.
புகலிடத்தில் தமிழ் வானொலிகளை செவிமடுக்கும் மூத்ததலைமுறையும்
தாயகத்தில் தமிழ் வானொலிகளின் அபிமான நேயர்களாகியிருக்கும் இளம்தலைமுறையும்
( அவுஸ்திரேலியா மெல்பனில் அண்மையில் கொழும்பு இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இளம்படைப்பாளி இரகுபதிபாலஸ்ரீதரன் திருச்செந்தூரனின் 'திரைவிலகும்போது ' நாடக நூல் அறிமுகவிழாவில் நிகழ்த்தப்பட்ட தலைமையுரை)
இலங்கை வானொலியின் தமிழ்த்தேசியசேவையும் வர்த்தகசேவையும் முன்னர் கடல் கடந்தும் இந்தியாவில் புகழும் செல்வாக்கும் பெற்றிருந்தது. அதற்குக்காரணம் அவற்றில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளின் தரமும் உள்ளடக்கமும்தான்.
தேசிய சேவையில் இடம்பெற்ற பல தரமான நிகழ்ச்சிகள் தேர்ந்த நேயர்களுக்கும் வர்த்தகசேவையில் பல நிகழ்ச்சிகள் ஜனரஞ்சகமாகவும் இளம்தலைமுறையினரை கவரும் வண்ணமும் இருந்தமைதான் அடிப்படைக்காரணம்.
எம்மில் பலர் அவுஸ்திரேலியா உட்பட பல புகலிடநாடுகளுக்குச்சென்றபின்னர் , இலங்கையில் மேலும் சில தனியார்
நிறுவனங்களின் வானொலிகள் ஆரம்பமாகிவிட்டன. ஏறக்குறைய கால்நூற்றூண்டுக்கு முன்னர் சக்தி வானொலியும் அதன்பின்னர் சூரியன் FM வானொலியும் இலங்கை
வானொலியைக்கடந்து மக்களிடம் செல்வாக்குச்செலுத்தின.
குறிப்பாக சூரியன் FM வானொலியில் ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகள் அதிலும் திரைப்படப்பாடல்கள் தொடர்பான நேயர்களின் உறவு நெருக்கமானது. இதில் இளம்தலைமுறையினர் முக்கியமானவர்கள்.
ஆனால் - அவுஸ்திரேலியா முதலான நாடுகளில் பல வானொலிகளின்
அபிமான நேயர்களாக விளங்குவது மூத்த தமிழ்த்தலைமுறையினர்தான். அதற்கான காரணம் புரிந்துகொள்ளத்தக்கது.
இலங்கையில் எமது மூத்தலைமுறையினரை தொலைக்காட்சி நாடக சீரியல்கள் பெரிதும் கவர்ந்துவிட்டன. ஆயினும், சூரியன் FM வானொலியில் தொடர்ச்சியாக நாடகங்கள் ஒலிபரப்பாகியதால் எமக்கு ஒரு இளம் நாடக ஆசிரியர் கிடைத்துள்ளார். திருச்செந்தூரன் இன்று எம்மத்தியில் அறிமுகப்படுத்தும் திரைவிலகும்போது நாடகநூலில் சில நாடகங்கள் அவருடைய அண்ணன் லோஷன், தற்பொழுது பணிப்பாளராக இருக்கும் சூரியன் FM வானொலியில் ஒலிபரப்பாகியிருக்கின்றன.
திருச்செந்தூரன் வானொலிக்காக மாத்திரமின்றி சில கல்லூரி விழாக்களுக்கும் தமிழ்த்தினப்போட்டிகளுக்கும் நாடகங்கள் எழுதியவர். இதில் இடம்பெற்றுள்ள ஒரு நாடகத்தை அவர் ஏற்கனவே சிறுகதையாகவும் வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் இதற்கு முன்னர், சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் , சமூக அரசியல் ஆய்வு முதலான துறைகளில் பல நூல்கள் வெளியாகியிருக்கின்றன.
அதே சமயம் - நாடகத்துறையிலும் சிலரது நூல்கள் வரவாகியுள்ளன. எஸ்.பொன்னுத்துரையின்
வலை நாடகத்தொகுப்பு, கவிஞர் அம்பியின் அந்தச்சிரிப்பு என்ற கவிதை நாடகத்தொகுதி, மாவை
நித்தியானந்தனின் சிறுவர் நாடக நூல்கள், அண்ணாவியார் எழுதிய இளைய பத்மநாதன் எழுதிய மீண்டும் பாரதம் மீண்டும் இராமாயணம் , ஏகலைவன், தீனிப்போர் முதலான கூத்து அரங்காற்றுகை
தொடர்பான நூல்கள் இங்கு வெளியாகியிருக்கின்றன.
ஆனால், இன்றுதான் முதல் தடவையாக ஒரு வானொலி நாடகநூல் எமக்கு இங்கு வரவாகியுள்ளது.
இன்றைய விழாவின் நாயகன் திருச்செந்தூரனின் பெற்றோருடன் எனக்கு நீண்டகாலமாக இனிய நட்புறவு தொடர்கிறது. இவருடைய தந்தை
இரகுபதி பாலஸ்ரீதரன், கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்தவர். தாயார் திருமதி
சுமதிபாலஸ்ரீதரன் மூத்த வானொலிக்கலைஞரும் நாடக எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான சானா சண்முகநாத னின் மகள். அத்துடன் இவரும் வானொலி தொலைக்காட்சி, திரைப்படக்கலைஞர். சானா,
முன்னர் இலங்கை வானொலிக்காக தொகுத்து வழங்கிய குதூகலம் -மத்தாப்பூ முதலான நிகழ்ச்சிகளை செவிமடுத்த மூத்ததலைமுறை நேயர்கள் இந்தச்சபையில் இருக்கலாம்.
திருச்செந்தூரனின் அண்ணன் லோஷன், இலங்கை தமிழ் நேயர்களைக்கவர்ந்த
ஒலிபரப்பாளர். இன்று சூரியனின் பணிப்பாளர். இவ்வாறு ஒரு கலைசார்ந்த குடும்பத்திலிருந்து வந்திருப்பவர் திருச்செந்தூரன். அதனால் இவரை ஒரு கலைக்குடும்பத்தின் மூன்றாவது வாரிசு
எனவும் அழைக்கலாம்.
திருச்செந்தூரனின்
தந்தையார் இரகுபதிபால ஸ்ரீதரனும் எழுத்தாளர்தான். அத்துடன் 1972 காலப்பகுதியில் கொழும்பில் உருவான தமிழ் இளைஞர் பேரைவயின் ஸ்தாபகர்களில் ஒருவர். கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் பணிகளில் இணைந்திருப்பவர். இந்தப்பின்னணிகளுடன்தான் அவர்களின் வாரிசான இளம்படைப்பாளி திருச்செந்தூரனைப் பார்க்கின்றேன்.
இந்த நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருக்கும் கொழும்பு இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் பாராட்டுக்குரியது.
பொதுவாக வெளிநாடுகளில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் ஒன்றுகூடல்களை
நடத்தியும், இராப்போசன விருந்துகளை ஏற்பாடுசெய்தும் தாம் முன்னர் கற்ற பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுவார்கள்.
தற்பொழுது தமது பாடசாலையில் தம்மோடு கல்வி கற்ற முன்னாள் மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை இனம்கண்டு, அவர்களின் வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்க முன்வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. வரவேற்கத்தக்க இந்த மாற்றம் தொடரவேண்டும்.
இன்றைய நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் மாணவர்கள்
வருகைதந்திருப்பது பாராட்டுக்குரியது.
அத்துடன் இலங்கை வானொலியிலும் மேடைகளிலும் திரைப்படத்திலும் புகழ்பெற்ற வரணியூரான் அமர ர் எஸ்.எஸ். கணேசபிள்ளை அவர்களின் துணைவியாரும் இலங்கை வானொலியின் கல்விச்சேவையில் விஞ்ஞானப்பாடங்களை
நாடக வடிவில் ஒலிபரப்பிய மூத்த படைப்பாளி இர. சந்திரசேகரனும் வருகைதந்துள்ளமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
திருச்செந்தூரனுக்கும்
இதர வானொலி நாடக ஆசிரியர்களுக்கிருந்த கட்டுப்பாடு, சுயதணிக்கை என்பன தவிர்க்கமுடியாதிருந்திருப்பதையும் இந்த நாடகப்பிரதியை படித்தபோது உணரமுடிகிறது.
இலங்கை வானொலியில் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று நாம் பேசமுடியாது. ஈழம் என்ற சொல் அந்த வானொலி நிருவாகத்திற்கு ஆகாதது. திருச்செந்தூரனின் பல நாடகங்கள் தனியார் வானொலி சூரியனில் ஒலிபரப்பாகியிருந்தாலும், ஒரு சொல்லை அவரால் முழுமையாக சொல்லமுடியாமல், முதல் எழுத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கிறார்.
நாம் இலங்கை வானொலியில் நாடகப்பிரதிகள் எழுதிய 1970 காலப்பகுதியில் ஒரு பிரதிக்கு 20 ரூபாதான் சன்மானம் வழங்கினார்கள். ஆனால், சூரியன் FM வானொலி எவ்வளவு தற்போது வழங்குகிறார்கள் என்பதை திருச்செந்தூரனிடம்தான் கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டும்.
நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய வாசிகளாகிவிட்ட கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளையபத்மநாதன், அமரர் எஸ்.பொன்னுத்துரை,
மாவை நித்தியானந்தன் ஆகியோரின் பிரதிகள் கவிதை நாடகமாகவும் சிறுவர் நாடகமாகவும் பெரியவர்கள் நடித்த
நாடகமாகவும் கூத்து அரங்காற்றுகையாகவும்
மேடைகளில்
காட்சிப்படுத்தப்பட்டவை.
திருச்செந்தூரனின் சில நாடகங்கள் வானொலிக்காக எழுதப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே இலங்கையில் ஒலிபரப்பாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளின் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் திருச்செந்தூரனை தக்க முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
அத்துடன் இங்குள்ள தமிழ்ப்பாடசாலை
மாணவர்களுக்கு ஏற்றவாறும் பல்தேசிய கலாசாரப் புகலிடச்சூழலுக்கு உகந்தவாறும் திருச்செந்தூரன் எதிர்காலத்தில் நாடகங்கள் எழுதவேண்டும்.
வானொலி நாடகம் ஒலியை மட்டும் நம்பி நடத்தப்படுவதால் அவற்றின் பிரதிகளில் வசனங்கள்தான் முக்கிய இடத்தைப்பெறுகிறது. வானொலி நாடகங்களில் வசனமும் இசையும்தான் முக்கிய மூலதனம். இலங்கை வானொலி கலையகத்தில்
நாடகங்களில் பங்குபெற்றவர்களுக்கும் பிரதியாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் கிட்டும் அனுபவம் மிகவும் சுவாரசியமானது.
நாடகப்பிரதிகள் கையால் எழுதப்பட்ட அந்தக்காலத்தில் வானொலி கலையகத்தில் மெல்லிய ரிசு தாள்களில் அவற்றில் சில பிரதிகளை தட்டச்சுசெய்து கலைஞர்களுக்கு வழங்குவார்கள்.
கலையகத்தின் ஒலிவாங்கிக்கு முன்னால் சுற்றிவர நின்றவாறு தத்தமது வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் கலைஞர்கள்
உணர்சிபூர்வமாக ஒப்புவிப்பார்கள். இசையும் பக்கத்துணையாக காட்சிக்குத்தகுந்தவாறு ஒலிக்கும். கால் மணிநேர - அரை மணிநேர நாடகங்கள் மட்டுமன்றி, தொடர் நாடகங்களும் இவ்வாறுதான் ஒலிப்பதிவுசெய்யப்படும்.
ஒலிப்பதிவின் பின்னர், அந்தக் கலையகத்தின் தரையைப் பார்த்தால்
கலைஞர்கள் வாசித்து கைநழுவவிட்ட பிரதியின் பக்கங்கள் பரவிக்கிடக்கும்.
பின்னர் நாடகத்தயாரிப்பாளர் தரையில் குனிந்து அனைத்தையும் கூட்டிச்சேகரிப்பார்.
அந்தக்காட்சி சுவாரசியமாக இருக்கும். வான் அலைகளில் பரவிய அந்தக்குரல்களின் எழுத்துப்பிரதி தரையில் கிடக்கும். வானொலி நாடகங்களின் ரிஷி மூலம்
அத்தகையது.
திருச்செந்தூரனிடத்தில் சமூகம், வரலாறு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் முதலானற்றில் துல்லியமான அறிவு இருப்பதையும் இந்த நாடக நூலில் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
இவர் சமூக நாடகம், சரித்திர நாடகம், மர்மங்கள், திகில் பொதிந்த நாடகம் மட்டுமல்ல போர்க்காலத்தை சித்திரித்த நாடகமும் எழுதியிருக்கிறார். ஆனால், பிராசார வாடையின்றி, கலைத்துவமாக எமது மனதை நெகிழச்செய்யும் விதமான ஒரு போர்க்கால நாடகமும் இதில் கஜனின்ர பாவப்பிள்ளை என்ற பெயரில்
இருக்கிறது. வாசித்துப்பாருங்கள். அந்த நாடகத்தின் இறுதியில்தான்
அது ஒரு போர்க்கால இலக்கிய வகைக்குள் அடங்கும் பிரதியென்பதை தெரிந்துகொள்கின்றோம்.
இலங்கையின் சமகால அரசியலில் அடிக்கடி பேசப்படும் ஒரு பெயர் சபுமல்குமாரயா. இந்த வரலாற்று நாயகன் பற்றிய நாடகத்தையும்
திருச்செந்தூரன் எழுதியிருக்கிறார்.
அந்த நாடகம் எமக்கு புதிய செய்திகளைத்தருகிறது. பிரிட்டிஷாரினால் கைதுசெய்யப்பட்ட இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜ
சிங்கனின் இயற்பெயர் கண்ணுச்சாமி. அதுபோன்று, சப்புமல்குமாரயா என்று இன்று சிங்கள அரசியல் வாதிகளினால் உச்சரிக்கப்படும் மன்னனின் இயற்பெயர் சென்பகப்பெருமாள்.
திருச்செந்தூரன், கணக்கியலில் படித்து பட்டம் பெற்றவர். ஒரு கணக்காளருக்கு எப்படி இலங்கைச்சரித்திரம் தெரிந்திருக்கிறது ? என்று அவரிடம் நான் கேட்டபொழுது, தான் நூலகங்களை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு, எழுத்துத்துறையில்
ஈடுபடுவாதாகச் சொன்னார். அந்த வாசிப்பு அனுபவம்தான் சென்பகப்பெருமாள் நாடகத்தை எழுதத்தூண்டியது என்றார்.
இந்தத் தேடல் மனப்பான்மை படைப்பாளிகளுக்கும்
கலைஞர்களுக்கும் முக்கியமானவை. திருச்செந்தூரனிடம்
அந்தப்பண்பையும் காணமுடிகிறது.
இவர் எழுதியிருக்கும் சில திகில் நாடகங்கள், எனக்கு சுஜாதாவையும்
நினைவூட்டியது.
இன்றைய தமிழ் சினிமா ட்ரென்ட் பற்றி உங்களுக்குத்தெரியும். பீட்சா என்ற விஜய்சேதுபதி நடித்த படம் வந்ததுதான் வந்தது --- அதன் பிறகு பீட்சா இரண்டாம் பாகம், அரண்மனையில் இரண்டு பாகம்,
மாயா உட்பட பல பேய்ப்படங்கள் வெளியாகின்றன. ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் பேய்ப்படங்கள் வருகின்றன. ஆனால் , பேய்
உண்மையில் இருக்கிறதா ? என்பதுதான் இன்னமும் மர்மம்.
திருச்செந்தூரனும் பேய்களை ஆவிகளை விட்டுவைக்கவில்லை.
இந்தத்தொகுதியில் சில மர்மக்கதைகளும் ஆவிகள் சம்பந்தப்பட்ட திகில் கதைகளும் இடம்பெறுகின்றன.
மொத்தத்தில் இந்த உலகம் ஒரு நாடகமேடை. நாமெல்லோரும் நடிகர்கள். வீட்டில், பொது வெளியில், சமூகத்தில், குடும்பத்தில் அரசியலில் , தொழிலிடத்தில், நீதிமன்றத்தில், பாராளுமன்றத்தில் எல்லாம் நடிக்கின்றோம். அதனால் நடிப்பு என்பது எமக்கு புதியது அல்ல.
குழந்தைகளும் தற்காலத்தில் நன்றாக நடிக்கிறார்கள். அவர்களின் நடிப்பில் நாம் மெய்மறந்து சிரிக்கின்றோம். ஆனால், இவற்றுக்கெல்லாம் கடின உழைப்பு தேவையில்லை. இடத்துக்குத்தகுந்தவாறு நடிக்கத் தெரிந்தால் போதுமானது.
அதனால் எல்லோராலும் சிறப்பாக நடிக்கமுடிகிறது. ஆனால், மேடை நாடகம், வானொலி நாடகம் என்பனவற்றில் கடின உழைப்பு தங்கியிருக்கிறது.
ஒலிக்கும் இசைக்கும் முக்கியத்துவம் வழங்கும் செவிப்புலனுக்குரிய வானொலி நாடகங்களை எழுதுவதற்கு தேடலும் தேர்ந்த ரசனையும் உழைப்பும் நேயர்களை கவரும் சாதுரியமும்
இருக்கவேண்டும். இவை அனைத்தும் இளம் படைப்பாளி திருச்செந்தூரனிடம் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
----0-----