ஒப்பீட்டுத் தீர்மானம்


09/11/2019 சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்ற முடிவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சிகள் தனித்­த­னி­யாகக் கூடி முடி­வெ­டுத்­ததுடன். தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பாகவும் ஆதரவினை தெரிவித்துள்ளனர். 
ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­த­ரா­ன சஜித் பிரே­ம­தா­சவை புதிய ஜன­நா­யக முன்­னணி என்ற பல கட்­சிகள் இணைந்த கூட்டு அணி, பொது வேட்­பா­ள­ராக இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் களத்தில் இறக்கி உள்­ளது. இந்தப் பொது வேட்­பா­ளரை ஆத­ரிப்­பதில் பின் நிற்­பது போன்ற ஒரு தோற்­றத்தைக் காட்டி வந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு அதன் முடிவை இப்­போது வெளிப்­ப­டுத்­தி­விட்­டது.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை, அரசியல் தீர்வு ,பிளவுபடாத நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு என்ற ஆரோக்கியமான வாக்குறுதிகளை புதிய ஜனநாயக ம முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள காரணத்தினால் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார்.
கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ பு.ௌாட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து இந்த அறிவிப்பினை அவர் விடுத்திருக்கின்றார்.
புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரையே ஆத­ரிப்­பது என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமைக் கட்­சி­யா­கிய தமி­ழ­ரசுக் கட்சி ஏற்­க­னவே தீர்­மா­னித்­து­விட்­டது. கட்சி முக்­கி­யஸ்­தர்­க­ளி­டமும், அதன் கட்­ட­மைப்பு நிலையில் உள்ள தலை­வர்­க­ளி­டமும் பேச்­சுக்கள் நடத்­து­வ­தற்கு முன்பே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை நிலையில் இந்தத் தீர்­மானம் மேற்கொள்ளப்­பட்டு விட்­டது.
ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ குழு­வினர் கோத்­த­பாய ராஜ­பக்ஷவைத் தமது வேட்­பா­ள­ராக அறி­வித்த போதே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை அவரை ஆத­ரிப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்­களால் முழு­மை­யாக வெறுத்து ஒதுக்­கப்­ப­டு­கின்ற ஒரு­வ­ரான முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளரும், வெள்­ளைவான் விவ­கா­ரத்தின் சூத்­தி­ர­தா­ரி­யு­மாகக் கரு­தப்­பட்­ட­வரும், யுத்த கால போர்க்­குற்­றங்­க­ளுக்குக் கார­ண­மா­னவர் என்று கரு­தப்­பட்­ட­வ­ரு­மா­கிய கோத்­த­பாய ராஜபக்ஷவை ஆத­ரிக்க முடி­யாது என்ற யதார்த்­தத்தை இது அடிப்­ப­டை­யாகக் கொண்­டி­ருந்­தது.
அதே தந்­தி­ரோ­பாயம்....?
ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிப்­ப­தாக வெளிப்­ப­டை­யாக அறி­வித்தால், இன­வாதப் பிர­சா­ரத்தை முடுக்­கி­விட்டு, அந்தக் கட்­சியின் வேட்­பா­ள­ருக்­கான சிங்­கள மக்­களின் ஆத­ரவை ராஜ­பக்ஷ குழு­வினர் சிதைத்து சின்­னா­பின்­ன­மாக்­கி­வி­டுவர் என்ற அர­சியல் ரீதி­யான அச்­சத்தை  கூட்­ட­மைப்பின் தலைமை கொண்­டி­ருந்­தது.
தமிழ் மக்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியை ஆத­ரிக்­கின்­றனர் என்­பதை முன்­ன­தா­கவே அறி­வித்தால், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு எதி­ராக புலிகள் எழுச்சி பெற்­று­விட்­டார்கள். அதற்கு ஐக்­கிய தேசிய கட்சி துணை­யா­கி­விட்­டது என்ற புலிப்­பூச்­சாண்­டியைக் காட்டி சிங்­கள மக்­களை ராஜ­பக்ஷ குழு­வா­கிய பொது­ஜன பெர­முன ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ருக்கு எதி­ராகக் கிளப்­பி­விட்டு, அவரை செல்­வாக்கு இழந்­த­வ­ராக்­கி­விடும். அதற்கு இட­ம­ளித்­து­விடக் கூடாது என்ற கார­ணத்­துக்­கா­கவே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை தனது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வதைத் தாம­தப் ­ப­டுத்தி இருந்­தது.  
கூட்­ட­மைப்பின் தலைமை குறிப்­பாக அதன் தலைவர் ஆர்.சம்­பந்­தனின் இந்த நிலைப்­பாடு ஒன்றும் புதி­ய­தல்ல. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் - 2015ஆம் ஆண்டு சிங்­கள மக்கள் மத்­தியில் பெரும் செல்­வாக்­கையும் அப­ரி­மி­த­மான அதி­கா­ரத்தைக் கொண்ட அர­சி­யல்­வா­தி­யாகத் திகழ்ந்த வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு எதி­ராக ஒரு வேட்­பா­ளரை நிறுத்­து­வதே ஆபத்­தான காரி­ய­மாக இருந்­தது.
ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவை தேர்­தலில் தோற்­க­டித்து அவரை வீட்­டுக்கு அனுப்­பி­விட வேண்டும் என்று தீர்க்­க­மான முடிவைக் கொண்­டி­ருந்த பொது அமைப்­புக்கள், ஜன­நா­ய­கத்தின் மீது பற்­று­க்கொண்ட அமைப்­புக்கள், அர­சியல் கட்­சிகள் என்­பன ஒன்­றி­ணைந்து பொது வேட்­பாளர் ஒரு­வரை நிறுத்­து­வ­தாக முடி­வெ­டுத்­தி­ருந்­தன. அந்த கூட்டு அமைப்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் 

முக்­கிய தரப்­பாக பங்­கேற்­பு
ஆனாலும்,  ரா­ணுவ பலத்தின் ஊடாக அதீத அதி­கார பலத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­ப­தி­யா­கிய மஹிந்த ராஜ­பக்ஷவினால் அந்த பொது வேட்­பா­ள­ருக்குப் பல்­வேறு வழி­களில் அச்­சு­றுத்­தலும், ஆபத்­துக்­களும் ஏற்­ப­டலாம் என்ற கார­ணத்­தினால் பொது வேட்­பா­ளரின் பெயர் இறுதி நேரம் வரையில் அறி­விக்­கப்­ ப­ட­வில்லை. அதே­போன்­றுதான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் யாருக்கு ஆத­ர­வாகச் செயற்­படப் போகின்­றது என்­பதை அறி­விப்­பதை இறுதி நேரம் வரையில் தாம­தப்­ப­டுத்தி இருந்­தது.
அன்­றைய அர­சியல் சூழலில் இந்த தந்­தி­ரோ­பாயச் செயற்­பாடு அவ­சி­ய­மாகி இருந்­தது. வெற்றி வாய்ப்­புக்குத் தேவை­யா­கவும் இருந்­தது. அதே தந்­தி­ரோ­பாயச் செயற்­பாட்­டையே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இந்தத் தேர்­த­லிலும் யாரை ஆத­ரிப்­பது என்ற முடிவை வெளிப்­ப­டுத்­து­வதில் கையாண்­டி­ருந்­தது.
பல கார­ணங்கள் 
ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அதி­கா­ர­பூர்வ அறி­வித்தல் வெளி­யா­வ­தற்கு முன்பே மஹிந்த ராஜ­பக்ஷவின் தலை­மையில் புதிய அர­சியல் சக்­தி­யாக முகிழ்த்­தி­ருந்த பொது­ஜன பெர­முன பெரும் ஆர­வா­ரத்­துடன் முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­ பாய ராஜ­பக்ஷவை தனது வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்து அறி­வித்­தி­ருந்­தது.
அதனைத் தொடர்ந்து நாட்டின் மூன்­றா­வது அர­சியல் சக்­தி­யாகக் கரு­தப்­ப­டு­கின்ற ஜே.வி.பி.பெரிய அளவில் மக்­களை ஒன்­று­தி­ரட்டி நடத்­தப்­பட்ட ஒரு பொதுக்­கூட்­டத்தின் ஊடாக அதன் தலைவர் அனுர குமார திசா­நா­யக்­கவை தனது வேட்­பா­ள­ராக வெளிப்­ப­டுத்­தி­யது.
ஆனால் ஐக்­கிய தேசியக் கட்சி தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் பிச்சுப் பிடுங்­கல்­க­ளுக்கு உள்­ளாகி நீண்ட தாம­தத்தின் பின்பே சஜித் பிரே­ம­தா­சவை வேட்­பா­ள­ராக அறி­வித்­தது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் மென்­னு­ணர்வு போக்கில் ஆத­ர­வான அர­சியல் உறவைக் கொண்­டி­ருந்த தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைமை அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுக்க முடி­யாது. உரிய நேரத்தில் சரி­யான முடி­வெ­டுக்­கப்­படும் என்று கூறி அமை­தி­யாக நிலை­மை­களை அவ­தா­னித்­தி­ருந்­தது.
முன்­ன­ணியில் உள்ள வேட்­பா­ளர்­க­ளுடன் தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் அர­சியல் அபி­லா­ஷைகள் தொடர்பில் அவர்­க­ளு­டைய நிலைப்­பாடு குறித்து பேச்­சுக்கள் நடத்­தி­யதன் பின்பே முடி­வெ­டுக்க முடியும் என்று அது அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு உரிய சந்­தர்ப்­பமும் அர­சியல் ரீதி­யான வாய்ப்பும் பல்­வேறு கார­ணங்­க­ளால் ஏற்­ப­ட­வில்லை.
இதனால் களத்தில் இறங்­கி­யுள்ள பிர­தான கட்­சிகள் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களை வெளி­யிட்­டதன் பின்னர் அவற்றைப் பரி­சீ­லனை செய்த பின்பே யாரை ஆத­ரிப்­பது என்ற முடி­வெ­டுக்­கப்­படும் என கூட்­ட­மைப்பின் தலைமை கூறி­யி­ருந்­தது.
இரண்டு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்கள் வெளி­யி­டப்­பட்ட போதிலும், ஐக்­கிய தேசியக் கட்சி தனது வேட்­பா­ளரை அறி­வித்­ததைப்போன்றே தாம­த­மா­கவே தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்தே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் முடிவை அதன் தலைமை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்­டத்தின் தீர்­மா­ன­மாக முன்­னோடி அறி­விப்­பாக வெளி­யிட்­டி­ருந்­தது.
அதனைத் தொடர்ந்து கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளா­கிய புளொட், ரெலோ என்­ப­னவும் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிப்­பது என்ற தங்­க­ளது முடிவை வெளி­யிட்­டி­ருக்­கின்­றன.
தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் இந்த முடி­வா­னது 2015 ஆம் ஆண்டு தேர்­தல்­கால முடிவை ஒத்த தீர்­மா­ன­மா­கவே அமைந்­துள்­ளது. அன்­றைய தீர்­மா­னத்­துக்குப் பக்­க­ப­ல­மாகப் பல கார­ணங்கள் இருந்­தன.
வெவ்வேறு நோக்­கங்கள்
எதேச்­ச­தி­காரப் போக்கில் சென்ற மஹிந்த ராஜ­பக்ஷவின் ஆட்சிப் போக்­குக்கு முடிவு கட்டி ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்த வேண்டும். சர்­வா­தி­கா­ரத்­துக்கு வழி­கோ­லிய ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி பாராளு­மன்­றத்தின் பலத்தை அதி­க­ரிக்க வேண்டும். தேர்தல் முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
 இதற்­காகப் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்டும். அதன் ஊடாக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண வேண்டும் போன்ற விட­யங்கள் பொது வேட்­ப­ாளரை ஆத­ரிப்­ப­தற்­கான கார­ணங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.
இந்த நியா­ய­மான கார­ணங்­க­ளுக்­காக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு ஆட்சி மாற்­றத்­துக்காகத் தனது முழு­மை­யான ஒத்­து­ழைப்­பையும் ஆத­ர­வையும் வழங்கி இருந்­தது. அந்த நேரம் நிபந்­த­னை­களை விதித்து ஆத­ரவு வழங்­கு­வ­தற்­கான வாய்ப்பும் நிலை­மை­களும் காணப்­பட்ட போதிலும் நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வையே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு வழங்கி யிருந்­தது.
ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் உரு­வான நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு தமிழ் மக்­க­ளுக்கு எதிர்­பார்த்த பலன்­களை அளிக்­க­வில்லை. எதிர்­பார்த்த விட­யங்­க­ளை­விட இயல்­பாக ஏற்­பட்­டி­ருக்க வேண்­டிய மாற்­றங்­க­ளும்­கூட தமிழ் மக்­க­ளுக்கு நன்மை அளிப்­ப­வை­யாக அமை­ய­வில்லை.
மாறாக முன்­னைய மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே மறை­மு­க­மாகப் பின்­பற்­றப்­பட்­டி­ருந்­தன. அந்த அர­சாங்கம் வெளிப்­ப­டை­யா­கவே தமிழ்மக்­களின் இருப்­புக்குப் பாத­க­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்­தது. ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம், நல்­லாட்சி என்ற போர்­வையில் மறை­மு­க­மாக தமிழ்மக்­களை பல்­வேறு நிலை­க­ளிலும் அடக்கி ஒடுக்­கு­கின்ற போக்­கையே கடைப்­பி­டித்து வந்­தது.
ரா­ணு­வத்தின் பிடியில் உள்ள காணி­களின் மீள­ளிப்பு, அர­சியல் கைதி­களின் விடு­தலை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பொறுப்பு கூறல், அர­சியல் தீர்வு, வேலை­வாய்ப்பு உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­களும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தீர்வு வழங்கும் வகையில் உரிய முறையில் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் கவ­னிக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான நட­வ­டிக்­கைகள் உளப்­பூர்­வ­மாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இத­ய­சுத்­தி­யுடன் அணு­கப்­ப­ட­வுமில்லை.
முன்­னைய தேர்­தலில் ஆட்சி மாற்­றத்­துக்­காக தெற்கும் வடக்கு – கிழக்கும் ஒன்­றி­ணைந்­தி­ருந்­தன. ஆனால் இம்­முறை அந்த நிலைமை காணப்­ப­ட­வில்லை. வடக்கு–கிழக்கு ஒரு போக்­கிலும் தென்­ப­கு­தியின் அர­சியல் நிலை­மைகள் வேறு ஒரு போக்­கிலும் பிரிந்து காணப்­ப­டு­கின்­றன.
தேசிய பற்றைக் காண­வில்லை
வாழ்­வியல், குடி­யு­ரிமை, அர­சியல் உரிமை, மத உரிமை என்­பன வடக்­கிலும் கிழக்­கிலும் அர­சியல் ரீதி­யாக இந்தத் தேர்­தலில் முனைப்பு பெற்­றி­ருக்­கின்­றன. ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­றி­விட வேண்டும் என்ற, வெறும் அர­சியல் வேட்­கையே இந்தத் தேர்­தலில் கூர்மை பெற்­றி­ருக்­கின்­றது.
இந்தத் தேர்தல் களம் தெற்கைப் பொறுத்­த­மட்டில் அதி­காரப் போட்­டிக்­கா­னது. ஆனால், வடக்கு–கிழக்கைத் தமது தாய­க­மாகக் கொண்­டுள்ள அங்­குள்ள மக்­க­ளுக்கு, அவர்­களின் இருப்­பையும் எதிர்­கால வாழ்க்­கை­யையும் நிர்­ண­யிக்­கின்ற ஒரு போராட்ட கள­மா­கவே இது அமைந்­துள்­ளது.
நாட்டின் அதி­யுயர் அர­சியல் பத­வி­யா­கிய ஜனா­தி­பதி பத­விக்­கான இந்தத் தேர்தல் நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது. தேசிய மட்­டத்தில் முக்­கி­ய­மா­னது. ஆனாலும், இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் இன, மதம் சார்ந்த அர­சியல் முனைப்­பி­லேயே ஆழ்ந்து போயுள்­ளார்கள்.
நாட்டின் ஒட்டு மொத்த மக்­க­ளி­னதும் நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட தேசிய சிந்­த­னை­யி­லான அர­சியல் போக்கை அவர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை. இதன் கார­ண­மா­கவே நாட்டின் குடி­மக்­க­ளா­கிய ஒரு சாரா­ரு­டைய பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்­தவோ அல்­லது அந்த விட­யங்­களைப் பற்­றியோ இந்தத் தேர்தல் காலத்­தில்­கூட கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அவர்கள் முன்­வ­ரா­த­வர்­க­ளாக இருக்­கின்­றனர். அவ்­வாறு முன்­வர முடி­யா­த­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றனர்.
சிறு­பான்மை இன மக்­க­ளுக்கும் இந்த நாட்டின் நலன்­க­ளிலும் முன்­னேற்­றத்­திலும் உரி­மைகள் இருக்­கின்­றன. பங்­கேற்­ப­தற்­கான அவ­சியம் உள்­ளது. ஆனால் அந்த மக்­களை ஓரங்­கட்டி, தமது சுய­நல அர­சியல் அதி­காரப் போட்­டியில் அவர்­களைப் பக­டைக்­காய்­க­ளாக்கவே பேரின அர­சி­யல்­வா­திகள் முனைந்­தி­ருக்­கின்­றார்கள்.
எவர் எக்­கேடு கெட்­டா­லும்­சரி, நாங்கள் அதி­கா­ரத்­துக்கு வர வேண்டும். அதற்­காக இந்தத் தேர்­தலில் எப்­ப­டி­யா­வது வெற்றி பெற்­று­விட வேண்டும் என்ற முனைப்பே அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது. மோச­மான யுத்­தத்தின் பின்னர் நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பின்­ன­டைவை அனைத்து மக்­க­ளி­னதும் அர்ப்­ப­ணிப்­புடன் கூடிய பங்­க­ளிப்பில் சீர் செய்து நாட்டை முன்­னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தேசியப் பற்­று­டைய சிந்­த­னையை அவர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை.
இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே சொந்தம் என்று உரிமை கொண்­டா­டு­வ­தி­லேயே அவர்கள் தீவி­ர­மாக இருக்­கின்­றார்கள். ஆனால் இங்கு ஏனைய மக்­களும் வாழ்­கின்­றார்கள். அவர்­க­ளையும் உள்­ள­டக்கி அவர்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்கும் சமாந்­த­ர­மாக இட­ம­ளித்து நாட்டை பன்­மு­கத்­தன்மை கொண்­ட­தாக முன்­னேற்ற வேண்டும் என்­ப­தற்­கான செயற்­பாட்டை அவர்­க­ளிடம் காண முடி­ய­வில்லை.
ஏன் ஆத­ரிக்க வேண்டும்.....?
இதன் கார­ண­மா­கவே இந்தத் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற முன்­னணி வேட்­பா­ளர்கள் பிரச்­சி­னை­களில் மூழ்­கி­யுள்ள சிறு­பான்மை இன மக்­களின் அபி­லா­சைகள் குறித்து பேச்­சுக்கள் நடத்­தவோ அவற்றைத் தீர்ப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் குறித்தோ கலந்­தா­லோ­சிக்­கவோ விருப்­ப­மற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றனர்.
தேசிய மட்­டத்தில் முக்­கி­யத்­துவம் பெற்­றுள்ள இந்தத் தேர்­தலில் பரந்து பட்ட அர­சியல் மனப்­பாங்­குடன் செயற்­ப­டு­வ­தற்கு அவர்கள் தயா­ராக இல்லை. 
அதன் கார­ண­மா­கவே இந்தத் தேர்தல் காலச் சூழ­லிலும் சிறு­பான்மை இன­மக்­க­ளு­டைய தலை­வர்­க­ளுடன் பேச்­சுக்கள் நடத்த அவர்கள் முன்­வ­ர­வில்லை.
அது மட்­டு­மல்­லாமல் அர­சியல் மேடை­க­ளிலும் அறிக்கை வடி­வங்­க­ளிலும் வெளிப்­பட்­டுள்ள சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அறிந்து கொண்­ட­தா­கக்­கூட அவர்கள் காட்­டிக்­கொள்ள முனை­ய­வில்லை. அந்த மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் அறிந்து அவற்­றுக்குத் தீர்வு காண்­ப­தற்கு தாங்கள் கொண்­டுள்ள அர­சியல் நிலைப்­பாட்­டைக்­கூட அவர்­களால் உறு­தி­யாக தேர்தல் பரப்­பு­ரை­களில் வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. அவ்­வாறு வெளிப்­ப­டுத்த முன்­வ­ர­வு­மில்லை.
இத்­த­கைய ஒரு நிலை­யில்தான் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கொண்­டுள்ள மென்­னு­ணர்வு கொண்ட அர­சியல் போக்கில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தா­ச­வுக்குத் தனது ஆத­ரவைத் தெரி­வித்­துள்­ளது.
யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் யுத்தப் பாதிப்­பு­க­ளுக்கும் நீண்­ட­காலம் இழு­பட்டு புரை­யோ­டி­யுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கும் தீர்வு காண்­ப­தற்­கு­ரிய உறு­தி­யான நிலைப்­பாட்டை ஐக்­கிய தேசிய கட்­சியும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. அந்தக் கட்­சியின் தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.
ஆனால் இந்தத் தேர்­தலில் ஒப்­பீட்­ட­ளவில் ஏனைய இரு பிர­தான வேட்­பா­ளர்­க­ளி­னதும் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளை­யும்­விட புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­பனம் முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாகத் தோற்­ற­ம­ளிக்­கின்­றது. தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­க­ளையும் தீர்வு காணப்­பட வேண்டும் என்று அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்ள சில பிரச்­சி­னை­க­ளையும் அது தொட்­டுக்­காட்­டி­யுள்­ளது. இதற்­கா­கவே அதன் வேட்­பா­ளரை ஆத­ரிக்க வேண்டும் என்ற தீர்­மா­னத்தைத் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மேற்­கொண்­டி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.
அதே­நேரம் மோச­மான மனித உரிமை மீறல்கள், சிறு­பான்மை இன மக்­களின் மீது மோச­மான அடக்­கு­மு­றை­களை மேற்­கொண்­டி­ருந்த பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தேர்­தலில் வெற்றி பெறு­வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற அதி­முக்­கிய நோக்­கமும் இந்தத் தீர்­மா­னத்­துக்கு வலு சேர்த்­துள்­ளது.
எதிர்­கால அர­சி­ய­லுக்கு நன்மைபயக்குமா? 
ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் பல்வேறு நெருக்கடிகளுக்கும் எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்த நிச்சமயற்ற தன்மைக்கும் ஆளாகியுள்ள தமிழ் மக்களுக்கு அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைந்து உறுதியானதோர் அரசியல் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற தேவையும், எதிர்பார்ப்பும் சிதறடிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்க்கமான சில தீர்மானங்களை மேற்கொண்டு உறுதியான ஒருங்கிணைந்த நிலைப்பாட்டில் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற மக்களின் அபிலாஷைகள் நிராசையாக்கப்பட்டுள்ளன.
அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்கான முயற்சிகளும் அதனையொட்டிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும். கட்டவிழ்ந்த நெல்லிக்காய் மூடையைப் போல கட்சிகள் சிதறுண்டு போயிருக்கின்றன.
ஒரு கட்சி, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரியிருக்கின்றது. மற்றுமொரு கட்சி மக்கள் தாங்களே சொந்தமாகத் தீர்மானமெடுத்து இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என கூறியுள்ளது. மற்றுமொரு கட்சி தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ,  அல்லது ஒரு உடன்பாட்டுக்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என தெரிவித்துள்ளது. அதேநேரம், மக்கள் தாங்களாகவே தீர்மானமெடுத்துச் செயற்பட வேண்டும் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏனைய கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்திருக்கின்றன.
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றதோர் அரசியல் தேவை முனைப்பு பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு உறுதியான தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் வழங்க முடியாமல் நவக்கிரகங்களைப் போன்று திகழ்வது தமிழ் மக்களின்  எதிர்கால அரசியலுக்கு நன்மை பயக்கின்ற ஒரு செயற்பாடாகத் தெரியவில்லை.
பி.மாணிக்­க­வா­சகம் - நன்றி வீரகேசரி 

No comments: