூல்களில் ஏதோவெல்லாம் வந்து சலிப்புத்தருது. மீம்ஸ்களுக்கும் குறைவில்லை. அது சரி… நீங்கள் இன்றைக்கு மங்களேஸ்வரி ரீச்சர் வீட்டுக்கு தற்காலிகமாக இடம்மாறிச்செல்லப்போவதாக அறிந்தேனே… ஏன்….? “
“ அபிதா சொன்னாளா…? ஓமோம் எங்களுக்கு அடுத்தவாரம் ஒரு ரீச்சர்ஸ் செமினார் வருகிறது. சில விடயங்களை நானும் மங்களேஸ்வரியும் சேர்ந்து எழுதவேண்டியிருக்கிறது. அதுதான். “ என்று ஒரு முழுப்பொய்யை கற்பகம் சொன்னாள்.
“ என்ன… ரீச்சர்…?! ஸ்கூல் மூடப்போகிறாங்க என்று சொன்னீங்க. அது சரி… இன்றைக்கு இருக்கும் நிலைமையில் ரீச்சர்ஸ் செமினார் நடக்கும் என்று நம்புறீங்களா…? “
“ இன்றைக்குத்தானே தெரியும். ஸ்கூலுக்கு விடுமுறை தரும் விடயம். இன்னமும் செமினார் பற்றி எந்தவொரு முடிவும் இல்லை. பெரியப்பா யாழ்ப்பாணத்திற்கு எப்போது போகிறார்… தெரியுமா…? “ கற்பகம் முன்யோசனையுடன் கேட்டாள்.
“ பெரும்பாலும் இன்று இரவு புறப்படலாம். கொழும்பிலிருந்து பருத்தித்துறை புறப்படும் பஸ், பெரியமுல்லை சந்திக்கு இரவு பத்து மணிக்கு வரும்தானே… அந்த பஸ்ஸில் போவதற்கு சீட் பதிவுசெய்யலாம் என்றிருக்கிறார். சரி… வேறு என்ன… ? ஸ்கூல் விட்டதும் வாங்க பேசிக்கொள்வோம். நானும் இன்று வீட்டில்தான். “ ஜீவிகா தொடர்பைத் துண்டித்தாள்.
ஒரு பொய்யைச்சொல்லப்போய் மேலும் மேலும் பொய்களை அவிழ்க்கவேண்டியதாகிவிட்டதேயென்று கற்பகம் தவித்தாள்.
பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை தனக்கு சாதகமாக்கி யாழ்ப்பாணத்திற்கு இன்று இரவே புறப்படும் எண்ணத்தில்தான் கற்பகம் இருந்தாள். இந்தப்பயணத்தில் தனக்கு வேண்டாத லண்டன்வாசி சண்முகநாதனும் இணைந்துவிட்டால் என்ன செய்வது…? ஆள் போனதன் பின்னர் புறப்படுவோம் என்ற தீர்மானத்திற்கு கற்பகம் வந்தாள்.
“ ஜீவிகாவின் பெரியப்பா லண்டனிலிருந்து வந்திருப்பதனால், இனி அதனை சண்முகநாதன் வீடு என அழைப்போம். ஏனென்றால் அது அவரது வீடுதானே..? “ என்றாள் மஞ்சுளா.
மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்தவள் சுபாஷினி.
“ என்னடி… இப்போது லன்ஞ் ரைம்மா… ? அதுதானே பார்த்தேன். வம்பளக்க தொடங்கிட்டாயா..? அது என்ன அந்த லண்டன்காரர் வரும் வரையில் ஜீவிகா வீடு… அவர் வந்தபின்னர் அவரது வீடு…? என்ன ஜோக்கா...? “
“ ஜோக் ஒன்றும் இல்லை. காலையில் பார்த்தாயா… எங்கட கற்பகம் ரீச்சரின் பதகளிப்பை. அந்த ஆள் வந்தது தெரிந்ததும், திடீரென, இடப்பெயர்வு பற்றி சொன்னாவாம் ! அபிதா எனக்கு எல்லாம் சொல்லியிருக்கிறா… அந்த ஆள் கொஞ்சம் விவகாரமான ஆள்தான். “
“ அறுபதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்… பாட்டுத் தெரியுமா… ? “
இரண்டு முனைகளிலுமிருந்து சிரிப்பொலி பரஸ்பரம் ஒலித்தது.
“ அந்த ஆள் கெதியா யாழ்ப்பாணம் போய்விடும். நாங்கள் எப்போது நுவரேலியா போவது. நாமும் கெதியாப் போனால் நல்லது சுபா. ஏன் தெரியுமா..? என்ர ஓடிப்போன அம்மாவுக்கு இப்போதுதான் என்ர யோசனை வந்திருக்கு. நான் இருக்குமிடத்தை தேடிக்கொண்டிருக்கிறா. வேலை செய்யும் பேங் இருக்கும் இடத்தை அறிந்துவிட்டா. இனி மனுஷி நிகும்பலைக்கு தேடிக்கொண்டு வந்தாலும் வந்துவிடும். நான் ஏற்கனவே லீவுக்கு சொல்லியிருக்கிறன். இந்த கண்டறியாத வைரஸினால், ஸ்கூல்ஸ் மூடப்போறாங்க. பெரும்பாலும் எங்கட கற்பகம் மெடம் ஊருக்கு பெட்டியை தூக்கலாம். ஜீவிகாவின் பெரியப்பாவும் யாழ்ப்பாணம் போகலாம். அவர் அங்கே ஏதோ ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்திருக்கிறாராம். சில வேளை ஜீவிகாவும் அவருடன் போகலாம். நாங்கள் இரண்டுபேரும் நுவரேலியா புறப்பட்டாள், அபிதா பாவம்டீ……. என்ன செய்வோம்..? “ எனக்கேட்டாள் சுபாஷினி.
“ மிகவும் வசதிதானே… நாங்களும் அபிதாவை அழைத்துப்போவோம். “
“ உங்கட வீட்டில் நாம் மூவரும் தங்குவதற்கு வசதி இருக்கிறதா…. ? “
“ அதெல்லாம் சமாளிக்கலாம். வா… என்ர அம்மாவும் வரச்சொல்லி கரைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறா. இந்த சந்தர்ப்பத்தை விடக்கூடாது. நாட்டில் திடீர் திடீரென மாற்றங்கள் வருது. அடுத்த மாதம் பொதுத்தேர்தலும் வருது. என்ன நடக்குமோ தெரியாது. நீ ரெடி என்றால் நானும் ரெடி. நாளைக்கே போகலாம். எதற்கும் ஜீவிகாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடுவோம். இன்றைக்கு அவள் பெரும்பாலும் வேலைக்குப்போயிருக்கமாட்டாள். சரி … எனக்கு வேலையிருக்கு. கஸ்டமர்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறாங்க. பிறகு பேசுவோம். “ சுபாஷினி தொடர்பைத் துண்டித்தாள்.
அபிதா, மதியத்திற்கான சமையல் வேலையில் மூழ்கினாள். சண்முகநாதன் தனது வீட்டின் பின் வளவிற்குச்சென்று அபிதா வளர்த்திருக்கும் காய்கறித் தோட்டத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்.
கத்தரி, மிளகாய், தக்காளி , வல்லாரை பயிரிட்டிருந்தாள். அனைத்துக்கும் பாத்திகட்டி, அழகாக பராமரிக்கப்பட்டிருக்கின்றன. முன்பிருந்த வேலைக்காரிகளுடன் அபிதாவை ஒப்புநோக்கிப்பார்த்தார். மனதிற்குள் அபிதாவை மெச்சிக்கொண்டார்.
தனது பெறாமகள் ஜீவிகாவை விட இந்த வேலைக்காரிதான் இந்த வீட்டை மிகவும் அழகாக பராமரிப்பதாகப்பட்டது அவருக்கு. லண்டன் புறப்படும் முன்னர், அவளுக்கு ஏதும் வாங்கிக்கொடுத்துவிடவேண்டும். என்ன வாங்கிக்கொடுக்கலாம்…? சேலை, சட்டை, படுக்கை விரிப்பு, துவாய்…!?
இம்முறை வந்தவிடத்தில், இதுவரையில் கற்பகம் தன்னுடன் முகம் கொடுத்து பேசாமல் இருப்பதுதான் அவருக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது.
அவள் திடீரென மற்றும் ஒரு ஆசிரியை வீட்டுக்கு இடம்மாறவிருப்பது சண்முகநாதனுக்கு ஆச்சரியம் தரவில்லை. கடந்த முறை வந்தபோது நிகழ்ந்த சம்பவம் மனதிற்குள் வந்து எட்டிப்பார்த்தது.
அன்று ஜீவிகா வேலைக்குப்போயிருந்த நேரம். கற்பகம் மாத்திரம் வீட்டிலிருந்தாள். தினமும் வந்து வேலை செய்துவிட்டுச்செல்லும் பழைய வேலைக்காரியும் பிள்ளைக்கு சுகமில்லை என்று வரவில்லை. மஞ்சுளா, சுபாஷினி இந்த வீட்டுக்கு வந்திருக்காத காலம்.
ஜெர்மனியிலிருக்கும் கணவனை கற்பகம் விட்டுப்பிரிந்த கதையை பரிவோடு கேட்டு, பாசம் காண்பித்து, நேசம் சொல்லி, கற்பகத்தின் துளிக்கண்ணீரைத் துடைத்து, தலையை வருடி, அடுத்த கட்டத்திற்கு தாவவிருந்தவேளை அவள் சுதாரித்துக்கொண்டாள்.
“ என்னை அப்படியெல்லாம் எடை போட்டுவிடவேண்டாம். உங்கட வயசென்ன… என்ர வயசென்ன…? சுவரில் உங்கட மனைவி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறா…! மறந்திடவேண்டாம். ஜீவிகாவிடம் சொல்லுவேன். கவனம். “
சண்முகநாதன், விருட்டென கற்பகத்தின் அறையை விட்டு வெளியே வந்தார்.
கற்பகம், “ கிழட்டுப்பயல் “ எனச்சொல்லிக்கொண்டு கதவை அடித்துச்சாத்தி மூடிய சத்தம், ஒன்றரை வருடங்களின் பின்பும் சண்முகநாதனின் காதில் எதிரொலித்தது.
இந்த இடைவெளியில் கற்பகம் அந்தச்சம்பவத்தை மறந்திருப்பாள் என்றுதான் சண்முகநாதன் நினைத்திருந்தார்.
இம்முறை வந்திருப்பது, ஊர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு. மனதை கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் பெரிய அவமானமாகிப்போய்விடும்.
தன்னால் மறக்கமுடியாத அந்தச் சம்பவத்தை, கற்பகம், ஜீவிகா உட்பட மற்றவர்களுக்கும் சொல்லியிருப்பாளா…?
சண்முகநாதன், தலையை குனிந்தவாறு அந்தச்சிறிய மரக்கறித்தோட்டத்தை பார்த்துக்கொண்டு நின்றார்.
ஒரு கத்தரிச்செடியில் நத்தை ஒன்று ஊர்ந்தவாறு இலைகளை அரித்துக்கொண்டிருக்கிறது. சில இலைகளில் சின்னஞ்சிறிய துவாரங்கள் தெரிந்தன.
( தொடரும் )
No comments:
Post a Comment