நானும் கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம்: கெளதமி அறிவிப்பு.

நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று தன்னுடைய அதிகாப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி குறிப்பிட்டு இருக்கிறார்.
கமல்ஹாசனும், கெளதமியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். 'தசாவதாரம்', 'தூங்காவனம்' உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கெளதமி.
கமல்ஹாசன் - கெளதமி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனை கெளதமி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து தனது அதிகாரப்பூர்வ வலைப்பூ பக்கத்தில் கெளதமி கூறியிருப்பது:
"நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கிற்று. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்.இத்தருணத்தில் நான் யார் மீதும் பழி சொல்ல விரும்பவில்லை. அதேவேளையில் எவ்வித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. என் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மாற்றம் இன்றியமையாது என்பதே அது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவையே. அப்படி நிகழும் மாற்றங்கள் அனைத்துமே நாம் எதிர்பார்த்ததாக, நாம் முன்னரே முடிவு செய்து வைத்ததாக இருப்பது அவசியமில்லை. நான் தற்போது எடுத்துள்ள முடிவு ஒரு பெண் தனது வாழ்நாளில் எடுக்கக்கூடிய மிகக் கடினமான முடிவு. ஆனால், மிக அவசியமான முடிவு. ஏனெனில், முதலில் நான் ஒரு தாய். எனது குழந்தைக்கு பொறுப்பானவளாக நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. என் குழந்தைக்கு நான் சிறந்த தாயாக இருக்க விரும்புகிறேன். அவ்வாறாக என் குழந்தைக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருக்க வேண்டுமானால் எனக்குள் அமைதி நிலவ வேண்டும். அந்த அமைதியை பெறுவதற்காகவே இந்த முடிவு.
திரைத் துறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்தே கமல்ஹாசனின் மிகப்பெரிய விசிறி நான். இப்போதும்கூட அவருடைய சாதனைகள், அவருடைய திறமைகளைக் கண்டு மகிழ்ச்கிறேன். அவர் சவால்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவருக்கு துணையாக இருந்திருக்கிறேன். அவருடன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய நாட்களில் நிறைய தொழில்முறை நுணுக்கங்களைக் கற்று கொண்டிருக்கிறேன். அவருடைய படங்களில் அவரது கனவுகளுக்கு நியாயம் செய்திருக்கிறேன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் நாட்களிலும் அவருடைய ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு அவரது படைப்புகள் இருக்கும். நானும் அவற்றை பாராட்டுவேன்.
இந்த வேளையில் என்னுடைய அதி முக்கிய முடிவை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான காரணமும் இருக்கிறது. என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ரசிகர்களாகிய உங்களுக்கு மத்தியிலேயே நான் கவுரவமாக கடத்தியிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அளித்த அன்பும், ஆதரவும் அளப்பரியது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பும், ஆதரவுமே என் வாழ்நாளின் கடினமான தருணங்களில் எனக்கு பெருந்துணையாக நின்றிருக்கின்றன”.
இவ்வாறு அதில் கவுதமி பதிவிட்டுள்ளார்.
முதலில் நாட்டியக் கலைஞர் வாணி கணபதியை கமல்ஹாசன் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, விவாகரத்து பெற்று, சரிகாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் என 2 மகள்கள் உள்ள னர். கமல் சரிகா இருவரும் 2002-ல் விவாக ரத்துக்கு விண்ணப்பித்து, 2004-ல் அதிகாரப் பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
இதற்கிடையில், 1992-ல் வெளிவந்த ‘தேவர் மகன்’ படத்தின்போதே கமல் - கவுதமி இடையே நெருங்கிய நட்பு இருந்தது. 1998-ல் சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்ட கவுதமிக்கு சுப்புலெட்சுமி என்ற மகள் உண்டு. திருமணமான ஒரே ஆண்டில் கவுதமி விவாகரத்து பெற்றார்.
2003-ம் ஆண்டில் இருந்தே கவுதமியுடன் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார் கமல். அவர்களது 13 ஆண்டுகால நட்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.
உடனிருந்து கவனித்துக்கொண்டார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கமலுக்கு காலில் அடிபட்டு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது, உடனிருந்து கவனித்துக்கொண்டவர் கவுதமி. உடல்நலம் தேறிய நிலையில், ட்விட்டரில் இதை நன்றியுடன் நினைவு கூர்ந்த கமல், ‘‘கவுதமி, சந்திரா அண்ணா! உங்களுக்கு ஒத்தாசையாக இல்லாமல் உபத்திரவமாக இருக்கிறேன். விரைவில் அதை ஈடுகட்டுவேன்’’ என்று கூறியிருந்தார்.
மோடியுடன் சந்திப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நம்பிக்கை அளிக்கவும், அவர் களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நோக்கிலும் ‘லைஃப் அகைன்’ என்ற தொண்டு நிறுவனத்தை கவுதமி சில மாதங் களுக்கு முன்பு தொடங்கினார். அவரும்கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.
சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை டெல்லியில் அவரது இல்லத்தில் கவுதமி சந்தித்தார். தனது லைஃப் அகைன் தொண்டு நிறுவனப் பணிகள், 2017 சர்வதேச யோகா தினத்துக்கான பணிகள், புற்றுநோயாளிகளுக்கான சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து தான் கூறிய கருத்துகளை பிரதமர் கனிவுடன் கேட்டதாக கவுதமி தெரிவித்திருந்தார்.
ட்விட்டரில் கவுதமிக்கு ஆறுதல்
கமலைப் பிரியும் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் கவுதமி வெளி யிட்டதும், பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
‘13 ஆண்டுகால நட்பு, உறவைப் பிரிவ தாக கூறுகிறீர்கள். அதை ஆதரிக்கும் மனப் பக்குவம் எனக்கு சத்தியமாக இல்லை’, ‘இத்தனை ஆண்டுகாலமாக கமல்ஹாச னுக்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றி! பிரிந்தாலும், வருங்காலத்தில் இருவரும் நட்பாக தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்’ என பலரும் வருத்தத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

nantri: http://tamil.thehindu.com/

No comments: