உதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் முருகபூபதி

.
( முற்குறிப்பு:    நேற்று   முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட   விடியலின் வீச்சு  சிறப்பு மலரில் வெளியான  கட்டுரை.   வடபுலத்திலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் காலைக்கதிர் நாளிதழின்  முன்னோட்டமாக வெளியானது  விடியலின் வீச்சு)


கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான  ஊடகத்துறையின் வளர்ச்சியில்  தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
விடியல் - உதயம்  முதலான  சொற்பதங்கள்  இயற்கையுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் மனிதவாழ்வு மீதான நம்பிக்கையையும் சார்ந்திருக்கிறது.
இற்றைக்கு 175 வருடங்களுக்கு  முன்னர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையிலிருந்து வெள்ளிதோறும் வெளியான உதயதாரகையிலிருந்து இன்று வெளியாகும் காலைக்கதிர் வரையில் இலங்கையின் வடபுலத்திலிருந்து வெளியான பத்திரிகைகளின் பெயர்களிலும் மேற்குறிப்பிட்ட இயற்கையின் எழுச்சியை காணமுடிகிறது.
அன்று பல தசாப்தங்களுக்கு முன்னர் அச்சு ஊடகமாக வெளியான உதயதாரகைக்கும், இந்த யுகத்தில் மின் ஊடக கால கட்டத்தில் வெளியாகும் (அச்சுமுறைமையில் மாற்றங்கள் பலவற்றைக்கடந்துள்ள நிலையில்) காலைக்கதிருக்கும் இடையே நிரம்பவேறுபாடுகள் இருந்தபோதிலும், அவற்றின் நோக்கங்கள் ஒன்றாகவே திகழ்ந்திருக்கிறது.
மக்களுக்கு செய்தியை தருவது. அதிலும் உண்மையைத்தருவது. உண்மைக்கு சுடும் இயல்பும் இருக்கிறது.

இலங்கைத்தமிழ்ப்பத்திரிகைகளின் வளர்ச்சியை அவதானிக்கும் அல்லது ஆய்வு செய்யப்புகும் எவரும் 1930 இன் பின்னரே இலங்கை தமிழ் சமுதாயத்தில் தமிழ் தேசியப்பத்திரிகைகளின் வளர்ச்சி விகசிக்கத்தொடங்கியது என்ற முடிபுக்கு வருவர்.



இலங்கை வடபுலத்திலிருந்துதான் இந்த விகசிப்பு 1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி ஈழகேசரி என்ற பெயருடன் தொடங்கியிருக்கிறது.
அதன் பின்னர்தான் அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து வீரகேசரியின் முதலாவது இதழ் வெளியாகிறது.
அதற்கும் பிறகுதான் 1932 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து தினகரன் வெளியாகிறது.



1930 இல் வடபுலத்திலிருந்து வெளிவரத்தொடங்கிய ஈழகேசரி 1958 இல் தனது 28 வயதில் ஆயுளை நிறுத்திக்கொள்கிறது.
அஸ்தமனத்திலிருந்து உதயம் என்பார்களே - அவ்வாறு அதே 1958 ஆம் ஆண்டு வடபுலத்திலிருந்து ஈழநாடு பிறக்கிறது. 11-02-1984 இல் தனது வெள்ளிவிழா இதழையும் தந்தது. இடையில் 1981 ஆம் ஆண்டு தீக்குளித்து புனிதத்தை நிரூபித்தது.

ஈழநாடு 1958 இல்  வெளியானதும் அதன் முதல் பிரதியை எடுத்துக்கொண்டு ஆசிபெறுவதற்காக யோகர் சுவாமிகளிடம் சென்றார்களாம்.
அலட்சியமாகப்பேசினாலும் உள்ளர்த்தத்துடன் பேசும் இயல்புகொண்டிருந்த யோகர்சாமி " ஏசுவார்கள்., எரிப்பார்கள். துணிந்து நடத்துங்கள். "  என்றுதான் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
காலம் கடந்து 23 வருடங்களின் பின்னர் அவர் வாக்குப்பலித்தது. புத்தரும் அண்ணலும் வந்த  திசையிலிருந்து வந்த அமைதிகாப்போரும் (?) தம் பங்குக்கு குண்டை வீசினர்.

வடபுலத்தின் வட்டுக்கோட்டையிலிருந்து ஆரம்பித்து ஒலித்த ஓங்காரக்  குரல் முள்ளிவாய்க்காலில்  அவலக்குரலாக  நசிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் வடபுலத்தில் மட்டுமல்ல இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் ஊடகவியலாளர்களின் உயிர் பறிக்கப்பட்டது.
தந்தைக்காக மகனை காவுகொண்ட அநியாயம் நிகழ்ந்ததும் வடபுலத்தில்தான். இவற்றுக்கெல்லாம் காரணம் உண்மை சுடும் என்பதுதான்.

உதயதாரகை, ஈழகேசரி, ஈழநாடு, சுதந்திரன்,  ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம், வெள்ளிநாதம், திசை, நமது ஈழநாடு, நமது முரசொலி,  வைகறை,  தாய்வீடு, உதயன், வலம்புரி, ( இதற்கு மேலும் இருக்கலாம்) என்று வடபுலத்திலிருந்து பல பத்திரிகைகள் வந்துள்ளன.
உதயன், வலம்புரி, தினக்குரல், தமிழ் மிரர், தினமுரசு என்பன பிற்காலத்தில் வெளிவரத்தொடங்கின.
இவ்வாறு எத்தனை பத்திரிகைகள் தோன்றினாலும் மறைந்தாலும் மக்களின் வாசிப்புத்தேவையை  பூர்த்தி செய்யமுடியாது.
செய்தியைத்தேடும்  தாகம் இருக்கும் வரையில் ஊடகத்துறையின் தேவையும் இருக்கும். இன்று உடனுக்குடன் உலகெங்கும் நடக்கும் சம்பவங்களை அறியக்கூடிய ஊடகங்கள் பல்கிப்பெருகிவிட்டன. மின் ஊடகத்துறையின் வீச்சு பல பரிமாணங்களைத்தொட்டுவிட்டது.
முகநூல் கலாச்சாரம் செய்தி ஊடகத்தையும் விஞ்சும் அளவுக்கு வளர்ந்தவிட்டது.

ஆயினும் , வாசகர்களின் தேவை குறைந்தபாடயில்லை. அதனால் புதிய புதிய பத்திரிகைகள் அச்சு வாகனம் ஏறுகின்றன.
குறிப்பாக முதிய தலைமுறையினரில் பெரும்பாலானோர் இன்னமும் அச்சுபத்திரிகைகளையே எதிர்பார்த்திருக்கின்றனர். அதில் நம்பிக்கை வைத்து வாழ்கின்றனர்.

தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எத்தனை இணைய இதழ்கள் வெளிவந்தாலும் வகை தொகையின்றி வலைப்பதிவுகள் இருந்தாலும் மூத்தோர் நம்பியிருப்பது அச்சில் வெளிவரும் பத்திரிகைகள்,  இதழ்களையே.
அதனால் அச்சில் வெளியாகும்  பத்திரிகைகளின் வரவு எதிர்பார்க்கப்படுகிறது.
இங்குதான் ஒரு விடயத்தை நாம் நினைவூட்டவேண்டியிருக்கிறது.
" தமிழர்கள்  அரசிலந்து, ஆண்மை குன்றி, வறுமையிலும் நோயிலும்  வீழ்ந்து  அரிச்சுவடியை  மறந்து  நாசமடைந்துவரும் இக்காலத்தில்   தமிழ்நாட்டுப்பத்திரிகைகள்  மட்டும்  உன்னத நிலையிலிருத்தல்  எப்படிச்சாத்தியமாகும்...?

ஆயினும்,  பத்திராதிபர்கள்  கொஞ்சம்  மனமிரங்கியும் ஜனங்களிடமிருந்து  தாம்  திரவியம்  வாங்குவதைக்கருதியும் இயன்ற வரை  தமது தொழிற்கூடங்களிலே நன்றாக எழுதப்படிக்கத் தெரிந்த  மனிதர்களை  நியமிப்பது  தர்மமாகும்" என்று  மகாகவி பாரதியார்   தாம் வெளியிட்ட இந்தியா என்னும் பத்திரிகையில்  ( 24-04-1909 ஆம் திகதி ) எழுதியிருக்கிறார்.
எனவே,  இதழியல் ஆர்வத்தை மாத்திரம் மூலதனமாகக்கொண்டிருப்பதில்லை.  அதற்கும் அப்பால் உண்மையை  ஆதாரமாகக்கொண்டிருக்கிறது.
காலைக்கதிரும் கடக்கவேண்டிய தூரம் அதிகம். உண்மையின் வெளிச்சத்தில் அது தன் பயணம் தொடரும். வாழ்த்துவோம்.
( நன்றி: விடியலின் வீச்சு )
----0-----

No comments: