தீர்க்கமில்லாத தீர்மானங்கள் !


06/11/2019 இழுத்­த­டிப்பு நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் தமிழ்க்­கட்­சிகள் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றன. தனித்­தனி அறி­விப்­புக்­க­ளா­கவே இவைகள் வெளி­வந்­துள்­ளன. ஐந்து கட்­சிகள் இணைந்த கூட்டு, மக்கள் தங்கள் விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்று கூறி­யி­ருந்­தது.


தமி­ழ­ரசுக் கட்சி சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு முழு­மை­யான ஆத­ர­வ­ளிப்­பது என்று உறு­தி­ யாகத் தீர்­மா­னித்து, ஊட­கங்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.
ஆனாலும், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மைக்­கட்சி என்ற வகையில் ஏனைய இரு பங்­காளிக் கட்­சி­க­ளு­டனும், தமி­ழ­ரசுக் கட்சி கலந்­தா­லோ­சித்து தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முடிவு என்ன என்­பது அறி­விக்­கப்­படும் என்றும், அந்தப் பொறுப்பு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வ­ரா­கிய ஆர்.சம்­பந்­த­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது என்றும் ஊட­கங்­களின் ஊடாக மக்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணி யின் வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்று முடி­வெ­டுத்­துள்ள தமி­ழ­ரசுக் கட்சி தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் வேறு ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்­பார்க்க முடி­யாது. கட்­சி­யினால் எடுக்­கப்­பட்ட ஒரு முடி­வுக்கு முர­ணான வகை­யிலோ அல்­லது அதற்கு மாறான முறை­யிலோ வேறு ஒரு தீர்­மா­னத்தை எடுப்­பது என்­பது கட்சிக் கொள்­கைக்கு விரோ­த­மா­னது. கட்சி அர­சியல் என்ற ரீதி­யிலும் கட்­சியின் நலன்கள் என்ற ரீதி­யிலும் அது பொருத்­த­மற்ற ஒரு செயற்­பா­டா­கவே இருக்கும்.
சஜித் பிரே­ம­தா­சவை  ஆத­ரிப்­பது என்ற முடிவு குறித்து தமி­ழ­ரசுக் கட்சி கூடி ஆராய்­வ­தற்கு முன்பே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­கா­ளி­க­ளா­கிய ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­ட­தாக ஒரு தகவல் வெளி­யாகி இருந்­ததைக் காண முடிந்­தது. இது எந்த அள­வுக்கு உண்மை என்­ப­தற்கு அப்பால், இறுக்­க­மான ஓர் அர­சியல் சூழலில் இரண்டு முக்­கிய வேட்­பா­ளர்­களில் ஒரு­வரை ஆத­ரிப்­பது என்ற தீர்­மா­னத்தை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ர­சுக்­கட்சி எடுப்­பது என்­பதை ஒரு சாதா­ரண விட­ய­மாகக் கொள்ள முடி­யாது.
பெரும்­பான்­மை­யான தமிழ் மக்­களின் அர­சியல் தலைமைப் பொறுப்பை ஏற்­றுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்சி என்ற வகையில், தமிழ், முஸ்லிம் மக்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாக மிக மோச­மான நெருக்­க­டி­களை உரு­வாக்­கி­யுள்ள இந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்சி ஒரு முடி­வெ­டுப்­பது என்­ப­தையும் சாதா­ரண விட­யமாகக் கருத முடி­யாது.
ஓர் அர­சியல் கட்சி என்ற ரீதியில் அதி லும் பழம்­பெரும் அர­சியல் கட்சி என்ற வகை யில், தமி­ழ­ரசுக் கட்சி இந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து தனி­யாக ஒரு தீர்­மானம் எடுப்­பதை யாரும் கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது. அது அந்தக் கட்­சியின் அர­சியல் உரிமை. அதைத் தடுக்­கவும் முடி­யாது.
இக்­கட்­டான சூழலில் தமிழ் மக்கள்
கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது மஹிந்த ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ராகப் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி வெற்றி அடையச் செய்­தி­ருந்த தமிழ் மக்கள் இந்தத் தேர்­தலில் இக்­கட்­டான ஒரு நிலை­மைக்குள் வலிந்து தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். இதனால், தமிழர் தரப்பு ஒன்­றி­ணைந்து இந்தத் தேர்­தலை எதிர்­கொள்ள வேண்­டிய கட்­டா­ய­மா­னதோர் அர­சியல் சூழ­லுக்குள் அவர்கள் இழுத்து வரப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.
எனவே, இக்­கட்­டான நிலை­மை­யிலும் வலிந்து தள்­ளப்­பட்ட ஒரு நெருக்­க­டி­யான சூழ­லிலும் உள்ள தமிழ் மக்கள் சார்­பாகத் தமி­ழ­ரசுக் கட்சி எடுக்­கின்ற ஒரு தீர்­மானம் மிக மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கவே அமை­கின்­றது. அதிலும் தமிழ் மக்­களின் அர­சியல் சக்­தி­யாகத் திகழ்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்சி என்ற வகையில் தமி­ழ­ரசுக் கட்சி எடுக்­கின்ற முடிவும் தீர்­மா­னமும் மிகவும் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது, முக்­கி­யத்­துவம் பெற்­ற­தாக அமை­கின்­றது.
யுத்த வெற்­றி­யிலும் இன­வாதப் போக்­கிலும் திளைத்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்டும் என்ற முனைப்­புடன் 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலை தமிழ் மக்கள் எதிர்­கொண்­டி­ருந்­தார்கள். ஆட்சி மாற்றம் அவ­சியம் என்­பதை உணர்ந்­தி­ருந்த தென்­னி­லங்கை அர­சியல் கட்­சிகள் மற்றும் ஜன­நா­யக அமைப்­புக்­க­ளுடன் தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை என்ற ரீதியில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும் கைகோர்த்து மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரித்­தி­ருந்­தது.
யுத்த வெற்­றி­வா­தத்தின் ஊடாக சர்­வா­தி­காரப் போக்கில் சென்ற அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து, ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும். ஆட்சி மாற்­றத்தின் ஊடாக அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த ஜன­நா­ய­கத்­துக்குப் புத்­து­யி­ர­ளிக்க வேண்டும். ஊழல்கள், மோச­டி­க­ளுக்கு முடிவு கட்ட வேண்டும். சர்­வா­தி­கா­ரத்­துக்கு வழி­கோ­லி­யுள்ள நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அதற்­காகப் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். தேர்தல் முறை­களில் மாற்றம் செய்ய வேண்டும். நீண்ட கால­மாகத் தொடர்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்குப் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற அர­சியல் தேவை­க­ளுக்­காக 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் மாற்றம் கொண்டு வரப்­பட்­டது. தொடர்ந்து நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்­ ஷ அணி­யி­னரைத் தோற்­க­டித்து, ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.
இந்த ஆட்சி மாற்­றத்­துக்­கான முயற்­சியில் தமிழ் மக்­களின் நலன்கள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தன. அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும் என்ற உத்­த­ர­வாதம் வெளிப்­ப­டை­யாகக் கிடைத்­தி­ருந்­தது. குறிப்­பாக புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்குப் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான சந்­தர்ப்பம் வாய்க்கப்பெற்­றி­ருந்­தது என்ற நம்­பிக்கை அப்­போது துளிர்த்­தி­ருந்­தது.
இதனால் ஆட்சி மாற்­றத்­துக்கும், ஆட்சி மாற்­றத்தின் ஊடாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற புதிய அர­சாங்­கத்­துக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி ஒத்­து­ழைப்­பது என்றும் முடி­வெ­டுத்து, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு செயற்­பட்­டி­ருந்­தது. இந்த ஆட்சி மாற்­றத்தின் மூலம் உரு­வா­கிய நல்­லாட்சி அர­சாங்கம் தமிழ் மக்­களின் நம்­பிக்­கைகள், எதிர்­பார்ப்­புக்­க­ளையும் எதிர்­பார்த்த வகையில் நிறை­வேற்­ற­வில்லை. சில, சில விட­யங்­களில் அக்­க­றையும் கவ­னத்­தையும் செலுத்­தியி­ருந்த போதிலும், தமிழ் மக்­களின் முக்­கிய எதிர்­பார்ப்­புக்­க­ளையும் நம்­பிக்­கை­யையும் சித­ற­டித்­து­விட்­டது.
இன­வா­தமே தேர்­தலின் அடி­நிலை ஆதாரம்
இத்­த­கைய பின்­பு­லத்தில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் இன­வா­தமே மேலோங்கி உள்­ளது. கடந்த தேர்­தலில் சர்­வா­தி­கா­ரத்­துக்கு எதி­ரான போக்கும், ஜன­நா­ய­கத்தைப் பேண வேண்டும் என்ற அர­சியல் நோக்கமும் உத்­வேகம் பெற்­றி­ருந்­தது. ஆனால் இந்தத் தேர்தல் அவ்­வா­றா­ன­தல்ல. இது ஆட்­சியைக் கைப்­பற்ற வேண்டும் என்ற அதி­கார மோகத்­துடன் கூடிய அர­சியல் நோக்­கத்­தையே முனைப்­பாகக் கொண்­டி­ருக்­கின்­றது.
கடந்த தேர்­தலில் தோல்­வியைத் தழு­விய மஹிந்த ராஜ­பக்­ ஷ குடும்பம் தனக்கு இசை­வான அர­சியல் போக்­கு­டை­ய­வர்­களை இணைத்துக்கொண்டு எப்­ப­டி­யா­வது ஆட்­சியைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற நோக்­கத்தில் திட்­ட­மிட்ட வகையில் செயற்­பட்டு ஜனா­தி­பதித் தேர்­தலை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றது.
இந்தத் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது ஜனா­தி­பதி பத­வியைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்­ப­தற்­காக இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட நீண்­ட­கால அர­சியல் செயற்­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக்­ ஷ குழு­வி­னரின் செயற்­பா­டு­க­ளினால், இந்தத் தேர்தல் இன­வாதப் பிர­சா­ரத்தை நிலைக்­க­ள­னாகக் கொண்­ட­தாக மாறி­யுள்­ளது, இன­ வாதத் தேர்தல் கள­மாக மாற்­றப்­பட்­டுள்­ளது.
இந்தத் தேர்­தலில் வெற்றி பெறு­வ­தற்கு அடி­நிலை ஆதா­ர­மாக உள்ள பெரும்­பான்மை மக்­க­ளா­கிய சிங்­கள மக்­களின் வாக்­கு­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக இன­வாத பிர­சாரம் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்தத் தேர்­தலின் முன்­னணி வேட்­பா­ளர்­க­ளா­கிய மஹிந்த ராஜ­பக்­ ஷவின் சகோ­த­ரரும், முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரு­மா­கிய கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வுக்கும் ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் புதல்­வ­ரா­கிய சஜித் பிரே­ம­தா­ச­வுக்கும் இடையில் கடும் போட்டி நில­வு­கின்­றது. அவர்­க­ளு­டைய தேர்தல் வெற்றி இன­வாத பிர­சா­ரத்­தையும் இன­வாத நிலைப்­பாட்­டை­யுமே நிலைக்­க­ள­னாகக் கொண்­டுள்­ளது.  
இதன் கார­ண­மா­கவே தமிழ்க்­கட்­சி­களின் தேர்தல் கால கோரிக்­கை­களை அவர்கள் ஏற்க மறுத்­தி­ருந்­தனர். அந்தக் கோரிக்­கை­களை தமிழர் தரப்பின் இன­வாத கோரிக்­கை­க­ளாக வர்­ணித்து அவற்றை நிரா­க­ரித்­தி­ருந்­தனர். அந்தக் கோரிக்­கைகள் தென்­னி­லங்கை அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலும் அர­சு­க­ளி­னாலும் பயங்­க­ர­வா­திகள் என சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் கோரிக்­கை­க­ளை­விட கடு­மை­யா­னவை என்ற பிர­சா­ரமும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.
இதன் கார­ண­மா­கவே தமிழ் மக்கள் தரப்பில் ஐந்து தமிழ் அர­சியல் கட்சிகள் இணைந்து முன்­வைத்த 13 அம்ச கோரிக்­கை­களை ஏற்­கவோ அவற்றை சீர்­தூக்கிப் பார்ப்­ப­தற்கோ முடி­யாது என்று பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வரும் முற்­றாக மறுத்­து­விட்­டார்கள். அவர்­களைப் பின்­பற்றி ஜே.வி­.பி.யும் அரை­கு­றை­யாக அந்தக் கோரிக்­கை­களை நோக்­கி­யி­ருந்­தது.
பேச்­சுக்கள் சாத்­தி­ய­மா­க­வில்லை
சிங்­கள மக்­களின் வாக்­கு­களைக் கூடு­த­ லாகப் பெற்­று­விட வேண்டும் என்ற ஒரே இலக்கில் செயற்­ப­டு­கின்ற பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வ­ருமே அவர்­களின் கவ­னத்தைத் தங்கள் பக்கம் திசை திருப்­பு­வ­தற்­காக இன­வா­தத்தைக் கையில் எடுத்­தி­ருக்­கின்­றனர். யார் ஒருவர் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு செவி­சாய்த்து, அவற்றைக் கவ­னத்தில் எடுக்­கின்­றாரோ அவர் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உயிர் கொடுக்க முற்­ப­டு­கின்றார் என திரித்துக் காட்டி சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­கான அர­சியல் பிர­சார உத்தி இந்தத் தேர்­தலில் தீவி­ர­மாகக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது.
இத்­த­கைய தேர்தல் கள நிலைமை கார­ண­மா­கவே, பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வரில் எவரை ஆத­ரிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற அர­சியல் நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தயக்கம் காட்டி வந்­தது. கால தாமதம் செய்து வந்­தது. ஒரு வேட்­பா­ளரை ஆத­ரித்தால் மறு வேட்­பாளர் அதனை இன­வாதப் பிர­சா­ரத்­துக்கு ஆதா­ர­மாகக் கொண்டு சிங்­கள மக்கள் மத்­தியில் அவ­ரு­டைய செல்­வாக்கைக் குலைத்­து­வி­டுவார் என்­ப­தற்­கா­கவே கூட்­ட­மைப்பு இவ்­வாறு செயற்­பட நேர்ந்­தி­ருந்­தது.
ஆனாலும் தேர்­தலில் வெற்­றி­ய­டை­வ­தற்கு 51 வீத வாக்­கு­களைப் பெற வேண்டும் என்ற கட்­டாய நிலை­மையில் இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுடன் ஜே.வி.­பி.யின் வேட்­பா­ளரும் சிங்­கள மக்­க­ளு­டைய வாக்­கு­களை தங்­க­ளுக்குள் பிரித்துக் கொள்­கின்ற கள நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலையில் முதல் சுற்றில் 51 வீதத்தைப் பெறத்­த­வ­றினால் இரண்டாம் சுற்றில் சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்­கின்ற சக்­தி­யாக அமையும்.
இதனால் திரட்சி பெற்ற நிலையில் அமை­யு­மானால் சிறு­பான்மை இன மக்­களின் வாக்­கு­களே குறிப்­பாக தமிழ் மக்­களின் வாக்­கு­களே வெற்­றி­யா­ளரைத் தீர்­மா­னிக்­கின்ற பலத்தைக் கொண்­டி­ருக்கும் என்­பது இந்தத் தேர்­தலின் யதார்த்தம். இந்த யதார்த்­தத்தை உரிய முறையில் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக தமிழ் மக்கள் ஒன்­றி­ணைந்து ஒரு தீர்­மா­னத்தில் வாக்­க­ளிக்க வேண்­டிய நிலை­மையும் உரு­வா­கி­யுள்­ளது.
இதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்க்­கட்­சிகள் ஓர­ணியில் ஒன்­றி­ணை­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இந்த முயற்­சியில் முதலில் ஆறு கட்­சிகள் ஒன்­றி­ணைந்­தன. ஆயினும் ஒரு கட்சி அந்த இணைவில் இருந்து வில­கி­ய­தனால் ஐந்து கட்­சிகள் இணைந்த கூட்­டி­ணை­வாக அது மாறி­யது. அந்தக் கூட்­டணி நிலை­மை­களை ஆராய்ந்து 13 அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து வேட்­பா­ளர்­க­ளுடன் பேச்­சுக்­களை நடத்த முற்­பட்ட போதிலும் அது சாத்­தி­ய­மா­க­வில்லை.
குழப்ப நிலை­யி­லான தீர்­மா­னங்கள்
இந்த நிலையில் தமிழ் மக்கள் தாங்கள் விரும்­பி­ய­வாறு இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்­கலாம் என ஐந்து கட்­சி­களும் இணைந்து தீர்­மா­னித்­தி­ருந்­தன. அந்தத் தீர்­மா­னத்தை ஐந்து கட்­சி­களில் ஒன்­றா­கிய தமிழ் மக்கள் கூட்­டணி ஒரு நாள் முந்திக் கொண்டு மக்­க­ளுக்கு அறி­வித்­தி­ருந்­தது. அதனைத் தொடர்ந்து ஐந்து கட்­சி­களின் தீர்­மா­ன­மா­கவும் அது வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில்தான் தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­குழு வவு­னி­யாவில் கூடி, பல மணித்­தி­யா­லங்கள் பல்­வேறு விட­யங்கள் குறித்தும் விவா­தித்த பின்னர், புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு முழு­மை­யாக ஆத­ர­வ­ளிப்­பது என்ற தீர்­மா­னத்தை எடுத்­துள்­ளது. இது தமிழ் அர­சியல் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர­்மா­னத்தை மேற்­கொண்டு அதற்­க­மைய தேர்­தலை எதிர்­கொள்ள வேண்டும் என்ற தேர்தல் கால நிலைப்­பாட்டை மீறிய செய­லா­கி­யுள்­ளது.
தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்ற கூட்டு நிலைப்­பாட்­டையும் மீறிய செய­லா­கவே இதனை நோக்க வேண்டி உள்­ளது. தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மை­யாக உள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு சிக்­கல்கள் மிகுந்த இந்த ஜனா­தி­பதித் தேர்தல் சூழலில் அதன் பங்­காளிக் கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து நிலை­மை­களை ஆராய்ந்து அதற்­கேற்ற வகையில் ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொண்­டி­ருக்க வேண்டும். ஆனால் தமி­ழ­ரசுக் கட்­சியின் தனித்­து­வ­மான தீர்­மா­ன­மா­னது, கூட்­ட­மைப்பின் கூட்­டி­ணை­வையும் மீறி­ய­தா­கவே அமைந்­துள்­ளது.
தமி­ழ­ரசுக் கட்சி தனது தனித்­து­வத்தைப் பேணு­வ­தற்­காக எத்­த­கைய முடி­வையும் மேற்­கொள்ள முடியும். அது அதன் அர­சியல் அடிப்­படை உரிமை. ஆனால் தமிழ்க் கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து ஒரு தீர்­மா­னத்தை மேற்­கொண்டு அதன்­படி செயற்­பட வேண்டும். அதற்­க­மைய தமிழ் மக்­களை வழி­ந­டத்த வேண்டும் என்ற கட்­டா­ய­மான அர­சியல் சூழலில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தீர்­மானம் வெளி­யி­டப்­பட்­டி­ருப்­பது மக்கள் மத்­தியில் குழப்­பத்தை அதி­க­ரிப்­ப­தற்கே வழி சமைத்­துள்­ளது.
மிஞ்­சு­வது என்ன?
அர­சியல் கட்சி என்ற ரீதியில் தனித்­து­வ­மான தனது தீர்­மா­னத்தை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மை­பப்­புக்­குள்ளே கொண்டு வந்து ஏக­ம­ன­தாக முடி­வெ­டுத்து கூட்­ட­மைப்பின் தீர்­மா­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தால் அதற்கு மக்கள் மத்­தியில் தெளி­வான ஒரு நிலைப்­பாட்டைப் புலப்­ப­டுத்தி இருக்கும். ஆனால் கட்­சி­ய­ளவில் ஒரு தீர­்மா­னத்தை எடுத்­து­விட்டு அதனை கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளிடம் தெரி­வித்து அதன் அடிப்­ப­டையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தீர்மானம் வெளி­யி­டப்­படும் என்­பது தமி­ழ­ரசுக் கட்சி தனது தீர்­மா­னத்தை கூட்­ட­மைப்­பி­னுள்ளே திணிக்­கின்ற ஒரு செய­லா­கவே அமையும் என்­பதில் சந்­தே­க­மில்லை.
தமி­ழ­ர­சுக்­கட்சி தனது தீர்­மா­னத்தை வெளி­யிட்ட உடன் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­களில் ஒன்­றா­கிய ரெலோ அந்தத் தீர்­மா­னத்தை ஏற்க முடி­யாது என்று அந்தக் கட்­சியின் செய­லாளர் சிறி­காந்தா சீற்ற உணர்­வுடன் தெரி­வித்­துள்ளார். தமி­ரசுக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நடை­பெற்ற இரண்டு தினங்­களின் பின்னர் நடை­பெ­று­கின்ற அந்தக் கட்சியின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் தமது நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தத் தலைமைக்குழு கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதை முன் கூட்டியே நிச்சயமாகக் கூற முடியாது. ஆனாலும் தமிழ்த்தேசிய கூட்டமைப் பிற்குள்ளே இந்தத் தேர்தல் குறித்து முடிவு செய்வதில் ஒரு முரண்பாடான நிலைமை உருவாகுவதற்குத் தமிழரசுக் கட்சி மேற் கொண்ட தீர்மானம் பற்றிய அறிவித்தல் வழி வகுத்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும் கூட்டமைப்பின் மற்றுமொரு கட்சியாகிய புளொட் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டையே தனது முடிவாகக் கொண்டிருக்கும் என்பதற்கான அறிகுறியே வெளிப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றி ணைந்து ஒரு நிலைப்பாட்டை எடுத்து இந்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அந்த வகையில் தமிழ் மக்களை வழிநடத்த வேண்டும் என்ற தேர்தல் கால நெருக்கடி சூழலின் தேவையை தமிழ்க் கட்சிகள் ஆறு கட்சிகளாகவும் அடுத்து ஐந்து கட்சிகளாகவும் ஒன்றி ணைந்ததன் பின்னரும் சரியான முறை யில்  நிறைவேற்றவில்லை என்பதையே கள நிலைமைகள் காட்டுகின்றன.
இந்த நிலைமையானது தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றவில்லை என்ற குறை கூறலுக்கே ஆளாக்கியுள்ளது.
தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு சக்திமிகுந்த ஓர் அரசியல் தலைமைத்துவத்தையும் அரசியல் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்ற நீண்டகால அரசியல் தேவையை இக்கட்டான இந்த அரசியல் சூழலிலும் பொறுப்போடு நிறைவேற்றத் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டுக்கும் தமிழ் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஆளாகியிருப்பதையே காண முடிகின்றது.
பி. மாணிக்கவாசம்  - நன்றி வீரகேசரி No comments: