துடி மற்றும் தக்கை – தோற்கருவிகள்
அமைப்பு
உடுக்கையை போன்ற அமைப்பில் ஆனால் அதை விட சிறியதாகவும் சில இடங்களில் பெரியதாகவும் இருக்கிறது துடி. காட்டில் கிடைக்கும் பலா அல்லது குமுது மரத்தின் முற்றிய கிளைகளை வெட்டிக் கொணர்ந்து பிரத்தியேகமான கருவியால் குடைந்து முற்காலங்களில் குரங்கு அல்லது காட்டு ஆட்டின் தோல் போர்த்தி செய்யப்பட்டது. இப்பொழுது ஆட்டுத் தோல் பயன்படுத்தி துடி செய்யப்படுகிறது. அதுவும் இல்லையென்றால் நெகிழி பயன்படுத்துகிறார்கள்.
தக்கையும் உடுக்கையை ஒத்த வடிவமைப்பை உடையது அதைவிட பெரியது. உடல் பகுதி பலா மரத்தில் செய்து ஆட்டுக்குட்டியின் தோல் போர்த்தப்பட்டுள்ளது.
துடியும் தக்கையும் குச்சிக்கொண்டே ஒரு முகத்தில் மட்டும் கொட்டப்படுகிறது. உடுக்கயை போன்று கைகளால் இசைக்கப்படுவதில்லை.
குறிப்பு
உடுக்கை, தமருகம், துடி, தவண்டை, தக்கை, பாணி, திமிலை, இடக்கை, ஆகுளி இவையெல்லாம் ஒரே அமைப்புடைய வேவ்வேறு அளவிலான தோலிசை தொல் தமிழர் கருவிகள். இக்கருவிகள் அனைத்தும் நேரக்குடுவை(Hour Glass) அமைப்பையுடையவை. இக்கருவிகளின் பயன்பாடு தமிழர்கள் மத்தியில் மிகவும் அருகி வருகின்றது. என்னுடைய காதணி விழாவிற்கு இசைக்கப்பட்ட உடுக்கை, பம்பை, சிலம்பு ஆகிய கருவிகளை தற்காலத்தில் எங்கள் உறவினர்கள் யாரும் அமர்த்துவதில்லை.
திருமுறை, கந்தப்புராணம், திருப்புகழ் ஆகியவற்றில் துடி மற்றும் தக்கை பற்றிய குறிப்புகள் உள்ளன. சிலர் துடியும் உடுக்கையும் ஒன்று என்பர். இக்கருத்து தவறானது. ”தக்கையொ டுடுக்கைதுடி” என்று ஒரே பாடலில் கச்சியப்பரால் தக்கையும் உடுக்கையும் துடியும் குறிக்கப்படுவதால் இவை மூன்றும் வெவ்வேறு கருவிகள் என்பது தின்னம். மேலும் பல பாடல்களில் துடியும் தக்கையும் ஒரே செய்யுளில் இடம்பெறுகின்றது. ”கறங்குதுடி தக்கையொ டிடக்கை” என்கிறார் சம்பந்தர். ஆக துடியும் தக்கையும் இரு வேறு கருவிகள் என்பதில் ஐயமில்லை. ”துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்” என்பதில் சிவனும் துடியும், துடியின் ஒளியும் ஒன்று என்கிறார் அப்பர். சங்க காலத்தில் துடி இசைப்பவர் துடியர் எனப்பட்டனர். அத்தனை சிறப்பு பொருந்திய கருவி இன்று நம்மிடையே இல்லை.
கந்தப்புராணத்தில் ”வென்றிகெழு தொண்டகம் வியன்துடி யியம்பக் குன்றிறைவன் வேட்டுவர் குழாத்தினொடும் வந்தான்” என்கிற பாடலில் வள்ளியம்மைக்கு உணவு கொண்டு வந்த நம்பிராசன் குறிஞ்சி நிலத்திற்குரியதான தொண்டகப் பறை முழங்கவும் துடி கொட்டியும் வந்தான் என்கிறார் கச்சியப்பர். கேரள மாநிலம் வயநாடு சென்றால் வள்ளியின் தந்தை நம்பிராசன் பயன்படுத்தியது போன்ற துடி இசைக்கருவியை நாம் காணலாம். கேரள மாநிலம் வயநாடு பனியர் பழங்குடியினரிடம் துடி இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. காடுகளை விட்டு வெளியேற்றபட்ட பனியர் பழங்குடிகள் வயநாட்டில் காலனிகளில் வசிக்கிறார்கள். காட்டு வாழ்க்கையை தொலைத்த இம்மக்கள் தங்கள் பண்பாட்டு அடையாளங்களை இழக்காமல் இருக்க முனைகிறார்கள். துடியை கொட்டி துடியாட்டம் என்னும் பாரம்பரிய நடனத்தை ஆடுகிறார்கள். நாற்று நடும் வேளைகளிலும் துடி கொட்டப்படுகிறது. 90-100 வயதான மூதாட்டிகள் கூட துடியின் சத்தத்தை கேட்டால் எழுந்து ஆடத் தொடங்கி விடுகிறார்கள். அந்த அளவு துடி இம்மக்களின் இரத்தத்தோடு ஊறிய இசைக்கருவியாக இருக்கின்றது. துடியை முறையாக செய்ய வேண்டிய பொருட்களான மரம், தோல் போன்றவை வனத்துறையின் கட்டுபாடுகளால் கிடைப்பதில்லை என்கிறார் கேரளத்தின் ஒரே துடி செய்யும் கலைஞர் திரு வேலன் மூப்பர். இவருக்கு பிறகு இங்கே முறையாக துடி செய்பவர் எவருமில்லையாம். ஒரு துடியை செய்து முடிக்க 18 நாட்கள் ஆகுமாம். ஒரு துடி 4000 இந்திய ருபாய் மதிப்பில் விற்கப்படுகிறது. ஆக இத்தொழிலை நம்பி இவர்கள் வாழ்க்கை நடத்த இயலாது. வேலன் மூப்பர் குடும்பத்தில் எவரும் இத்தொழிலை கற்க முன்வரவில்லை. கேரளத்தில் துடி அழிவின் விளிம்பில் உள்ளது.
துடியின் தொடர்நிலை கருவி தக்கை என்கிறார்கள் இசை ஆராய்ச்சியாளர்கள். தமிழகத்தில் திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் மட்டுமே தக்கை உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்றும் இராப்பத்து விழா நாட்களிலும் மட்டும் வாசிக்கப்படுகிறது. பல வருடங்கள் பழைமையான இக்கருவியை கோவில் நிர்வாகம் மிக பாதுகாப்பாக பொக்கிஷம் போல் பாதுகாக்கிறார்கள். சைவ திருமுறைகளில் இடம்பெறும் தக்கை எந்த சிவன் கோவிலிலும் புழக்கத்தில் இல்லாமை பெருந்துயரம். தமிழ் சைவ ஆதீனங்கள் பல்லக்கு ஊர்வலம்/பட்டின பிரவேசம் போன்ற கேளிக்கைகளில் கவனம் செலுத்தாமல் தமிழர் இசைக்கருவிகளை மீண்டும் கோவில்களில் இசைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
கொங்கு மண்டலத்தில் மங்கள நிகழ்ச்சிகள் அனைத்திலும் தக்கை வாசிப்பது மரபாகவே கடைபிடிக்கப்பட்டது. இதை வாசித்தபடி கதைகளைச் சொல்வது வழக்காக இருந்துள்ளது. ‘தக்கை ராமாயணம்’ என்றொரு கதைப்பாடல் வடிவமும் இங்குண்டு. வில்லுப்பாட்டில் கதைசொல்லிகள் உடுக்கையைப் பயன்படுத்துவது போல, ராமனின் கதையை தக்கையை அடித்தபடி பாடும் இக்கலை இப்போது வழக்கொழிந்து விட்டது. சங்ககிரி நல்லதம்பி காங்கேயன் என்ற புரவலரின் வேண்டுகோளுக்கு இணங்க, இக்கதைப்பாடலை வடிவமைத்தவர் எம்பெருமான் கவிராயர். இவரது காலம் கி.பி.1600. கம்ப ராமாயணத்தின் சுருங்கிய வடிவமான இப்பாடல்கள் கற்பனை அழகும் கவிமயமும் பொருந்தியவை. சுமார் 3250 பாடல்களைக் கொண்ட இது இன்னும் ஏட்டுவடிவம் பெறவில்லை என்பது பேரிழப்பு. கொங்கு பகுதி தமிழர்கள் எப்பொழுதும் தங்கள் ஊர் பெருமை தன்னிர் பெருமை கொங்கு தமிழ் பெருமை ஆகிவற்றை எப்பொழுதும் பேசிக்கொண்டெ இருப்பார்கள். ஆனால் தங்கள் பண்பாட்டோடு கலந்த அருமையான இந்த தக்கை வாத்தியத்தை தொலைத்ததோடு அல்லாமல் அதை பற்றிய எந்த தகவலையும் அறியாதவர்களாகவே உள்ளனர் கொங்கு தமிழர்கள்.
துடியும் தக்கையும் மீண்டும் தமிழகம் எங்கும் மீண்டும் ஒலிக்க வேண்டும்.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் – தக்கை
கேரள மாநிலம் வயநாடு - துடி
திருமுறை 1 – சம்பந்தர்
வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம்மீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே
திருமுறை 3 – சம்பந்தர்
கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே .
திருமுறை 11 - மூத்த திருப்பதிகம் - காரைக்காலம்மையார்
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே
திருமுறை 12 – சேக்கிழார்
வெல் படைத் தறுகண் வெஞ்சொல் வேட்டுவர் கூட்டம் தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்துக் குழுமிய ஓசை அன்றிச்
சில்லரித் துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கிசை அருவி எங்கும்
கந்தபுராணம் - கச்சியப்பர்
தக்கையொ டுடுக்கைதுடி சல்லரி தடாரி
தொக்குடைய தண்ணுமை துவைப்பின்மிகு பேரி
மெய்க்குடமு ழாப்படகம் வீணைகுழல் ஆம்பல்
கொக்கரை இயம்பினர்கள் கோடிகண நாதர்
திருப்புகழ் - அருணகிரிநாதர்
தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா
காணொளி
தமிழகம்: தக்கை
கேரளம்:துடி
-சரவண பிரபு ராமமூர்த்தி
(வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்)
No comments:
Post a Comment