உழுதுண்ணும் ஊரவர் ! வரப்புயர நீர் உயரும் !!

வயல்களுக்கு உரம் தேவை. இயற்றை உரம் பெறப் பல வழிகளைக் கையாண்டவர்கள் அவர்கள். சாணமும் ‘ சாதாழை ‘ யும் தாராளமாகப் பரப்புர். செம்மறியாடுகளைப் ‘பட்டி ‘அடைத்துத் ‘தெட்டம் தெட்டமாக ‘ ச் செழிப்புறச்செய்வர். இவை எல்லாம் மழைக்காலத்துக்கு முன்னதாக நிறைவுறும். செயற்கை உரம் பயன்படுத்தியதாக நினைவில்லை.

ஆவணி மழையுடன் வரம்புகட்டல், உழுது மறுத்தல் ஆகியன நிறைவுபெற, நெல் விதைத்தல் தொடரும். விதை நெல்லைச் சுபமுகூர்த்தம் பார்த்து விதைக்கத் துவங்குவர். இடதுகையாலே பனையோலைக் கடகத்தில் விதை நெல்லைச் சுமந்தபடி வலது கையில் பிடிபிடியாக நெல்லை எடுத்து ஒழுங்காக வீசி விதைத்துச் செல்லலும் ஒரு தனிக்கலை.
விதைத்து முடித்தவுடன் மீண்டும் உழுது மறுப்பர். கலப்பையாலேதான் அவர்கள் உழுவர். ஏர்பிடித்து, எருதுச்சோடிகளைப் பின் தொடர்ந்து உழுவதே பார்க்க அழகான காட்சி. அதற்கு மெருகூட்டுவது, அவர்களின் பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டுமுயற்சியுமாகும். ஏனெனில், அவர்கள் தனியாக நின்று உழுவதில்லை. பல உழவர்கள் ஒன்றுகூடித்தான் உழுவர். பலர் வரிசைசேர்ந்து உழும்போது, அவர்களது எருதுகளின் கம்பீரமும் தோற்றமுங்கூட ஒரு தனிக்கவர்ச்சியூட்டும்.
ஊர் எருதுகளுடன் ‘வடக்கன் ‘ மாடுகளும் சில உழவுக்கு பயன்படுத்தப்படும். ‘வடக்கன் ‘ மாடு என்றால் பெரிய இன எருதுகள். நல்ல வெள்ளை நிறமுள்ள எருதுகள். நீண்டு நிமிர்ந்த கொம்புகளும் பருத்து உருண்ட உடலும் கொண்ட அவை, தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நுகம்பூட்டி உழுவதற்கும் வண்டி இழுக்கவும் பழக்கிய பின், உழவர்கள் பெருமையுடன் பயன்படுத்தும் எருதுகள் அவை.
ஊர் எருதுகள் தோற்றத்தில் சிறியவை. ஆதலால், அவற்றைவிட வடக்கன் மாடுகளைப் பாரவண்டி இழுப்பதற்குப் பெரிதும் விரும்புவர். மிகப்பெருஞ் செல்வமாக மதித்து வளர்ப்பர். சிலர், அவற்றின் கழுத்திலே சதங்கை அல்லது மணி கட்டி, கொம்புகளைச் சீவி, அழகும் கவர்ச்சியும் ஊட்டுவர். சலசலக்கும் சதங்கை கட்டி, தாளத்தோடு காலும் தட்டி கலகலப்பாய் வீதியில் நடக்கும் வடக்கன் மாடுகளின் கோலம், தனிக்கவர்ச்சியான கோலம். அக்கோலம் மனதிலிருந்து காலத்தாற் சாகாத காலத்தின் கோலத்தால் ஏலத்திற்போகாதா அழகுக்கோலம்!
ஊர் எருதுகளுஞ்சரி, வடக்கன் மாடுகளுஞ்சரி – வயல் உழும்போது மிகவும் ஒழுங்காக, ஒருசோடியின் பின் இன்னொன்றாக உழுது செல்லும்போது, அவற்றை நுகத்திற்பூட்டிப் பழக்கிய உழவின் அயரா உழைப்பையும் நினைத்துப் பாராட்டத் தோன்றும்.
நாலுசோடி எருதுகள் உழும்போது ‘நாலணை ‘ என்பார்கள். ஆறுசோடி எருதுகள் உழும்போது ‘ ஆறணை ‘ என்பார்கள். நாலணை, ஆறணை என்று குறிப்பிடல் அவர்களின் தனிமொழி எனலாம். தனியாக அன்றி, நாலணை, ஆறணை சேர்த்து வயல் உழுதல் அவர்கள் வழக்கம். அதனால் கூட்டு முயற்சியும் உழவர்க்கு இடையிலான உறவும் ஒற்றுமையும் ஓங்கும். ஒருவரின் வயலை விதைத்து உழுது மறுத்தபின், அடுத்தவர் வயிலில் யாவரும் சேர்ந்து கூட்டு முயற்சியைத் தொடர்வர்.
உழவர்களின் இக்கூட்டு முயற்சியின் பின், சில நாள்களுள் பசுமையான நெற்பயிர் முளைகள் தலைகாட்டும். விரைவில் அவை நிமிர்ந்து எழுந்து வளர்ந்து, வயல்வெளி எங்கும் பச்சைப்பசேலெனப் பசுமைதரும். தொடர்ந்து மழை பெய்து வயல் எல்லாம் வெள்ளம் நிரம்ப, பயிர்களும் உயர்ந்து, ‘ நீர் உயர நெல்லுயரும் ‘ என்பதை நினைவுபடுத்தும். நெல் உயரக் குடி உயரும் – குடி உயரக்கோன் உயர்வான் என்பது ஆன்றோர் வாக்கு. கோன் உயர்ந்ததோ இல்லையோ, உழுதுண்ணும் எம்மூரவர் ஆளுமை உயர்ந்தது. விரும்பத்தக்க உளப்பாங்கு ஓங்கியது. ஊர்ப்பெயரும் உயர்ந்தது.
நாள்கள் செல்லச் செல்ல, நெற்பயிர்கள் வளரும். ஆனால், நெல்லுடன் புல்லினமும் வளரும் அல்லவா? காலா காலத்திலே புல்லைக் களைந்து நெல்லைப்பேண வேண்டும். எனவே பருவம் அறிந்து, களை பறித்தலும் கூட்டு முயற்சியாகவே நடைபெறும்.
ஆண்களும் பெண்களுமாகப் பலர் வரிசையாக நின்று களை பறிப்பர். அவர்கள் ஆடிப்பாடிக் களை பறிப்பர். அதிலும் ஒரு அழகு. தாளத்துக்கு ஏற்பப் பாடலும் அசைந்தாடிக் களை பறித்தலும், பறித்த களைகளை பின்புறமாகக் கீழே போடுதலும் ஒரு கலை நிகழ்ச்சிபோல நிகழும். ஆடிப்பாடிக்களித்து, ஆண்களும் பெண்களும் களை பறிக்கும் வேளையில், நாட்டார் பாடலை மண்வாசனையுடன் சுவைத்து மகிழ்ந்த காலம் அது.
வயல்களில், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் துரித வளர்ச்சி அடையும் நெற்பயிர்களை கமக்காரர் அதிகாலை வேளைகளில் வரம்பு வழியே நடந்து பார்வையிடுவர். காலைப் பனிக்குளிர். அதனால், துவாய் ஒன்றாலே தலையையும் காதையும் மூடியவாறு, வாயில் புகையிலைச் சுருட்டைப் பிடித்துப் புகை ஊதியபடியே அவர்கள் வரம்புகளில் நடந்து பயிர்களின் வளர்ச்சியினை மதிப்பிட்டு மகிழ்வர்.
ஒரே வரம்பில் இருவர் எதிரெதிரே சந்திக்கும்போது நிகழ்ந்த சுவையான காட்சி ஒன்றையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். அதையும் இங்கு பதிவு செய்தல் மிகப்பொருத்தம் என எண்ணுகிறேன்.
தமது வாயிலே சுருட்டைப் பிடித்துப் புகை இழுத்து ஊதியவாறு ஒருவர் வருவார். மற்றவரின் சுருட்டு அணைந்து, பற்றவைக்கத் தீப்பெட்டி இன்றி அவர் கவலையுடன் வரும்போது, இருவரும் சந்திப்பர். இருவரின் கண்களும் கருத்துப் பரிமாறும். தீயுள்ள சுருட்டு நுனியும் தீ அணைந்த சுருட்டு நுனியுஞ் சந்திக்கும்.

பயிர்கள் வளர்ந்து குடலைப்பருவமாகி நெல்மணிக் கதிர்கள் வயலை அலங்கரிக்கும் காலம், உழவரின் பணியும் நிறைவுதரும் காலம். நிறைமணிக்கதிர்கள் பூமித்தாய்க்குத் தலைவணங்கி நிற்கும்போது, இடையிடையே பதர்கள் தலைநிமிர்ந்து நிற்றல் உலக மக்கள் இயல்பைச் சுட்டிக்காட்டுவதுபோல அமையும்.
விரைவில் அறுவடைக்காலம். களை பறித்த நாட் காட்சிகள் போன்ற கலைக்காட்சிகளை மீண்டும் கண்டு களிக்கலாம். ஆண்களும் பெண்களும் அணிவகுத்து, அரிவாளுடன் களத்தில் இறங்கும் காட்சி, அதிகாலை விருந்தாகும். பிறை போல வளைந்த அரிவாளை ஏந்திப் பலர் அறுடையில் ஈடுபடுவர்.

தாளத்துக்கு அமையத் தாவிக் கதிர்கொய்து, தனதான தன வென்று பாடியாடிக் கொய்த கதிர்களை கீழே வைப்பர். இதை எல்லாம் எமது படலைக்கொட்டிலில் இருந்து பார்த்துப் பரவசமடைந்த காலமது. நாட்டார் பாடலுக்கும் நம்மவர் வாழ்வுக்கும் உள்ள பிணைப்பை நான் உணரச் சந்தர்ப்பம் அளித்த சூழல் அது. அதை விவரித்துச் சொற்களில் பிடித்துவைத்தல் இயலாத ஒன்று. அகக் காட்சியாக இன்றும் காணலாம். எனினும் சொற்கோவையாகத் தொடுப்பது அரிது.

நெல்மணிகளைச் சாக்குகளில் மூடைகளாகக் கட்டி, மாட்டு வண்டியில் ஏற்றி, வயலில் இருந்து புறப்படும் உழவர்கள் ஒழுங்கையில் மறையும்வரை எமது படலையில் இருந்து பார்த்த காலம் ஒருகாலம். அவர்கள் மனநிறைவும் பெருமிதமும் ஒருங்கே ஒழுங்கையிற் செல்லும் வண்டிகள் போல ஊர்வலம் வரும். ‘ உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை ‘ என்ற செய்யுளடிகளின் நினைவை மீட்டும் மீட்டும் உயிர்ப்பிக்கும்.
“ நனவோடை தனில் இந்த
நினைவெல்லாம் மொய்த்து
கனவான கதைசொல்லும்
களமாகும் நெஞ்சம்! “
( தொடரும் )
No comments:
Post a Comment