பொலிஸாரால் “ஆவா” என தேடப்பட்டுவந்த நபர் நீதிமன்றில் சரண்
வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும்
மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்
கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
கனடா- இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம்
இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பம்
பலாலி - சென்னை விமான சேவை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்
பொலிஸாரால் “ஆவா” என தேடப்பட்டுவந்த நபர் நீதிமன்றில் சரண்
06/11/2019 யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவங்கள், வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த “ஆவா” என பொலிஸாரால் தெரிவிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார்.
சந்தேகநபரை இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் பொலிஸாரால் குறிப்பிடப்படும் இணுவிலைச் சேர்ந்த குமரேசரத்தினம் வினோதன் என்ற இளைஞனே இவ்வாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
அச்சுவேலி பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் ஒன்றின் வழக்கில் சந்தேக நபராகக் குறித்த நபர் நேற்று சரணடைந்தார்.
இந்நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணம், பனிப்பாய், சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் வினோதன் கடந்த 2 வருடங்களாகத் தேடப்பட்டு வந்துள்ளார்.
வாள்வெட்டு வன்முறை, பொதுமக்களுக்குக் காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்குச் சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
வாக்களிக்கும்போது புர்கா, நிகாப்பை அகற்ற வேண்டும்
06/11/2019 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, வாக்களிப்பு நிலையத்துக்குள் நுழையும்போது அவற்றை அகற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
புர்கா மற்றும் நிகாப் அணிவதை எங்களால் தடை செய்ய முடியாது, ஏனெனில் அது அவர்களின் கலாசாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும்.
வாக்களிக்கும்போது வாக்களார் ஒருவர் தனது அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம். அவரது அடையாளம் அடையாள அட்டையில் முகத்துடன் இணையாக இருக்க வேண்டும். அதற்காக, அவர் முகத்தை மறைத்திருக்கும் நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்ற வேண்டும்.
எனினும் மேற்படி நிபந்தனைகளை கருத்திற்கொள்ளாமல் ஒரு வாக்களார் தனது நிகாப் மற்றும் புர்கா போன்றவற்றை அகற்றாது வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலைய தலைமை அதிகாரி அனுமதி வழங்கக்கூடாது எனவும் சமன் சமன் ஸ்ரீ ரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். நன்றி வீரகேசரி
மூத்த பத்திரிகையாளர் பெருமாள் காலமானார்
06/11/2019 தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில் காலமானார்.
இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த காலப் பகுதியிலேயே பத்திரிகைத் துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார்.
பின்னர் 1961 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.
அதன் பின்னரான காலப் பகுதியில் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் , ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
55 வருடங்களாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர் தனது 84 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரின் இறுதி விருப்பப்படி அவரது உடல் யாழ்.மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்குக் கையளிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
05/11/2019 கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.
“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.
இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார். நன்றி வீரகேசரி
05/11/2019 வவுனியாவில் நேற்று மாலை ஆச்சிபுரம் பகுதிக்கு தொழில் நிமிர்த்தம் சென்ற மின்சார சபை ஊழியர்கள் மீது அங்கிருந்த ஒரு குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது இந்நிலையில் அத்தாக்குதலில் ஆறு மின்சார சபை ஊழியர்கள் படுகாயடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
எனினும் இன்று காலை வரை இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இத்தாக்குதலுக்கு தலைமை வகித்தவர் உட்பட இன்னும் பலர் கைது செய்யப்படவில்லை இதையடுத்து வவுனியா மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் பொலிசாரின் அசமந்தப் போக்கைக்கண்டித்து பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பூங்கா வீதியிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடிய மின்சார சபை ஊழியர்கள் தமது ஊழியர்கள் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ள முக்கிய போதை பொருள் வியாபாரி உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.
பொலிசாரின் பாதுகாப்புடன் இருந்துவரும் தாக்குதல் குழுவினரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் அதுவரையில் தமது போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் எமது கடமையை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு பாதுகாப்பு வேண்டும்.
அதுவரை அவசர தேவைகள் உட்பட அனைத்துப்பணிகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் 12மணிக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவிட்டால் மன்னார், கிளிநொச்சி பகுதிகளிலுள்ள மின்சார சபை ஊழியர்களும் தமக்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளும் மின்சார சபை ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
கனடா- இலங்கைக்கிடையில் விமான சேவை ஆரம்பம்
இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பம்
பலாலி - சென்னை விமான சேவை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்
08/11/2019 பயணிகளின் நலன் கருதி கனடாவின் ரொரெண்டோவிற்கான விமான சேவையில் ஈடுபடுவதற்காக இலங்கை விமான சேவை மற்றும் இந்தியன் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதன்படி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்திருந்து இந்தியாவின் டில்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று அங்கியிருந்து கனடாவின் ரொரன்ண்டோவிலுள்ள லெஸ்டர் பி. பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடையும்.
அதன்படி வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விமான சேவை நடைமுறையில் இருக்கும்.
இந்நிலையில் மீண்டும் கனடா- ரொரெண்டோவிலிருந்து இந்தியாவிற்கு சென்று பின்னர் இலங்கையை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இரத்மலானை - யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை ஆரம்பம்
08/11/2019 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை Fits Air இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது.
இரத்மலானையில் இருந்துபுறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம்.
இதில் இந்த விமான சேவை அதிகாரிகள் பயணிக்கின்றனர்.இது யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இடம்பெறும் முதலாவது விமான சேவையாக பதிவாகியுள்ளது.
மீண்டும் இந்த விமானம் பி.ப.2.20 மணிக்கு சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு இரத்மலானையைச் சென்றடையும்.
இதேவேளை 11 ஆம் திகதி சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான எலையன்ஸ் Alliance Air விமானசேவைகள் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது. இந்த விமான சேவைகள் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகளில் ஈடுபடவுள்ளன.
அதன்பின்னர், கூடிய விரைவில் இந்த சேவை, வாரத்தில் ஏழு நாட்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
பலாலி - சென்னை விமான சேவை நாளை மறுதினம் உத்தியோக பூர்வமாக ஆரம்பம்
09/11/2019 யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உத்தியோக பூர்வ விமான சேவை நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது.
சென்னையிலிருந்து முதலாவது விமானம் நாளை மறுதினம் நண்பகல் 12 மணியளவில் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி தெரிவித்தார்.
முதல் கட்டமாக வாரத்திற்கு மூன்று சேவைகள் திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய தினங்களில் நடத்தப்படும்.
பின்னர் படிப்படியாக நாளாந்த சேவை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிவில் விமான போக்குவரத்து திணைக்கள பணிப்பாளர்நாயகம் எச்.எம். சி. நிமலசிறி மேலும் குறிப்பிட்டார்.
யாழ் பலாலி சர்வதேச விமான நிலையம் கடந்த ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.இந்த வைபவத்தில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூண ரணத்துங்க இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன் ஜித் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்றைய தினம் எயார் இந்திய விமான துணை நிறவனமான அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் ஏ.பி. ஆர். 72600 ரகவிமானம் முதல் முறையாக தரை இறங்கியது.
இந்த விமானத்தில் ஏயார் இந்திய நிறுவன தலைவர் அஷ்வான் ரொஹானி நிறைவேற்றுப்பணிப்பாளர் , சீ.எஸ்.சுப்பையா உட்பட 30 பேர் இந்த விமானத்தில் பலாலிக்கு வருகை தந்திருந்தனர்.
பலாலி விமான நிலையம் இரண்டாம் உலக யுத்ததின் போது பிரிட்டிஸ் இராணுவத்தினால் அமைக்கப்பட்டது.1947 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பலாலிக்கும் இறக்குவானைக்கும் இடையில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1976ஆம் ஆண்டில் பலாலி விமான நிலையத்தை விமானப்படை முகாம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment