பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்தரதாஸ் - பகுதி 19


மனசாட்சி

திரையுலகில் வெற்றி பெற திறமை மட்டும் இருந்தால் போதாது. அதிர்ஷ்டமும் கைக்கொடுக்க வேண்டும். சிலர் தங்கள் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காக படம் தயாரிப்பதும் உண்டு. ஆனால் அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு திரையுலகில் தன் அதிர்ஷ்டத்தை பரீட்சித்துப் பார்த்தவர் ஒருவர் உள்ளார்.  அவர்தான் டி.ஆர்.சீனிவாசன்.

குதிரை ரேஸில் இவருக்கு ஒர் இலட்சம் ருபாய்க்கு ஜாக்பட் அடித்தது. அந்த பணத்தை வேறு எதிலும் முதலீடு செய்யாமல் படம் தயாரிக்க முதலீடு செய்தார் அவர்.  அப்படி அவர் தயாரித்தப் படம்தான் மனசாட்சி.  மாதம் தப்பினாலும் என் படம் வருவது தப்பாது என்பது போல் நடித்து வந்த ஜெய்சங்கர் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார். அவருக்கு இணை வாணிஸ்ரீ.
அண்ணன் தங்கை பாசம் தங்கைக்காக அண்ணன் செய்யும் தியாகம் என்று ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன.  ஆனால் இதில் கதாநாயகன் தங்கைக்காக கொள்ளைக் கூட்டத்தில் இணைந்து கொள்கிறான்.  கொள்ளையடித்து தங்கைக்கு சீர் செய்வதற்காக அல்ல.  ஏற்கனவே கொள்ளைக் கோஷ்டியில் மாட்டிக் கொண்டிருக்கும் தங்கையின் கணவனை அதிலிருந்து விடுவிக்க தன்னை பலியாடாக்குகிறான்.  அப்படிப்பட்பவனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.  சூழ்நிலை காரணமாக அவளை மணக்கிறான்.  அவளோ கொள்ளைக் கும்பலை விட்டு விலகி வரும் படி அவனை வற்புறுத்துகிறாள்.

இப்படிப் போகும் மனசாட்சி படத்தில் அசோகன் நாகேஷ் சுருளிராஜன் குமாரி பத்மினி ஆனந்தன் ஆகிகோரும் நடித்தனர்.  இவர்களுடன் நடிகையர் திலகம் சாவித்திரியும் சில காட்சிகளில் தோன்றி நடித்தார்.  

படத்திற்கான இசையை வேதா ஏற்றிருந்தார்.  வேதாவின் இசையில் உருவான ஏழு தினங்கள் ஒரு வாரம் என்ற பாடல் பிரபலமடைந்தது.  ஒளிப்பதிவை மேற்கொண்ட லஷ்மண் கோரேயின் கமரா பளிச்சிட்டது.

படத்தை விறுவிறுப்பாக நதர்த்த நாகேஷ் சுருளிராஜன் இருவரும் மிகவும் பயன்பட்டார்கள்.  புல காட்சிகளில் நாகேஷ் தோன்றுவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது.

பிரபல கதாசிரியர் டி.என்.பாலு டைரக்ட் செய்த இரண்டாவது படம் மனசாட்சி.  டைரக்ஷன் வசனம் இரண்டிலும் அவரின் திறமை வெளிப்பட்டது.  ரோஜாவுக்கு கூட பாதுகாப்பிற்காக முள்ளை வைத்த ஆண்டவன் பெண்களை நிராதரவாக படைத்து விட்டான்.  ஊர் போவதற்கு வழி சொன்னால் துணைக்கும் அழைக்கிறாயே போன்ற பல வசனங்கள் பாலுவின் வரிகளில் கருத்துடன் அமைந்தன.
மனசாட்சி என்ற சிறிய படத்தில் 1969ம் ஆண்டு செயற்பட்ட பாலு பிரபல டைரக்டராக பத்தாண்டுகள் கழித்து உருவானார்.  உயர்ந்தவர்கள் சட்டம் என் கையில் போன்ற படங்களை இயக்கினார்.

குதிரை ரேசில் பணத்தை அள்ளிய சீனிவாசன் திரையுலகில் ஜாக்பார்ட் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். பத்தாண்டுகள் கழித்து பிரபல தயாரிப்பாளராக ரஜனியின் தர்மயுத்தம், கமலின் மீண்டும் கோகிலா போன்ற படங்களை தயாரித்து புகழ் பெற்றார்.

இந்த மெல்பர்ன் ரேசில் ஜாக்பர்ட் அடித்த எவராவது படம் தயாரிக்க முன் வருவார்களோ என்னவோ!
















No comments: