.
சித்திரைத் தாய்க்குமோர் சிறப்பான வரவேற்பைச்
சிந்தையில் நல்க வேண்டும்,
சித்திரைத் தாயும்தன் சிறார்க்கு நல்வாழ்வைச்
சீருடன ளிக்க வேண்டும்,
இத்தரை மீதினில் இதமான வாழ்விலே
இளையோரும் திளைக்க வேண்டும்,
இதமான வாழ்விற் கிணையான சக்தியை
என்னம்மை ஊட்டவேண்டும்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை 8ஆம் தேதி, சிட்னியின்
பிரம்மாண்டமான ரோஸ் ஹில் தோட்ட அரங்கில், தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்
சித்திரைத் திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினார்கள்
சிட்னி மாநகரில் தொடர்ந்து
ஐந்தாவது முறையாக இந்த விழா எடுக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மங்கல விளக்கு ஏற்றும்
நிகழ்வுடன் இவ்விழா தொடங்கியது. அதன்பின், சிட்னிவாழ் சிறுவர்கள், இளைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழச்சிகள், மகளிரின் கரகாட்ட நிகழ்ச்சி போன்ற பல கலைநிகழ்ச்சிகளுடன் சித்திரைத்
திருவிழா களைகட்டியது.
சிட்னியின் தமிழ்க் கலை மற்றும் பண்காட்டுக் கழகம் ஒவ்வொரு ஆண்டிலும்
தாயகத்திலிருந்து தமிழ்க் கலைஞர்களை அழைத்து வந்து சிட்னி மாநகர் மக்களுக்கு
தமிழரின் பாரம்பரியக் கலைகளை அறிமுகம் செய்ததைப் போலவே இந்த ஆண்டும் நாட்டுப்புற கிராமியக்
கலைஞரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான
அந்தோணிதாசன் குழுவினர் மூலம் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவின் ஒரு முக்கியப் பகுதியாக, தமிழ்க்
கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு. அனகன் பாபு அவர்களின் தலைமை உரையுடன், ஆஸ்திரேலிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்,
நியூ சவுத் வேல்ஸ் மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள், ஆஸ்திரேலியாவிற்கான
இந்திய அரசின் பிரதிநிதி, நியூ சவுத் வேல்ஸ் பல்லினக் கலாசாரக்
கூட்டமைப்பின் தலைவர் ஆகியோர் உரையாற்றினர். இவர்களுக்கும் மற்றும் பல அரசியல் பிரமுகர்களுக்கும்
விழா மேடையில் மரியாதை செய்யப்பட்டது. தமிழகத்திலிருந்து வந்திருந்த கலைஞர்களின்
திறமையையும் இவ்விருந்தினர்கள் கண்டுகளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவிற்கு வந்திருந்த சிறுவர்களை மகிழ்விக்க விளையாட்டு அரங்கங்களுக்கும்
பஞ்சம் இல்லாமல் இருந்தது. ஏறத்தாழ ஐந்து மணி நேரம் நடைபெற்ற தமிழகக் கலைஞர்களின்
இசை நிகழ்ச்சிகள் வந்திருந்த மக்களின் செவிகளுக்கு விருந்தளித்தது. கண்களுக்கும்
காதுகளுக்கும் விருந்தளித்தது மட்டுமின்றி,
வயிற்றுக்கு விருந்தளிக்கும் நோக்குடன் பல நிறுவனங்கள் அங்கே தங்கள் திறமைகளைப்
பறைசாற்றினர். இவ்விழா சிறப்பாக அமைவதற்காக அயராது பாடுபட்ட இளைஞர் குழுவினரும், விழாவினைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களும் பாரட்டப்பட வேண்டியவர்கள்.
மாலை ஐந்து மணி அளவில் சிட்னியின் 5வது சித்திரைத் திருவிழா இனிதுற நிறைவடைந்தது.
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற விழாக்கள் தமிழர்களின் நாகரிகத்தையும்
பண்பாட்டையும் வெளியுலகுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன. விழாக்களின்
நோக்கம் கொண்டாட்டமும், பொழுதுபோக்கும், மக்களிடையே நல்லுறவை பேணி வளர்ப்பதுமே. அந்தக் கோணத்தில் நோக்கினோமானால், சிட்னியின் சித்திரைத் திருவிழா பூரண மனநிறைவை அளித்தது என்று கூறினால்
அது மிகையாகாது.
------------------------------------