நாவன்மைப்போட்டிக்கு,
கற்பகம் ரீச்சர் பேச்சு எழுதித்தருவார்
என்ற நம்பிக்கையில் வந்திருந்த அந்த இரண்டு மாணவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிவிடக்கூடாது
என்பதற்காக, அந்தப்பேச்சை தானே எழுதித்தருவதாக அபிதா சொன்னாள்.
தங்களுக்கு கேசரியும் குளிர்பானமும் தந்து உபசரித்த அபிதாவை
அந்த மாணவர்கள் பரவசத்துடன் பார்த்தனர். தன்னை அன்ரி என விளித்தமையால், அபிதாவுக்கும்
உற்சாகம் பிறந்தது.
சுபாஷினியின் அறைக்குச்சென்று, வெள்ளைக்காகிதங்களும் பேனையும் எடுத்துவந்தாள்.
வெளியே பெய்யும் மழை படிபடிப்படியாக குறைந்துகொண்டு வந்தது.
இந்த மழையை நம்ப முடியாது. மீண்டும் சோவெனப்
பொழியலாம்!
“ வீட்டில் தேடுவாங்க.
நீங்க இரண்டுபேரும் வீட்டுக்குப்போங்க. நாளைக்கு காலையில் ஸ்கூல்போகும்போது இங்கே வந்தால்,
நான் எழுதிய பேச்சை எடுத்துக்கொண்டு போகலாம்.. “ என்றாள் அபிதா.
இருவரும் “ தேங்ஸ் அன்ரி “ எனச்சொல்லியவாறு எழுந்து சென்றனர். அபிதா அவர்கள் இருவரையும் கேட் வரையில் சென்று வழியனுப்பிவைத்துவிட்டு,
கேட்டை முடியபோது, மஞ்சுளா ஒரு ஓட்டோவில் வந்து இறங்கினாள்.
மஞ்சுளா, “ என்ன மழை
இது. நல்லா நனைஞ்சிட்டன். “ எனச்சொல்லியவாறு படியேறியபோது, “ இருங்க… உங்கட டவலை எடுத்துவாரன். துடைச்சுக்கொண்டு
வாங்க. “
அபிதா மஞ்சுளாவின் அறைக்குச்சென்றாள்.
டவல் வந்ததும், “ யார்
அந்தப்பெடியன்கள்..? “ எனக்கேட்டாள் மஞ்சுளா.
“ ரீச்சரை தேடி வந்தாங்கள்.
ஸ்கூல்ல ஏதோ பேச்சுப்போட்டியாம். பேச்சு எழுதித்தருவதாக கற்பகம் ரீச்சர் சொல்லியிருக்கிறாங்க. அதனை எதிர்பார்த்து
வந்த பிள்ளைகள். ரீச்சருக்கு போன் எடுத்தேன்.
அங்கேயும் நல்ல மழையாம். பாவம் அந்தப்பிள்ளைகள். நானே எழுதித்தாரன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்..
“
“ உங்களுக்கு ஸ்பீச்
எல்லாம் எழுதத்தெரியுமா…. “ கூந்தலைத் துடைத்தவாறு மஞ்சுளா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“ ஏதோ எழுதுவேன். அந்தப்பிள்ளைகளைப்பார்த்தால் பாவமாக இருந்தது. ரீச்சர்
எப்ப வருவாங்களோ…? எப்போது எழுதிக்கொடுப்பாங்களோ
..? தெரியது. அதற்குள் அந்தப்பிள்ளைகளுக்கு பேச்சுப்போட்டி வந்திடும். நாளைக்கு காலையில் எழுதிவைப்பதாக சொல்லி அனுப்பியிருக்கின்றேன்.
“
இவளைப்பார்த்தால் சகலகலாவல்லி போலத்தெரிகிறது. இவள் எதற்காக வீட்டு வேலைக்காரியாக
வந்து வெங்காயம் நறுக்கிக்கொண்டிருக்கிறாள்…? பேசும்போதும் நறுக்குத் தெறித்தாற்போன்று
சொற்களை உதிர்க்கும் இவளுக்குப்பின்னால் அபூர்வமான
செய்திகள் இருக்கலாம்.
ஜீவிகாவும் சுபாஷினியும் கற்பகம் ரீச்சரும், அபிதா பற்றி தத்தமக்குள்
வைத்திருக்கும் படிமங்களை தனது அவதானங்களுடன் மஞ்சுளா ஒப்பிட்டுப்பார்த்தாள்.
“ என்னம்மா குடிக்கிறீங்க…
ரீயா, கோப்பியா…? “ உடை மாற்றுவதற்காக அறைக்குள்
பிரவேசிக்கும் மஞ்சுளாவிடம் அபிதா கேட்டாள்.
“ சூடா ஒரு கோப்பி தாங்க “
அபிதா சமையலறைக்குச்செல்லும்போது, சுபாஷினியின் அறைக்கதவருகிலும்
சென்று, “ உங்களுக்கும் கோப்பி தரட்டுமா..? “ எனக்கேட்டாள்.
முகநூலில் மூழ்கியிருந்த சுபாஷினி, அபிதாவை திரும்பிப்பார்க்காமலேயே தலையாட்டினாள்.
கேத்தலில் தண்ணீரை சுடவைத்துவிட்டு, மஞ்சுளா, சுபாஷினியின் கப்புகளை எடுத்து நன்றாக
கழுவினாள் அபிதா. அவற்றை கழுவும்போது, அவளுக்கு
இந்திரா பார்த்தசாரதி எழுதிய சுதந்திரபூமி நாவலில் வரும் முகுந்தன் பாத்திரம்
நினைவுக்கு வந்தது.
அந்த முகுந்தன் ஒரு இந்திய மத்திய அரசின் அமைச்சரின் வீட்டுக்கு
வேலைக்காரனாக வந்தவன். விருந்தினர்களுக்கு சூடாக கோப்பி தயாரித்துக்கொடுக்கும்
பணியாளாகத்தான் வருவான். வீட்டு வேலைகளையும் செய்வான். அந்த அமைச்சர் கேட்கும்போதெல்லாம்,
அவருக்கு கோப்பி தயாரித்து கொடுக்கவேண்டும்.
அங்கு வரும் அமைச்சரின் விருந்தினர்களுக்கும் அந்த முகுந்தன்
தரும் கோப்பியில்தான் பிரியம். அவன் சுவையாக தயாரிப்பான். அளவாக கோப்பித்தூளும் சக்கரையும்
கலந்து, பாலைச்சூடாக்கி கலந்து கப்புகளில் நூரை ததும்ப எடுத்துவந்து உபசரிப்பான்.
அவனது சுவையான கோப்பியை அருந்திய அரசியல்வாதிகளின் சகவாசத்தினால்,
இறுதியில் அவனும் அரசியல்வாதியாகிவிடுவான். மத்திய அரசில் அமைச்சருமாகி பிரதமரின் நம்பிக்கைக்குரியவானகிவிடுவான்.
தன்னிடம் கோப்பி தயாரிக்கும் சாதாரண வேலைக்காரனாக வந்த முகுந்தனை,
தனது அரசியல் வாரிசாக்கிவிட்டு அந்த அமைச்சர் ஒருநாள் கண்களை மூடிவிடுகிறார்.
ஓரு காலத்தில் கோப்பி கலக்கிய முகுந்தன், பின்னாளில் அரசியலில்
கலக்குவான்.
இயக்கம் புதுக்குடியிருப்பில்
நடத்திவந்த நூலகத்திலிருந்து ஒருநாள் கணவன்
பார்த்திபன் எடுத்துவந்து கொடுத்த நாவல்தான் இந்திரா பார்த்தசாரதியின் சுதந்திரபூமி.
அவர் அதற்கு இரத்தினச்சுருக்கமாக ஒரு சிறிய முன்னுரையும் எழுதியிருப்பார்.
அவர் காந்தி நூற்றாண்டுக்கு தனது குழந்தையையும் அழைத்துச்செல்கிறார். குழந்தை அவரது கைபற்றி நடந்துவருகிறது. அமைச்சர்
காந்தி நூற்றாண்டு கண்காட்சியை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் வருகிறார்.
அந்த அமளியில் குழந்தை தந்தையின் கரத்திலிருந்து விடுபட்டு,
அமைச்சரின் அருகில் வந்துவிடுகிறது. ஒரு பாதுகாப்பு அதிகாரி ஓடிவந்து, குழந்தையை அதட்டி
ஒதுக்கிவிடுவார். அதனைப்பார்த்துவிடும் தந்தை அந்த பாதுகாப்பு அதிகாரியிடம் , “ எனது குழந்தை உங்கள் அமைச்சரின் பாதுகாப்பிற்கு
எந்தவகையில் ஆபத்து தரப்போகிறது “ எனக்கோபத்துடன்
கேட்பார்.
அதனைக்கேட்டுவிடும்
அமைச்சர் , குழந்தையை தூக்கி கன்னத்தில்
செல்லமாகத்தட்டி உச்சிமோந்து, தரையில் இறக்கிவிட்டுப்போவார். அந்தக்காட்சியை பல
கெமராக்கள் கிளிக்செய்துவிடும்.
ஒருவர், “ பாருங்கள்
அமைச்சர் எவ்வளவு எளிமையானவர் “ என்று புகழராம்
சூட்டுவார்.
“ இப்படித்தான் அமைச்சர்
தன்னையும் மக்களையும் முட்டாள்களாக்கிவிட்டு போகிறார் “ என்று நாவலாசிரியர் சொல்லிவிட்டு, இனி இந்த நாவலைப்படியுங்கள்
என்பார்.
அபிதாவுக்கு மிகவும் பிடித்தமான நாவல்.
அந்த வீட்டிலிருப்பவர்களுக்கு கோப்பி தயாரித்துக்கொடுக்கும்
வேலை மட்டுமன்றி, அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் அவள், தனது
எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்று அந்தக்கணத்தில்
யோசித்தாள்.
அப்பொழுது, வீட்டு வாசலில்
ஓட்டோ ஒன்று வந்து தரிக்கும் அரவம் கேட்கிறது. ஜீவிகா இன்று வேளைக்கே வந்திருக்கவேண்டும். அபிதா, இப்போது மூன்றுபேருக்கும் சேர்த்தே கோப்பி
தயாரித்தாள்.
கற்பகம் ரீச்சருக்கு
பெரும்பாலும் தேநீர்தான் விருப்பம்.
கடந்த ஒரு சிலநாட்களாக அபிதாவுக்கு தேநீர் தயாரிக்கும் வேலை குறைந்துவிட்டது.
“ எல்லாமே சூதாட்டம், சூதாட்டம் “
என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டு ஜீவிகா தனது அறைக்குச்சென்றுவிட்டு திரும்பி
நேரே சமையலறைக்கே வந்தாள்.
அங்கிருந்து பரவிய கோப்பியின் நறுமணம் அவளை அழைத்தது. அவளுக்குரிய கப்பை நீட்டிவிட்டு,
இதர இரண்டு கப்புகளையும் எடுத்துக்கொண்டுவந்து, மஞ்சுளாவிடமும் சுபாஷினியிடமும் நீட்டினாள்.
ஜீவிகாவும் வந்து கூடத்தில் அமர்ந்துகொண்டாள்.
“ என்ன, எங்காவது சூதாடிவிட்டு
வாறியா ஜீவிகா “ என புன்னகையோடு கேட்டாள் சுபாஷினி.
“ தேர்தல் திருவிழா தொடங்கிட்டுது. அதனால் அரசியல் சூதாட்டமும் ஆரம்பமாகிவிட்டுது. எவருக்கும் இந்த நாட்டு மக்களைப்பற்றி அக்கறையில்லை. தங்களைத்தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக சந்தர்ப்பவாத
கூட்டுக்களுக்கெல்லாம் தயாராகிவிடுகிறார்கள். எங்கட தமிழ் மக்கள் ஒன்றை நல்லா புரிந்துகொள்ளவேண்டும்.
அப்பன்டை உயிரை வீதியில் சிதறடித்து பறித்தவர்கள், அந்தப்பெண்ணின் ஒரு கண்ணைப்பறித்தவர்கள், தளபதியின் வயிற்றுக்குடலை வெளியே தள்ளவைத்தவர்கள்,
எந்த இனத்தின் விடுதலைப்பிரதிநிதிகள் என்பது இவங்களுக்குத் தெரியும். இவங்களை ஆதரிக்க
கிளம்பியிருக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் தெரியும்.
வானத்திலிருந்து மலம் நிரம்பிய பீப்பாய்களை போட்டு ஊரை நாறடிக்க
உத்தரவுபோட்டவரின் வாரிசும் அதிகாரம் கேட்குது. அவலக்குரலை செவிமடுக்காமல், பிஞ்சுக்குழந்தைகள்
என்றும் பாராமல் துடிக்க துடிக்க கொல்வதற்கு உத்தரவுபோட்டவரும் தனக்கு அதிகாரம் வேண்டும்
என்கிறார். இவங்களை ஆராத்தி எடுத்து வரவேற்றுக்கொண்டிருக்கிறது எங்கட பேச்சனம். “ ஜீவிகா பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறாள்.
“ சரி… சரி… அடக்கி
வாசி. உன்னைப்போன்ற பத்திரிகையாளர்கள் இந்த
நேரத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
“ என்றாள் சுபாஷினி.
மஞ்சுளாவிற்கு இந்த அரசியலில் எந்த அக்கறையும் இல்லை. அவள் தனது
கைத்தொலைபேசியில் முகநூல் பார்த்தவாறு அபிதா கொடுத்த கோப்பியை அருந்திக்கொண்டிருக்கிறாள்.
அங்கு நடக்கும் உரையாடலை அவதானித்துக்கொண்டிருந்த அபிதா, ஜீவிகாவை
பார்த்து, “ அம்மா, குடையை கொண்டுவந்தீங்களா..? “ எனக்கேட்டபின்னர்தான், தனது குடையை தான் வந்த
ஓட்டோவில் தவறவிட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது.
“ ஐய்யய்யோ… ஓமோம். குடையை மறந்திட்டேன். அவ்வளவு டென்ஷன். “
“ எடுத்துச்செல்லும்
பொருளை ஞாபகத்தோடு எடுத்துவருவதற்கு மறந்துவிடும் உங்களுக்கு அரசியல் சம்பவங்கள் மாத்திரம்
எப்படி மறக்காமல் நினைவிலிருக்குது அம்மா…?
“ எனக்கேட்டாள் அபிதா.
“அதுதான் தொழில் பக்தி.
சரி… இனி குடைக்கு என்ன செய்வது…. இது மழைக்காலம். அது நல்ல குடை. தெரிவுசெய்து வாங்கியது. விலையும் அதிகம். எப்படி மறந்தேன். நான் வந்த அந்த ஓட்டோவில்தான் விட்டிருப்பேன். நல்ல
ஓட்டோக்காரனாக இருந்தால் கொண்டு வந்து தருவான். “
என்றாள் ஜீவிகா.
“ ம்…. ம்… பார்த்துக்கொண்டிரு.
கொண்டுவந்து தருவான். ஒரு குடையை பத்திரமா திருப்பிக் கொண்டு வரமுடியவில்லை. நீதான் இந்த நாட்டின் அரசியல் தலைவிதியை மாற்றப்போகிறாய்….”
சுபாஷினி நளினம் காண்பித்து சிரித்தாள்.
“ ஆமா, எதையெதை பத்திரமாக பாதுகாக்கவேணும் என்பது எனக்குத்
தெரியும். “ என்று எதையோ இடித்துக்கூறுமாப்போல்
ஜீவிகா பதிலடி கொடுத்ததும், சுபாஷினி ஆசனத்தை தள்ளியவாறு கோபத்துடன் எழுந்து
தனது அறைக்குள் விருட்டெனச்சென்றாள்.
அந்த எதிர்பாராத காட்சியினால்
அபிதாவும் மஞ்சுளாவும் சற்று அதிர்ந்துவிட்டனர்.
அப்போது வெளியே ஒரு ஓட்டோ வந்து தரித்து நின்ற சத்தம் கேட்டது.
அதனையடுத்து கேட்டில் தட்டி ஒலி எழுப்பும் சத்தமும் கேட்டது.
அபிதா வெளியே வந்து பார்த்தாள். ஜீவிகாவை சில நிமிடங்களுக்கு
முன்னர் அங்கு விட்டுச்சென்ற அதே ஓட்டோ சாரதி, அந்தக்குடையுடன் வாசலில் தோன்றினான்.
“ அம்மா, உங்கட குடை உங்களிடமே பத்திரமாக திரும்பி வந்துவிட்டது “ எனச்சொன்ன அபிதா, கேட்டருகில் வந்தாள்.
ஜீவிகா வீட்டு வாசலில் நின்றவாறு, “ தேங்ஸ்… “ என்று அந்த ஓட்டோ சாரதியை பார்த்து உரத்துக் குரல்
கொடுத்தாள்.
ஒரு குடை பற்றிய உரையாடல், சாதாரண விடயம் அந்த வீட்டிற்குள் ஒரு பூகம்பத்தை உருவாக்கிவிட்டதோ…? ஜீவிகா சுபாஷினியை பார்த்து ஏன் அப்படிச்சொன்னாள்.
அதற்கு எதிர்வினையாக சுபாஷினி ஏன் கோபத்துடன் எழுந்து சென்றாள்..?
அபிதாவுக்கு குழப்பமாக இருந்தது. மற்றவர் உடைமைக்கு ஆசைப்படாத அந்த நல்ல மனம் படைத்த ஓட்டோக்காரன் போன்றவர்கள்
இருப்பதனால்தான் மழைபெய்கிறது. அதற்காக இப்படியுமா பெய்யவேண்டும்…?!
மின்னல் வெட்டி இடியோசை கேட்டது.
அந்தவீட்டிலும் ஒரு இடியோசையை எதிர்பார்த்தவாறு வீட்டு வாசல்
கதவை அபிதா மூடினாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment