உஷா ஜவாகரின் நூல் வெளியீட்டு விழா.- by மேளின் ஜேசுரட்னம்

.

கடந்த சனிக்கிழமை, ஐப்பசி மாதம் 29ந் திகதி மாலை, உஷா ஜவாகர் எழுதிய மூன்று புத்தகங்களின் வெளியீடு, மிகச் சிறப்பாக ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ளுமாறு, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வானொலியில், உஷா எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று நானும் அங்கு சென்றிருந்தேன். இளஞ்சிறுமி ஒருவர் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியானது முறையே  தமிழ் மொழி வாழ்த்து, ஹோம்புஷ் தமிழ் பாடசாலைக் கீதம், அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடன் ஆரம்பமாகியது. அதைத் தொடர்ந்து ஒரு சிறுவனும், சிறுமியும் இனிய தமிழ்  என்ற தலைப்பில் ஒரு சிற்றுரையை அழகாக வழங்கினர். பின் புத்தக வெளியீடு,       திரு. திருநந்தகுமார் தலைமையில் ஆரம்பமாகியது. அவர் உஷாவுக்குள் இருக்கும் பலதரப்பட்ட திறமைகளையும், ஆளுமையையும் புகழ்ந்து பேசினார். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ,ஒரு கடற்கன்னியின் சாகசக் கதை , அதிசய உயிரினங்களைப் பற்றிய அரிய செய்திகளும் கதைகளும் என்ற மூன்று புத்தகங்களை திரு. செ. பாஸ்கரனும்,    திரு. ம. விஜயரட்ணமும், ஹோம்புஷ் பாடசாலையைச் சேர்ந்த மூன்று இளம் மாணவிகளும் அறிமுகம் செய்து வைத்தனர். மலேசியாவைச் சேர்ந்த மாணவி உட்பட, இந்த மூன்று இளம் சிறுமிகள் வழங்கிய ஆய்வுரைகள் எல்லோரினதும் பாராட்டைப் பெற்றன.  பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த திரு ஈழலிங்கத்திடம்  சிவபூமி நிதியத்திகாக உஷா அன்பளிப்பை வழங்கினார் .இங்கு  உரையாற்றிய திரு ஈழலிங்கம் அவர்கள்  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர்கள் பலர் புத்தகங்களை வெளியிட்டிருப்பது பெருமைக்குரியது எனக் குறிப்பிட்டார்.  திரு. வசந்தராஜா அவர்களும், கல்வியின் நோக்கம் , என்ற கருத்துப்பட ஒரு சிறப்புரையை ஆற்றியிருந்தார்.


        இவற்றைத் தொடர்ந்து பார்வையாளர்களை மகிழ்விக்க சில கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. சிட்னி ,இளைய நிலா, குழுவினர் வழங்கிய, நல்லதொரு குடும்பம்| என்ற நகைச்சுவை நாடகமும்,      திரு. பவன் சிவகரனின் மிருதங்க இசையோடு இணைந்த, ஆசிரியை வரலஷ்சுமி ஸ்ரீதரனின் மாணவிகளின் வீணா கானமும், திவ்யா விக்னேஸ்வரனின் புல்லாங்குழல் இசையும், திருமதி. றதி கேதீஸ்வரனின் மாணவர்களின் வாய்ப்பாட்டும் இந்நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின என்றால் மிகையாகாது. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்ற திரைப்படப்பாடல், தோல்வி மேல் தோல்வி கண்டு மனச் சோர்வடைந்த பலரது வாழ்வுக்கு புத்துயிர் கொடுத்த பாடல் என இந்நூல்களை அறிமுகம் செய்த திரு. ம. விஜயரட்ணம் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அதே போல்தான் உஷாவின் இந்த சிறுகதைப் புத்தகமும், நிச்சயம் எமக்கு புத்துணர்ச்சியைத் தரும் என நம்புகிறேன். நல்லதொரு இனிய மாலைப் பொழுதில்  இளைய தலைமுறையினரின் தமிழ்ப்பற்றைக் கண்டு களித்த மனநிறைவோடு இல்லம் திரும்பினேன்.
No comments: