என்னோடு நீ இருந்தால் - சௌந்தரி கணேசன்

.

சில நாட்கள் கடினமாகும்
சில நேரம் கண்ணீர் வரும்
உன் நேசம் மட்டும் போதும் 
சிறகடித்துப் பறக்கும் மனசு
ஒரு கோணம் மறைத்தாலும்
பரலோகம் அனுப்பியதால்
நீ ஓர் சிறப்பு வழி
என் வழியில் நீ வேண்டும்
என் வானமெங்கும்
உன் நட்சத்திரத் தாராளம்
அத்தனையும் உள்வாங்கி
அழகழகாய் மின்னுகின்றேன்
என் இதயமெங்கும்
உன் ஒய்யார ஒப்பனைகள்
உல்லாசம் தாலாட்ட
உவகையில் மிதக்கின்றேன்
எதையென்று சொல்வது நான்
என் வார்த்தைகள் வெளிப்படுத்த
என் எண்ணங்கள் தெளிவுபடுத்த
என் உணர்வுகள் எளிதல்ல
மனிதபக்தி கொண்டவள் நான்
கலக்கமற்ற கற்பனைவாதி
நம்பமுடியா மகிழ்ச்சியுடன்
நன்றிக்கடன் வளர்க்கின்றேன்


இரவும் பகலும் மன்னவளாகி
அரியாசனத்தில் அமர்கின்றேன் - என்
நாள் செய்யும் நறுமணத்தை
நாளும் பொழுதும் ரசிக்கின்றேன்
ஆரவாரக் கூட்டத்தில்
ஆற்று மணல் சிறுமி போல
பரந்த உன் தோள்களிலே
பச்சைக் கம்பளம் விரிக்கின்றேன்
என்னோடு நீ இருந்தால்
நாளைபற்றிய சிந்தனையில்லை
மறுநாளும் இருப்பாய் என்றால்
மரணம்பற்றியும் சிந்தனையில்லை
எதைப்பற்றியும் சிந்திக்காமல்
எனது இடம் சேரவேண்டும்
சேரும்நாள் காணும்வரை
செங்கதிராய் நீ வேண்டும்
விதியின் விளையாட்டிது
விசைப்படகின் வேகத்தில்
என் கப்பல் மெதுமெதுவாய்
கரை நோக்கிச் செல்கிறது