”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே”

”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..”பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்     
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?”

என்ற புறநானூற்றுப் பாடலோடு தொடங்கும் இந்தப் பத்தி  நியாயமாக ஒரு சங்க இலக்கியக் கட்டுரையாக பரிணமித்திருக்க வேண்டியது. ஆனால் இக்கட்டுரை பேசவிருப்பது அதைப் பற்றியல்ல.  மனித  மனத்தின் செயல்பாடுகள் பெரும்பாலும் விநோதமானவை.... நினைவின் எந்தப் பிரி எந்தச் சரடினுடையது என்பது எளிதில் தீர்மானிக்கக் கூடியதாய் இருப்பதில்லை. முகப்பு விளக்குகள் ஒளிர வேகமாக வரும் லாரியை,  அறிவுற்றுத் தீவிழித்து  வாய் பிளந்து  ’ஈஈஈ’ யென்று பல்லிளித்தபடி பாய்ந்து வரும் அரக்கனாக கற்பிதம் செய்வதும், எப்போதும் துடைப்பத்தை வைத்து வீட்டைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் பக்கத்து வீட்டுப் பெண்மணியைப் பார்க்கையில்,  கூண்டில் வைத்த நெல்லையும் பழங்களையும் நாளெல்லாம் காலால் எத்தி எத்தி  ஒரு மூலைக்கு நகர்த்திக் கொண்டே இருந்துவிட்டு ஒன்றும் சாப்பிடாமலேயே  இறந்து போன பச்சைக் கிளியைப் பற்றிய சாயம் போன நினைவுகளை மேலெழுப்புவதும் மனதின் கிறுக்குத்தனங்களேயன்றி வேறென்ன?  இதோ இப்போதும் கூட “உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்கு பொன்னாலான தாமரைப் பூவை சூடிக் கொள்ளக் கொடுப்பதற்காக, உன்னைப் போற்றி எழுதும் புலவர்களுக்கு யானைகளையும் தேரையும் பரிசளிப்பதற்காக  பிறரை வருத்தி அவர்களுடைய மண்ணைக் கவர்ந்து கொள்கிறாயே.. இது  நியாயமா அரசே?”  என்ற திகைப்பூட்டும் கேள்வியைச் சுமந்திருக்கும் பாடலைத் தான்  கட்டுரையின் கருப்பொருளாகத் தேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருந்தேன். யாசகக் குரல்களால் நிரம்பியிருக்கும் புறநானூற்றில் தனித்து ஒலிக்கும் அடக்குமுறைக்கான முதல் எதிர்ப்புக் குரல் இது. ஆனால்.. “இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு” என்னும் வரியை வாசிக்கையில் மனது அவ்வரியோடு, சம்பந்தப்பட்ட மன்னனோடு, அது எழுதப்பட்ட காலத்தோடு நின்று விடாமல்,எங்கெங்கோ  குறுக்குச் சந்துகளுக்குள் புகுந்து இறுதியில் சினுவா ஆச்சிபியின் “சிதைவுகள்’ நாவலில் முட்டி நிற்கிறது. 


சினுவா ஆச்சிபி - நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர்  மற்றும் திறனாய்வாளர். 1930 ல் நைஜீரியாவில்  ஈபோ இனத்தில் பிறந்த ஆச்சிபி தனது 28 வது வயதில் தனது முதல் படைப்பான “Things Fall Apart" (சிதைவுகள்) நாவலை வெளியிட்டார். 1999 வரை உலகம் முழுவதும் ஒரு கோடிப் பிரதிகள் விற்பனையாகி, 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவருக்கு உலகப்புகழை  வாரிக் கொடுத்த இந்நாவலை, சென்ற மாதத்தில் தான் எனக்கு வாசிக்க வாய்த்தது. வாசித்து முடித்த அடுத்த ஓரிரு நாட்களுக்கு ஊனுறக்கம் கொள்ள முடியாத அளவிற்கு அவஸ்தை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் உள்ளூர இனம் புரியாத சஞ்சலத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தது. 

ஆச்சிபி இந்நாவலைத் தொடர்ந்து No Longer at Ease, Arrow of God, A Man of the People, Anthills of the Savannah முதலிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும், கவிதைகளையும், குழந்தை இலக்கியங்களையும், கட்டுரைத் தொகுதிகளையும், திறனாய்வு விமர்சனங்களையும்  எழுதியிருக்கிறார்.  அவரது கவிதைகளில் சிலவற்றைஇங்கே வாசிக்கலாம். A Mother in a Refugee Camp கவிதை மனதைப் பிசைகிறது. நைஜீரிய அரசியலில் பெரும் பங்கு வகித்திருந்த சினுவா ஆச்சிபி தன் வாழ்வின் இறுதிப் பகுதியை அமெரிக்காவில் கழித்தார். ஒரு கார் விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்த நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கல்லூரிப் பேராசிரியராக தன் பணியைத் தொடர்ந்த இவர் கடந்த 21.03.2013 ம் நாள் மரணமடைந்தார். அவர் மரணமும் என் வாசிப்பும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்தது அபாரமான யதேச்சையே. இவரது படைப்புகள் அனைத்திலும் பார்க்க நாவல்களே அதிகம் புகழ் வாய்ந்தவையாய் இருக்கின்றன. உலகெங்கும் கல்வித் துறைகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. 

“Things Fall Apart" ஐ   கூகுளைப் போலவோ ஏனைய மொழி’பெயர்ப்பாளர்களைப்’ போன்றோ “விஷயங்களைத் தவிர வீழ்ச்சி”  என்று பெயர்த்தெடுக்காமல் “சிதைவுகள்” என்று அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களை இத்தருணத்தில் நிச்சயம் நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். ”பூரணி” என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றி இலக்கிய உலகில் பூரணி மகாலிங்கம் என்றே அறியப்படும் இவர் ஒரு இலங்கைத் தமிழர். நைஜீரியாவில் பல்லாண்டுகள் ஆசிரியராய்ப் பணியாற்றியவர். உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல்  வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் சுந்தரராமசாமி “சிதைவுகள் தமிழுக்கு வரும்போது அதன் கதாபாத்திரங்கள் தம் வாழ்க்கையில் தழுவி நின்ற பண்டைய வாழ்க்கை முறை போல மற்றொரு பண்டைய வாழ்க்கை முறை சார்ந்த வாசகர்களிடம் வந்து சேர்கிறார்கள். மொழிபெயர்ப்பாளரின் திறனால் இந்த உறவு அக்கதாபாத்திரங்களுக்கு வெகு இதமாகக் கூடியிருக்கிறது. தமிழ் அலட்டிக் கொள்ளாமல் அம்மக்களுக்குரிய வாழ்வை வாங்கிக் கொள்வதையும் இம்மொழிபெயர்ப்பு மூலம் நாம் உணர முடியும்.” என்று பாராட்டுகிறார். 

”சிதைவுகள்” நாவலின் கதைச் சுருக்கம் வெகு எளிமையானது. ஒக்கொங்வோ என்ற தனி மனிதனின் இளமைப் பருவம் முதல் அவன் மரணம் வரையிலான வாழ்க்கையைச் சொல்வது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்வு என்பது எத்தனை முயன்றபோதும் சமூகத்திலிருந்து முற்றிலும் வேறாய் பிரித்து எடுத்து விடக் கூடியதாய் இருப்பதில்லை தானே? ஒக்கொங்வோவின் வாழ்க்கை என்னும் சிறு மொட்டு அவன் சுற்றம், சமூகம், கிராமங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சடங்குகள், கடவுள்கள், கலாச்சாரம், குற்றங்கள், தண்டனைகள் மற்றும் இவையனைத்திலும் ஏற்படும் சிதைவுகள் ஆகியவற்றை படிப்படியாய் காட்சிப்படுத்தியபடி பல்லடுக்குத் தாமரையாய் விரிவதே நாவல். ஒற்றைப் பார்வையில் மிக எளிமையான கதையாகத் தெரிந்தபோதிலும் ஆதி மனிதர்களின் வாழ்விலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் சக மனிதர்கள் / இனக் குழுக்கள் மீதான அடக்குமுறையையும், ஒரு மொழியோ, இனமோ, பண்பாடோ  பென்சில் சீவப்படுவது போல அதிகார வர்க்கத்தால் சிறிது சிறிதாய் செதுக்கிச் சிதைக்கப்படுகையில் உருவாகும் வலியையும் அதிர்வையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்வதாலேயே இது மிக முக்கியமான நாவலாகியிருக்கிறது. Gods must be crazy திரைப்படம் மற்றும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் வாயிலாக மட்டுமே நான் பெற்றிருந்த ஆப்பிரிக்க கலாச்சாரம் குறித்த சித்தரிப்புகளை இந்நூல் பெருமளவில் விசாலமாக்கியிருக்கிறது. 

ஒக்கொங்வோ ஒரு இளைஞன். சோம்பேறியும் செலவாளியும், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காதவனும், நோயுற்று உடல் வீக்கமுற்று, தானே தன் புல்லாங்குழலோடு தனித்து இடுகாடு சென்று மரணித்து பிறரால் அடக்கம் செய்யப்படும் பெருமையைக் கூட இழந்தவனுமான உனோக்கா என்பவனின் மகன். தன் தந்தையைப் போல தானும் ஆகிவிடக் கூடாது என்ற பயம் அவனை வாழ்நாள் முழுவதும் ஆட்டிப் படைக்கிறது. அந்த பயமே அவனை பெரிய மல்யுத்த வீரனாகவும், கோபக்காரனாகவும், அன்பை வெளிக்காட்ட மறுப்பவனாகவும் ஆக்குகிறது. அந்த பயம் தான் அவனை கடும் உழைப்பாளியாகவும், மூன்று மனைவிகளையும் அவர்கள் குழந்தைகளையும் சொந்த வீட்டில் பராமரிப்பவனாகவும், வருடம் முழுவதற்கும் குடும்பத்திற்குத் தேவையான வள்ளிக் கிழங்குகளை களஞ்சியத்தில் சேமித்திருக்கும் செல்வந்தனாகவும், சமூகத்தில் மதிப்பிற்குரிய பட்டங்களைப் பெற்றவனாகவும் வைத்திருக்கிறது. மேலும் பல பட்டங்கள் பெற்று சமூகத்தின் பிரபுக்களுள் ஒருவனாக வாழ விரும்பியவனின் கனவு எதிர்பாராதவிதமாக  திடீரென ஒரே நாளில் சிதைகிறது. ஒரு மரணவீட்டில் சாவுப்பறை முழக்கி எல்லோரும் நடனமாடுகையில் தவறுதலாக இவனது துப்பாக்கி வெடித்து 16 வயதுப் பையன் ஒருவன் இறந்து போகிறான்.

 தன் குலத்தைச் சேர்ந்தவனை தானே கொல்லுதல் பெருங்குற்றம். குற்றங்களில் இரண்டு வகை உண்டு. ஆண் குற்றம், பெண் குற்றம். அறியாமல் செய்வது பெண் குற்றம். இவன் செய்தது பெண் குற்றமாகையால் 7 ஆண்டுகள் குலத்தை விட்டு விலக்கி வைத்து தண்டனை கொடுக்கிறார்கள். இரவோடு இரவாக வீட்டையும் கிழங்கு களஞ்சியத்தையும், வளர்ப்புப் பிராணிகளையும்  விட்டுவிட்டு குடும்பத்தோடு தன் தாயின் சொந்தங்கள் இருக்கும் கிராமத்தில்  தஞ்சமடைகிறான். ஒவ்வொரு தாயும் அவள் இறந்த பின்பாக அவளுடைய பிறந்த மண்ணிலேயே புதைக்கப்படுவாள். தந்தை அடித்ததும் தாயிடம் சென்று அழும் குழந்தை போல குற்றமிழைத்த ஆண் தன் குலத்தை விட்டு விலகி தாய் புதைக்கப்பட்ட மண்ணில் அவளின் பிறந்தகத்தாரிடம் தஞ்சம் புக வேண்டும் என்பது அவர்கள் நியதி. தந்தைவழிச் சமூகமாய் வாழ்ந்த போதிலும் தாயை “நேகா ” (தாயே தன்னிகரில்லாதவள்) என்று மதிக்கிறார்கள்.

7 வருடங்கள். காலம் கரையானைப் போல ஒக்கொங்வோவின் கனவுகளையும் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரித்து விடுகிறது. “ஒருவனுடைய இடம் அவனுக்காக காத்துக் கொண்டிருப்பதில்லை. ஒருவன் அவ்விடத்தை விட்டுப் போனவுடன் உடனடியாக வேறொருவன் அவ்விடத்தை நிரப்பி விடுவான். குலம் ஒரு பல்லியைப் போல. தன் வாலை இழந்தவுடன் அதற்குப் புதிய வால் விரைவிலே முளைத்து விடும்” என்கிறார் ஆச்சிபி. 3 பகுதிகளாகப் பிரியும் நாவல் ஒக்கொங்வோ  குற்றமிழைத்து குலம் விட்டு வெளியேறும் வரை முதல் பிரிவாகவும், அவன் தனது தாயின் பிறந்தகத்தில் வாழும் நாட்களை இரண்டாம் ,பிரிவாகவும் அவன் மீண்டும் குலத்திற்கே திரும்பிய பின்னான வாழ்க்கையை மூன்றாம் பிரிவாகவும் விவரிக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதியில் அவர்கள் கிராமத்திற்குள் மெல்ல கிறித்துவ சமயம் நுழைகிறது. அவனது மூத்த மகன் அவனை வெறுத்துப்  பிரிந்து கிறித்துவ சமயத்தில் இணையும் துயர சம்பவம் நடைபெறுகிறது. அவன் குலத்திற்குத் திரும்பும் போது சமயத்தோடு சேர்ந்து வெள்ளையர்களின் அரசாங்கமும் நுழைந்திருக்கிறது. வெள்ளையர்களின் அடக்குமுறையையும் சமயத்தையும் வெறுத்து அவர்களை வெளியேறும்படி போராடத் தொடங்குகின்றனர். அவர்களில் ஒக்கொங்வோ உட்பட 6 தலைவர்களை சமாதான பேச்சு வார்த்தைக்காக அழைக்கும் ஆங்கிலேயர்கள், எதிர்பாராத விதமாக அவர்களைக் கைது செய்து, தலை மயிரை மழித்து, சிறையில் அடைத்து 3 நாட்களுக்குப் பட்டினி போட்டு சித்திரவதை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்.... “தொழுத கையுள்ளும் படையொடுங்கும்”

ஒக்கொங்வோவை அந்த துரோகமும் அவமதிப்பும் அலைக்கழிக்கிறது. தான் கிராமமே நடுங்கும் மல்யுத்த வீரனாய் இருந்த நாட்களை எண்ணிப் பார்த்து அந்த கவுரவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான். அதன் தொடக்கமாக ஆங்கிலேய ஏவலாளி ஒருவனை  ஊர்ப் பொதுவில் வாளால் வெட்டிக் கொல்கிறான். ஆனால் அவன் எதிர்பார்த்த எழுச்சி மக்களிடம் வரும் முன்பாகவே அவன் வீட்டருகே இருக்கும் மரத்தில்  தூக்கில் பிணமாகத் தொங்குகிறான். அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டானா என்பதை சினுவா புதிராகவே விட்டு வைக்கிறார். அவன் இறந்தது குறித்து விசாரிக்க வந்த ஆங்கிலேய மாவட்ட ஆணையாளன், தான் எழுதப்போகும் நூலில் ஒக்கொங்வோவைப் பற்றியும் எழுத உத்தேசிக்கிறான். “ஏவலாளன் ஒருவனைக் கொன்று விட்டு தானும் தற்கொலை  செய்து கொண்ட இந்த மனிதனின் கதை படிப்பவருக்குச் சுவாரஸ்யமாக இருக்கும். எத்தனையோ விஷயங்களை உள்ளடக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் பல விபரங்களை வெட்டி விடுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று எண்ணிக் கொள்ளும் அவன் தன் நூலுக்கான பெயரையும் முடிவு செய்கிறான். “கீழ் நைஜரின் ஆதி இனக் குல மரபுகளைச் சமாதானமயப்படுத்தல்” என்பதே அந்நூலின் பெயர். 

முதல் பகுதியில் அறியாமல் செய்த தவறால் ஒக்கொங்வோவின் கனவுகளும்,  இரண்டாம் பகுதியில் அவன் சேமித்து வைத்திருந்த பிம்பமும் நம்பிக்கைகளும், மூன்றாம் பகுதியில் அவனது ஒட்டுமொத்த வாழ்வும் படிப்படியாகச் சிதைகின்றன. எவராலும் அணை போட்டுத் தடுத்துவிட முடியாத பெரும் பிரவாகமாக வாழ்க்கை அடித்து இழுத்துப் போகையில் நீர்வழிப்படுவதைத் தவிர்த்து வேறு வழியறியாத சிறு துரும்பெனவே மனிதர்கள் அலைக்கழிய நேர்கிறது. நாவல் முழுவதிலும் எவர் சார்பிலும் நின்று பேசாமல், உள்ளதை உள்ளபடியே காட்டிப் போகும் கதாசிரியனாக பாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு வழிவிட்டு ஒதுங்கியே நிற்கிறார் சினுவா ஆச்சிபி. வேற்று மதம் உள்ளே நுழைகையில் அதை ஏற்க முடியாமல் பதறித் தவிக்கும் மக்களிடையே அப்புது மதத்தை தங்களின் பற்றுக்கோடாக, நம்பிக்கை ஒளிக் கீற்றாக உணர்ந்து வழி மாறும் மனிதர்களின்  ஆசுவாசத்தினையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. 

நாவலில் எனக்கு மிகுந்த உணர்வெழுச்சியைக் கொடுத்த இடம் ஒன்றுண்டு. ஒக்கொங்வோவின் குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை அயல் குலத்தார் கொலை செய்ததற்கு பரிகாரமாக அக்குலத்திலிருந்து கன்னிப் பெண் ஒருத்தியையும், சிறுவன் ஒருவனையும் தானமாக அனுப்பி வைப்பார்கள். கன்னிப்பெண்ணை இறந்தவளுக்கு மாற்றாக அவள் கணவனுக்கு அனுப்பி விட்டு சிறுவனை என்ன செய்வது என்று முடிவு செய்யும் வரை ஒக்கொங்வோவின் பராமரிப்பில் வைத்திருக்க முடிவு எடுக்கப்படும். ஆரம்ப நாட்களில் தாயையும் தங்கையையும் நினைத்து அழும் சிறுவன் நாளடைவில் அவர்கள் வீட்டில் ஒருவனாகி ஒக்கொங்வோவின் மூத்த மகனுக்கு நெருங்கிய நண்பனாகி விடுவதோடு ஒக்கொங்வோவையும் ‘அப்பா’ என்றே அழைப்பான். திடீரென ஒரு நாள் குலத்தெய்வம் அச்சிறுவனை கொன்று விடச் சொல்லி விட்டது என்று கூறி அவனைக் கொல்வதற்கு ஒக்கொங்வோவையும் அழைப்பார்கள். சிறுவனின் தலையில் கள்ளுப் பானையை வைத்து முன்னால் நடக்கவிட்டு ஊர் எல்லையைத் தாண்டிய பின் அவனை வெட்டிக் கொல்வதாக ஏற்பாடு. சிறுவன் முதலில் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி பயந்தாலும் ஒக்கொங்வோவும் உடன்வருவதால் ‘அப்பா தான் இருக்கிறாரே’ என்ற தைரியத்துடனேயே நடப்பான். 

“இகெமெஃபுனாவுக்கு பின்னால் வந்த ஒருவன் தொண்டையைச் சரி பண்ணினான். இகெமெஃபுனா திரும்பிப் பார்த்தான். நின்று திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கும்படி அவன் உறுமினான். அவன் சொல்லிய முறை இகெமெஃபுனாவின் முதுகுத் தண்டை விறைக்கச் செய்தது. அவன் தூக்கிச் சென்ற கறுத்த பானையில் அவன் கை லேசாக நடுங்கியது. ஒக்கொங்வோ ஏன் பின்புறம் போய்விட்டான்? தன் கால்கள் உருகின மாதிரி அவன் உணர்ந்தான். திரும்பிப் பார்க்க பயமாக இருந்தது.தொண்டையைக் கனைத்த மனிதன் தன் வாளை உருவி உயர்த்தினான். ஒக்கொங்வோ வேறு பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான். வெட்டு அவனுக்குக் கேட்டது. பானை மண்ணில் விழுந்து உடைந்தது. “என் அப்பா.. என்னைக் கொன்று போட்டாங்க” என்று இகெமெஃபுனா அழுது கொண்டு அவனிடம் ஓடி வந்தது கேட்டது. பயத்தால் அலமந்து ஒக்கொங்வோவும் தன் வாளை உருவி அவனை வெட்டி விழுத்தினான். தான் பலவீனமானவன் என்று அவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பயந்தான்.”

என்று அந்த சம்பவத்தை விவரித்து முடிக்கிறார் ஆசிரியர். எனக்கு மனம் சிலிர்த்துச் சிலும்பி நின்றது. அடுத்த வந்த நாட்களில் உள்ளே தங்கி ஓயாமல் அறுத்துக் கொண்டிருந்த சம்பவங்களில் இதுவே முக்கியமானதாக இருந்தது. இகெமெஃபுனா இறந்த நாளிலிருந்து தன் தந்தையை உள்ளூர வெறுக்கும் மூத்த மகன் நாவோயெ, புதிய சமயத்தின் பாசுரங்களால் ஈர்க்கப்படுகிறான். “இருட்டிலும் பயத்திலும் இருந்த சகோதரர்களைப் பற்றிய இறைவன் புகழ்பாடிய பாசுரங்கள் அவன் இளம் ஆன்மாவைக் கவர்ந்தன. அவை தெளிவின்றியும் தொடர்ந்தும் அவனைப் பிடித்து அமுக்கிய பல கேள்விகளுக்கு விடை கூறுவன போல இருந்தன. அவனுடைய வாடிப் போன ஆன்மாவுக்குள் அப்பாசுரங்கள் நீரை வார்த்தது போன்ற ஆறுதலை அவன் உணர்ந்தான்”  என்று அவனது விட்டு விடுதலையாகும் உணர்வு புலப்படுத்தப்படுகிறது.

 மேலும் முதன் முறையாக ஒரு பெண்ணும் மதம் மாறுகிறாள். அவள் பெயர் நேகா. அவள் நிறை மாத கர்ப்பிணி. “நேகா முன்பு நாலு முறை கர்ப்பிணியாக இருந்து பிள்ளை பெற்றவள். ஒவ்வொரு முறையும் இரட்டைப் பிள்ளைகளையே பெற்றாள். உடனடியாக அப்பிள்ளைகளை வீசிவிட்டார்கள். அவளுடைய கணவனும் குடும்பமும் அப்படிப்பட்ட பெண்ணைக் குறை கூறுபவர்களாகவே இருந்தனர். அதனால் அவள் கிறித்தவர்களுடன் சேர ஓடிப் போனபோது அவர்கள் தேவைக்கதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. அவள் போனது நல்லது என்றே அவர்கள் நினைத்தனர்.” 

ஆப்பிரிக்க தேசத்தை எங்கோ தொலைதூரத்திலிருக்கும் அந்நிய பிரதேசமாகக் கருத விடாமல் நாம் இது வரை அறிந்திராத நம் தேசத்துப் பழங்குடி மக்கள்  என்றே உணருமளவிற்கு அத்தனை இணக்கமான சித்தரிப்புகள் இந்நாவலில் கூடி வந்திருக்கின்றன. இதனை  “அந்த வாழ்க்கை முறையை அறியாத மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆங்கிலம் அறிந்த உலக வாசகர்களின் தேவையை முன்னிட்டு நிகழ்த்தும் காரியம்”  என்கிறார் சுந்தரராமசாமி. என்றாலும் இதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. அறிமுகப்படுத்தும் பாணி தான் என்ற போதும் நாவலில் எந்த இடத்திலும் தோய்வோ சலிப்போ தென்படுவதேயில்லை. 

“மனிதன் வயிற்றிலோ வேறு அங்கங்களிலோ வீக்கம் ஏற்பட்டுத் துன்பப்பட்டால் அவனை வீட்டில் சாக விட மாட்டார்கள். அவனை தீய காட்டில் கொண்டுபோய் விட்டு அங்கே சாக விடுவார்கள். அந்த நோய் நிலத்துக்குச் சாபக்கேடாகையால் அவன் இறந்தால் நிலத்துள் புதைப்பதில்லை.”

”அந்தக் குழந்தை ஒரு ஒக்பான்ஜி. அதாவது கெட்டப்பிள்ளைகளில் ஒன்று. அது இறந்தவுடன் திரும்பவும் தாயின் கருப்பையில் பிறப்பதற்காக புகுந்து விடும் என்றும் அவன் சொன்னான். ... இறந்த பிள்ளைக்கு இனி துக்கங் கொண்டாடக் கூடாது என்று மந்திரவாதி கட்டளையிட்டான். ஒரு கூரிய கத்தியை எடுத்து பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டினான். பின் அதை கணுக்காலில் பிடித்து தனக்குப் பின்னால் நிலத்தில் போட்டு இழுத்துக் கொண்டு தீய காட்டுக்கு புதைப்பதற்கு எடுத்துச் சென்றான். அப்படிச் செய்த பிறகு அது திரும்பவும் வருவதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தரம் யோசிக்கும். “

“சில வேளைகளில் மூதாதையரின் ஆவிகள் - எக்வுக்வு - சில கீழ் லோகத்திலிருந்து உடம்பு முழுவதும் நாரினால் செய்யப்பட்ட உருவத்தில் தோன்றி நடுங்கிய வேறோர் உலகக் குரலில் பேசும். அவற்றுள் சில மிக ஊறு செய்யக் கூடியவை.  எல்லாவற்றிலும் பார்க்க பீதி அடையச் செய்வது இன்னும் வரவில்லை. அது எப்போதும் தனியத்தான் வரும். சவப்பெட்டி போன்றது அதன் உருவம். அது போகிற இடமெல்லாம் அழுகிய நாற்றம் வரும். ஈக்களும் அதனைத் தொடரும். உயிர் வாழ்பவர்களின் உலகம் மூதாதையர்களின் உலகத்துக்கு அதிக தூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வருவதும் போவதும் சர்வ சாதாரணம்.”

என்பதாக அம்மக்களின் நம்பிக்கைகள் உள்ளபடியே விவரிக்கப்பட்டுள்ளன. நாவலை வாசித்து முடிக்கையில் அவர்களது உணவு, வாழ்முறை, பழக்க வழக்கங்கள், திருமணங்கள், ஊர் விழாக்கள், போட்டிகள், போர்கள், கடவுள்கள், வழிபாடுகள், நீதிபரிபாலனம், சமூகத்தில் பெண்களின் இடம் ஆகியவை குறித்த பொதுவான மற்றும் தெளிவான சித்திரம் ஒன்று வாசிப்பவரின் மனதில் உருவாக்கப்படுகிறது. இவற்றை அறியாமை, மூடநம்பிக்கைகள் என்றெல்லாம் வாசகரின் அறிவு பகுத்துப் பார்ப்பதாயிருந்தாலும் ஒரு வகையில் அவை அம்மக்களின் தனித்துவம் மிக்க கலாச்சாரமாக விளங்குவதையும், தங்கள் கலாச்சாரத்தின் வேர்கள் ஒவ்வொன்றாய் துண்டிக்கப்படும் போது அம்மக்கள் சுவாசத்திற்கு ஏங்கும் மூச்சுக் குழல்களாகத் தவிப்பதையும் உணர முடிகிறது. 

முதன் முதலாய் ஆங்கிலேயர்கள் உமோஃபியாவிற்குள் கிறித்துவ தேவாலயம் அமைக்க இடம் கேட்கும் போது அவர்களுக்கு ஒரு துண்டு நிலம் வழங்க அம்மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்நிலம் அவர்கள் தீய காடு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பகுதியில் இருக்கிறது. தீய ஆவிகள் அலையும் அப்பகுதியில் இடம் கொடுத்தால் புதிய சமயத்தார் தானாகவே அழிந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை உடைத்து தேவாலயம் அவ்விடத்தில் நிமிர்ந்து நிற்கிறது. அவர்கள் அறியும் முன்னரே அவர்தம்   காலடிகளுக்குக் கீழாவே வேகமாக வேர் விட்டுப் பரவுகிறது.  கிராமத்து மக்களில் பலர் கிறித்துவத்தைத் தழுவிய பின்பாக அவ்வூரில் நடக்கும் கூட்டமொன்றில்..

“இன்று காலையில் இங்கு இருக்கும் நாம் மட்டுந்தான் எங்கள் தந்தையர்களுக்கு உண்மையானவர்கள். எங்கள் சகோதரர்கள் எங்களைக் கைவிட்டு விட்டார்கள். அவர்களின் தந்தையர் நாட்டை மாசுபடுத்தும் அந்நியர்களுடன் சேர்ந்து விட்டார்கள். நாங்கள் அந்நியர்களுடன் சண்டை செய்தால் எங்கள் சகோதரர்களையும் நாங்கள் அடிக்க வேண்டும். சிலவேளை எங்கள் குலத்தவர்களின் இரத்தத்தையும் சிந்த வேண்டி வரும். ஆனால் நாங்கள் அதைச் செய்யத்தான் வேண்டும். எங்கள் தந்தையர் அப்படியான காரியத்தைக் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் ஒரு காலமுமே அவர்களுடைய சகோதரர்களைக் கொல்லவில்லை. ஆனால் ஒரு வெள்ளையனும் அவர்களிடம் வரவே இல்லை. எனேக்கா பறவையைப் பார்த்து நீ ஏன் எந்த நேரமும் பறந்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டபோது அது சொன்னது: மனிதர்கள் குறி தவறாது சுடப் பழகி விட்டார்கள். அதனால் நான் ஒரு கிளையிலும் தங்காமல் இருக்கப் பழகிவிட்டேன் என்று. நாங்கள் இந்தத் தீமையை வேருடன் களைய வேண்டும். தீமையுடன் எங்கள் சகோதரர்கள் வந்தால் அவர்களையும்  நாம் வேருடன் அழிக்க வேண்டும். அதை நாம் இப்போதே செய்ய வேண்டும். கணுக்கால் அளவு மட்டும் தண்ணீர் இருக்கும் போதே இத்தண்ணீரை இறைத்துச் சுத்தம் செய்திட வேண்டும்”

என்று பேசுகிறார்கள்.  குலத்தைச் சேர்ந்தவனை அறியாமல் கொன்ற குற்றத்திற்காக ஒருவனை 7 வருடங்கள் ஊரை விட்டு விலக்கி வைக்கும் மக்கள், இறுதியில் பேசும் இச்சொற்கள் அவர்கள் மனதிலிருக்கும் வலியையும் கசப்பையும் வாசிப்பவருக்குக் கடத்துகின்றன. 

இந்நாவலில் நான் மிகவும் ரசித்த மற்றொரு விஷயம் நாவல் முழுவதும் விரவியிருக்கும் சின்னச் சின்ன நாடோடிக் கதைகள். கதை சொல்லல் ஆப்பிரிக்க மக்களின் பாரம்பரியத்தோடு இணைந்தது. ஆப்பிரிக்க இலக்கியம் ஏராளமான வாய்மொழி இலக்கியங்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்நாவலிலும் கதையோட்டத்தின் போக்கை கொஞ்சமும் குலைக்காமல்  அலாதியான நாடோடிக் கதைகள் இடம் பெறுகின்றன. ஆமையின் ஓடு ஏன் வழுவழுப்பாக இல்லை?,  வானத்திற்கும் பூமிக்கும் சண்டை வந்து பஞ்சம் வந்தபோது மக்கள் யாரைத் தூது அனுப்பினார்கள்? கொசு ஏன் காதருகே வந்து ரீங்கரித்தபடியே இருக்கிறது? ஓணான் ஏன் தன் தாயைக் கொன்றது? இடியையும் மழையும் மக்கள் என்னவாகப் புரிந்து கொள்கின்றனர்.. என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் எளிமையும் சுவாரஸியமும் கலந்த குட்டிக் கதைகள் பதில்களாய் அமைந்திருக்கின்றன.  எனக்கும் கூட, சிறு வயதில் இடி இடிக்கும் போது காதைப் பொத்திக் கொண்டு “அர்ஜுனா அர்ஜுனா” என்று கத்தியதையும், வீட்டிற்குள் குளவி நுழைந்து சுற்றிச் சுற்றிப் பறந்த போது “உம்பிள்ள கல்யாணத்துக்கு வந்துடறேன்.. போ..” என்று சொல்லிக் கொண்டே இருந்ததையும் இனிமையாக  நினைவூட்டிய கதைகள். 

அணிந்துரையில், ”சிதைவுகளைப் படிக்கும் தமிழ் வாசகன் தமிழ் வாழ்வுடனும் இந்திய வாழ்வுடனும் அது கொண்டிருக்கும் ஒற்றுமையை உணராமல் இருக்க முடியாது. அவர்களுடைய நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் நம் வாழ்வோடு நெருங்கி வருகின்றன. மேற்கத்திய வாழ்வின் அந்நியத் தன்மையை மொழிபெயர்ப்புகளில் கண்டு சலித்தவர்களுக்கு இத்தமிழாக்கம் நெருக்கமான அனுபவத்தைத் தரக் கூடியதாக இருக்கும்”  என்கிறார் சுந்தர ராமசாமி. இந்நூலை வாசித்த தமிழ் வாசகி என்ற முறையில் இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறேன்.  ஆச்சிபிக்கு நன்றி கலந்த அஞ்சலிகள்.

 - இம்மாத ‘பண்புடன்’ இணைய இதழில் வெளியான கட்டுரை

Thursday, February 28, 2013


லெபனான் பயணம் - பெய்ரூட் - 4லெபனான் போவதென்று முடிவான போதே எதைப் பார்க்கிறோமோ இல்லையோ கலீல் ஜிப்ரான் பிறந்த ஊரையும் அவர் வீடு மற்றும் மியூசியத்தையும் பார்த்து விட வேண்டும் என்று ஆசை பிறந்தது. அதை நிறைவேற்றாமல் திரும்பி வந்தது ஏமாற்றம் தான் என்றாலும் இன்னொரு முறை லெபனான் செல்வதற்கான காரணம் ஒன்றையும் திருப்பிக் கையோடு கொண்டு வந்திருக்கிறோம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டோம். ஜிப்ரான் பிறந்த ஊரின் பெயர் Bsharri. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வடக்கில் 130 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தது. ஹோட்டலின் டிராவல் டெஸ்க்கில், மலைக்கிராமம் என்பதால் அந்த ஊரையடைய 3 மணி நேரமாகும் என்றும் குளிர் 4 டிகிரிக்குக் குறைவாக இருக்குமென்றும் சொன்னார்கள். ஏற்கனவே எனக்கு சைனஸ் தொந்தரவும் சித்துவுக்கு தொடர் இருமலும் இருந்ததால் ரிஸ்க் எடுக்க பயமாக இருந்தது. ஜிப்ரானை பார்ப்பதற்கு எந்தளவிற்கு ஆசைப்பட்டோமோ அதே அளவிற்கு வாழ்நாளில் முதன் முறையாக பனி படர்ந்த சிகரங்களை நேரில் பார்க்கவும் ஆசைப்பட்டோம். இரண்டுமே இப்பயணத்தில் வாய்க்கப் போவதில்லை என்பது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. வாடியிருந்த என் முகத்தைப் பார்த்துவிட்டு  இலுப்பைப் பூ ஆப்ஷனாக ”அதற்கு பதிலாக நீங்கள் Barouk Cedars போகலாம்.. ஒரு மணி நேரம் தான் ஆகும்.. அங்கும் பனி மலைகள் இருக்கின்றன..அத்தனை குளிர் இருக்காது” என்றார்கள்.

சித்துவின் பிறந்தநாளன்று பரூக் செடார்ஸ் கிளம்பினோம். கிளம்பி 10 நிமிடத்திற்குள்ளாகவே நான் ஆர்வக் கோளாறு காரணமாக “பனி இருக்குமில்ல? ஐஸை தொடற அளவுக்கு கிட்ட போக முடியுமா..? ரொம்ம்ம்ம்ப குளிருமோ? பாப்பாக்கு கைக்கு க்ளவுஸ் வாங்காம வந்துட்டமே? என்னோட க்ளவுஸை போட்டு விட்டுரட்டுமா?  உங்களுக்கு இருமல் ஜாஸ்தியாய்ட்டா என்ன செய்யறது? மறக்காம குல்லா போட்டுக்கோங்க.. ஐய்யோ ரெண்டு பேரும் சாக்ஸ் எடுக்காம வந்துட்டமே.. எப்டி பனில கால் வைக்கறது?” என்றெல்லாம் பினாத்திக் கொண்டே வந்தேன். என் தொணதொணப்பு தாங்காமல் சித்து “அங்க பனி இருக்குமில்லையா?” என்று டிரைவரிடம் விசாரித்தார். அந்த இளைஞன் ரொம்பவும் சிரத்தையாக “பனி இருக்காது.. விண்டர் முடிஞ்சி ஸ்ப்ரிங் வந்துடுச்சே?” என்றான். நான் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் வாயடைத்து அடுத்த நிமிடம் சித்துவை முறைத்து, அதற்கடுத்த நிமிடம்  “பனியில்லாம அங்க போய் என்ன பண்றதாம்?” என்று தொடங்கி அடுத்த பினாத்தலை ஆரம்பித்தேன். நான் புலம்பிய புலம்பலில் அவனுக்கே தமிழ் புரிந்ததோ என்னவோ யார் யாருக்கோ அலைபேசி “அங்கே பனி இருக்கிறதா” என்று விசாரித்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழித்து “பனி இருக்கிறதாம்” என்று அவன் சொன்ன பிறகே என் நெற்றிச் சுருக்கம் சீரானது. :)பாதி மலை ஏறும் போது பனி படர்ந்த சிகரங்கள் தென்படத் துவங்கின. “அதோ.. ஸ்நோ இருக்குப்பா.. ஹைய்யோ எவ்ளோ அழகா இருக்கு..” என்று ஆரம்பித்த வேகத்திலேயே “அவ்வ்வ்வ்வ்வ்ளோ தூரத்துல இருக்கே? அங்க எப்டி நாம போக முடியும்? கீழ நின்னு இதான் பனி மலைன்னு காட்டப் போறான் போலிருக்கு” என்று திரும்பவும் சுருதி குறைந்து விட்டது.  அத்தனை உயரம் ஏறவே முடியாதென்று சர்வ நிச்சயமாய் நான் நம்பிக் கொண்டிருக்கையில் திடீரென்று பாதையின் ஒரு ஓரம் முழுவதிலும் மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பனி கொட்டிக் கிடந்தது!  குழந்தை தூங்கிக் கொண்டிருந்தாள்.. “கண்ணு இங்க பாருடா.. எவ்ளோ ஐஸ் பாரு..” எனது உற்சாகக் கூச்சலில் கண் விழித்தவள் நொடியில் பந்து போல துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டாள். எங்கள் மூவரைத் தவிர்த்து வேற்று மனிதன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பே வரவில்லை.. கீழே இறங்கி நானும் அம்முவும் குதித்துக் குதித்து பனியை அள்ளி வீசி  ஆனந்தமாக விளையாடினோம். பதிவில் எழுதியது போலவே பனியில் கால் புதைய நின்று கைகளிரண்டையும் அகல விரித்து “சித்தூஊஊஊ நான் உன்னைக் காதலிக்கிறேஏஏஏன்” என்று உரக்கக் கத்தி காலடியில் பனி உருகியதில் சறுக்கிக் கீழே விழ இருந்தேன்.. :))))))  எத்தனை விளையாடியும் அம்முவிற்கு சலிக்கவேயில்லை.. கிளம்பும் போது வர மாட்டேனென்று கை கால்களை உதைத்துக் கொண்டு கத்தியவளை குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு வந்தோம். அங்கிருந்து மேலும் 15 நிமிடங்கள் கார் மேலே ஏறியது.. இன்னும் மேலே.. இன்னும் மேலே என்று வானத்தையே தொட்டு விடுவோமோ என்றிருந்தது. இத்தனை உயரத்திற்குப் பாதை இருக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. அதற்கு மேலும் கூட பாதையும் பனியில் காலடித் தடங்களும் இருந்தன. நாங்கள் கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 6000 அடி உயரத்திலிருந்தோம். மீண்டும் கார் நின்ற இடத்தில் செடார் மரங்கள் அடங்கிய வனம் ஒன்று இருந்தது.  செடார் மரம் லெபனானின் தேசியச் சின்னம்.. அவர்களின் தேசியக் கொடியிலும் இதுவே இடம் பெற்றிருக்கிறது. 130 அடி உயரம் 8 அடி அகலம் வரையிலும் வளரக் கூடிய ஊசியிலைத் தாவரம். 600 வருட பழமையான செடார் மரங்களை இங்கே பாதுகாத்து வருகின்றனர். குளிரும்  வெயிலும் இதமாய்ப்  பரவி சூழலை சொர்க்கமாக்கிக் கொண்டிருந்தன. 


 மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கைப் பார்க்கும் போதும் நிமிர்ந்து இன்னமும் எட்டாத் தொலைவிலிருக்கும் ஆகாயத்தைப் பார்க்கும் போதும் அடிவயிற்றிலிருந்து எழும்பிய வெப்ப உணர்வை எப்படி மொழிபெயர்ப்பதென்று தெரியவில்லை ”மலைத்தொடருக்கு முன்னால் நின்று முணுமுணுத்துக் கொண்டேன் நான் நான் என்று”   - என்ற ஜெமோவின்  வாசகம் நினைவிற்கு வந்தது. இத்தனை நாட்களாய் அந்த “நான் நான்” ல் சிறுமையை  மட்டுமே உணர்ந்திருக்கிறேன்.   மலைத்தொடருக்கு முன்னால் நிற்காமல் அதன் உச்சியில் நின்று இதே வாசகத்தை முணுமுணுத்தால் அந்த “நான் நான்” ல் சிறுமைக்கு பதிலாய் கர்வம் ஒலிக்கிறது. ”தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?” என்ற மணிவாசகரின் கர்வம். :)

”என் 34 வது வயதில் முதன் முறையாகப் பனி மலையைப் பார்க்கிறேன்” என்றார் சித்து. கேக்கை இங்கே கொண்டு வந்து வெட்டியிருக்கலாமே என்று சின்னதாய் ஒரு ஆதங்கம் எழுந்தது. இல்லாவிட்டாலும் கூட  சித்து இதுவரை சந்தித்திராத அதியற்புதமான பிறந்தநாளாகவே அந்நாள் அமைந்தது. வீட்டிற்கு வந்ததிலிருந்து அம்மு ஃப்ரீசரில் பனிக்கட்டிகள் செய்து தரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறாள். அறை முழுக்க கொட்டி வைத்து விளையாடப் போகிறாளாம். :)

Wednesday, February 27, 2013


லெபனான் பயணம் - பெய்ரூட் - 3
இது Harissa. பெய்ரூட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நாங்கள் வைத்திருந்த லிஸ்ட்டில் இந்த இடம் இல்லை. ஆனால் சுற்றுலாப் பயணிகள் பிரைவேட் டாக்ஸி அல்லது தங்கியிருக்கும் ஹோட்டலின் கார் மூலம் பயணிப்பதாயிருந்தால் jeita Grotto - Harissa - Byblos ஆகிய மூன்றையும் ஒரே நாளில் பார்க்க வேண்டியிருக்கும். இதை ஒருநாள் பேக்கேஜாக வைத்து 100 டாலர்கள் வசூலிக்கிறார்கள். (ஹோட்டல் காருக்கு 120) பிரைவேட் டாக்ஸி டிரைவர்களில் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பெரும்பாலும் ஆதிகாலத்து சைகை மொழியிலேயே கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. 

Harissa ஒரு மலைக்கிராமம். கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றும் 15 டன் எடை கொண்ட அன்னை மேரியின் 27 அடி உயர வெண்கலச் சிலையும் இருக்கின்றன. 1908 ல் அமைக்கப்பட்ட சிலையாம்.  நிறைய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வெகு சிரமப்பட்டு படியேறி சிலையை அடைந்து அங்கிருந்து கீழே ஊரையும் மேலே அன்னையையும் இடையில் தங்களையும் புகைப்படம் எடுக்கிறார்கள். நான் கீழே நின்றபடி மேரியின் விரிந்த கரங்களில் தெரிவது கருணையா  கையறு நிலையா என்று  யோசித்துக்கொண்டிருந்தேன். பசி நேரமாகிவிட்டதால் அம்மு நசநசக்க ஆரம்பிக்கவும் சர்ச்சிற்குள் போகாமலேயே திரும்பி விட்டோம். மாதாவின் உருவம் பொறித்த கோப்பை ஒன்றை வாங்கி வந்தேன்.

கடற்கரை அருகிலிருந்து புறப்படும் ரோப் கார் மலை உச்சியை அடைகையில் திரும்பி கீழே பார்த்தால் ஒரே நேரத்தில் திகைப்பாகவும் திகிலாகவும்  இருக்கிறது.  சித்துவுக்கு ஆழத்தைப் பார்ப்பதென்றால் பயம்.. “என்னைப் பார்த்து சிரிக்கக் கூடாது” என்ற நிபந்தனையோடு வேர்க்க வியர்க்க கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். அம்மு சீட்டிலிருந்து கீழே இறங்கி மொத்தப் பெட்டியும் அதிருமளவுக்கு குதிப்பதும், கதவைக் கையால் உந்தித் தள்ளுவதுமாக திகிலூட்டிக் கொண்டிருந்தாள். பின்னாளில் பார்த்துச் சிரிக்கவும், அவ்வப்போது அவரை  ப்ளாக்மெயில் செய்யவும் உதவும் என்று சித்துவின் பயந்த முகத்தைப் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். :) “திரும்பி இதுல தான் கீழ போகனுமா? நான் மாட்டேன்.. பேசாம ஒரு டாக்ஸி புடிச்சி ரோடு வழியா கீழ போய்டலாம்” என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். நானோ ஜான்சிராணி போன்ற  முகபாவத்தோடு.. “டாக்சில போனா சாயந்திரம் ஆய்டும் கீழ போக....அதெல்லாம் வேணாம்.  இதுல என்ன பயம்? தைரியமா இருங்கப்பா” என்று அட்வைசினேன். உண்மையில் திரும்பி கீழிறங்கும் போது எனக்குத் தான் பயத்தில் உயிரே போய்விட்டது. வேகமாக கீழிறங்கிக் கொண்டிருக்கையில் பாதி வழியில் திடீரென எங்கள் பெட்டி நின்று விட்டது. லேசான மிரட்சியோடு “ஏன் நின்னுடுச்சி? ஏன் நின்னுடுச்சி?” என்று இருவரும் மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருக்கையில் சித்து திடீரென  “ஐய்யோ பின்னாடி ஒரு பெட்டி வேகமா வந்துட்டிருக்கு” என்றார்.  திரும்பிப் பார்த்தால் உண்மையாகவே பின்னால் ஒரு பெட்டி வேகமாக இறங்கி வந்து கொண்டிருக்க எங்கள் பெட்டி நின்ற இடத்திலேயே முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக அப்போது என் முகத்தை யாரும் புகைப்படம் எடுக்கவில்லை. எங்கள் பெட்டிக்கு சற்று அருகில் வந்து அதுவும் நின்று விட்ட பின்னரே கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. பின் சீராக அனைத்தும் கீழிறங்கின. கீழே இறங்க இறங்க கயிறு எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்றே புரியவில்லை. சர்ர்ரென்று இறங்கி  நேராக கடலில் போய் விழப்போவது போல ஒரு பிரமை தட்டியது. சித்துவுக்கு   பயம் தெளிந்து விட்டது போல...  வழியில் விதவிதமான அமைப்புகளில் கட்டபட்டிருந்த வீடுகளைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார். ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் முதல் 2 தளங்கள் பள்ளத்திலிருக்க  இரண்டாவது தளத்தோடு சாலை இணைந்திருந்தது. :)  

இப்போது யோசித்தால் ஹரிஸ்ஸாவில் மிகப் பிடித்தது தேவாலயமோ, அன்னை மேரியின் சிலையோ.. அங்கே தத்தித் திரிந்த குழந்தைகளோ அல்ல.. ரோப் கார் நின்று கிளம்பியதற்கு இடைப்பட்ட திகில் நிமிடங்களே என்று தோன்றுகிறது.

லெபனான் பயணம் - பெய்ரூட் - 2

பெரிய சங்கினை காதருகே வைத்துக் கேட்டிருக்கிறீர்களா? ஓயாத இரைச்சல் ஒன்று கேட்கும். கொஞ்சம் விலக்கியதும் சட்டென்று அமைதி சூழும். விளையாட்டுப் போல வேக வேகமாய் வைத்து எடுத்தால் இரைச்சலும் மெளனமும் மாற்றி மாற்றிக் கேட்கும். பெய்ரூட்டின் மைய நகரமும் இந்த பிப்லோஸ் நகரமும் இந்த சங்கு விளையாட்டினைத் தான் நினைவூட்டின. பெரிய இரைச்சலிலிருந்து சட்டென்று மிகப் பெரிய அமைதிக்குள் நுழைந்தாற் போலிருந்தது. Byblos.. கெளதம் மேனன் சொல்வது போல அவ்ளோ அழகு! 

8000 வருடங்களாய் இதே பெயரோடு தொடர்ந்து மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் உலகின் மிகப் பழமையான நகரம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் லெபனான் வாசிகள். இரண்டாவது படத்திலிருக்கும் சாலையில் நின்று சற்றே அண்ணாந்து பார்த்தால் திகைப்பிலும் மகிழ்ச்சியிலும் ‘ஹா’ வென்று ஒரு உணர்வு வருகிறது. ஒரு புறம் முழுவதும் திகட்டத் திகட்ட கடல்! மறுபுறத்தில் திகைக்க வைக்கும் மலைகள்!! மொத்த லெபனானுமே இவற்றுக்கு நடுவில் தான் வசிக்கிறது போல. சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டைச் சொடுக்கலுக்குப் பணிந்து ஸ்டூல் மீதேறி நின்று வாய் பிளந்து கர்ஜிக்கும் சிங்கத்தைப் போலிருக்கிறது கடல். சொன்ன இடத்திலெல்லாம் வளைந்து கொடுத்து நின்று கொஞ்சமாய் அலை வீசிக் கொள்கிறது. கிள்ளி முத்தமிடலாம் போல அழகு! 

இந்நகரத்தில் வானுயர்ந்த சிமெண்ட் கட்டிடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அனைத்தும் கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட நம்மை விட சற்றே உயரமான  இணக்கமான குடியிருப்புகளாகவே காட்சியளிக்கின்றன. தெருவோரங்களில் ஆரஞ்சுப் பழ மரங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. சுற்றுச்சுவர் மட்டுமல்லாது வீட்டின் சுவர் முழுக்க பூங்கொடிகளைப் படர விட்டிருக்கிறார்கள். ஒரு வீட்டின் சுவரில் படர்ந்திருந்த கொடியைப் பார்த்து “இது திராட்சை இலை மாதிரியே இருக்கில்லப்பா?” என்றேன் சித்துவிடம். “திராட்சைக் கொடியாவே கூட இருக்கலாம்.. யார் கண்டா?” என்றார். அம்மு குறுக்கிட்டு “இது திராட்சைக் கொடி இல்ல.. இது மேங்கோ கொடி” என்றாள். நாங்கள் சிரித்து “மேங்கோ கொடியா? மேங்கோவெல்லாம் எங்க காணோம்?” என்றோம். கொஞ்சம் போல யோசித்தவள், “மேங்கோல்லாம் கொண்டு வந்து மாட்டுவாங்க... நாளைக்குக் கொண்டு வந்து மேங்கோ கொடில மாட்டுவாங்க” என்றாள். :))))

லெபனான் பயணம் - பெய்ரூட் - 1
இது Jeita Grotto. பெய்ரூட் சுற்றுலாவின் அதிமுக்கிய அம்சம். ஆழத்தில் செம்மண் கொழித்துக் கொண்டோடும் நதியின் மேல் ரோப் காரில் 5 நிமிடம் பயணித்தால் ஒரு அற்புத குகை வாயிலில் இறக்கி விடுகிறார்கள். உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. (இவையனைத்தும் இணையத்தில் சுட்டவை) அதனால் குகையின் அழகை பேராசையோடு கண்களால் அள்ளி மனதின் கொள்ளளவு முழுக்க நிறைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளே பாறைகள் உருகி வழிந்தாற் போன்றும், மெல்லிய துணி மடிப்புகள் போன்றும், அழகிய சிற்பக் காடு போன்றும் தோற்றமளிக்கின்றன. கற்கள் மேலிருந்து உருகி வழிகின்றனவா அல்லது கீழிருந்து மேல்நோக்கி வளர்கின்றனவா என்று கணிக்க முடியாத தோற்றம்.  'தொடாதே' என்று பலவிடங்களில் எழுதியிருந்தாலும் கற்களின் பளபளப்பும், வழவழப்பும் ரகசியமாய்த் தொட்டுப் பார்க்கத் தூண்டுகின்றன. இங்கிருந்து படகில் வேறொரு குகைக்கு கூட்டிப் போவார்களாம். அங்கே ஆக்ஸிஜன் மிகக் குறைவாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் நாங்கள் போகவில்லை. குகையினுள்ளே மாயமாய் இயங்கிக் கொண்டிருப்பது மேலிருந்து செதுக்கும் சிற்பியின் கரங்களா, கீழிருந்து வளர்த்தெடுக்கும் குயவனின் கரங்களா என்பது இயற்கைக்கே வெளிச்சம். சென்ற ஓரிரு பயணங்கள் போலில்லாமல் குழந்தை இப்பயணத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறாள். குகையினுள் நுழைந்து நடந்து கொண்டிருக்கையில், "அம்மா நாம எங்க இருக்கோம்? மலைப்பாம்பு வயித்துக்குள்ள நடக்கறோமா?" என்றாள்! :)

Thursday, February 14, 2013


சமர் - வி(மர்)சனம்
நீ தானே என் பொன் வசந்தம், கடல், விஸ்வரூபம் ந்னு வரிசையா காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி “நமக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லலாமா கூடாதா? சொன்னா யாராச்சும் மூக்கு மேலயே குத்துவாங்களோ?” ந்னு என்னைய மிரள வெச்சீங்களே மக்கா.. ஒருத்தராச்சும் இந்த வீணாப்போன  ‘சமர்’ பத்தி முன்னாடியே சொன்னீங்களா? போன வருஷம் “ராஜபாட்டை” ந்னு ஒரு படத்துக்குப் போய்ட்டு அப்டியே  நேரா ஹாஸ்பிடல்ல போய் படுத்து 2 பாட்டில் டிரிப்ஸ் இறக்கிகிட்டு தான் வீட்டுக்கே போனோம். அதுக்கப்புறம் இந்த வருஷத்துல ஊரே ஒன்னு கூடி ‘வேணாம்.. பாக்காதீங்க’ ந்னு கத்தியும் கேக்காம கார்த்தியாச்சே.. அனுஷ்காவாச்சே ந்னு சபலப்பட்டு அலெக்ஸ் பாண்டியன் பார்த்தேன்... அதுவும் தன்னந்தனியா.  பாதிப்படம் பாக்கும் போதே “எனக்கு எதாவது ஆய்டுச்சுன்னா அதுக்கு இன்னின்னார் தான் காரணம்”னு  முன்னெச்சரிக்கையா சித்துவுக்கு ஒரு லெட்டர் எழுதி வெச்சிடலாமான்னு தோணுச்சு. ஆனா அதுக்கும் கூட தெம்பில்லாம போய் பழைய படங்கள்ல செத்தவங்க / மயங்கிக் கிடக்கறவங்க பக்கத்துல விஷம்னு எழுதின பாட்டில் ஒன்னு உருண்டு கிடக்குமே.. அதே மாதிரி லேப்டாப் பக்கத்துலயே குத்துயிரும் கொலையுயிருமா நான் உருண்டு கிடந்தேன். அதுக்கப்புறம் அதே மாதிரி நேத்து ஒரு விபத்து. :(

சம்பவம் நடக்கறதுக்கு மொத நாள் நைட் சித்து தனியா என்னவோ லேப்டாப்ல பார்த்துட்டு இருந்தார். கொஞ்சமே கொஞ்சம் பார்த்துட்டு  ரொம்ப உஷாரா ஆஃப் பண்ணிட்டார். சுகமோ துக்கமோ 2 பேரும் சேர்ந்து தான் அனுபவிக்கனும்ன்ற நினைப்பு கூட காரணமா இருக்கலாம். போதாக்குறைக்கு என்கிட்ட ”படம் நல்லா இருக்கும் போலிருக்கு.. நாளைக்கு நாம சேர்ந்து பாக்கலாம்”ன்னு சொல்லிட்டுத் தூங்கினார். இன்னிக்கு பாக்க ஆரம்பிச்சோம்.. ஆரம்பத்துல என்னவோ நல்லாத்தான் போய்ட்டிருந்துது..போகப் போகத் தான் சகிக்கல.   இருங்க.. கதை என்னன்னு சுருக்கமா சொல்ல முடியுதான்னு பாக்கறேன். இதை சுருக்கமா சொன்னாலே உ.த அண்ணாச்சி ’என்னையவா நக்கல் பண்ற?’ ந்னு சண்டைக்கு வர வாய்ப்பிருக்கு. :)

விஷால் பேரு ஷக்தி. ஊட்டில இருக்கார். அவரோட காதலி சுனைனா ”நீ நான் எதிர்பார்க்கற மாதிரியெல்லாம் இல்ல.. என் பர்த் டேவ கூட மறந்துட்ட.. நாம பிரிஞ்சிடலாம்” நு சண்டை போட்டுகிட்டு பாங்காக் போய்டறாங்க. 3 மாசம் கழிச்சு  “உன்னை மறக்க முடியல.. ரொம்ப மிஸ் பண்றேன். பாங்காக் கிளம்பி வா” ந்னு ஃப்ளைட் டிக்கெட்டோட  சுனைனாகிட்டருந்து ஒரு லெட்டர் வருது.. இவரும் கிளம்பிப் போய் சென்னை ஏர்போர்ட்ல பேந்த பேந்த முழிச்சிட்டு நின்னு த்ரிஷாவும் பாங்காக் தான் போறாங்கன்னு அவங்களை ஃப்ரண்ட் புடிச்சிகிட்டு பாங்காக் போய்ச் சேர்றார். அங்க சுனைனா வெய்ட் பண்ண சொன்ன இடத்துல நாள் முழுக்கக் காத்திருந்தும் அம்மணி வரல. நைட் போலீஸ்கார் சம்பத் வந்து என்னா ஏதுன்னு விசாரிச்சுட்டு என் வீட்ல தங்குன்னு கூட்டிட்டு போறார்.  ரெண்டாவது நாளும் சுனைனா வராததால இவரு வெறுத்துப் போய் நான் ஊருக்கே போறேன்னு ரிடர்ன் டிக்கெட் வாங்கி வெச்சிருக்கும் போது திடீர்னு ஒரு டிவிஸ்ட்டு.  ஒரு கும்பல் கார்ல வந்து பொட்டுப் பட்டாசு வெடிக்கறாப்ல விஷாலை கண்டமேனிக்கு சுடுது. (இத்தனை வருஷம் படம் பார்த்த அனுபவத்தை வெச்சி ஒரு குண்டு கூட விஷால் மேல பட்டிருக்காதுன்னு உமக்குத் தெரிஞ்சுதுன்னா நீரும் தமிழரே!)  அப்போ இன்னொரு கும்பல் வந்து பதிலுக்கு பட்டாசு வெடிச்சு விஷாலை காப்பாத்தி கார்ல ஏத்தி கூட்டிட்டு போகுது.  கூட்டிட்டு போற ஆள் “ஷக்தி சார்..நான் உங்க பி.ஏ சார்.. மனோகர். என்னைத் தெரிலயா? என்னாச்சு சார் உங்களுக்கு?” அப்டின்றார். கார்ல இருக்கற எல்லா மேகசின்லயும் விஷால் படமும் பேரும் போட்டு பெரிய பிசினஸ் மேக்னட்னு  எழுதியிருக்குது. விஷாலை நேரா ஒரு  ஹோட்டலுக்கு கூட்டிட்டுப் போய் தங்க வைக்கறாங்க. இவரும் ‘நான் அவனில்லை’ ந்னு கத்திகிட்டே என் பாஸ்போர்ட்டைப் பாருங்கன்னு எடுத்துக் குடுக்கறார். ஊட்டிய விட்டு மொத தடவையா பாங்காக் வந்திருக்கற விஷால் பாஸ்போர்ட்ல எல்லா நாட்டு விசாவும் இருக்குது. விஷால் கன்னாபின்னான்னு குழம்பி நம்மளையும் குழப்பி த்ரிஷாகிட்ட போய் புலம்பறார். அவங்க போலீஸ்கிட்ட கூட்டிட்டு போறாங்க. போலீஸ் விஷாலுக்கு சல்யூட் அடிக்குது.. பேங்க்குக்கு போய் ”நான் வேற ஆளு என் கையெழுத்தை செக் பண்ணுங்க”ன்னு கையெழுத்து போட்டுக் குடுத்தா அது மேட்ச் ஆகி அக்கவுண்ட்ல கோடிக்கணக்குல பேலன்ஸ் காமிக்குது. த்ரிஷாவே மிரண்டு போய் “யார் நீ உண்மையை சொல்லு..” ந்னு மிரட்டறாங்க. ஊடால ஹோட்டல் லிப்ட்ல ஒரு பொண்ணு “நீ மாட்டிகிட்டிருக்க.. உடனே ஓடிப் போயிரு” ந்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி ரகசியமா கைல குடுக்குது. அது டைரக்டர் ரகசியமா நமக்குக் குடுக்கற மெசேஜ்ன்னு அப்பவே உங்களுக்குப் புரிஞ்சிடுச்சின்னா உங்க ஐ க்யூ லெவல் 200 க்கு மேல இருக்குன்னு அர்த்தம். நீங்க எங்கயோஓஓ போய்டுவீங்க.. :))

இப்ப அடுத்த டிவிஸ்ட்டு. மறுநாள் ஹோட்டலுக்குப் போனா விஷாலோட செக்யூரிட்டீஸ், பி.ஏ ந்னு யாரையும் காணோம். இங்க ஷக்தின்னு யாருமே தங்கலன்னு சொல்லி ஆள் வெச்சு துரத்தறாங்க. அப்ப தான் ஹீரோ ஒரு விஷயத்தை கவனிக்கறார்.. அவர் மொத நாள் லிப்ட் ஏறப் போகும் போது டென்ஷன்ல லிப்ட் பக்கத்துல இருந்த 5 குருவி பொம்மைகள்ல ஒன்னை வேற டைரக்‌ஷன்ல திருப்பி வைப்பார். அது இன்னும் அதே திசைல தான் இருக்கும்..  அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூம்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். ஒரு போலீஸ்கார் வீட்ல 2 நாள் தங்கியிருந்தாரே அந்த வீட்லயும் அதே மாதிரி 2 குருவி பொம்மை இருக்கும். எல்லாம் ஒவ்வொன்னா பளிச் பளிச் நு மின்னல் மாதிரி அவருக்கு நியாபகம் வந்ததும் எதோ பெரிய உண்மையை கண்டுபிடிக்கப் போறார்னு எதிர்பார்த்தேன்.. அதான் இல்ல. ”எல்லாப் பக்கமும் குருவி பொம்மையைக் காட்டறாங்க.. அப்டின்னா என்ன அர்த்தம்? குருவி படத்துல ஹீரோயின் யாரு? த்ரிஷா! அப்ப த்ரிஷா தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்கனும்” அப்டின்னு சி ஐ டி ஜெய்சங்கர் ரேஞ்சுக்கு நானே உண்மையைக் கண்டுபிடிக்க டிரை பண்ணிட்டிருக்கேன்... இந்த மக்கு விஷால் என்னடான்னா அமிர்தாஞ்சன் விளம்பரம் மாதிரி தலையைப் பிடிச்சிகிட்டு “குழப்பமா இருக்கே” ந்னு கத்தறார். 

அப்றம் மறுக்கா ஒரு டிவிஸ்ட்டு.. எதேச்சையா சுனைனாவே நேர்ல வந்து ”நான் உனக்கு லெட்டர் எதுவும் போடவே இல்ல.. உன்னை காதலிக்கவும் இல்ல” ந்றாங்க.  அதுக்கு பதிலா த்ரிஷா “நான் உன்னை காதலிக்கறேன்”ன்றாங்க. விஷால் முடியாதுன்றார். நியாயமா இந்த இடத்துல “காதல்ன்றது... “ அப்டின்னு தொடங்கி சோகமா 7 பக்கத்துக்கு வசனம் வெச்சிருக்கனும். ஹ்ம்ம்.. டைரக்டருக்கு சாமர்த்தியம் போதல.  அப்றம் விஷால் ”நான் ஊருக்கே போறேன்”னு  கிளம்பும் போது ஏர்போர்ட் வாசல்ல த்ரிஷாவை யாரோ துரத்தறாங்க. இவரு திரும்பி வந்து சண்டை போட்டு காப்பாத்திட்டு இனிமே உன் கூடவே இருக்கேன்றார். அப்றம்  தனக்கு பிஏ ந்னு சொல்லிட்டிருந்த ஆளை எங்கயோ ரோட்ல பார்த்து அரை மணி நேரமா துரத்தி ஒரு மணி நேரம் அடிச்சு “நீ யாரு.. என்ன ஏது” ந்னு கேள்வியா கேக்கறார் ஹீரோ. அந்தாள் ”நான் உண்மையை சொல்லலன்னா நீ என்னை கொன்னுடுவ.. நான் உண்மையை சொல்லனும்னு நினைச்சாலே அவங்க என்னை கொன்னுடுவாங்க. அவங்களை நீ நெருங்கவே முடியாது.. அவங்க கடவுள் டா..” ந்னு அவங்க அப்டி அவங்க இப்டின்னெல்லாம் சொல்லிட்டு லூசு மாதிரி “அது என்ன உண்மைன்னா” ந்னு சொல்ல ஆரம்பிக்கறார். உடனே யாரோ சுட்டு கொன்னுடறாங்க. அந்தாளே குப்புறடிக்க சாக்கடைல விழுந்துடறார். காலைல போலீஸ் வந்து பிணத்தை எடுத்தா அது வேற யாரோட பிணமோவாம். அது ஒரு கஞ்சா வியாபாரி. ”உனக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு? யூ ஆர் அண்டர் அரஸ்ட்” னு விஷாலை ஜெயில்ல போட்டுடறாங்க. அவ்வ்வ்வ்வ்வ்.. அய்யோ.. அம்மா.. அய்யோ.. அம்மா.. 

அப்றம் த்ரிஷாவோட அங்கிள்னு சொல்லிகிட்டு ஜெயப்பிரகாஷ் வந்து விஷாலை வெளில கொண்டு வர்றார். மறுநாள் திரும்ப விஷால் இந்தியா கிளம்பினா திரும்ப த்ரிஷாவை யாரோ கடத்திட்டு போய்டறாங்க. கடத்திட்டு போற வேனை வேகமா ஃபாலோ பண்ணுங்கன்னு ஜெயப்பிரகாஷ்கிட்ட சொன்னா அவர் வண்டிய ஓரமா நிறுத்தி வெச்சிட்டு ஒரு படகுல விஷாலை எங்கயோ கூட்டிட்டு போறார். அங்க ஸ்ரீமன் உக்காந்துகிட்டு “அந்தப் பொண்ணை மாலி தான் கடத்தியிருப்பான்.. அவனை நெருங்கவே முடியாது. அவளை மறந்துடுங்க” ந்னு சொல்றார். விஷால் அங்க போய் மாலிய அடிச்சிப் போட்டுட்டு த்ரிஷாவை காப்பாத்தறார். த்ரிஷாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்ற முடிவுக்கு வரும்போது த்ரிஷாவோட காதலன்னு சொல்லிகிட்டு ஒரு ஆள் வர்றார். ஊடால ஊடால 2 வில்லனுங்க நைட்ரஸ் ஆக்ஸைடை  மோந்த மாதிரி சும்மனாச்சுக்கும் சிரிச்சிகிட்டே இருக்காங்க. அப்றம் த்ரிஷா செத்துப் போறாங்க... ஆனா சாகல. அப்றம் 2 வில்லனுங்களும் செத்துப் போறாங்க.. ஆனா பாருங்க அவங்களும் சாகல. கடைசியா வில்லன்ஸோட ஆளுங்களே அவங்களைக் கொல்றாங்க. அப்பவும் அந்த லூசுங்க பக பக ந்னு சிரிச்சிகிட்டே இருக்குதுங்க. இதுங்களுக்கு ஒரு பைசாப் பொறாத  ஃப்ளாஷ்பேக் வேற.  முக்கால்வாசிப் படம் பார்க்கும்போது விஸ்வரூபத்துக்கு வருதோ இல்லையோ சமருக்கு பார்ட் 2 கண்டிப்பா வந்தே தீரும்.. இது இப்போதைக்கு முடியாது போலயே ந்னுசெம டயர்டாய்டுச்சி. :((

கட்டங்கடைசியா வில்லனுங்களும் செத்தப்புறம் யாருக்குன்னே தெரியாம விஷால் ஒரு பஞ்ச் டயலாக் பேசறாரு.. “வாழ்க்கை சிலருக்கு வரமா இருக்கும்.. சிலருக்கு சாபமா இருக்கும்.. ஆனா எனக்கு அது யுத்தம்டா” ந்னு. சொக்கத்தங்கம்  படத்துல தன் தங்கச்சிய கிண்டல் பண்ணினவனை ஓங்கி அறைஞ்சிட்டு ”இன்னும் 10 நிமிஷத்துக்குள்ள இவனை ஹாஸ்பிடல் கொண்டு போங்க.. இல்லன்னா செத்த்த்த்துடுவான்” அப்டின்னு கேப்டன் சிரிக்காம சொல்வார். அதை பாக்கறப்பல்லாம் நான் சிரி சிரின்னு சிரிப்பேன். அதுக்கப்புறம் இந்த டயலாக்குக்கு தான் விழுந்து விழுந்து சிரிச்சேன். படம் முடிஞ்சி எழுந்து ரூமுக்குள்ள போகும் போது காலண்டர்ல பார்த்தா 16 - 02 - 2013 ந்னு இருந்துச்சு.. அப்டியே ஷாக்காகி “ ஏம்ப்பா 2 நாளாவா படம் பார்த்துகிட்டு இருக்கோம்?” ந்னு சித்துகிட்ட கேட்டேன். “இல்லம்மா 12 மணி ஆய்டுச்சேன்னு நான் தான்  தேதி கிழிச்சேன்.. கூடவே 2 ஷீட் சேர்ந்து கிழிஞ்சிடுச்சி” ந்னார்.  :)No comments: