கள்ளமில்லா மனத்துடனே திருகலியாணம் நடத்துகிறார் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


image1.jpegகாமனை யெரித்த கடவுளுக்குத் திருமணமா
கற்கண்டு பால்கொடுத்து கடவுளுக்குத் திருமணமா 
மாலயனை உறவாக்கி வள்ளியினை உருவாக்கி
தெய்வயானை திருமணத்தை செய்துவிடல் முறையாமோ ! 

எந்தச் சமயத்தில் இப்படி நடக்கிறது
எங்கள் சமயத்தில் எதற்காக ஏற்றார்கள்
சிந்திக்க சிந்திக்க சிந்தனைகள் வளர்கிறது
எல்லாமே அர்த்தமாய் இருக்கிறதாய் தெரிகிறது 

கடவுளரை அன்னியமாய் கருதாத காரணத்தால்
கடவுளரை உறவுகளாய் கண்டார்கள் முன்னோர்கள் 
உள்ளுறையும் கடவுளரை உறவென்னும் தத்துவத்தால்
ஒருகுடும்பம் ஆக்கியவர் உளம்மகிழ்ந்து நின்றார்கள் 

அருவுருவ மாயிருக்கும் ஆண்டவனை சிலைவடித்து 
அலங்காரம் பலசெய்து அகநிறைவு பெற்றார்கள் 
உரிமையுடன் பெயர்கொடுத்தார் உணவுவகை பலபடைத்தார் 
நிலவுலகில் ஆண்டவனை நெருங்கியதாய் அவர்நினைத்தார் 

கலியுகத் தெய்வமாய் கந்தனை அவர்நினைத்தார்
கந்தனைச் சொந்தமாய் கருத்தினிலே இருத்திட்டார் 
கந்தனது பெயரதனை பரம்பரைக்கே இட்டார்கள்
கந்தனுக்கு திருமணத்தை காதலுடன் செய்கின்றார் 

வள்ளிதெய்வ யானையுடன் மால்மருகன் வேலவனை
தெய்வமென நினையாமல் திருமணத்தால் சேர்க்கின்றார்
உள்ளமதில் ஊற்றெடுக்கும் உயர்பக்தி எனுமுணர்வால் 
கள்ளமில்லா மனத்துடனே திருகலியாணம் நடத்துகிறார் 

அடியவர்கள் ஆண்டவனை எப்படித்தான் அழைத்தாலும்
ஆண்டவனும் ஆனந்தமாய் அவரழைப்பை ஏற்றிடுவான் 
அடிமுடியே காணவொணா ஆண்டவனை அடியார்கள்
அருகிருந்து பார்ப்பதற்கு ஆக்கியதே உறவுமுறை


















No comments: