அவலநிலை போக்குதற்கு ஆண்டவனே வழிகாட்டு ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


          கட்டி   அணைத்தோம் 
          கைகுலுக்கி   மகிழ்வடைந்தோம்  
          இட்டமுடன்    உணவுகளை 
          எடுத்துண்டு இன்புற்றோம் 
          கட்டி அணைத்தவரை
          கைகுலுக்கி நின்றவரைtam
          எட்டவே நில்லென்று
          எச்சரிக்கை செய்கின்றோம் !        

          கைதந்தால் ஓடுகிறோம்
          கால்பட்டால் பதறுகிறோம் 
          முன்னின்று மூச்சுவிட்டால்
          பின்னோக்கி ஓடுகிறோம்
          தும்மல்வந்து விட்டாலே
          துடிதுடித்து நிற்கின்றோம்
          கொரனோவின் வில்லத்தனம்
          அளவின்றி பெருகிறதே ! 

          கொரனோவின் பரவலினால்
          கொள்கலங்கள் தடையாச்சு
          கடையெல்லாம் சனக்கூட்டம்
          பொருள்தேடி அலைகிறது 
          கல்விகற்கும் மாணவர்கள்
          கதிகலங்கி நிற்கின்றார்
          மெள்ளமெள்ள கொரனோவும்
          பள்ளிநோக்கி பார்க்கிறது   ! 


          வெளிநாட்டுப் பிரயாணம் 
          அத்தனைக்கும் வேட்டுவைத்து 
          உள்நாட்டு விழாவனைத்தும் 
          ஓரங்கட்டும் நிலையாச்சு 
          யாருக்கு வருமென்று 
          தெரியாத மாயமதாய்
          பாருக்குள் கொரனோவும்
     பாய்ந்துவிடத் துடிக்கிறது  !

           மக்கள்கூடும் இடத்தினிலே
           தன்மதிப்பைக் காட்டுதற்கு
           கொரனோவும் ஆவலுடன்
           கொடியெடுத்து நிற்கிறது 
           வீட்டுக்குள் இருந்துவிட்டால்
           வில்லனிடம் தப்பிடலாம்
           என்கின்ற அறிவுரையால்
           எல்லோரும் முடங்கிவிட்டார்  ! 

      ஆலையெலாம் மூடிவிட
      ஆலயங்கள் அடங்கிவிட
      அரக்கனென கொரனோவும்
      ஆர்ப்பரித்து எழுந்துவிட
      ஆர்வருவார் இடர்களைய
      என்றேங்கும் அகிலமக்கள்
      அவலநிலை போக்குதற்கு
      ஆண்டவனே வழிகாட்டு !

No comments: