ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த "புதுமைப்பிரியை"

.

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த "புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்

ஆரம்ப பாடசாலை பருவத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி

மாண்புறு மகளிரின் குரலை ஆவணமாக்கிய பெண்ணிய ஆளுமை

முருகபூபதி - அவுஸ்திரேலியா

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள்.

விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம்.

இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் யார்...? என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை.

சிங்களத்தலைவர்கள் பதவிக்கு வரவேண்டுமானால் இலங்கை தேசிய சிறுபான்மை இனங்கள் பலிக்கடாவாகவேண்டும்.





1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, " தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்" என்றார்.

இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி " சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் " என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார்.

அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார்.

பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா...? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார்.

ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான் அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது.

அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே... அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார்.

இது முற்றுப்பெறாத கதை.

இது இவ்விதமிருக்க, இந்த வரலாற்றில் வரும் மேத்தானந்தா போன்றதொரு இனவாதியை அதே பெயரில், சித்திரித்து 1956 இல் காலிமுகத்தில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தியபோது இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிறுகதையை தமிழில் எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால் எமக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், அது அதிசயம் அல்ல உண்மை.

ஒரு பாடசாலை மாணவி அதுவும் வடபுலத்தில் ஒரு அந்தணர் குடும்பத்தில், பிறந்த பெண் எழுதியிருக்கிறார். தேவராம், திருவாசகம் மனனம் செய்து படித்துப் பாடவேண்டிய சூழலில் பிறந்த ஒரு யுவதி, சமூகப்பார்வையுடன் இலங்கையில் உதயமாகிய தேசிய இனப்பிரச்சினை தொடர்பான ஒரு கதையை எழுதியிருப்பது அதுவும் அந்தப்பிரச்சினை எரியத்தொடங்கிய 1956 இலேயே படைத்திருப்பது என்போன்ற வாசகர்களுக்கு பேராச்சரியம்தான்.

அந்த படைப்பாளியின் பெயர் புதுமைப்பிரியை. வசீகரமான பெயர். இவர்தான் பின்னாளில் ஈழத்து இலக்கிய உலகில் பத்மா சோமகாந்தன் என பிரபல்யம் பெற்றவர்.

1956 இல் வெளியான அச்சிறுகதையின் பெயர்: புத்தன் பரம்பரை.

1947 ஆம் ஆண்டு கொழும்பில் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் சுதந்திரன் பத்திரிகையை தொடக்கியபொழுது சிறுமியாக இருந்த பத்மா, 1954 இல், அந்தப்பத்திரிகை நடத்திய அகில இலங்கை சிறுகதைப்போட்டியில் முதல் பரிசுபெறுகிறார். இவருடன் போட்டியிட்ட, இரண்டு முக்கிய படைப்பாளிகள், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப்பெற்றார்கள்.

அவர்கள்தான் டானியல், டொமினிக்ஜீவா ஆகியோர். பத்மா எழுதிய சிறுகதை இரத்தபாசம்.

பரிசுகள் ஒருவரின் படைப்பாளுமையைத் தீர்மானிப்பதில்லை. மிகக்குறைந்த வயதில், கோயிலையும் அதன் சுற்றுப்புறத்தையும் பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய சூழலில் இந்த புறவுலகையும் தென்னிலங்கையில் எரியத்தொடங்கிய தேசிய இனப்பிரச்சினையையும் சித்திரிக்கும் படைப்பாளுமை புதுமைப்பிரியை என்ற பத்மாவிடம் உருவாகியிருப்பது ஆச்சரியமன்றி வேறில்லை.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில், பிரம்மஶ்ரீ ஏரம்பக்குருக்கள், ஶ்ரீமதி அமிர்தம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வியாக பிறந்த பத்மாவுக்கும் சில சமூகப்பின்னணிகள் இருந்திருக்கின்றன. பெரியதந்தையார் பிரம்ம ஶ்ரீ தி. சதாசிவம் தற்காலத்திலிருக்கும் கல்விப்பணிப்பாளர் தகுதிக்குரிய வித்தியாதரிசகர். அத்துடன் கல்விமான். யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச்சங்கத்தின் ஸ்தாபகர். தாய்மாமன், பிரம்மஶ்ரீ மு. சபாரத்தினம் அய்யர் அக்காலத்தில் வெளியான கவிகலாதீபம் என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியவர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த அய்யர்மார் குடும்பங்களில் தோன்றி பிரபலமான பலரின் வாழ்வையும் பணிகளையும் சமுதாயக்கண்ணோட்டத்தில் ஆராயமுடியும். அந்த வரிசையில் மகாகவி பாரதி முதலிடம் வகிப்பார். கோயில் பூசகர்களாகியிருக்கவேண்டியவர்கள், படைப்பாளிகளாகவும் கல்விமான்களாகவும், மருத்துவர், பொறியிலாளராகவும் மாறுவதும் அவரவர் மனவெழுச்சிகளின் விளைவே.

பாடசாலையில் ஏழாம் வகுப்பு படிக்கும்போதே கதைகள் கட்டுரைகள் எழுதத்தொடங்கிய பத்மா, சுதந்திரன் சிறுகதைப்போட்டிக்கு புதுமைப்பிரியை என்ற புனைபெயரில்தான் இரத்தபாசம் என்ற சிறுகதையை எழுதி அனுப்பி முதல் பரிசைப்பெற்றுள்ளார்.

சிறுமியாக இருந்தபோதே புதுமையில் அவருக்கு நாட்டம் வந்திருக்கிறது. அதன் விளைவுதான் அந்தப்புனைபெயரில் எழுதுவதற்கு அவரைத்தூண்டியிருக்கவேண்டும்.

எனக்கு இவர் அறிமுகமானது 1974 இற்குப்பின்னர்தான். இவருடைய கணவர் நா.சோமகாந்தன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

கொழும்பு துறைமுக அதிகார சபையில் அவர் பணியாற்றிய காலத்தில், சங்கத்தின் தேசிய சபையிலும் கூட்டுறவுப்பதிப்பகத்திலும் இணைந்திருந்தேன். அதனால் அடிக்கடி இவர்களின் கொழும்பு நாரஹேன் பிட்டியில் அமைந்திருந்த அன்டர்ஸன் தொடர்மாடிக்குடியிருப்பு இல்லத்தில் நடக்கும் சந்திப்புகளுக்குச்செல்வேன்.

அங்கு அடிக்கடி சங்கத்தின் கூட்டங்கள் நடக்கும். சோமகாந்தன் பொதுப்பணிகளில் அயராத உழைப்பாளி. பல வெகுஜன அமைப்புகளில் அங்கம் பெற்றிருந்தார். அதனால் வீட்டுக்கு வருபவர்களை முகம் சுழிக்காமல் வரவேற்று உபசரிப்பார். ஆலோசனைகள் சொல்வார். விவாதங்கள் வந்தால் அமைதிப்படுத்துவார். இதுவிடயத்தில் சகோதரி பத்மா சோர்வுற்றதை நான் என்றைக்கும் பார்த்திருக்கவில்லை. இவரும் சங்கத்தின் வளர்ச்சியில் துணையாக நின்றார். பல முக்கிய பொறுப்புகளை ஏற்றார்.

1983 இல் தென்னிலங்கையில் வன்செயல் வந்த பின்னர் இவர்களின் குடும்பம், யாழ்ப்பாணம் ஓட்டுமடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றது. அங்கு நடந்த சந்திப்புகளுக்கும் சென்றிருக்கின்றேன்.

கருத்தொருமித்த இந்தத் தம்பதியர் எங்கள் நீர்கொழும்பின் நெருங்கிய உறவினர்கள். ஊருக்கு உறவினராக முடியுமா...? முடியும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற மனப்பான்மையுடன்

இயங்குபவர்களினால் முடியும். அந்தவகையில் சான்றோர் தகுதிபெற்றவர்கள்.

பத்மா எமது இனிய நண்பர் சோமகாந்தன் சம்பந்தப்பட்ட அனைத்துப்பொதுப்பணிகளிலும் தோளோடு தோள் நின்றவர்.

காதலொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து வாழ்ந்தவர்.

இந்தப்பதிவை எழுதும் முன்னரும் பத்மா அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். " பூபதி நாளை உங்கள் ஊருக்குத்தான் செல்கிறேன். போட்டி ஒன்றுக்கு நடுவராக அழைத்துள்ளார்கள்" என்றார்.

எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எங்கும் இணைபிரியாமல் செல்வார்கள். நீர்கொழும்புக்கென்ன இலங்கையில் எப்பாகத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் முடிந்தவரையில் ஒன்றாகத்தான் புறப்படுவார்கள்.

2006 ஆம் ஆண்டு ஏப்பரில் மாதம் 28 ஆம் திகதி கணவர் சோமகாந்தன் மறைந்த பின்னர், பத்மாவுக்கு அகத்தனிமை இருந்தபோதிலும், பொதுப்பணிகளில் முக்கியமாக கலை, இலக்கியம் மற்றும் மகளிர் விவகாரங்களில் தொடர்ந்தும் உற்சாகமாக இயங்குகிறார். பயணங்கள் மேற்கொள்கிறார். பயிலரங்குகளில் கலந்துகொள்கிறார். உரையாற்றுகிறார். 2008 இல் இவரது பாரா முகங்கள் - சில பார்வைகள் வெளியாகிறது. இதற்கு தமிழக எழுத்தாளர் திலகவதி (ஐ.பி.எஸ்) முன்னுரை தந்துள்ளார்.

" இந்த நூல் வெறும் கேள்வி - பதில் கூறும் நூல் அல்ல. பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த பிரச்சினைகளையும் அலசும் நூல். ஆசிரியர் பத்மா சோமகாந்தன் அவர்களின் பல்துறை அறிவையும் அனுபவங்களையும் விவேகத்தையும் அறிவிக்கும் நூல்" என்கிறார் இதற்கு அணிந்துரை எழுதியிருக்கும் செ. கணேசலிங்கன்.

இற்றைத்திங்கள் ( சிறுகதைத்தொகுதி) 2013 இல் வெளிவருகிறது.

இற்றைத்திங்கள் சிறுகதைத்தொகுதிக்கு அணிந்துரை எழுதியிருக்கும் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த மூத்த படைப்பாளி பொன்னீலன்," அற்றைத்திங்கள் அவ் வெண்ணிலவில் என்ற புறநானூறில் இடம்பெற்ற பாடலை முன்னுதாரணமாக்கி, இன்றைய ஈழத்தின் துயர வரலாற்றை பதிவு செய்யும் கதைகளை எழுதி, இற்றைத்திங்கள் என்ற தலைப்பை குறியீடாக்கியிருப்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

நெஞ்சுக்கு நிம்மதி என்ற நூல் இளம்பெண்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளைக் கூறுகிறது. இதற்கு அன்னலட்சுமி இராஜதுரை முன்னுரை தந்திருக்கிறார். வீரகேசரியின் துணைப்பதிப்பான மங்கையர் கேசரியில் சுமார் மூன்றாண்டுகள் வாசகர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சீர்மிய முறைமையில் (Counselling) தீர்வுகளும் ஆலோசனைகளும் சொன்னவர் பத்மா சோமகாந்தன். அதன் தொகுப்பே நெஞ்சுக்கு நிம்மதி.

பத்மாவின் எழுத்துலகத்தின் தொடக்காலம் சிறுகதைதான்.

பல சிறுகதைகளும் அதேசமயம் ஏராளமான கட்டுரைகளும் எழுதியிருக்கும் பத்மா சோமகாந்தன், தினக்குரல் ஞாயிறு இதழில் நூறுக்கும் மேற்பட்ட சாதனைப்பெண்கள் பற்றியும், கலைக்கேசரியில் 75 இற்கும் மேற்பட்ட இசை வல்லுனர்களையும் பற்றி எழுதியிருப்பவர்.

இத்தகைய தொடர்களை இன்றும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அயராத எழுத்தூழியர். இவை தவிர, பெண்ணின் குரல், சொல், அகவழி, சங்கத்தமிழ், பிரவாகினி ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் இயங்கியவர்.

1954 இல் மாணவியாக சுதந்திரனில் எழுதத்தொடங்கிய பத்மா, வீரகேசரி, ஈழகேசரி, தினபதி, தினக்குரல், உதயன், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் புதுமை இலக்கியம், சிற்பியின் கலைச்செல்வி, மற்றும் மல்லிகை, ஞானம், இலங்கை விகடன், தமிழகத்தில் வெளியான தாமரை, கல்கி, கலைக்கதிர் முதலானவற்றிலும், அமைப்புகளின் ஆண்டுமலர்கள், சிறப்புமலர்கள், நினைவு மலர்கள், மாநாட்டு, கருத்தரங்கு மலர்களிலும் எழுதியிருப்பவர். அவரது கரம் ஓயாத கரம்.

ஏனென்றால், ஏழாம் வகுப்பு மாணவியாக இருந்த காலத்தில் எழுதத்தொடங்கியவர், உயர்வகுப்புக்குச்சென்றும் எழுதினார். திருமணமானதன் பின்னரும் எழுதினார். பிள்ளைகள் பெற்று குடும்பத்தலைவியானதன் பிறகும் எழுதினார். தற்பொழுது பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடும் காலப்பகுதியிலும் எழுதிக்கொண்டிருக்கிறார் இந்த அயற்சியற்ற ஆளுமை.

ஆசிரியராக, அதிபராக தொழில் துறையில் ஈடுபட்ட காலத்திலும் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்ட பத்மா சோமகாந்தன், தனது இலக்கியப்பிரவேசத்தை சிறுகதையில் தொடங்கியவர், எண்ணிலடங்காத பத்திகளும் எழுதியிருக்கிறார்.

ஈழத்துச்சிறுகதை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு என்ற தலைப்பில் பத்மா சோமகாந்தன் எழுதிய கட்டுரை, முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1996 இல் கொழும்பில் நடத்திய

இலக்கியப்பேரரங்கு விழாவில் வெளியிட்ட புதுமை இலக்கியம் மலரில் வெளிவந்துள்ளது.

சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட பத்மா, தன்னை வளர்த்த தான் ஆய்வுசெய்த பத்திரிகைகள் பற்றி இந்த மலரில் விரிவாக பதிவுசெய்துள்ளார்.

இலங்கையில் பத்திரிகை இலக்கியம் தொடர்பாக ஆராயப்புகும் மாணவர்களுக்கு அக்கட்டுரை பயன்தரவல்லது.

கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள், கரும்பலகைக்காப்பியங்கள், இற்றைத்திங்கள் முதலான சில சிறுகதைத்தொகுப்புகளை வரவாக்கியிருக்கும் இவர், இந்நூல்களுக்காக தமிழ் நாடு லில்லி தேவசிகாமணி பரிசு, சென்னை இந்து நாளிதழின் பாராட்டு, சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, வடக்கு - கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய பரிசு பெற்றிருப்பவர்.

சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியில் தொடங்கி, சாந்தி சச்சிதானந்தம் வரையில் 23 பெண்ணிய ஆளுமைகள் குறித்து பத்மா சோமகாந்தன் எழுதியிருக்கும் மற்றும் ஒரு நூல் ஈழத்து மாண்புறு மகளிர்.

இதனைப்படித்தபோது, எனக்கு எனது சிறியவயதில் கதைகள் சொல்லித்தந்த பாட்டி நினைவுக்கு வந்தார்கள். பாட்டிக்கு எழுதத்தெரியாது அவர் இட்டது கையொப்பம் அல்ல. கைநாட்டு வைத்துத்தான் எங்கள் ஊர் தபால் கந்தோரில் பத்து ரூபா உதவித்தொகையை மாதாந்தம் பெற்றார்.

அதற்கு அவர் வைத்த பெயர் பிச்சைச்சம்பளம்.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்ற காலத்தில் பிறந்து எழுத்துலகத்தையும் வாசிப்புலகத்தையும் தரிசிக்காமல் தொலைத்துவிட்ட எனது பாட்டி சிறந்த நாட்டு வைத்தியர். அவரிடம் வந்து சிகிச்சை பெற்று பலன் பெற்றவர்கள் அவரை கைராசிக்கார ஆச்சி என்று புகழாரம் சூட்டியதைப் பார்த்திருக்கின்றேன். அவர் படித்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்று காலம் கடந்து சிந்தித்திருக்கின்றேன்.

காலம் எதற்கும் பதில் சொல்லும். அதனைச்சொல்ல வைத்தவர்கள் குறிப்பாக பெண்கள்தான். ஆசாரம் என்ற சிமிழுக்குள் மூடியிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வந்திருக்கும் பத்மா, பெண்களின் குரலாக வாழ்ந்திருந்தமையால்தான் அவரால் மாண்புறு மகளிர் தொடரை எழுத முடிந்திருக்கிறது.

ஆன்மீகம், மருத்துவம், தொழில் நுட்பம், அறிவியல், கல்வி, மேடைப்பேச்சு, சமூகப்பணி, ஒலிபரப்பு, இதழியல் ஊடகம், இலக்கியம், நடனம், இசை, நிருவாகம், பதிப்புத்துறை முதலான பல்துறைகளிலும் ஈடுபட்டு சாதனைகள் புரிந்த பெண்கள் பற்றி எழுதியிருக்கிறார். இது தவிர ஈழத்து தமிழ்ப்பெண் ஆளுமைகள் என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார்.

" நமது வரலாற்றை எழுதும்பொழுது, இனிமேலும் நாங்கள் மகளிர் வகிபாகத்தை மறத்தல் கூடாது என்பதை பத்மா எழுதிய ஈழத்து மாண்புறு மகளிர் நூல் அழுத்தமாகச்சொல்கிறது." என்று இந்த நூலுக்கு முன்வாசகக்குறிப்பு எழுதியிருக்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.

சிறுவர் இலக்கியமும் படைத்திருக்கும் பத்மா, சிறுவர்களுக்காக அனுமான் கதை என்ற நூலையும் வரவாக்கியவர்.

சுவாமி சின்மயானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலத்திலும் எழுதும் திறன்வாய்ந்தவர்.

Garland of fifty flower - Stories from Hindu Mythology என்பவை இவரின் இதர நூல்கள்.

இறுதியாக சமீபத்தில் அவருடன் உரையாடியபோது, சிறுவர்களுக்காக ஒருஇலக்கிய மாநாடு நடத்தவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார்.

நாளும் பொழுதும் எதனையாவது ஆக்கபூர்வமாகச்செய்யவேண்டும் என்ற சிந்தனைக்கே வசப்பட்டிருக்கும் பத்மாவின் பலம் இன்றும் எழுத்தூழியத்தில் தங்கியிருக்கிறது.

நாம் தினமும் முழ்கிக்கிடக்கும் மின்னஞ்சல், முகநூல் வலைப்பதிவுக் கலாசாரத்திற்குள் பிரவேசிக்காமல் தொடர்ந்தும் அமைதியாக எழுதிக்கொண்டும் மேடைகளில் பேசிக்கொண்டுமிருக்கிறார்.

எழுதுவதுடன் மட்டும் தன்னை நிறுத்திக்கொள்ளாமல், அமைப்புகளிலும் இணைந்து இயங்குவதிலும் ஆர்வம் காண்பிக்கும் பத்மா சோமகாந்தன், இந்து மாமன்றம், கொழும்பு தமிழ்ச்சங்கம், இந்து மகளிர் மன்றம், சாரதா சமிதி, ஆறுமுகநாவலர் சபை, நாவலர் நற்பணி மன்றம், விழுது மேம்பாட்டு மையம் - இதனோடு இணைந்த பெண்கள் சார்பு ஊடகத்துறை, ஓளவை இலக்கிய வட்டம், தமிழ் - சிங்கள எழுத்தாளர் ஒன்றியம், இலங்கை அரச எழுத்தாளர் மன்றம், அகில

உலக சிற்றிதழ் சங்கம் முதலானவற்றிலும் அங்கம் வகித்திருக்கிறார்.

எப்படித்தான் இவரால் இத்தனை பொறுப்புகளையும் சுமந்துகொண்டு அலுப்போ சலிப்போ இன்றி புன்னகையுடன் செயற்பட முடிகிறது என்பதும் எமக்கு பேராச்சரியமே.

எங்கள் இலக்கியக்குடும்பத்தில் இயங்குவதில் இன்பம் காணும் எழுத்தாளுமையான சகோதரி பத்மா சோமகாந்தன் நல்லாரோக்கியத்துடன் தொடர்ந்தும் பயணிக்க வாழ்த்துவோம்.

No comments: