பசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்…. நாராயண் கிருஷ்ணன்

.

கை நிறைய சம்பளம்... வெளிநாட்டு வேலை... மகிழ்ச்சியான வாழ்க்கை. மதுரையில் பிறந்து வளர்ந்து வெளிநாடு போகப் போகிறோம் என்ற எண்ணத்தில் மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்லும் போது கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது.

வயதான ஒரு மனிதன் பசியில் மனித கழிவை எடுத்து உண்பதை பார்த்த காட்சி என்னை உறைய வைத்தது.
அந்த நிமிடத்தில் உடனே நான் சென்ற வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கி அளித்தேன். சில நொடிகளில் அந்த உணவை அவர் உண்டுவிட்டு கண்ணீரின் மூலம் நன்றி தெரிவித்தார்.
எதற்காக நாம் வெளிநாடு போகப்போகிறோம்? பணம் சம்பாதித்து என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி எழவே நான் அப்பொழுது முடிவு செய்தேன். பசித்தவர்களுக்கு உணவு கொடுப்பதுதான் என் வேலை என்று என் மனதில் தோன்றியது.
இது அட்சயா டிரஸ்ட் நிறுவனர் நாராயணன் கிருஷ்ணன் என்பவரின் பேச்சு.



பசியைப் போக்கும் மகத்தான மனிதர்

பசி என்பது ஒரு பிணி. அதனால்தான் ‘கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். மனிதர்களின் பசியைப் போக்க மதுரையில் ஒரு மகத்தான மனிதர் இருக்கிறார்.
அவருக்கு அதிகம் வயதாகவில்லை. 1981ல்தான் பிறந்திருக்கிறார். 32 வயதுதான் ஆகிறது. ஒரு எதிர்பாராத தருணத்தில் அந்த அசாதாரணமான மனிதரை சந்திக்க நேர்ந்தது.



சுடச்சுட உணவளித்து, இருக்க இடமளித்து...

சொந்த பந்தங்களுக்கு ஒரு வேளை உணவு போடவே யோசிக்கும் இந்த காலத்தில் தெருவில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்து இப்போது இருக்க இடமும் அளித்திருக்கிறார்.
அவர்களின் தோற்றத்தையே மாற்றியதோடு அவர்களுக்கு சுத்தமான உடையும் அளித்திருக்கிறார். உற்றார் உறவினர் யாருமின்றி தெருவில் மரணமடைந்தவர்களின் சடலத்தை எடுத்து அவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்திருக்கிறார்.



பாரதியைப் பார்ப்பது போல...

பாரதியையும், வள்ளலாரையும் நாம் புத்தகங்களில் படித்திருக்கலாம். அன்று நேரில் பார்ப்பதைப் போல இருந்தது. இங்கு நான் ஏன் பாரதியை குறிப்பிடுகிறேன் என்றால், காசியில் ஒருநாள் பாரதி சந்தோசமாக தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தபோது சிறுவன் ஒருவன் கள் அருந்துவதை பார்க்கிறார் பாரதி. சிறிது தூரம் நடந்து வரும் போது சிறுமிக்கு மொட்டையடித்து கைம்பெண் கோலத்தை அணிவிக்கின்றனர்.



ஜாதிக்கு எதிராக கொதித்தெழுந்த பாரதி

இந்த காட்சி பாரதியை கொதித்து எழச்செய்கிறது. அந்த நிமிடத்தில் ஜாதி மீதான கோபம் ஏற்பட்டு தனது பூணுலை கழற்றி கங்கையில் போடுகிறார் பாரதி. தான் இனி மனித ஜாதி மட்டுமே என்பதை உணர்த்துகிறார்.



பூணூலை கழற்றினார்

அதேபோல் நாராயணன் கிருஷ்ணன் அவர்களுக்கும் நேர்ந்திருக்கிறது. யாருமில்லாதவர்களுக்கு ஈமக்கிரியை செய்வதனால் ஜாதி சார்ந்த கொள்ளைகளுக்கு இழுக்கு ஏற்படுவதாக அவர்களின் சமூகத்தினர் கிருஷ்ணனிடம் முறையிட்டுருக்கின்றனர். அடுத்த நிமிடமே நான் இந்த ஜாதியை சேர்ந்தவன் இல்லை. இனிமேல் மனித ஜாதியை சேர்ந்தவனாக இருந்து விட்டுப்போகிறேன் என்று கூறி தான் அணிந்திருந்த பூணுலை கழற்றி வந்தவர்களிடம் கொடுத்து விட்டிருக்கிறார்.



மதுரையில் ஏற்பட்ட திருப்பம்

2002ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகும் போது நாராயணன் கிருஷ்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பு முனை பல லட்சம் பசித்த வயிறுகளுக்கு உணவு கிடைக்கச் செய்திருக்கிறது.



10 வருடமாக உணவுதருகிறார்

கடந்த 10 ஆண்டுகளாக 49 லட்சம் உணவுகளை பசியோடு இருப்பவர்களுக்கு தன் கைகளால் சமைத்து வழங்கியிருக்கிறார். இவர் ஒரு சமையல்கலைஞர். வெளிநாட்டில் பல லட்சம் டாலர்களை சம்பாதிப்பதை துறந்துவிட்டு பசித்தவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதனாலேயே 2010ம் ஆண்டு சிஎன்என் டாப் டென் ஹீரோ விருது நாராயணன் கிருஷ்ணனை தேடி வந்திருக்கிறது.



டிரஸ்ட் மூலம் தொடரும் சேவை

தனியாக தொடங்கிய இந்த பயணம் அட்சயா ட்ரஸ்ட் என்னும் ஆலமரமாய் வளர்ந்திருக்கிறது. உதவியற்றவருக்கு உதவும் (helping the helpless) இவருடைய நிறுவனம் மதுரை டோக் நகரில் செயல்பட்டு வருகிறது.
இவரின் முயற்சியால் மதுரை சோழவந்தான் அருகே பல ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பொதுமக்களிடம் பணம் திரட்டி ‘அட்சயா ஹோம்' ஒன்றை கட்டி வருகிறார். அனைத்து வசதிகளும் கொண்ட ஆம்புலன்ஸ் வாங்கவேண்டும் என்பது இவரது லட்சியம். ஒரு நபருக்கு மூன்று வேளை உணவுக்கு ரூ.50 செலவாகிறது. 425 பேர் இவரது இல்லத்தில் தங்கி வயிறார சாப்பிட்டு வருகின்றனர்.



நீங்களும் உதவலாம்

சிலருக்கு எதிர்பாராத தருணத்தில் வாழ்க்கையே புரட்டிப்போடும் நிகழ்ச்சிகள் நிகழலாம். அதுபோலத்தான் நாராயணன் கிருஷ்ணன் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை மதுரையில் வீடற்றவர்களுக்கும், உதவியற்றவர்களுக்கும் வயிராற உணவும், உடையும், இருப்பிடமும் கிடைக்கச் செய்திருக்கிறது.
நாராயணன் கிருஷ்ணனின் உதவும் உள்ளத்திற்கு உதவி செய்ய விரும்புபவர்கள்
Akshaya's Helping in H.E.L.P Trust
ICICI Bank LTD, KOCHADAI Branch,
Madurai - 16
S.B. A/C 601 701 013 912
IFSC ICIC 0006017
MICR 625229007
டெனேசன் வழங்குபவர்களுக்கு 80(G) படி வருமான வரி விலக்கு உண்டு



பசித்தவர்களுக்கு உணவிடுவது சக்தி தருகிறது

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து பசித்தவர்களுக்கு உணவு சமைக்கும் போது எனக்கு சக்தி கிடைக்கிறது. இதை நான் உளப்பூர்வமாக சமைக்கிறேன். அவர்களுக்கு கொடுக்கும் போது அவர்களின் ஆத்மா மகிழ்ச்சியளிக்கிறது. மனிதர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என்கிறார் நாராயணன் கிருஷ்ணன்

Read more: http://www.penmai.com/forums/forwarded-messages/45101-atchaya-pathiram-%85.html#ixzz4PEUAAhsr

No comments: