08/11/2019 ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி , புௌாட், ரெலோ ஆகிய கட்சிகள் தனித்தனியே தமக்குள் கூடி ஆராய்ந்து தற்போது பொதுநிலைப்பாடொன்றினை அறிவித்துள்ளன. நேற்றைய தினம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாடொன்றுக்கு வந்து அதனடிப்படையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இறுதித்தீர்மானத்திற்கு வரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் கோரப்பட்டு வந்தது.

வடக்கு, கிழக்கு இணைந்த பிராந்தியத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு, பொறுப்புக்கூறல் உட்பட்ட 13 விடயங்கள் தொடர்பிலேயே கலந்துரையாடல் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த இந்த யோசனைகள் தொடர்பில் தென்பகுதியில் இனவாத பிரசாரம் முடுக்கிவிடப்பட்டதுடன் அதனை நிராகரிக்கும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜ
பக் ஷவும் அதன் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும் இந்த 13 அம்சங்கள் தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் பேசுவதற்கு தயாரில்லை என்று அறிவித்திருந்தனர்.
இனவாத பிரசாரங்கள் காரணமாக புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான சஜித் பிரேமதாஸவும் இந்த விடயம் தொடர்பில் மௌனம் காத்துவந்தார். இவ்வாறான நிலையில் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து பிரதான வேட்பாளர்களை சந்திப்பதற்கான முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதன் பின்னணியில் ஐந்து தமிழ் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியிருந்தது.
முதலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்கினேஸ்வரன் தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். அதன் பின்னர் இலங்கை தமிழரசுக்கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி யும் தமது நிலைப்பாட்டை முன்வைத்தது.
புௌாட், ரெலோ ஆகிய கட்சிகளும் தமதுநிலைப்பாடுகளை அறிவித்துள்ளதுடன் தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தமது தீர்மானத்தை தெரிவித்துள்ளன. இவற்றுக்கு முன்னரே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது முடிவினை அறிவித்திருந்தது.
உண்மையிலேயே ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து ஓர் முடிவுக்கு வராதமை கவலைக்குரிய விடயமேயாகும். ஏனெனில் அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்றுக்கு வந்திருந்தால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு சுபீட்சமானதாக அமைந்திருக்கும். ஆனால் கட்சிகள் அத்தகைய நிலைப்பாட்டுக்கு வரமுடியாமைக்கு தென்பகுதியில் கிளப்பப்பட்ட இனவாதப் பிரசாரங்கள் காரணமாக அமைந்துள்ளன.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் எதிரணியினர் இனவாதப் பிரசாரத்தினை மேற்கொண்டு அரசியல் சுயலாபத்தினை பெற முற்பட்டமையினால் ஏனைய தரப்பினரும் அந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அச்சம் கொண்டிருந்தனர். இதன்காரணமாகவே தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி. விக்கினேஸ்வரன் தமது 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் சிங்கள வேட்பாளர்கள் கவனம் செலுத்தாமையினால் அவர்களுக்கு வாக்களிக்குமாறு விரல் நீட்ட முடியாது என்றும் இதனால் மக்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என்றும் அறிவித்திருந்தார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இரு பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கோரும் தார்மீக உரிமை தமக்கில்லை என்றும் மக்கள் தமது விருப்பப்படி வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது.
இதற்கு முன்னர் தமது முடிவினை அறிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்று கோரியிருந்தது. இவ்வாறு இந்த கட்சிகள் தமது தீர்மானத்தை அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாஸவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் தமிழ் மக்கள் தமது இருப்பினையும் ஜனநாயக சூழலையும் தொடர்ந்தும் பாதுகாக்கும் வகையில் தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும். தேர்தலை பகிஷ்கரிப்பதனால் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை. தமிழ் மக்கள் தமது ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் வகையில் தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டியது இன்றியமையாததாகும்.
2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரிக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்த அத்தகைய நிலைப்பாடு காரணமாக தமிழ் மக்கள் பேரழிவுகளை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இத்தகைய வரலாறு மீண்டும் திரும்புவதற்கு பகிஷ்கரிப்பு உதவுமே தவிர வேறொன்றுக்கும் அத்தகைய செயற்பாடு உதவப்போவதில்லை.
தமிழ் மக்கள் கூட்டமைப்பும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஒரே நிலைப்பாட்டையே அறிவித்துள்ளன. தமிழ் மக்கள் தமது விருப்பப்படி யாருக்கேனும் வாக்களிக்கவேண்டும் என்பதே அந்தக்கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளன. வாக்களிக்கவேண்டியதன் அவசியத்தை அந்தக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. எனவே மக்கள் கட்டாயமாக தேர்தலில் வாக்களிக்கவேண்டும். இதன்மூலம்தான் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
தமிழ் மக்களின் தலைமைகள் அந்த மக்களுக்கு வழிகாட்டும் வகையில் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். இந்த இரு கட்சிகளின் தலைமைகளும் அந்த வழிகாட்டும் விடயத்தில் தவறிழைத்துள்ளதாகவே தெரிகின்றது. ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய முடிவினை எடுக்கவேண்டும் என்பது தொடர்பில் உறுதியான அறிவிப்பினை இந்த தலைமைகள் விடுத்திருக்கவேண்டும்.
தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது தனது உறுதியான அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இந்த முடிவுக்கு வருவதற்கு முன்னர் பல்வேறு கருத்து வேறுபாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்குமிடையில் இருந்தன. அந்த வேறுபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தற்போது உறுதியான முடிவு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தமை சரியானதா அல்லது தவறானதா என்று ஆராய்வதைவிட தமிழ் மக்களின் தலைமையானது ஏதோ ஒரு வகையில் அந்த மக்களை வழிநடத்துவதற்கு முனைந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளவர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்றே எண்ணுகின்றனர். எனவே இந்த விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கியது என்பதை விட ஒன்றிணைந்து கூட்டமைப்பாக தீர்மானம் எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
தற்போதைய யதார்த்த நிலையினை உணர்ந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் செயற்படவேண்டியது இன்றியமையாததாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பகிஷ்கரிப்பு என்ற விடயத்தை மறந்து தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டியது இன்றிமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment