புதிய ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கு பல சவால்கள் உள்ளன. விசேடமாக தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் பல சவால்களை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படப்போகின்றவர் எதிர்கொள்ளவேண்டும். அவை இலகுவாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல. பல வழிகளிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தி தென்னிலங்கை மக்களுக்கு சரியான தெளிவுபடுத்தல்களை முன்னெடுத்து சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான தீர்வுகளை எட்டுவது அவசியமாகும். அவை சவாலான பணிகள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
ஜனாதிபதி தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரசாரங்கள் இறுதிக்கட்டமாக தீவிரமடைந்துள்ளதுடன் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவந்துவிட்டன. நாட்டு மக்கள் விசேடமாக தமிழ்ப்ேசும் மக்கள் எதிர்பார்த்திருந்த இரண்டு வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மக்கள் தற்போது குறித்த தேர்தல் விஞ்ஞாபனங்களை மதிப்பிட்டு தமது தீர்மானத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி எடுப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் அரசியல், அபிவிருத்தி, சமூக, பொருளாதார, கலாசார விடயங்களை அடுத்து ஐந்து வருடங்களுக்கு எவ்வாறு கையாள்வது மற்றும் அவற்றுக்கான கொள்கை திட்டங்கள் அணுகுமுறைகள் என்ன என்பது தொடர்பாக இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமது விஞ்ஞாபனங்களில் காரணிகளை முன்வைத்துள்ளனர். அது மட்டுமன்றி பிரதான வேட்பாளர்களும் பிரசாரக் கூட்டங்களில் தமது கொள்கைகளை விளக்கிக்கூறிவருவதுடன் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்து வருகின்றனர்.
இவற்றில் இந்த நாட்டின் தமிழ்ப் பேசும் மக்களை பொறுத்தவரை நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரம் போன்றவற்றுக்கான இரண்டு வேட்பாளர்களினதும் கொள்கை திட்டங்கள் மிகவும் முக்கியத்துவமிக்கதாக அமைகின்றன.
பொதுவாக தமிழ்ப்பேசும் மக்களைப் பொறுத்தவரை, அரசியல் பிரச்சினை முக்கியத்துவம் பெறுகின்றது. தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கிலான ஒரு தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு ஏதுவான யோசனைகள் அடங்கிய விஞ்ஞாபனம் குறித்துத் தமிழ் மக்கள் கவனம் செலுத்துவார்கள். அதனாலேயே பிரதான வேட்பாளர்கள் இந்த தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பான விடயம் குறித்து செலுத்துகின்ற அவதானம் முக்கியத்துவம் பெறுகின்றது.
அதன்படி தற்போது பிரதான இரண்டு வேட்பாளர்களினதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்துள்ளன. இரண்டு பிரதான வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களிலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வு மற்றும் எவ்வாறான கொள்கைத்திட்டங்கள் உள்ளன என்பது தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
கோத்தாவின் விஞ்ஞாபனம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்பட்டது. அதில் உள்ளடங்கியுள்ள விடயங்களைப் பார்த்தால், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று மிக முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, “சர்வதேச சமூகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் அபிலாஷைகளுக்கு உட்படாத வகையில் புதிய அரசியலமைப்புக் கொண்டு வரப்படும். இதற்காக பாராளுமன்றத்தில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும்.
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கலப்பு தேர்தல் முறை மாகாணசபை முறை மற்றும் சட்டத்தின் ஆட்சிப் படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
ஒற்றையாட்சி, பௌத்த மதத்திற்கான முன்னுரிமை, மத சுதந்திரம், அடிப்படை மனித உரிமை ஆகியவை அரசியலமைப்பின் பகுதிகளாக இருக்கும். ஜனாதிபதியின் தலைமையில் சர்வமத ஆலோசனை சபை உருவாக்கப்படும். மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலும் சர்வமதக்குழுக்கள் நிறுவப்படும்.
யுத்தம் தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உட்பட்டு சிறையில் வாடுகின்ற ராணுவ மற்றும் புலி உறுப்பினர்கள் தொடர்பாக முறையான புனர்வாழ்வு முன்னெடுக்கப்பட்டு சுதந்திர மனிதர்களாக சமூகமயப்படுத்தபடுவார்கள்.
பயங்கரவாத குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவர் விடயத்திலும் மூன்று மாத காலத்தில் வழக்கு தொடரப்படும் அல்லது விடுதலை செய்யப்படுவார்கள்.
காணிப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில் காணி பயன்பாட்டுத் திட்டம் ஒன்று தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் உருவாக்கப்படும் அதற்காக தேசிய காணி ஆணைக்குழு நிறுவப்படும்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பொறுபபு மீறி செயற்பட்டவர்கள் குறித்து விசாரிக்க முழு அதிகாரம் கொண்ட சுயாதீன ஆணைக்குழு ஒன்று நிறுவப்படும்
பிராந்திய பாதுகாப்புக்காக இந்தியா உள்ளிட்ட சார்க் அமைப்பு, பீம் செக் அமைப்புக்களுடன் இணைந்து செயற் படுவோம்.
தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும். வற் வரியானது குறைக்கப்படும் ஆகிய விடயங்கள் முக்கியமாகவுள்ளன. அது மட்டுமன்றி மேலும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, இளைஞர், மகளிர், சிறுவர் விடயங்கள், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, வரிக்கட்டமைப்பு மற்றும் சமூக, கலாசார அம்சங்கள் குறித்து பல யோசனைகளும் வாக்குறுதிகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக பல்வேறு விடயங்கள் குறித்து இந்த விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும் இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயங்கள் தெளிவாக இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்றும் அதில் ஒற்றையாட்சி பேணப்படுவதுடன் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பன தொடர்பில் ஆராயப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விஞ்ஞாபனத்தில் இந்த விடயதானத்துக்குள் தான் நாம் தீர்வு குறித்த விடயத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் அது தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய விடயங்களைப் பார்க்கலாம்.
சஜித்தின் விஞ்ஞாபனம்
தேசத்தை பாதுகாக்கவும் அதன் அடுத்த பயணத்தில் அதை வலுவாக வைத்திருக்கவும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும். இது எமது கட்டமைப்பில் ஜனநாயகமாக்கலை நிறைவு செய்யும். புதிய அரசியல் அமைப்பு தேர்தல் முறைமை சீர்திருத் தம், தேர்தல் முறைமை மாற்றம் என்பனவை குறித்து ஆராயும் இந்த அரசியல் அமைப்பு அரசாங்கம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதையும் சீர்திருத்தும். பிளவுபடாத மற்றும் பிரிக்க முடியாத இலங்கைக்குள் அதிகபட்ச அதிகார பகிர்வு அமுல்படுத்தப்படும். அதிகாரப்பகிர்வு அர்த்தமுள்ளதாகவும் வினைத்திறன் உள்ளதாகவும் மாறும். வீணடிப்புகள் குறைக்கப்படும்.
மத்தியு மாகாணங்களும் தங்களது திறன்கள் அடிப்படையில் அந்தந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதற்காக மாகாண சபைகள் பிரதிநிதிகளைக் கொண்ட இரண்டாவது சபை- செனட் சபை ஒன்று உருவாக்கப்படும்.
தேவையான நிதியை திரட்டவும், அவற்றில் பரவலாக்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தவும் மாகாணங்களுக்கு தேவையான அதிகாரங்கள் இருக்கும்.
மலையக மக்களுக்கு ஏழு பேர்ச் காணியுடன் வீட்டுத்திட்டம் நடை முறைப்படுத்தப்படும். அத்துடன் மலையகத்தின் பல்கலைக்கழகமாக ஹைலண்ட் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
குற்றமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவர். காணாமல் போனோர் அலுவலகம் ஊக்குவிக்கப்படும். பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் போன்ற பல்வேறு விடயங்கள் சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்களுக்கான திட்டங்களும் பொருளாதார அபிவிருத்தி, சமூக மற்றும் கலாசார அபிவிருத்தி திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இரண்டு தரப்பினரதும் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முக்கிய பல விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச பிளவுபடாத நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதாகவும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகவும் அதில் மாகாண சபை தேர்தல் முறை உள்ளிட்ட விடயங்கள் குறித்து அதில் ஆராய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இருவரும் தேசிய பிரச்சினைகள் குறித்த தமது கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் யோசனைகளையும் முன்வைத்துள்ளனர். எனவே தற்போது பொது மக்கள் சிந்தித்து வாக்களிப்பது குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது.
இரண்டு பிரதான வேட்பாளர்களும் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட இந்த நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும். யார் ஜனாதிபதி யாக வந்தாலும் இந்தப் பிரச்சினை விடயத்தில் அலட்சியமாக செயற்பட முடியாது. தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு பல சிறுபான்மை கட்சிகள் ஆதரவளிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெலஉறுமய உள்ளிட்ட பிரதான சிறிய கட்சிகள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குகின்றன.
அதேபோன்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியிருக்கிறது. அத்துடன் சுதந்திரக்கட்சியின் சந்திரிகா தரப்பும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முன்வந்திருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சந்திரிகா குமாரதுங்க பிரிவினரும் இவ்வாறு சஜித்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
இதேவேளை கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் பல்வேறு கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், கருணா அம்மான், பிள்ளையான் தரப்புக்கள், லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன.
இவ்வாறு பார்க்கையில், இருதரப்பினரும் பல்வேறு கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்கின்றனர். இந்தச் சூழலில் இந்த இரண்டு தரப்பிலுமே தமிழ்ப் பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் ஏனைய அடிப்படை பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படவேண்டும் என்ற விடயங்களை வலியுறுத்துபவர்கள் இருக்கின்றனர். எனவே தமிழ் தேசிய இனப்பிரச்சினையின் ஆழம், அதன் அவசியம் அந்த பிரச்சினையின் தாற்பரியம் என்பவற்றை இரண்டு பிரதான வேட்பாளர்களும் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது. தென்னிலங்கையில் வாக்குகள் கிடைக்காமல் போய்விடும் என்ற சந்தேகத்துக்குள் சிக்கி தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினையை மூடி மறைத்து விட முடியாது. இந்த மக்கள் நீண்ட காலமாக ஒரு அரசியல் தீர்வைக் கோரி வருகின்றனர். அதுவும் நியாயமான முறையில் அந்தப் பிரச்சினை தீர்த்துவைக்கப்படவேண்டும்.
அதேபோன்று யுத்தம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து இதுவரை தீர்வு கிடைக்காமல் இருக்கிறது. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத்
தீர்வுகாணப்படவில்லை. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமற்போனோர் பிரச்சினை, காணி விடுவிப்பு, வடக்கு–கிழக்கு பொருளாதார அபவிருத்தி, தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம், பொறுப்புக்கூறல், நெருக்கடி, மக்களின் வாழ்வாதார பிரச்சினை, அபிவிருத்தி விடயங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.
எனவே இந்த விடயங்கள் தொடர் பில் இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் பாரிய பொறுப்புக்கள் இருக்கிறன. மிக முக்கியமாகத் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் யாரும் பொறுப்பின்றி அல்லது அலட்சியப்போக்கில் செயற்பட முடியாது. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் செயற்பட எந்த வேட்பாளரும் முயற்சிக்கக்கூடாது. இது தொடர்பில் தெளிவான ஒரு பார்வை அவசியம்.
தற்போதைய நல்லாட்சியில் தீர்வுத்திட்டத்தையும் அடைய முடியவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் முழுமையாகத் தீர்க்கவில்லை. இந்நிலையில் மீண்டும் ஓர் ஆட்சிமலரவுள்ளது. 2020 ஆம் ஆண்டிலாவது தமிழ்ப்பேசும் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுமா? போன்ற கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் அவசியம். தற்போது மக்க ளின் கைகளிலேயே தீர்மானம் இருக்கின்றது. யார் ஜனாதிபதி என்பதனை 16 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் புதிய ஜனாதிபதிக்கு பல சவால்கள் உள்ளன.
குறிப்பாக தமிழ்ப்பேசும் மக்களின் அரசியல் தீர்வு பிரச்சினைக்கு தீரவுகாண வேண்டிய முக்கிய தேவை உள்ளது. அது இலகுவான பயணமாக அமையாது. நீண்ட கடின பாதையைக் கடந்தே அதற்கு சகலரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய தீர்வைக்காண முடியும். அதே போன்று யுத்தத்தினால் தமிழ்ப் பேசும் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை அவசியம். அவை குறித்தும் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும். எனவே புதிய ஜனாதிபதியாக வரப்போகின்றவருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் விடயத்தில் பல சவால்கள் உள்ளன என்பதே யதார்த்தம்.
ரொபட் அன்டனி - நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment