அம்மாவின் வயர் கூடை!

.


அம்மாவை நினைக்கும்போதெல்லாம் அம்மாவின் பிம்பம் என்பது கையில் வயர் கூடையுடன்தான் தோன்றுகிறது. முன்பெல்லாம் வீடுகளில் வயர் கூடைகள்தான் பெருமளவில் புழக்கத்தில் இருந்தன.
பல வண்ணங்களில் கிடைக்கும் நைலான் வயர்கள் அழகியல் உணர்வோடு கூடைகளாகவும் சின்னஞ்சிறு பொம்மைகளாகவும் மணிபர்ஸ்களாகவும் அக்காலப் பெண்களின் கைகளில் உருப்பெற்றன. குனிந்த தலை நிமிராமல் வயர் கூடை பின்னும் பெண்களை வீடுகள்தோறும் பார்க்கலாம். இந்தக் கைவினை விலங்கு அவர்களுக்கு எப்போது புகட்டப்பட்டது என்பதற்கு எவ்விதக் குறிப்புகளும் இல்லை. அந்தக் காலத்தில் பெண் பார்க்கும் வைபவங்களில் பெண் என்ன படித்திருக்கிறார் என்று சொல்வதைவிடவும் வயர் கூடை பின்னுவதில் கெட்டிக்காரி என்று சொல்வது உண்டு. கேட்கிறவர்களும் இந்தப் பதிலில் திருப்தி அடைந்தார்கள்.
ஒல்லியான பெண்களுக்கும் வயர் கூடை பின்னுவதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும். திருமணமாகாத பெண்கள் தங்கள் வாழ்க்கையை அவர்கள் பின்னிய வயர் கூடைகளால் நிரப்பினார்கள். முதிர் கன்னிகளின் விரல்களில் வயர் கூடைகளாக வெளிப்பட்டவை விரக்தியின் வண்ணங்கள்.



அம்மாவின் வயர் கூடை கவலைகளால் நிரம்பி வழிந்தது, குழந்தைகளின் நோக்காடு. அப்பாவின் கோபம், தீராத வயிற்று வலி மாத்திரைகள் ஆகியவற்றைப் போட்டு வைக்க வயர் கூடை உதவியது. அம்மா கோயிலுக்குச் செல்லும்போதெல்லாம் வயர்கூடை வேண்டுதல்களால் நிரப்பப்பட்டது. திரும்பும்போது கடவுள் தந்த வரங்கள் அதில் இருப்பதான பாவனையுடன் அதிலிருந்து விபூதியும் குங்குமமும் எடுத்துப் பூசிவிடுவார்.
வயர் கூடைகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒவ்வொரு பின்னல்வகைக்கும் ஏற்ற ரசனையான பெயர்கள். பலாமுள்ளு. சிவன் கண், அருநெல்லிக்காய், பிஸ்கட்கூடை என்ற பெயர்களுடன் அவை வலம் வந்தன. மேலும், தீபாவளி காலத்தில் பட்சணக் கூடையாகி எதிர்வீடு, பக்கத்துவீடு என்று பாய்ந்து மீளும்.
80 வயதிலும் வயர்கூடை பின்னும் சீர்காழி நீலாம்பாள் சொன்னார்: வயர் கூடையில் விழுகிற முடிச்சுகள் எந்த வேளையில் விழுகின்றனவோ அந்த வேளையின் நன்மை; அந்த முடிச்சில் விழுந்துவிடும். குறிப்பிட்ட அந்த வயர் கூடை யார் கையில் கிடைக்கிறதோ அவர்கள் அதை எங்கு எடுத்துப்போனாலும் காரியங்கள் சுபமாக முடியும்.
பெரும்பாலும் ஆண்களுக்கு வயர் கூடைகளைப் பிடிப்பதில்லை. பெண்களின் ஆற்றாமையைச் சுட்டிக்காட்டி, அவை ஆண்களை இடித்துரைத்தனவோ என்னவோ? இப்போதெல்லாம் வீடுகளில் வயர் கூடைகள் ஏறத்தாழ மறைந்துவிட்டன. ஆனாலும், நெகிழிப்பைகள் ஒவ்வொரு நாளும் வீடுகளிலும் வீதிகளிலும் சேருவது குறித்து அவர்களிடம் எவ்வித வருத்தமும் இல்லை. பயன்படுத்திய பிறகு அவற்றை எளிதாக எறிந்துவிட முடிகிறது. வயர் கூடை விஷயத்தில் இது சாத்தியமில்லை. ஒரு வயர் கூடையை அவ்வளவு எளிதாக நீங்கள் எறிந்துவிட முடியாது.
எங்கள் வீட்டில் ஒரு வயர் கூடை மிஞ்சியிருக்கிறது. அழுக்குப் படிந்து, வண்ணம் மங்கி, பிசிறுகளுடன் ஒரு மூலையில் கிடக்கிறது. ‘அதைத் தூக்கிப் போடுவதற்கென்ன?’ என்று என் மனைவி அடிக்கடி கேட்கிறார்.
என்னால் முடியாது. நான் மாட்டேன். அது அம்மாவின் வயர் கூடை!
- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

nantri:http://tamil.thehindu.com/

No comments: