தீர்வில்லா நிறத்தினழகு; வாழ்க்கை.. (கவிதை) வித்யாசாகர்!


வ்வுலகின் தெருக்களில்
சட்டைக்கிழித்துத் திரியும் மனிதர்கள்
மனதால் மிக ஏராளம்,
அவர்கள் மௌனத்தின் அரிதாரம்;

சிரிக்கும் முகத்துள்ளிருந்து
மௌனமாக வடியும் கண்ணீர் துளிகளை
படிக்கமுடிந்தோர் எண்ணற்றோர்,
அணைத்தோர் நகைத்தோரினும் குறைவு;

வாழ்வின் யதார்த்தங்கள்
கண்டு முறைப்பதும் காரி உமிழ்வதும்
கடைநிலை மனிதர்க்கும் சமம் தான்,
மேல்நிலை முதலாளிக்கும் சமம் தான்;

கல்லறை அறியும் வலிகளும்
வலி மூடிய கல்லறைகளுமாய்த் தான்
மனிதர்களின் வாழ்க்கை முடிகிறது,
இருந்தும் பயணிக்கிறோம்? உயிர்த்திருக்கிறோம்;

யாரோ அடிக்கையில்' வேறேதோ
கிடைக்காமையில்' எல்லோராலும்
ஒரு குந்தையைப்போல் அழமுடிவதில்லை,
அழாமலும் யாருமிங்கு சிரிப்பதில்லை;

கதவுகள் ஒரு பொழுதில் அதுவாகத்தான் திறக்கிறது
அதுவாகவே மூடிக்கொள்கிறது,
திறப்பது எதனாலாக யிருந்தாலும்
மூடுபவர்கள் நாமாகவே இருக்கிறோம்;

ஏதோ சந்து முனையில் நின்று
நீள் வட்டமாய் சிறுநீர் கழிக்கும் சிறுவனைப்போல
மனது வட்டமாய் நீளமாய் நீள,
அதீத கனவுகளோடு முடிகிறது வாழ்தலென்பது;

முடியட்டும்.., அதனாலென்ன
வாழ்தலின் இடைப்பட்ட நாட்களிலிருந்து
ஏதேனும் ஒன்றேனும் நாளை நம்
வரலாறாக எழுதப்பட்டு விடாதா என்ன?

வேறென்ன, வலியும் கண்ணீரும்
வென்றதும் தோற்றதும்
உண்மையும் பொய்யுமான
வாழ்தலும் சாதலுமுமே யில்லையா, வரலாறென்பதும் (?)!!








No comments: