பெட்டிக்கமெரா + குட்டிப்பையன் = ஒரு படம் - - பா. ரத்நஸபாபதி அய்யர்


 .


எங்களின்  வீட்டில்  ஒரு  பெட்டிக் கமெரா (AGFA BOX CAMERA).  வீட்டு  அலுமாரியின்  மூன்றாம்   தட்டில்  எப்பொழுதும்  பாதுகாப்பாக இருக்கும். இந்த கமெரா எப்படி எங்கள் வீட்டுக்கு வந்தது என்று என்னால் சொல்ல  இயலாது. அப்பா  தனது  இளமைக்காலத்தில் வாங்கியதா,  அல்லது பெரிய அண்ணர் வாங்கியதா என்று கூடத் தெரியாது.

ஒரு  தீபாவளித் திருநாள் வந்தது. அந்தத் திருநாளில் பெரிய அண்ணர் அந்தக் காமெராவுக்கு பிலிம் ரோல்  ஓன்று வாங்கிப் போட்டார். அந்த கமெரா எட்டுப் படங்கள் எடுக்கும்.

எங்களை எல்லாம் தீபாவளிக்கு வாங்கிய புதுச்சட்டைகளை அணிந்துகொண்டு வரச்செய்து,  வெய்யிலில்  நிறுத்தி வைத்து படம் எடுத்தார். எங்களை என்று சொல்லும் போது நான், எனக்கு  இரண்டு   அண்ணன்மார் ,    அக்காமார் மூன்றுபேர், அம்மா, அப்பா எல்லாமாக எட்டுப்பேர் இருந்தோம்.

அம்மாவையும் அப்பாவையும் இரண்டு கதிரையில் இருக்க வைத்து எங்கள் எல்லாரையும் நிக்க வைத்து படம் எடுத்தார். சில படங்களை சின்ன அண்ணாவைக் கொண்டும் எடுக்கச்செய்தார்.


"இஞ்ச எங்கட லெட்சுமியோட என்னை வைத்து ஒரு படம்  எடுங்கோவன்,  ஏன்... எல்லாரும் சேர்ந்தே  லெட்சுமியோட  படம்  எடுக்கலாம் "
         என்று அம்மா சொன்னா.

நான் லெட்சுமியைப்  பார்க்கிறேன். புல்லைத்திண்டபடி  தலையாட்டிக்கொண்டு கொட்டிலில்  நின்றது. நாங்கள் வளர்த்த பசுவின் பெயர்தான் லெட்சுமி.  இந்த  லெட்சுமி நல்ல வடிவானது. வெள்ளை  நிறம், சிவந்த மூக்கு, நீண்ட கொம்பு கொஞ்சம்  பழுப்பேறிய  நிறம். அதுதான் வடக்கன் மாடு.   இந்திய இனம், குறிப்பாக சொன்னால் திருவண்ணாமலை இனம்  இது. இதில ஆண் மாடுகளை வண்டில்  மாடுகளாக உபயோகிப்பார்கள்.

அம்மாவை வைத்து லெட்சுமியுடன் படமெடுத்தபின், நாங்கள் எல்லோரும் லெட்சுமியுடன் இருந்து படமெடுத்தால் நல்லது என்று ஓர் எண்ணம் எல்லோருக்கும் வந்தது.  எனக்கு கொஞ்சம் பயமும் வந்தது  லெட்சுமியின்ற கொம்பைப்  பார்த்து. ஆனால் எல்லோரும்  படத்துக்கு  நின்றால் யார் படமெடுப்பது? அப்படி  எண்ணிக்கொண்டு நிக்கும்போது, தீபாவளிக்கு கைவிசேசம் வாங்க அரிசிக்கடை கந்தசாமி அண்ணை அப்பாவை காண வந்தார். அவர் வந்தது  நல்லதாக போய்விட்டது.

நடுவில் லெட்சுமி, இருபக்கமும் அப்பாவும் அம்மாவும், நாங்கள் அப்பா பக்கம். அம்மாவின் பக்கமாக அக்காமார். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிற்க வைத்தோம்.

கந்தசாமி, " தனக்கு படம் எடுக்கத்  தெரியாது " என்று சொன்னார். பெரிய அண்ணர் கந்தசாமிக்கு படம் எடுக்கும்  விதம்  சொல்லிக்கொடுத்தார்.  ஒரு முக்காலி (ஸ்டூல்) கொண்டுவந்து  வைக்கப்பட்டது. அதன் மேல் கமெராவும்  வைக்கப்பட்டது.  எல்லோரும் நிக்கும் போது  கமெராவை சரியாக "செட்" பண்ணி கந்தசாமிக்கு  இந்த  பட்டினை மெதுவாக அமத்தி (அழுத்தி) விடும்படி  சொல்லி  கொடுத்தார். அத்துடன் அண்ணர்  ஓடிவந்து  எங்களுடன் நின்று கொண்டார். சொல்லிக் கொடுத்தபடி கந்தசாமி  பட்டினை அமுத்தியோ இல்லை அழுத்தியோ "க்ளிக்" என்ற சத்தம் வரப் பண்ணிவிட்டார்.  படம் எடுத்து முடிந்து விட்டது. கந்தசாமியும்  கைவிசேசம்  வாங்கிக்கொண்டு போய்விட்டார்.  ஏற்கனவே எட்டுப் படங்கள் எடுத்த படியால்  பிலிமும்  முடிந்து விட்டது. லெட்சுமியும் தலையை ஆட்டியபடி "அம்மா" என்று  கத்தியது.

இனி, பக்கத்தில்  மெயின் வீதியில் இருக்கும் குகன் ஸ்டுடியோவில்  கொண்டுபோய்க்  கொடுத்து கழுவி படம் "பிரிண்ட்" அடித்து  எடுக்க  வேண்டும்.

இரண்டு  மூன்று நாட்களில் படங்களை குகன் ஸ்டுடியோவில்  இருந்து எடுத்துக் கொண்டுவந்த அண்ணர் எங்களுக்கு    காட்டினார். எல்லாப்      படங்களும்  நல்ல வடிவாக  இருந்தன. பழையபடி காமெராவும் அலுமாரியில் மூன்றாம் தட்டுக்கு குடியேறிவிட்டது.

இப்படியாக  நல்லநாள், பெரியநாள், கோவில் திருவிழா நாட்களில்தான் காமெராவுக்கு வேலை. மற்ற நாட்களில்  அதுபாட்டுக்கு  அலுமாரியில் தூங்கிக்கொண்டு  இருக்கும்.  சிலவேளை அண்ணருக்கு தெரிந்தவர்கள் இரவல் வாங்கிக்கொண்டு போவார்கள்.

எனக்கும் இந்த கமெராவில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையும், எண்ணமும்  நாளுக்குநாள் கருக்கொள்ளத் தொடங்கியது.  ஆனால்,  எனக்கு  இந்த மாதிரி ஆட்கள்  ஒருவரை  ஒருவர்  படமெடுத்துக் கொண்டு  இருப்பது  பிடிக்கவில்லை. இயற்கைக் காட்சிகளை படம் புடிக்க வேண்டும் என்றுதான் விரும்பினேன்.

அலுமாரியில் இருந்த பெட்டிக் கமெராவை எடுத்துக்கொண்டு மெயின் வீதியில் இருந்த குகன் ஸ்டுடியோவுக்குச்  சென்றேன். அங்கு இருந்தவரிடம்
"இந்தக் காமெராவுக்கு பிலிம் போட எவ்வளவு காசு வேணும்" என்று விசாரித்தேன். அங்கு இருந்த பெரியவர் கமெராவை வாங்கிப்பார்த்தார். அப்படியும் இப்படியும் திருப்பித்திருப்பி பார்த்தார்.
"தம்பி இது நல்ல கமெரா. அக்பா பொக்ஸ் என்று சொல்லுவார்கள். இதுக்கு 120 ஆம் நம்பர் பிலிம் ரோல் தான் போடவேண்டும். எட்டு படங்கள்தான் இது எடுக்கும்" என்றார் அந்த பெரியவர்.
"இதுக்கு பிலிம் போட எவ்வளவு காசு வேணும்" என்று நான் கேட்டேன்.
"பிலிம் போட இரண்டு ரூபாய் ஐம்பது சதம், கொடாக் பிலிம் போடலாம்" என்றார்.
"இப்ப காசு இல்லை. சும்மா கேட்டுக்கொண்டு போகத்தான் வந்தனான். நாளைக்கோ இல்லை நாளையண்டைக்கோ வந்து பிலிம் வாங்குவேன்" என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் பழையபடி கமெராவை அலுமாரியில் வைத்துவிட்டு, அம்மாவிடம் பிலிம் ரோல் போட  இரண்டு ரூபாய் ஐம்பது சதம் கேட்டேன்.
"இப்ப காசு ஒண்டும் கையில இல்லை. சந்தையில காய்கறி வியாபாரம் செய்யும் நல்லம்மாவுக்கு முருங்கைக்காய்  வித்துப்போட்டு அதில இருந்து இரண்டு ரூபாய்  ஐம்பது சதம் உனக்கு தாறன்" என்று அம்மா சொன்னா. எனக்குத்  திருப்தி. நாளைக்கு பிலிம் வாங்கலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

அடுத்தநாள் நல்லம்மா வந்து வீட்டில் நின்ற முருங்கை மரங்களில் காய்களைப் பறித்துவிட்டு அதற்குரிய பணத்தை அம்மாவிடம் கொடுத்து விட்டு முருங்கைக்காய் கட்டை தூக்கிக்கொண்டு சென்றாள்.

முருங்கைக்காய் விற்ற காசிலிருந்து இரண்டு ரூபாய்  ஐம்பது சதத்தை எனக்கு அம்மா தந்தா. காசு தரும் போது,
"தம்பி, பெரிய அண்ணாவையும் கூட்டிக்கொண்டு போய் பிலிமை வாங்கு. அவனுக்கு கமெராவை பற்றி கொஞ்சம்  தெரியும்" என்று  அம்மா கூறினா.
காமெராவையும்  எடுத்துக்கொண்டு, அண்ணாவுடன்  குகன் ஸ்டுடியோவுக்கு போனன். அங்கே ஸ்டுடியோ முதலாளி,  தினகரன் பேப்பரை பார்த்துக்கொண்டு  இருந்தார். எங்களைக் கண்டதும் பேப்பரை மடித்து வைத்துவிட்டு எங்களைப்பார்த்து
"என்ன தம்பியவை, சொன்னபடி பிலிம் வாங்க வந்திட்டியள் போல" என்று கூறினார். "ஓம் ஐயா" என்றபடி  காமெராவைக் கொடுத்து பிலிம் போட்டுத் தரும்படி கேட்டுக்கொண்டோம்.

அவர் கமெராவை பின்பக்கத்தால் திறந்து, அதனுள் பிலிம் ரோல் கட்டையை வைத்து, முறுக்கி, முன்னிருந்த ஒரு உருளைக்கட்டையில் மாட்டி  இறுக்கிவிட்டு,  கமெராவை மூடினார். பின்பும் கமெராவில் பக்கவாட்டில்  இருந்த ஒரு திருகாணியை  முறுக்கி மிக அவதானமாக   திருகினார்.
"சரியா வந்துட்டுது" என்று கூறியபடி கமெராவை தனக்கு முன் இருந்த மேசையில் வைத்து விட்டு எங்களுடன் கதைக்கத் தொடங்கினார்.
"இரண்டு தம்பிமாரும் வந்து இருக்கிறியாள். பெரிய தம்பி முன்ன ஒருக்கா இந்த காமெராவால் எடுத்த படங்களை நான் கழுவித் தந்தது ஞாபகம் இருக்கு. நீள பழுப்பு கொம்பு வச்ச அந்த வெள்ளை மாட்டை நடுவில வச்சுக்கொண்டு உங்கட குடும்பம் முழுப்பேரும்  நிண்டு எடுத்த படம். நல்ல இருந்தது. இந்த முறையும் நீங்கள் நல்ல படங்களை எடுத்துக் கொண்டு வாங்கோ, நான் வடிவா  கழுவித்தாறன்" என்று சொல்லி கமெராவை தந்தார். நாங்களும் இரண்டு ரூபாய் ஐம்பது சதத்தை கொடுத்துவிட்டு "போட்டு வாறம்  ஐயா" என்றபடி  ஸ்டுடியோவை  விட்டு கிளம்பினோம்.

          உசாரா காமெராவைத்  தூக்கிக்கொண்டு வந்துவிட்டாலும்  முதலில் எப்படி படத்தை எடுப்பது என்ற சங்கதி எனக்குத் தெரியாது. ஆகவே அண்ணர் முகத்தை  ஆவலுடன்  பார்த்தேன். அண்ணரும் எனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவராக கமெரா பற்றிய  விடயங்களை சொல்லத் தொடங்கினார்.
கமெராவில்  இருக்கும் ஒரு சின்ன கண்ணாடியைக் காட்டி,
"இது தான் நாங்கள் எடுக்கப்  போற படத்தை சின்ன வடிவமாக காட்டும் கண்ணாடி. முன்னுக்கு இருக்கும் காட்சியை  இந்தக்  கண்ணாடிக்குள் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடியில் தெரியும் காட்சிதான் படமாக பிலிமில் விழும்.  கண்ணாடியில்  தெரியும்  காட்சியை பார்த்து  கமெராவின்  வலது பக்கமாக இருக்கும் இந்த பட்டனை அழுத்த வேண்டும். அப்போது "டிக்" என்று ஒரு சத்தம்  கேட்கும். அது மட்டுமில்லை, பட்டனை அழுத்தும் போது  கை ஆடக்கூடாது, ஆடினால்  படமெல்லாம் ஆடிப்  போகும். கவனமடா தம்பி " என்று கூறினார். நானும்  தலையை ஆட்டியபடி கமெராவை  தூக்கினேன்.

          எல்லாம் சரி. இப்ப, முதலில் எதனைப் படம் எடுப்பது என்று இருவரும் யோசித்தோம். சில பல யோசனைகளின் பின், முதலில் கொட்டடி பெரிய பிள்ளையார் கோவில் கோபுரத்தை படம் எடுப்போம் என்று முடிவானது. எனக்கும் மகிழ்ச்சி. பிள்ளையார் கோவில் கோபுரத்துடன் ஆரம்பிப்பது நல்லது தானே.

          கோபுரத்துக்கு முன்னால் நின்று படத்தை எடுப்பதற்காக இடது கையில் கமெராவை வைத்துக்கொண்டு வலது கையினால் நெஞ்சுக்கு நேராக அணைத்துக்கொண்டு கண்ணாடியில் பார்த்த போது,  கோபுரம்  முழுவதுமாக  தெரியவில்லை. எனது முகத்தைப்  பார்த்த அண்ணர்,
"பின்னுக்கு கொஞ்சம் போய் பார், கோபுரம் முழுக்க தெரியிற வரை பின்னுக்கு  போ" என்று சொன்னார்.
 நானும் ஒரு அஞ்சு அல்லது  ஆறு அடி தூரம் பின்னோக்கிச்  சென்றேன்.

ஆஹா.... கண்ணாடிக்குள்  கோபுரம்  முழுவதுமாக இப்போது  தெரிந்தது.
இடது கையில் கமெராவை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு, கண்ணாடிக்குள் பார்த்தவாறு , வலது கையால் மெதுவாக கையும் ஆடாமல், காமெராவும் ஆடாமல், பட்டினை அழுத்தி விட்டேன். "டிக்" -"க்ளிக்"-என்று ஒரு மெதுவான-மென்மையான-சத்தம். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அண்ணர் சொன்னார் "தம்பி, படம் எடுத்தாச்சு, எல்லாம் வெற்றியடா ".

 எனக்கு ஒரே சந்தோசம்.

          இரண்டாம் படமாக எதை எடுப்பது என்று யோசித்தபோது, துறைமுகத்துக்குக் கிட்ட அரசடி வைரவர் கோவிலில் பட்டு போய்க்கொண்டு இருக்கிற--இல்லை--என்னை பொறுத்த வரையில் ஏற்கனவே பட்டுப்போய்  எலும்பு மரமாய் நிற்கிற அந்த அரச மரத்தைப்   படம் எடுப்பம் என்று தீர்மானித்துக்கொண்டோம்.

          நானும் அண்ணாவும் துறைமுகத்துக்குப் போனோம். இந்த அரசடி சந்தியானது காங்கேசன்துறை வீதி -  விநாயகமுதலியார் வீதி  பிரதான வீதி , கடற்கரை வீதி ஆகிய  நான்கு  வீதிகளும்  சந்திக்கும்  இடமாகும். இந்த இடத்தில ஒரு சிறு தீவு போன்றபகுதி  தார் போடாமல்  இருந்தது.  அந்த இடத்திலதான் இந்த அரசமரம்  இருந்தது. அரசமரத்தினடியில், கிழக்குப் பக்கமாக பார்த்தபடி அமர்ந்திருக்கும் வைரவர் தான் இந்த அரசடி வைரவர்.

          பத்துப்பேர் கை கோர்த்தபடி நின்றால்தான் இந்த அரசமரத்தைச்  சுற்றிப் பிடிக்கலாம்.  மரத்தின் உயரம் ஏறக்குறைய நன்கு வளர்ந்த ஒன்றரை பனை மர உயரம் இருக்கும். இந்த மரத்துக்கு எத்தனை வயது இருக்கும் என்று எவருக்கும் சரியாகச் சொல்ல முடியாது. சுமார், 400-500 வருடங்களைக்கண்ட  மரம் என்று ஊரில் இருக்கும்  பெரியவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

          எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த அரசமரத்தில்  ஒரு இலை கூட இருக்கவில்லை. பட்ட மரமாகவே  நான் அதைப்  பார்த்திருக்கிறேன். மெல்லிய நுனிக்கிளைகள் முறிந்து விழுந்து கொண்டு இருந்ததனையும் பார்த்திருக்கிறேன். இந்த அரசடி வைரவருக்கு  நவராத்திரி காலங்களில் பெரிய பூசைகள் நடக்கும். தீமிதிப்பு நிகழ்வுகளும் நடைபெறும். நல்லநாள்-பெரியநாள், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, பங்குனித் திங்கள் பொங்கல், என்று இந்தமாதிரியான விசேட நாட்களில் படையல், பூசைகள் நடக்கும்.  ஊர்ச் சனங்கள் எல்லோரும் கூடி இருப்பார்கள். ஆனால் இந்த நேரங்களில் மரக்கொப்புகள் முறிந்து விழுவது இல்லை. முறிந்து விழுவது எல்லாம் ஆட்கள் இல்லாத நேரங்களில், இரவில் தான்.    சில நேரங்களில் அதிகாலையிலும் விழும். எந்த ஒரு மனிதனையோ-நாய்-பூனை-ஆடு-மாடு என்று எந்த ஒரு ஜீவனையோ இந்த அரசமர கிளைகள் முறிந்து விழுந்து தாக்கி அல்லல் தொல்லை தந்தது இல்லை. இந்த நாற்சந்தியில் எதுவித வாகன விபத்துக்களும் ஏற்படவில்லை. அதாவது அரசடி வைரவர் எந்த சங்கடங்களையும் எவருக்கும்  தரவில்லை.

          தன்னில் நம்பிக்கை வைத்தவர்களை கைதூக்கி, உயர்த்தி, நிமிர்த்தி வைத்திருக்கிறார் இந்த வைரவர். அப்படிப்பட்ட கருணைமிகு வைரவர்,  ஏன் தான் குடியிருக்கும் இந்த அரசமரத்தை  இவ்வாறு பட்டுப் போக வைத்தார் ? எனக்கும் தெரியாது. எவருக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் இருப்பார்களோ என்பதும் தெரியவே தெரியாது.

          இப்படிப்பட்ட அருமை பெருமைகள் வாய்ந்த பட்டுப்போன  அரசமரத்தை படம் புடிப்போம் என்று தீர்மானித்துக்கொண்டு அரசடிச் சந்திக்குப் போனோம். மத்தியானம், நல்ல வெய்யில். வெய்யில் இருந்தால்தான் நல்லது, படம் நல்லா விழும் என்று அண்ணர் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் எனக்கு உச்சந்தலையில் வெய்யில் கொளுத்தியது.

          இந்த அரசடிச் சந்தியில், வி.எம் றோட் தொடங்கும் இடத்தில் "செல்" கம்பெனியின் பெட்ரோல்/ மண்ணெண்ணை விற்கும்/ நிரப்பும் நிலையம் இருந்தது. அந்த பெட்ரோல் நிலையத்திற்கு  அருகில் நின்றுகொண்டு கமெராவை எடுத்து அண்ணர் சொன்னபடி  கண்ணாடிக்குள்  அரசமரம்  விழுகிறதா என்று  பார்த்தேன். மரம் முழுவதுமாகத்  தெரியவில்லை.  சிறிது பின்னோக்கிச் சென்றேன்-கண்ணாடிக்குள் மரம்  முழுவதுமாக தெரிந்தது. அண்ணரும்  கமராவைப்   பார்த்தார்.
 "ம்ம்ம்...சரியாக இருக்கு, கெதியா படத்தை எடு" என்றார். கவனமாக கமெராவை அணைத்துக்கொண்டு வலது கையினால்-இரண்டாம் விரலினால்-பட்டினை அழுத்தினேன். "டிக்" என்றது கமெரா, "க்ளிக்" என்று படமும் விழுந்தது.

          படம் எடுத்தாகிவிட்டது.
"இந்தப்  படத்தில் வண்டில், கார், பஸ் ஏதும் வந்தால் படம் வடிவாக இருக்கும்" என்று அண்ணர் சொன்னார். நானும் அண்ணாவும் ஏதாவது வாகனம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டு காவல் இருந்தோம். அப்போது அண்ணர் சொன்னார்
"ஆடிக்கொண்டு, அதுதான் தம்பி, ஆடி அசைந்துகொண்டு இருப்பவைகளை இந்தப் பெட்டி காமெராவால் படம் எடுக்க முடியாது. ”க்ளிக்" இன் வேகம் போதாது. ஆகவே கார், வண்டில் எது வந்தாலும் நிப்பாட்டி வைத்துக்கொண்டு தான் படம் எடுக்க வேண்டும். கார்காரங்களை நிப்பாட்டச்  சொல்ல ஏலாது. வெறும் வண்டில் அல்லது விறகு, வைக்கோல் ஏத்திவரும்  வண்டில் ஏதும் வந்தால் கொஞ்ச நேரம் நிப்பாட்டுமாறு  கெஞ்சிக் கேட்போம்" என்றார்.

          நானும் அரசடி வைரவரை வேண்டிக்கொண்டேன். கார் வேண்டாம், எதாவது விறகு/வைக்கோல் வண்டில் ஒன்றுதான் வரவேண்டும். வைரவப்பா வரப்பண்ணப்பா என்று வேண்டிக்கொண்டேன். இந்த அரசடி வைரவர் நல்லவர், வேண்டியவர்களுக்கு வேண்டியதை கொடுப்பதில் வல்லவர். எனவே கட்டாயம் எங்களுக்கு உதவி செய்வார்  எனக்கு  நம்பிக்கை எனக்கு இருந்தது.

          சிறிது நேரத்தில் காங்கேசன்துறை வீதியிலிருந்து ஒரு விறகு வண்டில் ஆடி அசைந்து வந்துகொண்டிருந்தது. ஆஹா... அரசடி வைரவரே உனது கருணையே  கருணை என எண்ணி வைரவருக்கு மனதளவில்  ஒரு  நன்றி சொன்னேன். அதுமட்டுமல்ல வந்த வண்டில் அரசடிச் சந்திக்கு வரவேண்டும் என்றும் வேண்டினேன்.
வண்டில் இப்போது வி. எம்.  றோட் பக்கமாக திரும்பியது. அரசடி வைரவர் அருள் புரிந்து விட்டார்.
அண்ணர் ஓடிச்சென்று வண்டியை ஒருநிமிடம் நிறுத்தித் தரும்படி வண்டில்காரனிடம்  கேட்டார்.படம் எடுக்கும் விடயத்தையும் சொன்னார். அவனுக்கு உற்சாகம் வந்தது போன்று தோளில் கிடந்த சால்வைத்துண்டை எடுத்து தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டான். நான் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் காமெராவைப் பிடித்துக்கொண்டு பட்டினை அழுத்தி “டிக்" என்று "க்ளிக்" செய்து கொண்டேன். படம் புடித்து விட்டோம். வைரவர் துணையால் வந்த வண்டிக்கு நன்றி சொன்னோம்.

          என் மனதுக்குள் ஒரு அருமையான இயற்கைக்காட்சிப்  படம் ஒன்றை எடுத்துக்கொண்ட திருப்தி ஏற்பட்டது. அதன் பின் நான் ஆலடி பிள்ளையார் கோவில், ஆத்தியடி பிள்ளையார் கோவில், பெரிய பிள்ளையார் கோவில் தெப்பக்குளம், மாலையில் மறையும் செந்நிறச் சூரியன், அதை, இதை, உதை என்று எடுத்ததில் பிலிம் ரோல் முடிந்து விட்டதாக கமெராவில் பின்புறம் இருந்த ஒரு சிறிய சிவப்புக் கலர் புள்ளி வெளிச்சம் காட்டியது.

          படம் எடுத்து முடிந்ததும் கமெராவை எடுத்துக்கொண்டு குகன் ஸ்டுடியோவுக்குப் போனோம். ஸ்டூடியோ முதலாளி கமெராவை வாங்கி அதிலிருந்த ஒரு திருகாணியைத் திருகி கமெராவை பின்புறமாகத் திறந்தார். பிலிம் ரோலை கையில் எடுத்துக்கொண்டு கமெராவை மூடி எங்களிடம் தந்தார்.
"பிலிம் ரோலை  நாளை காலையில் தான் கழுவவேண்டும். அதன்பின்தான் படங்களை பிலிம் ரோலில் பார்க்கலாம். படம் பிரிண்ட் போட்டுத் தர மூன்று நாட்களாகும். படத்தை பிலிமில பார்க்க வேண்டும்  என்றால் நாளைக்கு காலையில வாருங்கோ தம்பியவை " என்று கூறினார். நாங்கள் காலையில் வருவதாகச்சொல்லிக்கொண்டு  வீட்டுக்கு வந்து விட்டோம்.

          மறுநாள் காலையில் நானும் அண்ணருமாக ஸ்டுடியோவுக்குப் போனோம். ஸ்டூடியோ முதலாளி எங்களைக் கண்டவுடன்
"தம்பி  நீங்கள்  நல்ல  திறமான படங்களை எடுத்து இருக்கிறீர்கள். ஒரு பெட்டிக் காமெராவால் இப்படியான படங்களை எடுத்து பெரிய கெட்டிக்காரத்தனம். கொஞ்சம் பொறுங்கோ.... காய்ந்துகொண்டு இருக்கும் பிலிம்ரோலை கொண்டுவந்து காட்டுறன் "என்று சொல்லிக்கொண்டு உள்ளே போனார். திரும்பி வரும்போது அவரின் கையில் கழுவிய கறுத்த பிலிம் ரோல் நீளமாக இருந்தது. எங்களுக்கு அதைக் காட்டி
"தம்பி  இதில  அந்த  பட்ட அரசமரத்தை எடுத்தது மிக மிக திறம். பிள்ளையார் கோவில் கோபுரமும் நல்லா இருக்கு. அந்த மாலைச் சூரியனை எடுத்த படமும் திறம். பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் நடத்தும் புகைப்படப் போட்டிக்கு அனுப்பலாம். அந்தளவுக்குத் தகுதியான தரமான படங்கள்" என்று கூறினார்.

          எங்களுக்கு கழுவின பிலிம் ரோலைப் பார்த்து எதுவும் சொல்லத் தெரியவில்லை. அதில எதுவும் தெரியவுமில்லை.
"படங்களை எப்ப கழுவித் தருவீர்கள்?"
" மூன்று நாட்கள் ஆகும்.’டாக் ரூம்' இல் வேலை செய்கிற பொடியன் லீவு"
"அப்ப நாங்கள் நாலு நாட்கள் கழிச்சு வாறம்"
என்று கூறிக்கொண்டு ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தோம்.
"தம்பியவை... கொஞ்சம் நில்லுங்கோ. இங்க கொஞ்சம் வாங்கோ" என்று முதலாளி கூப்பிட்டார். என்ன ஏது என்று விளங்காமல் திரும்பவும் ஸ்டுடியோவுக்குள் போனோம்.
"கொழும்பிலிருந்து தினமும்  வெளிவரும் 'தினகரன்' பேப்பரில் ஒவ்வொரு புதன் கிழமையும் 'புதன் மலர்' என்று  ஒரு  சிறப்பு பக்கம் வெளிவரும். ஒவ்வொரு வாரமும்  இவ்வார சிறந்த புகைப்படம் என்று குறிப்பிட்டு  ஒரு  புகைப்படம் வெளிவரும். அதற்கு சன்மானமும் கொடுப்பார்கள். அதற்கு இந்த அரசமர படத்தை      அனுப்பிவையுங்கோ. நான் படத்தை  பெரிசா  'கொப்பி' பேப்பர்  சைசில்          கழுவிப் போட்டுத்தாறன் " என்று சொன்னார்.
நாங்களும் "ஓம்... ஓம்” என்று பெரிதாக தலையாட்டினோம்.
"மத்தியானதுக்குப்  பிறகு இரண்டு இரண்டரை போல இஞ்ச வாங்கோ தம்பியவை" என்று கூறினார்.

          நாங்கள் வீட்டுக்குப்  போய் அப்பா அம்மாவிடம் நடந்த கதையைச்  சொன்னோம். அவர்களுக்கு மிகவும் சந்தோசம்.
"இந்த குகன் ஸ்டுடியோக்காரர் நல்ல ஒரு மனுஷன். எல்லாருக்கும் உதவி செய்கிறவர். நீங்கள் எடுத்த படம் பத்திரிகையில் வந்தால் எங்களுக்கும் சந்தோசம், குகனுக்கும் சந்தோசமடா, எண்டபடியால் அவர் சொன்ன மாதிரி இரண்டு மணிவாக்கில கட்டாயம் போங்கோ" என்று அப்பா கூறினார்.

          நாங்கள் இரண்டு மணியளவில் ஸ்டுடியோவுக்கு போனோம்.
"தம்பியவை உங்களுக்காக நானே இந்தப் படத்தை மட்டும் பெரிசாக்கி அதை கேபினெட் சைசுக்கு பிரிண்ட் போட்டு எடுத்தனான்.  இந்தாங்கோ......, படத்தை நல்ல பாருங்கோ....., "என்று சொல்லி எங்களிடம் படத்தைத் தந்தார். எனக்கும் அண்ணருக்கும் ஆச்சரியம். ஒரே சந்தோசம். மிகவும் வடிவான படம். மாட்டு வண்டில் வடிவாகத் தெரிந்தது. பட்ட அரசமரமும் கம்பீரமாக விழுந்திருந்தது. மனதுக்குள் அரசடி வைரவருக்கு ஒரு வணக்கம் வைத்தேன்.
"படத்தை எடுத்தவரின் பெயரையும் விலாசத்தையும் ஒரு துண்டில் எழுதி படத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். இந்த பேப்பர்ல எழுதித்  தாங்கோ தம்பி" என்று ஸ்டூடியோ முதலாளி கேட்டார்.
அண்ணர் எனது பெயரையே எழுதும்படி சொன்னார். படம் வைத்து அனுப்பும் பெரிய கவரில் இடது பக்க மூலையில் 'இவ்வார புகைப்பட போட்டி' என்று எழுதி, சேருமிட விலாசம் எழுதும் இடத்தில் 'ஆசிரியர், புதன் மலர், தினகரன், லேக்  ஹவுஸ், கொழும்பு' என்று எழுதினார். படத்துடன் பெயர் விபரங்கள் எழுதிய துண்டையும் ஒரு கிளிப் மூலம் இணைத்து கவருக்குள் வைத்து ஓட்டினார். கவரின் வலது பக்க மூலையில் ஒரு ரூபாய் முத்திரை ஒன்றையும் ஓட்டினார்.

          "தம்பியவை... இப்ப இந்த தபாலை தபால் கந்தோர் தபால் பெட்டியில் போட வேணும். கெதியா போய் போடுங்கோ" என்று சொல்லி அந்த பெரிய கவரைத் தந்தார். நாங்களும் அந்தக் கவரை தபால் கந்தோர் தபால் பெட்டியில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம்.  என்ன நடக்குமோ, ஏதோ ஒண்டு விளங்கியும்  விளங்காதமாதிரியும் இருந்தது.

          அடுத்த புதன் கிழமை வந்தது. குகன் ஸ்டூடியோவில் 'தினகரன்' பேப்பர் வாங்கி இருப்பார்கள். நான் அம்மாவிடம் சொல்லிவிட்டு குகன் ஸ்டுடியோவுக்கு  ஓட்டமும் நடையுமாகப் போனேன். என்னைக்  கண்டதும் ஸ்டூடியோ முதலாளி
"தம்பி... உங்களைத்தான் நான் இப்ப நினைச்சுக்கொண்டு இருந்தனான். இஞ்ச பாருங்கோ........உங்கட புகைப்படம் தான் இந்தவார 'புதன் மலரில்' வந்து இருக்கிறது" என்று சொல்லிக்கொண்டு தினகரனின் புதன் மலர் பக்கத்தைக் காட்டினார். எனக்கு ஆச்சரியம்......அதிசயம்.....சந்தோசம் ...இனம் புரியாத ஒரு அதிர்ச்சி. வாய்விட்டு "உண்மையிலுமே நல்ல வடிவா இருக்கு" என்று சொன்னேன்.
புகைப்படத்தின் கீழ் எனது பெயர் இருந்தது. புகைப்படத்தின் மேல் "இவ்வார சிறப்பு புகைப்படம்" என்றும் இருந்தது. அத்துடன் பத்து ரூபாய் சன்மானம் வழங்கப்படுகிறது என்றும் இருந்தது. ஒருவிதமான விபரிக்க முடியாத உணர்வு ஊடுருவியது.
            
"முதலாளி... அம்மா அப்பாட்டை சொல்லவேணும்.  இப்பவே போய்ச் சொல்லப்போறன். “தினகரன்”ஓன்று கடையில வாங்கப் போறன். அதுக்குமுன் நீங்கள் வைத்திருக்கிற  இந்த தினகரனை  ஒருக்காத்  தாங்கோ. அம்மா அப்பாட்ட காட்டிப்போட்டு கொண்டுவந்து தாறன்"  என்று கூறி அவரிடம் இருந்த பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு தலை தெறிக்க வீட்டை நோக்கி ஓடினேன்.

என் மனதில் பெட்டிக் கமெராவின் "க்ளிக்", "டிக்" சத்தம் மீண்டும்  மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

---------------------------------0000--------------------------

           குறிப்பு:  இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜங்களே. குட்டிப்பையன்  பெட்டிக் கமெராவால் எடுத்த  இந்த  கதையின்  படம்  இங்கு  இணைக்கப்பட்டு ள்ளது.

(நன்றி: ஞானம் - நவம்பர் - 2016)

                 --------------XXXXXXXX-------------



No comments: