Tuesday, March 10, 2020 - 6:00am
சீனாவின் வுகான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் இன்று பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி விட்டது. உலகில் ஏராளமான நாடுகளில் கொரோனா தொற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்நோயானது ஏறக்குறைய உலகின் அத்தனை நாடுகளுக்குமே பரவி விடலாமென்ற அச்சமே நிலவுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 3300 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டி விட்டது.
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமா அல்லது மேலும் தீவிரமடையுமா என்பதை ஊகித்துக் கொள்ள முடியாதிருக்கிறது. சீனாவில்தான் இந்நோய் முதன் முதலில் பரவிய போதிலும், இப்போது அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாகக் குறைந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக சீனா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாகவே அந்நாட்டில் இந்நோய் பரவும் வேகம் குறைந்து கொண்டு செல்கின்றது.
ஆனால் மற்றைய நாடுகளில் நிலைமை அவ்வாறானதாக இல்லை. ‘கொவிட் 19’ என்ற கொரோனா வைரஸ் தொற்று வேகம் ஏனைய நாடுகள் பலவற்றில் தீவிரமாக உள்ளது. சீனாவைத் தவிர ஏனைய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் காரணமாக கணிசமானோர் உயிரிந்து விட்டனர். சீனாவுக்கு அப்பால் இத்தாலியில்தான் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம்.
இலங்கையைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதில் காத்திரமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன என்றும் கூற முடியும்.
கொரோனா வைரஸ் நோயாளியான சீன நாட்டுப் பெண் ஒருவர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதும் எமது மக்கள் உண்மையிலேயே அச்சமடைந்தனர். சீனாவில் ஆயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்துள்ள இந்நோய்த் தொற்றினால் எமது நாடடுக்கும் பேராபத்து வந்து விட்டதோ என்றுதான் இலங்கையர்கள் அச்சம் கொண்டனர். அந்த அச்சம் நியாயமானது.
ஆனாலும் முதன் முதலில் இங்கு கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதும், இலங்கை துவண்டு விடவில்லை. அந்த அச்சுறுத்தலை எமது நாடு துணிச்சலுடன் எதிர்கொண்டது. சீன நாட்டுப் பிரஜையான அப்பெண் உடனடியாகவே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் அவருக்கு தொடரான சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்பெண் கொரோனாவிலிருந்து முற்றாகவே குணமடைந்து தனது நாட்டுக்குத் திரும்பி விட்டார். இந்த விடயத்தைப் பொறுத்தவரை எமது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களின் துணிச்சலான பணியைப் பாராட்டாமலிருக்க முடியாது.
அதுமாத்திரமன்றி, கொரோனா அச்சுறுத்தலை துணிச்சலுடன் எதிர்கொள்வதில் இலங்கை மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையுமே பாராட்டக் கூடியதாகும
கொரோனா நோய் தீவிரமாகப் பரவிய சீனாவில் அகப்பட்டுக் கொண்ட இலங்கை மாணவர்களை இங்கு பாதுகாப்பாக அழைத்து வருவதில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையும் சாதாரணமானதன்று. கொரோனா உயிரச்சம் காரணமாக சீனாவைக் கண்டு உலகமே பீதியடைந்திருந்த வேளையில், இலங்கை அரசாங்கம் விசேட விமானத்தை சீனாவுக்கு அனுப்பி எமது மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது.
விமானத்தில் அங்கு சென்று திரும்பிய எமது பணியாளர்கள் அனைவரும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிகுந்தவர்களாவர்.
இவற்றுக்கெல்லாம் அப்பால், வெளிநாடுகளில் இருந்து வருவோரை எமது விமான நிலையத்தில் பரிசோதிப்பது, நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது, கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ள நாடுகளில் இருந்து இலங்கை வருவோரை தனியான இடத்தில் வைத்துப் பராமரித்து அவதானிப்பது என்றெல்லாம் இலங்கை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே சிறப்பானவையாகும்.
இவ்வாறான அவதானம் காரணமாகவே இலங்கையில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தீவிரமான நடவடிக்கைகளை மாத்திரமன்றி எமது நாட்டின் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்களையும் பாராட்டுவது பொருத்தமாகும். மருத்துவ விஞ்ஞானத்துறையில் அபார வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளே கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த வழியின்றி திண்டாடிக் கொண்டிருக்கையில், எமது நாடு கொரோனா அச்சுறுத்தலில் வெற்றியடைந்துள்ளதென்றே கூற வேண்டியுள்ளது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொருத்தமான விஞ்ஞான பூர்வமான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா ஒழிப்புக்காக நியமிக்கப்பட்ட விசேட செயலணிக்கு ஜனாதிபதி இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.
அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக இப்பிராந்தியத்தில் கொரோனா வைரஸுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த நாடாக இலங்கை விளங்குகிறது என்பதையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கைக்குள் கொரோனா பரவுவது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்பதற்காக நாம் அலட்சியமாக இருந்து விட முடியாதென்பதனாலேயே, இதற்கென விஞ்ஞாபனபூர்வமான முறைமையொன்றை அவசரமாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மருத்துவத்துறை முன்னேற்றத்தைப் பொறுத்தவரை உலகுக்கே முன்னுதாரணமான நாடாக இலங்கை விளங்குகின்றது. எமது வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் போன்றோரெல்லாம் திறமை மிக்கவர்கள். அரசின் கடுமையான நடவடிக்கையினாலும் மருத்துவப் பணியாளர்களின் உழைப்பினாலுமே கொரோனா தொற்று எமது நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனாலும், கொடிய இவ்வியாதி தொடர்பாக ஒட்டுமொத்த நாடும் தொடர்ந்தும் விழிப்புணர்வைப் பேணி வருவது அவசியம். உலகில் இருந்து கொரோனா வியாதி முற்றாக ஒழிக்கப்படும் வரை முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியமேயன்றி அலட்சியம் கூடாது!
நன்றி தினகரன்
No comments:
Post a Comment