இலங்கைச் செய்திகள்


இராணுவ முகாம் இருந்த இடத்தில் மனித எச்சங்கள் மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம்

நாமலுக்கெதிரான 70 மில்லியன் ரூபா மோசடி வழக்கு நிறைவடைந்தது ;  நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு

யாழில் வீடுகளை கையளித்த ஜனாதிபதி.!

கூர்ந்து அவதானியுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் த.தே.கூ. கோரிக்கை

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

படையினர் வசமுள்ள குடியிருப்புக் காணியை மீட்டுத் தருமாறு கோரி சத்தியாக்கிரகம்

 கிளிநொச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட  வர்த்தர்களுக்கு 74 மில்லியன் ரூபா நட்டஈடு  : அரசாங்கம் தீர்மானம்

 "என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர்"

 முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்கக் கூடாது  ; தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு 

ஆவா குழு உருவாக்க பின்னணியில் கோத்தபாய இருக்க வாய்ப்புள்ளது

யாழ். மாணவர்கள் மரணம் ;  5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்தித்தார் சம்பந்தன் ; விரைவில் நட்டஈடு பெற்றுத்தர நடவடிக்கைஇராணுவ முகாம் இருந்த இடத்தில் மனித எச்சங்கள் மீட்பு : மட்டக்களப்பில் சம்பவம்

31/10/2016 மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் அண்மையில் விடுவித்த காணியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தோண்டும் பணிகளின் போது   மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. 
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்றுள்ள பொலிஸார் குறித்த பகுதியை பாதுகாப்புப் பிரதேசமாக அடையாளப்படுத்தி, அங்கு எவரையும் செல்லவேண்டாம் என தடை விதித்துள்ளனர்.  
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமினால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்தே குறித்த மனித எச்சங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியில் இராணுவ முகாம் இயங்கியதால், அங்கு மேலும் பல மனித எச்சங்கள் இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 
நாமலுக்கெதிரான 70 மில்லியன் ரூபா மோசடி வழக்கு நிறைவடைந்தது ;  நீதிமன்றத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவு

31/10/2016 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 70 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான்  நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
றக்பி போட்டியொன்ருக்கு ஊக்குவிப்பு தொகையாக  70 மில்லியன் ரூபாவினை தனியார் நிறுவனத்தினூடாக செலுத்தியமை தொடர்பிலான வழக்கு விசாரணையே நிறைவடைந்துள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளர்.
இந்நிலையில் குறித்த விசாரணை அறிக்கை  அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இதன் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 30 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 

யாழில் வீடுகளை கையளித்த ஜனாதிபதி.!
01/11/2016 கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது.
 நன்றி வீரகேசரி கூர்ந்து அவதானியுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் த.தே.கூ. கோரிக்கை


01/11/2016 அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கும் எமக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவிடம் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றதா என்பதை அவதானிப்பதற்கு  தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்தும் பொறிமுறையொன்றை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 
இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தூதுக்குழுவின் தெற்காசிய நாடுகளுடனான உறவுகளுக்கான தலைவர் ஜேன் லெம்பர்ட் தலைமையில் சஜ்ஜாட் கரிம், தோமஸ் மென், உலரிக் முல்லர் ஆகியோர் தலைமையிலான குழுவினரும் எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.  
அரை மணிநேரத்திற்கும் அதிகமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துவெளியிடுகையில்,
இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை நாம் அவர்களிடத்தில் வலியுறுத்தினோம். 
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கச்செயற்பாடுகள், புதிய அரசியலமைப்புத் திருத்தம் எனப் பல்வேறு வாக்குறுதிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய  வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை சர்வதேச சமூகம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். 
இலங்கை புதிய திசையொன்றை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துள்ளது என்பதை ஏற்கின்றோம். எனினும், இது எந்தளவு தூரம் சரியாக செல்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து மாற்றங்களைச் செய்ய வேண்டும்.    நன்றி வீரகேசரி 
பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

02/11/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் உட்பட 4 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று இவர்களை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.    நன்றி வீரகேசரி 


படையினர் வசமுள்ள குடியிருப்புக் காணியை மீட்டுத் தருமாறு கோரி சத்தியாக்கிரகம்


02/11/2016 மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு - மட்டக்களப்பு, திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி காணியை இழந்த 16 முஸ்லிம் குடும்பங்கள் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
1990 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் நாவலடிப் பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து தற்போது நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக வசித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
எனினும், தற்போதைய சுமுக சூழ்நிலையில் தமது பழைய குடியிருப்பு இடங்களை படையினரிடமிருந்து மீட்டு தம்மிடம் கையளிக்குமாறு கோரியே தாம் இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது வீடுகள், கடைகள் உள்ளடங்கலாக அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே அந்தப் பகுதியில் இராணுவ முகாமை அமைத்துக் கொண்டதாக படை முகாமுக்கு முன்னால் கூடாரமிட்டு சத்தியாக்கிரகம் நடத்தும் காணி மற்றும் வீடுகளை இழந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.    நன்றி வீரகேசரி 

கிளிநொச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட  வர்த்தர்களுக்கு 74 மில்லியன் ரூபா நட்டஈடு  : அரசாங்கம் தீர்மானம்

02/11/2016 கிளிநொச்சியில் அண்மையில் தீ விபத்தினால்  122 வர்த்தக நிலையங்கள் அழிவடைந்தமையை  ஈடுசெய்யும் நோக்கில்   150 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தை தொகுதியை அங்கு   நிர்மாணிப்பதற்கும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குவதற்கும்  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தவகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே   ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்:- 
கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 122 வர்த்தக நிலையங்கள் அழிவடைந்தன.  இது தொடர்பாக மதிப்பீடு செய்வதற்கு  குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்  பாதிக்கப்பட்ட 122 வர்த்தக  நிலையங்களுக்கு  பதிலாக  நவீன வசதிகளை கொண்ட நவீன சந்தைத் தொகுதியொன்றை  150 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் பாதிக்கப்பட்ட 122 வர்த்தகர்களுக்கும்  74 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கவும்   தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் 97 மில்லியன் ரூபா செலவில்  நவீன வசதிகளுடன் கூடிய  தீ அணைக்கும் பிரிவொன்றை  கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்றம், மற்றும்  இந்து சமய விவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து  கொண்டுவந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு  அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  நன்றி வீரகேசரி 

 "என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர்"

03/11/2016 என் தந்தையை இந்திய இராணுவத்தினர் இந்தக் காணியில் வைத்தே அடித்துக் கொன்றனர் என மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு நாவலடிச் சந்தியில் தமது வீடு, காணி என்பனவற்றை இழந்துள்ள காசிம்பாவா பர்ஸானா தெரிவித்தார்.
அந்தத் துயரம் மறைவதற்குள் இப்பொழுது இலங்கை இராணுவத்தினர் எமது இடத்தைக் கைப்பற்றி எம்மை அகதிகளாக்கியுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொழும்பு, மட்டக்களப்பு. திருகோணமலைச் சந்தி நாவலடியில் படையினர் நிலைகொண்டுள்ள தமது குடியிருப்புக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி அப்பகுதி காணியை இழந்த 16 முஸ்லிம் குடும்பங்களில் இந்த இளம் பெண்ணும் ஒருவர்.
இக்குடும்பங்கள் நேற்று நாவலடி படை முகாமுக்கு முன்னால் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஓரமாக கூடாரமிட்டு சத்தியாக்கிரகம் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பர்ஸானா தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனது பெற்றோரும் நானும் இப்பொழுது படையினர் ஆக்கிரமித்துள்ள காணிக்குள்தான் வாழ்ந்து வந்தோம். நான் பிறந்து வளர்ந்ததே இந்தக் காணியில்தான். நான் சிறுவயதாக இருக்கும்போது இங்கு யுத்தத்தில் ஈடுபட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் எனது தந்தையை அடித்தே கொன்றுவிட்டார்கள்.  அந்தத் துயரத்திலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை. அவ்வாறிருக்கும்போது இலங்கைப் படையினர் இந்த இடத்தில் வந்து இங்கு குடியிருந்தவர்களையெல்லாம் துரத்தியடித்து விட்டு இப்பொழுது முகாமிட்டுள்ளார்கள்.
இப்பொழுது எனது தாயும் மரணித்து விட்ட நிலையில் நான் அநாதரவாக வீடுமின்றி காணியுமின்றி இருப்பிடமில்லாது அகதியாக வாழ்ந்து வருகின்றேன். எமது துயரத்தை எங்கு போய் எடுத்துச் சொன்னாலும் அதனை அக்கறையோடு யாரும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனது பெற்றோர் யுத்தத்தில் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகிய நிலையிலேயே எங்களைப் பராமரித்தார்கள். நாங்கள் வாழ்ந்த இடம் எப்படியாயினும் எங்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.” என்றார்.
இங்கிருந்து 1990 ஆம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக விரட்டியடிக்கப்பட்ட மக்கள் தாங்கள் '1968ஆம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். அவர்கள் அங்கு வாழ்ந்தமைக்கான அனைத்து ஆவணங்களையும் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.     நன்றி வீரகேசரி 


 முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்கக் கூடாது  ; தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு 

03/11/2016 ஜி. எஸ்.பி வரிசலுகையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு முஸ்லிம்களின் இறைமையை அரசாங்கம் கேள்விக்குறியாக்க கூடாது என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா தவ் ஹீத் ஜமா அத் அமைப்பு, 
 முஸ்லிம்  தனியார் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள  நேரிடும் எனவும்  எச்சரித்துள்ளனர் .
இதனடிப்படையில் முஸ்லிம்களுக்கு  தனியார்  சட்டத்தை  நிறைவேற்றுகின்ற  உரிமை நல்லட்சிக்கோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துக்கோ  இல்லை எனக் கூறி இன்று கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் பாரிய கண்டன ஆர்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுமார்  600 கும் மேற்பட்டவர்கள் கலந்துக்  கொண்டிருந்ததோடு  தமது உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டு கை குழந்தைகளை வைத்துக் கொண்டும் முஸ்லிம் பெண்களும் கலந்துக் கொண்டிருந்தனர் .
சுமார்  மூன்று  மணித்தியாலங்கள் வரை நீடித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் முஸ்லிம் தனியார் சட்டத்தை உடனடியாக நீக்கு , வெள்ளையனை திருப்பதிபடுத்த நாட்டின் அடிப்படை சட்டங்களை மாற்றலாமா ? , மனித உரிமை எனும் போர்வையில் முஸ்லிம் மக்களின் சட்டத்தில் மூக்கை  நுழைப்பதற்கு இடமளியோம் , இந்த  கபட தனத்துக்கு  எதிராக அரசாங்கத்தை வன்மையைக் கண்டிக்கின்றோம் , ஹரிமா  சட்டம் இஸ்லாத்தின் உரிமை இதில் கை வைப்பது மத சுதந்திரத்தை  சீரழிப்பதற்கு சமன் போன்ற எதிர்ர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன .
மேலும் முஸ்லிம்களின் போராட்டத்துக்கு நீதி கொடு அரசே , ஒற்றுமை குலைக்கும் ஒப்பந்தம் வேண்டாம், எமக்கு ஒரு போதும் ஜி. எஸ் ,பி வேண்டாம் , ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமைக்காய்  சிறுபான்மை மக்களின்  உரிமைகளை பறிப்பது சரியா , இலங்கையின் இறைமையை பாதிக்கும் வெள்ளையனுக்கு கூதா தூக்கும் வெளியுறவு கொள்கை வேண்டாம் சலுகைக்காக முதுகில் குத்தும் நன்றி மறந்த நல்லாட்சியே போன்ற கோசங்களும் வன்மையான முறையில் குறித்த  ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நன்றி வீரகேசரி ஆவா குழு உருவாக்க பின்னணியில் கோத்தபாய இருக்க வாய்ப்புள்ளது

"ஆவா" குழுவை கோத்தாபாய உருவாக்கினார்  என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார் அந்த தகவல் உறுதியானது அல்ல இருப்பினும் அந்த விடயம் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.
வடக்கில் சூடு பிடிக்கு விவகாரங்களை சாதமாக பயன்படுத்திக் கொள்பவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டால் குறித்த விடயத்தின் பின்னணியில் உள்ளவர் யாரென தெரியவரும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார்
ஜாதிக ஹெல உறுமையவின் தலைமை அலுவலகத்தில்  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஆவா" குழுவை கோத்தாபாய உருவாக்கினார்  என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். ஆனால் எமக்கு இதுவரையில் அது தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் உள்ளன. 
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தனது உரையில் 250 முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய உதவியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். 
அதனால் அவ்வாறன விடயங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆவா குழு இவ்வாறான பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்க முடியும் அதன் உண்மை தன்மைகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அதேநேரம் வடக்கில் சில விவகாரங்கள் சூடு பிடிக்கின்ற போது அது தொடர்பில் பெரிதாக அளட்டிக்கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் பயனெடுப்பவர்கள் எங்கு உள்ளனர் என்பது தொடர்பில் சிந்தித்து பார்த்தால் இந்த விடயங்களில் இருக்கின்ற உள்ளார்ந்த தொடர்புகளை புரிந்துகொள்ள முடியும் என்றார்.    நன்றி வீரகேசரி 
யாழ். மாணவர்கள் மரணம் ;  5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

04/11/2016 யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்தது.
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில்  கடந்த 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை : அம்மனின் நகைகள் திருட்டு

05/11/2016 கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு உடைக்கப்பட்டு  நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேலுள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து திருடியிருக்கலாம் என சந்தேகிப்படுகிறது.
இச்சம்பவத்தின் போது 5 பவுண்  தங்க நகைகளான இரண்டு அம்மனின் தாலி, ஒரு சங்கிலி, ஒரு கண்மடல் போன்றன திருடப்பட்டுள்ளதோடு ஆலயத்தின் மூல விக்கிரகத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த  ஜம்பொன் இயந்திர தகடும் திருடா்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
மேலும் உண்டியலும் உடைக்கப்பட்டு சுமாா் 10 ஆயிரம் வரை பணம் கொள்ளையிடப்பட்டிருக்கலாம் எனவும் ஆலய நிா்வாகம் சந்தேகிக்கிறது.
இது தொடா்பில் கிளிநொச்சி பொலிஸாா் சம்பவ இடதிற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
நன்றி வீரகேசரி 

யாழில் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை சந்தித்தார் சம்பந்தன் ; விரைவில் நட்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை

06/11/2016 யாழ்ப்பாணத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த மாணவனான சுலக்ஷனின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரை சந்தித்த போது எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜாவை தொடர்புக்கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணை ஒருபக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, குடும்பத்தாருக்கான நட்டஈட்டினை ஜனாதிபதியிடம் தொடர்புக்கொண்டு விரைவில் பெற்றுத்தருவதாக இதன் போது எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர்களின் குடும்பத்தைச் சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சம்பந்தனுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி 

No comments: