திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.

இலங்கை கலை உலகில் மூன்று தலைமுறைகள்
வாழையடி  வாழையாக  தொடரும்  பரம்பரையில்  ஒரு சமூகப்பணியாளன்  இரகுபதி  பாலஸ்ரீதரன்
தமிழ்  இளைஞர்  பேரவையின்  முக்கியமான  தூண்களில் ஒருவர்
      

                                                                                     
தொலைக்காட்சியின்  வருகைக்கு  முன்னர்  இலங்கை  வானொலிஉள்நாட்டிலும்  தமிழகத்திலும்  மிகுந்த  செல்வாக்குப்பெற்று  விளங்கியது.
நடிகர் கே.. தங்கவேலு  கூட  ஒரு  பழைய  திரைப்படத்தில்  இலங்கை வானொலி  பற்றி   விதந்து  வசனம்  பேசுவார்.   அவ்வாறு  புகழ்பெற்ற இலங்கை  வானொலிக்கலைஞர்கள்  1962  ஆம்  ஆண்டு  எங்கள்   நீர்கொழும்பூருக்கும்  வந்தனர்.
அச்சமயம்  எங்கள்  விஜயரத்தினம்  வித்தியாலயத்தின் அதிபராகவிருந்த  வித்துவான்  .சி.சோதிநாதன்இலங்கை  வானொலி   கலையகத்தின்  நாடக  நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார்.   அவ்வேளையில்  அவர்  எங்கள் பாடசாலைக்கு   அழைத்துவந்த  வானொலிக்கலைஞர்கள்   குழுவின் தலைவராக  விளங்கியவர்   சானா.  சண்முகநாதன்.
இவருடன்    சக்கடத்தார்  ராஜரட்ணம்,  சிசு. நாகேந்திரன் உட்பட சிலர் இடம்பெற்றனர்.



சானா  தாம்   தயாரித்த  மத்தாப்பு  - குதூகலம்  நிகழ்ச்சிகளுக்காக  எங்கள்   ஊரில்   கலைஞர்களை   தேர்வுசெய்தார்.  நானும்  எனது  தம்பி,   அக்கா  மற்றும்  உறவினர்கள்,  நண்பர்கள்  சிலரும் அந்நிகழ்ச்சித்தேர்வில்  கலந்துகொண்டு  பாடினோம்,  பேசினோம், நடித்தோம்.
 சானா, எனது  அக்கா  செல்வியின்  குரல்வளத்தை  கேட்டுவிட்டு வானொலிக்கலைஞர்   தேர்வு  நேர்முகப்பயிற்சிக்கும்  கடிதம்  மூலம் அறிவித்தார்.   ஆனால் , கொழும்பு  சென்று  வரவேண்டியிருக்கும் என்று  எமது   பெற்றோர்  அதற்கு   அனுமதிக்கவில்லை.
அத்துடன்  பெண்பிள்ளைகள்  நடிப்புத்துறைக்குச்செல்வது ஆசாரத்திற்கு  களங்கம்   என்ற   தப்பான  அபிப்பிராயமும் அக்காலத்தில்   நீடித்தது.
கலைஞர் சானா   வானொலியில்  மத்திரமின்றி  டாக்சி  டிரைவர் என்ற  இலங்கைப்படத்தாலும்  புகழ்பெற்றவர்.    இறுதியாக   அவர் சுகவீனமுற்று,    நீர்கொழும்பில்   பணியிலிருந்த   மருத்துவர் ஜெகன்மோகன்  இல்லத்தில்  தங்கியிருந்தவேளையில்  சந்தித்து உரையாடியிருக்கின்றேன்.
அச்சமயம்  வி. எஸ். துரைராஜாவின்   குத்துவிளக்கு  படம் வெளியாகியிருந்தது.


அதற்கு  அன்று  இலங்கை  வானொலிக்கலைஞர்கள்  போதிய  ஆதரவு  வழங்கவில்லை.   அதற்கு  தணியாத  தாகம்  எழுதிய சில்லையூர் செல்வராசனும்  ஒரு  காரணம்.
தணியாத தாகம்   நாடகப்பிரதிதான்  குத்துவிளக்கு  என்ற  கருத்து பரவியருந்த  காலம்.
அந்தச்சந்திப்பிற்குப்பின்னர்   கலைஞர்  சானா . சண்முகநாதனை சந்திக்கும்  வாய்ப்பு  எனக்குக்  கிட்டவில்லை.   அவரும்  ஓய்வுபெற்று யாழ்ப்பாணம்    சென்றுவிட்டார்.
எனினும்  வீரகேசரியில்  1977  காலப்பகுதியில்  அவர்  தொடர்ந்து எழுதிய  பேனாச்சித்திரங்களை   ஒப்புநோக்கியிருக்கின்றேன்.
சானா அவர்கள் மறைந்த பின்னர் - யாழ்ப்பாணத்தில் அவர் பிறந்த ஊர் மக்கள் யாழ்.செல்லும் பாதையில் அவர் நினைவாக ஒரு பஸ்தரிப்பு நிலையத்தை அமைத்து, அதில் அவர் நாமத்தையும் பொறித்தனர்.
----------------------------------
1970   இல்  ஸ்ரீமாவோ   தலைமையில்   கூட்டரசாங்கம்  வந்தபின்னர் தமிழ்நாட்டு  வணிக  இதழ்களின்  இறக்குமதியில்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டமையால்,  இலங்கை  தமிழ்  இலக்கிய  வளர்ச்சிக்கு நிறைய   நன்மைகள்  கிடைத்தன.
வீரகேசரி   மாதம்   ஒரு  நாவல்  பிரசுர  முயற்சி  தொடங்கியது. கொழும்பிலிருந்தும்   நாட்டின்  இதர  பகுதிகளிலிருந்தும்  கலை, இலக்கிய   இதழ்கள்  வெளியாகத்தொடங்கின.
தமிழமுதம்,  மாணிக்கம்,  கதம்பம்,  பூரணி,  அஞ்சலி,  ரோஜாப்பூ,  சுந்தரி   என்பனவற்றுடன்   யாழ்ப்பாணத்திலிருந்து  மல்லிகையும்  சிரித்திரனும்  1970   இற்கு   முன்பிருந்தே  வெளியாகிக்கொண்டிருந்தன.
மாணிக்கம்   மாத   இதழை  கொழும்பு  பாமன்கடை  கல்யாணி வீதியிலிருந்து   வெளியிட்டவர்  திருமதி  சரோஜினி  கைலாசபிள்ளை.   மாணிக்கம்  என்பது  அவருடைய  தந்தையாரின் பெயராக   இருக்கவேண்டும்.   வழக்கமான  தென்னிந்திய  வணிக இதழ்களின்   சாயலில்  மாணிக்கம்  வெளியானது.
1972   இன்பின்னர்   நானும்  எழுதத்தொடங்கியதால்  கொழும்பில் நடந்த  ஒரு  இலக்கியக்கூட்டத்தில் அறிமுகமானவர்  இரகுபதி பாலஸ்ரீதரன்.   இவர்  அப்பொழுது  இலங்கை  வங்கியின்  கொழும்பு ஹல்ஸ்டோர்ப்  கிளையில்  பணியிலிருந்தார்.
அந்தப்பிரதேசம்   நீதிமன்றக்கட்டிடங்கள்,  சட்டக்கல்லூரி, சட்டத்தரணிகளின்  அலுவலகங்கள்    நிரம்பிய  மக்கள்  நடமாட்டம் செறிந்த   பிரதேசம்.   பல  தமிழ்  இளைஞர்கள்  சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தனர்.
மாணிக்கம்   இதழை  வெளியிட்டவரின்  கணவர்  கைலாசபிள்ளையும் அந்த   வங்கியில்தான்  இரகுபதி  பாலஸ்ரீதரனுடன்  பணியிலிருந்தார்.
மாணிக்கம்   இதழை   நீர்கொழும்பில்  அறிமுகப்படுத்துவதற்காக இருவரும்   என்னுடன்  தொடர்புகொண்டதுடன்,  என்னையும்  அதில் எழுதுமாறு   கேட்டனர்.   இரண்டொரு  சிறுகதைகளையும் இலக்கியக்குறிப்புகளையும்  அதில்  எழுதியிருக்கின்றேன்.
மாணிக்கம்   ஆசிரியர்  சரோஜினி  கைலாசபிள்ளையையும்  இரகுபதி பாலஸ்ரீதரனையும்   விஜயரத்தினம்   மகா    வித்தியாலயம்  பழைய மாணவர்   சங்கம்  நடத்திய  நாமகள்  விழாவுக்கும் அழைத்துப்பேசவைத்தோம்.
         இவ்வாறுதான்   எனக்கு  இரகுபதி  பாலஸ்ரீதரன்  நண்பரானார். இவ்வாறு   தொடங்கிய  எமது  உறவின்  தொடர்பாடல்   1977 - 1981 - 1983  ஆகிய  காலப்பகுதிகளில்  உள்நாட்டு நெருக்கடிகளினால்  அற்றுப்போனது.   மாணிக்கம்  இதழும்  தனது ஆயுளை   நிறுத்தியது.
   மாணிக்கம்   இதழில்  ஆசிரியர்களாக   மூத்த  பத்திரிகையாளர்   எஸ். டி. சிவநாயகம் ,     ஈழத்து இரத்தினம் ( திரைப்பட  வசனகர்த்தா பாடலாசிரியர் )   ஆகியோரும்   பணியாற்றியிருக்கின்றனர்.


ஏறக்குறைய  45   ஆண்டுகாலத்திற்குப்பின்னர்   நண்பர்   இரகுபதி பாலஸ்ரீதரனை    அண்மையில்    மெல்பனில்    சந்தித்து   நீண்டநேரம் உரையாடினேன். ( இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் சந்தித்தாலும் உரையாடும் கால அவகாசம் சொற்பம்தான்.)
1970    களில்   இளைஞராக  தமிழ்  இளைஞர்  பேரவையின் கொழும்புக்கிளையின்   முக்கியஸ்தராக  ஒரு  வங்கி  ஊழியராக மாணிக்கம்   இதழின்  நிருவாகப்பொறுப்பிலிருந்தவராக   நான்  கண்ட நண்பர்    இரகுபதி பாலஸ்ரீதரன்,   இன்று  மூன்று  ஆண்செல்வங்களின் தந்தை.    இவர்களும்  தந்தையைப்போன்று  பொதுவாழ்வில் இணைந்திருப்பவர்கள்.
இரகுபதி  பாலஸ்ரீதரனின்  துணைவியார்  சுமதி  இந்தப்பத்தியில் முதலில்   குறிப்பிட்ட   இலங்கை   வானொலிக்கலைஞர்  சானா.  சண்முகநாதனின்   புதல்வி.
               இவரும்    கலை, இலக்கிய   ஆர்வலர்.    கொழும்பு  தமிழ்ச்சங்கத்தில் சிறுவர்  கதைவேளை   என்னும்  நிகழ்ச்சியை  நடத்திவருபவர்.   ஒரு திரைப்படத்திலும்  நடித்துள்ளார்.   இலங்கை வானொலி,  ரூபவாஹினி  தொலைக்காட்சி  முதலானவற்றில் ; கலைஞராக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். ஓய்வுபெற்றபின்னர் இலங்கை வானொலியில் பகுதிநேர செய்தி வாசிப்பாளராகவும்; பணியாற்றியவர்.  இந்தக்கலைக்குடும்பத்தின்  மூத்த வாரிசுதான்    இலங்கையில்   புகழ்பெற்ற    சூரியன் FM   வானெலிக்கலைஞர் , ஊடகவியலாளர்  A.R.V லோஷன். தற்பொழுது இதன் பணிப்பாளர்.  மற்றவர்   திருச்செந்தூரன்  நாடக எழுத்தாளர்    இலக்கியப்பிரதியாளர். கலைத்துறை ஈடுபாடுள்ளவரான  மற்றும் ஒரு புதல்வன்   தவமயூரன் ;  கட்டாரில்    பணியாற்றுகிறார்.
திருச்செந்தூரனின்    திரைவிலகும்போது   நாடக   நூலின் அறிமுகவிழாவிற்காக  மெல்பன்   வருகை  தந்த  இரகுபதி பாலஸ்ரீதரன்  தம்பதியரை    அண்மையில்  சந்தித்தேன்.
---------------------------------------------------
1972  ஆம்  ஆண்டில்  இலங்கை  அரசியலமைப்பில்  ஏற்பட்ட மாற்றத்தின்  விளைவை   இன்று வரையில் அனுபவித்துவருகின்றோம்.    அதன்பின்னர்தான்  தமிழரசுக்கட்சியும், தமிழ்க்காங்கிரசும்  இணைந்து  கூட்டணி  அமைத்தன.   தமிழ் இளைஞர் பேரவை   தோன்றியது.   பின்னாளில்  இவற்றின்  புதிய  பல வடிவங்களையும் ,   இடையில்  நீடித்த  போராட்ட     அவலங்களையும்   எங்கள்   தேசிய  இனப்பிரச்சினை  சர்வதேசமயமாகி,  பூகோள அரசியலுக்குள்  கண் கட்டி  வித்தை   காட்டிக்கொண்டிருப்பதையும் அவதானிக்கின்றோம்.
அன்று  1972  காலப்பகுதியில்   பல   தமிழ்   இளைஞர்கள்   கைதாகி சிறைகளில்    வதைபட்டனர்.
அவ்வாறு    வதைபட்ட  மாவை  சேனாதிராஜா,   மண்டுர்  மகேந்திரன், முத்துக்குமாரசாமி   உட்பட  பலர்  நீர்கொழும்பு    சிறையிலிருந்தனர்.    ( இதுபற்றி    எனது   சொல்ல மறந்த கதைகள் தொகுப்பில்   ஏரிக்கரைச்சிறைச்சாலை   என்ற  கட்டுரையில் பதிவுசெய்துள்ளேன்)
ஒருநாள்   என்னைத்தேடி  வந்த  இரகுபதி  பாலஸ்ரீதரனுடன் சிறைச்சாலை   சென்று  அவருடைய  நண்பர்களையும்  கைதாகியிருந்த   இவருடைய  தம்பி  பூபதிபால  வடிவேற்கரசனையும்   பார்த்தேன்.
அன்றைய   அடக்குமுறைக்கு  இவருடைய  குடும்பமும் ஆளாகியிருந்தது.    பலதடவைகள்  விசாரணகளுக்குட்பட்ட இந்தக்குடும்பம்   பற்றி  மறைந்த  சி. புஷ்பராசா  எழுதியிருக்கும் ஈழப்போராட்டத்தில்  எனது  சாட்சியம்  என்ற    நூலில்  பார்க்கமுடியும்.
அண்மையில்  கொழும்பில்  நடந்த  கம்பன்  விழாவில்  மேடையில் தோன்றிய    வரதராஜப்பெருமாளும் , சபையில்  முன்வரிசையிலிருந்த இரகுபதி பாலஸ்ரீதரனையும்  விளித்தே  உரையாற்றியிருந்தார்.
இவ்வாறு   ஈழப்போராட்டத்தில்  அகிம்சை  வழியில்  ஈடுபட்டிருந்த இரகுபதி பாலஸ்ரீதரன்  பின்னாளில்  இலங்கை   வங்கி  ஊழியர்  சங்கம், கொழும்பு   தமிழ்ச்சங்கம்  ஆகியவற்றில்  பல  முக்கிய  பொறுப்புகளை   ஏற்று  பணியாற்றினார்.
இன்றும்   இவர்  கொழும்பு  தமிழ்ச்சங்கத்தின்  பொறுப்புகளில் இணைந்திருக்கின்றார்.    1990   ஆம்  ஆண்டளவில்   கொழும்பு தமிழ்ச்சங்கத்தில்   உறுப்புரிமை   பெற்ற  இவர்,  நான்கு  தடவைகள் துணைத்தலைவராகவும்  சில தடவைகள்  தலைவராகவும்; பொதுச்செயலாளராகவும்    பணியாற்றியவர்.    தற்பொழுது சங்கத்தின்    இலக்கியக்குழுவின்   செயலாளர்.
இரகுபதி  பாலஸ்ரீதரனின்  தந்தையார்  . சபா. ஆனந்தர்,   யாழ். செங்குந்தா - சாவகச்சேரி   இந்துக்கல்லூரிகளிலும்   பணியாற்றிவிட்டு    மலையகத்திலும்   தனது  கல்விச்சேவையை தொடர்ந்தவர்.
பொதுவாக   யாழ்ப்பாணத்திலிருந்து  மலையகத்திற்குச்செல்லும்  தமிழ்   ஆசிரியர்கள்,  அங்கிருந்து  சிறுவர்  சிறுமிகளை வீட்டுவேலைக்காக   ஊருக்கு  அழைத்துவந்தார்கள்  என்ற குற்றச்சாட்டு   முன்பிருந்தது.
செ.கதிர்காமநாதன்   வெறும் சோற்றுக்காகவே  வந்தது  என்ற நல்லதொரு  கதையை   அஞ்சலியில்  எழுதியிருக்கிறார்.    டானியலும் தமது  நாவல்  ஒன்றில்  குறிப்பிட்டார்.   மு.கனகராஜன்  இரண்டு பேராசிரியர்களும்  ஒரு  வேலைக்காரச்சிறுமியும்   என்ற   கதையை எழுதியிருந்தார்.
இந்தப்    பொதுவான  குறைபாட்டை   போக்கி முன்னுதாரணமாகத்திகழ்ந்தவர்தான்   சபா. ஆனந்தர்   என்ற கல்விப்பெருந்தகை.  அவர்  சைவப்புலவருமாவார்.
நாவலப்பிட்டி  கதிரேசன்  கல்லூரி  முகாமையாளரின் வேண்டுகோளை   ஏற்று  யாழ்ப்பாணத்திலிருந்து  வருகைதந்த சபா.ஆனந்தர்,    அக்கல்லூரியின்  அதிபராக  பணியாற்றி  அவ்வூர் மக்களின்   அபிமானம்  பெற்றவர்.
தமிழகத்திலிருந்து   இசைக்கலைஞர்  எம்.எல். வசந்தகுமாரியை அழைத்துவந்து    கொழும்பிலும்  நாவலப்பிட்டியிலும்  இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளை   நடத்தி  பணம்   திரட்டி,  அக்கல்லூரியில்  கட்டிடங்கள் அமைக்கப்பாடுபட்டார்.    அதன்பின்னர்  புசல்லாவை   சரஸ்வதி  மகா வித்தியாலயத்திலும்    சேவையைத்தொடர்ந்து,  மலையகத்தில் ஏறக்குறைய  கால்  நூற்றாண்டுகாலம்  வாழ்ந்திருப்பவர்.   அவ்வூர் மக்களின்   கல்விக்கான  கலங்கரைவிளக்காக  ஒளி   தந்தவர்.
இதனால்  இவருடைய  பிள்ளைகள்,  மலையகத்தின்  பசுமையையும் அந்த   ஒளிவெள்ளத்தில்   பல  காலம்  அனுபவித்தனர்.
இரகுபதி  பாலஸ்ரீதரன்  கொழும்பு  தமிழ்ச்சங்கத்துடன் இணைந்தபின்னர்,  தமது  எழுத்துத்துறையிலும்  நாட்டம் காண்பித்தார்.   இலங்கை,   தமிழகம்  மற்றும்  உலகடங்கிலும்  வாழ்ந்த பெரியார்கள்பெண்  ஆளுமைகள்  பற்றியெல்லாம்  தொடர்ந்து வீரகேசரி,   தினக்குரல்  முதலான  இதழ்களில்  எழுதினார்.
பாடசாலை   மாணவர்களுக்கும்  பயன்படத்தக்க  முறையில் எளிமையாக  இவர்  எழுதிய  மறைந்தும்  மறையாதவர்கள்  தொடர் பத்தி  நல்ல  வரவேற்பைப்பெற்றதுடன்,  பாடசாலை மாணவர்களுக்காக  நடத்தப்பட்ட  ஊக்குவிப்புப் போட்டிகளுக்கும் உசாத்துணையாக   விளங்கின.
இத்தொடர்   2015    ஆம்   ஆண்டில்    சுமதி பதிப்பகத்தின்   நூலாக வெளியானபொழுது,   அணிந்துரை   எழுதிய  பேராசிரியர்  சபா. ஜெயராசா    பின்வருமாறு   குறிப்பிட்டுள்ளார்:
" செய்தி  இதழ்களுக்கு  எழுதுதல் என்பது  ஒரு  தனித்துவமான துறை.  அறிகை   நிலை. அனுபவ  நிலை.  என்பவற்றுடன் எழுச்சிநிலை   முதலாம்  தளங்களில்  நின்று  பொது வாசகர்களுக்குரிய   ஆக்கங்களை   எழுதவேண்டியுள்ளது. தமக்குரிய  நிறைந்த  வாசிப்பு  அனுபவத்தேட்டத்தை  அடியொற்றி .இரகுபதி   பாலஸ்ரீதரன்  அவர்கள்    " மறைந்தும் மறையாதவர்களை"    எழுத்துருவாக்கியுள்ளார்.    ஒரு  நிலையில் அது   கல்விப்பணியாகவும்  இன்னொரு  பரிமாணத்தில்  அது சமூகப்பணியாகவும்    அமைகின்றது.    நூலாசிரியர்  தமது வாழ்வோடிணைந்த    சமூகப்பணியின்   ஓர்   அலகினை  இந்நூல் வாயிலாக  நிறைவேற்றியுள்ளார்"
இரகுபதி   பாலஸ்ரீதரனின்  குடும்பத்தினர்  தமது  சுமதி  பதிப்பகத்தின் ஊடாக  சாணா  +  பரியாரி   பரமர்,   இணுவை   இரகுவின்  ஆக்கங்கள் - உரைகள்,    உணர்வுகள்,    திரைவிலகும்போது    முதலான    இதர நூல்களையும்    வெளியிட்டுள்ளது.
மறைந்தும்  மறையாதவர்கள்  நூலில்  இரகுபதி  பாலஸ்ரீதரன்  தமது தந்தையைப்பற்றிய   ஆக்கத்துடன்  மேலும்  ஐம்பது பேரைப்பற்றி எழுதியுள்ளார்.   இந்த  நூல்  இவருடைய  பன்முக  வாசிப்பு அனுபவத்திற்கும்   சான்று   பகர்கின்றது.
இலங்கை   கலாசார  அமைச்சின்  கலாபூஷணம்  விருதையும் பெற்றுள்ள  இரகுபதி  பாலஸ்ரீதரன்,  அண்மையில்  சிறந்த  தமிழ் அமைப்பிற்கான  விருது  வழங்கும்  விழாவிற்காக  தமிழகம்  சென்று,   தஞ்சாவூர்  எழுத்தாளர்  ஒன்றியமும்  தமிழ்த்தாய் அறக்கட்டளையும்   இணைந்து  வழங்கிய  விருதை   கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்காக  பெற்றுக்கொண்டார்.
இவருடன்   பயணிக்கவிருந்த  கொழும்பு  தமிழ்ச்சங்கத்தலைவர் எதிர்பாரதவிதமாக  சுகவீனமுற்றமையால்,  தான்  சென்று பெற்றுக்கொள்ளநேர்ந்ததையும்   என்னிடம்  குறிப்பிட்டு,  அமரர் கதிர்காமநாதன்   சங்கத்தின்  வளர்ச்சிக்கு  மேற்கொண்ட  அளப்பரிய சேவைகளையும்    நினைவுகூர்ந்து    பாராட்டினார்.
   இரகுபதி  பாலஸ்ரீதரன்  வெளிநாட்டிலிருந்து  தனிப்பட்ட காரணங்களின்    நிமித்தம்  இலங்கைக்கு  வரும்  எம்மவர்களில் இலக்கியவாதிகள்,    கலைஞர்கள்,   ஊடகவியலாளர்கள், சமூகப்பணியாளர்கள்,    கல்விமான்களை   தேடிப்பிடித்து  சங்கத்திற்கு அழைத்து   உரை   நிகழ்த்தவைப்பதில்  சமர்த்தர்.
அதனால்   இவர்  புகலிடத்தவர்களுக்கும்  கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கும்    பாலமாகவும்   விளங்குபவர்.
1970  களில்   கொழும்பில்  தமிழ்  இளைஞர்  பேரவையின்  முக்கிய தூண்களில்   ஒருவராக  விளங்கிய  இரகுபதி  பாலஸ்ரீதரன்,  இன்று இளைஞர்    என்ற  வயதெல்லையை  கடந்திருந்தாலும்,   தமிழ் சமூகத்திற்கு  கலை,   இலக்கியம்,  பொதுசன ஊடகம்  முதலான துறைகளுக்கு  தனது  பிள்ளைகளை  வாரிசாக  வழங்கியிருக்கும் குடும்பத்தலைவனாகியுள்ளார்.
வாழையடி  வாழையாக  இவரின்  முன்னோர்களினதும்  இவரதும் இவருடைய  வாரிசுகளினதும்  பணிகள்   தொடருவதை  காணும்  சாட்சிகளில்   ஒருவனாக  நான்  இருப்பது  மகிழ்ச்சியானது.
------0----