பொ. கருணாகரமூர்த்தி | அ. முத்துலிங்கம்: இரண்டு நிகழ்வுகள், சில விமர்சனங்கள்

.
கனடாவில் பிடித்த காலம் எது என்ன என்று கேட்டால் கோடைகாலம் என்று உடனடியாகவே சொல்லிவிடுவேன். கோடை காலம் தொடங்கிவிட்டாலே பல் கலாசார நிகழ்வுகளும், கொண்டாட்டங்களும் களைகட்டத் தொடங்கிவிடும். இந்த முறையும், வழமையைவிட சற்று அதிகமாகவே இலக்கிய நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. மே மாதம் 16ம் திகதி முதல் இன்றுவரை 5 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தக அறிமுகங்கள் நடைபெற்று இருக்கின்றன

பொ. கருணாகரமூர்த்தி
80களின் தொடக்கத்திலேயே போரினால் இடம்பெயர்ந்து ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளார் கருணாகரமூர்த்தி அண்மையில் வெளியிட்ட பெர்லின் இரவுகள் என்ற புத்தகம் மூலம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் எழுதிய அகதி உருவாகும் நேரம், அவர்களுக்கென்று ஒரு குடில், பெர்லின் இரவுகள், கூடு கலைதல், போன்ற நூல்கள் பற்றிய விமர்சனமாக ஸ்கார்பரோவில் நடைபெற்ற நிகழ்வு அமைதியான முறையில் நடைபெற்றது. தேவகாந்தன், குரு அரவிந்தன், நவம், என். கே. மகாலிங்கம், இளங்கோ ஆகியோர் நூல்கள் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க பொ. கருணாகரமூர்த்தி ஏற்புரையாற்றினார். பொ. கனகசபாபதி நேர்த்தியான முறையில் நிகழ்ச்சி தொகுப்பை வழங்கினார்.

நிகழ்வில் பலரும் பேசும்போதும் அ.முத்துலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி என்ற வரிசையை முன்வைத்து பேசினர். நவம் சொன்னது போல, அ.முவின் எழுத்துகளை படிக்கும்போது கொடுப்புக்குள் சிரிப்பு வரும். பொ. கருணாகரமூர்த்தியின் எழுத்துகளை படிக்கும்போது கொல்லென்று சிரிப்புவரும் என்ற கருத்தை எல்லா வாசகர்களுமே உணர்ந்திருப்பர். இருவரும் கதை சொல்லும் பாங்கில் கூட நிறைய ஒற்றுமைகளை காணலாம். (இதே போல சுவையாக கதை சொல்லக்கூடிய இன்னொரு ஈழத்துக் கதை சொல்லி சுகிர்தராஜா).
நிகழ்வில் எனக்கு அதிகம் நெருடலாகப் பட்ட விடயம் ஏறத்தாழ பேசிய எல்லாருமே பொ. கருணாக்ரமூர்த்தியை ஜெயமோகன் பாராட்டியிருக்கின்றார், ஜெயமோகன் இவரைப் பற்றி இப்படி சொல்லியிருக்கின்றார் என்கிற ரீதியில் பேசியதும், தாம் சொல்வதற்கெல்லாம் ஜெயமோகனை மேற்கோள் காட்டியதும். ஒரு கட்டத்தில் இது என்ன ஜெயமோகன் குருகுலப் பள்ளியின் விழாவா அல்லது ”ஜெயமோகன் பார்வையில் பொ.கருணாகரமூர்த்தி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கமா என்ற சந்தேகமே எனக்கு தோன்றிவிட்டது. ஜெய்மோகன் பல விடயங்களை பார்க்கும் விதத்தில் இருக்கின்ற கோளாறை நான் சொல்லி அறியவேண்டியதில்லை. அண்மையில் கமலாதாஸ் சூரையா பற்றிய பதிவில் அவர் தெரிவித்த கண்டுபிடிப்புகள் அவரது தீவிர ரசிகர்களை கூட மௌனமாக்கியிருப்பதை அவதானித்து இருக்கின்றேன். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை என்ற தேய்ந்துபோன தட்டையே திரும்ப திரும்ப எனக்கு தெரிந்து 10 வருடமாக சொல்லிவரும் இவரது அங்கீகாரத்தை இவ்வளவு முக்கியத்துவப்படுத்த வேண்டியதில்லை. அ.முத்துலிங்கம் தவிர்ந்த வேறு ஈழத்து எழுத்துகளை இவர் தொடர்ந்து படிக்கின்றாரா என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. இதையொற்றி எதிர்வினையாற்றின இளங்கோ “திசேரா, மலர்ச்செல்வன், இராகவன், மைக்கேல், சித்தார்த்த சேகுவேரா, நிருபா” போன்றவர்களின் எழுத்துகளை ஜெயமோகன் வாசித்திருப்பாரா என்பதே தெரியாது என்று சொன்னார். ஈழத்து எழுத்துகள் தட்டையானவை, ஒற்றைத்தன்மையானவை என்று தொடர்ந்து அறிக்கைவிடும் ஜெயமோகனின் எழுத்துகள் பல சமயங்களில் எவ்வளாவு அலுப்பூட்டும் பிரதிகளாக இருக்கின்றன என்பதை கனடாவில் இருக்கும் அவரது நண்பர்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லி மாடன் மோட்சம், பல்லக்கு போன்ற நல்ல சிறுகதைகளை எழுதிய ஜெயமோகன் மீள உதவலாம் என்பது என் வேண்டுகோள். மேலும் தொடர்ந்து தலையணை அளவு புத்தகங்களை எழுதுவதை சற்றுக் குறைத்து, கூறியது கூறாமல் தன் கருத்துகளையும், பார்வையையும் மீள்பரிசீலனை செய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.

இறுதியில் ஏற்புரையாற்றிய பொ.கருணாகரமூர்த்தி தனக்கேயுரிய மென்மையுடன் தன் உரையை படித்தார். இஸங்கள் பற்றிய கருத்துகளோடு அவர் மீது முன்வைக்கபட்ட விமர்சனங்களை “எனக்கு எந்த இசங்கள் பற்றியும் தெரியாது, அதனால் தான் அப்படியான குறைகள் வந்திருக்கும்” என்று ஏற்றுக்கொண்டது என்னைக் கவர்ந்திருந்தது. பொதுவாக எழுத்தாளார்கள் என்றால் எல்லாவிடயங்கள் பற்றியும் தெரிந்திருக்கவேண்டும் என்ற கருதுகோள் எம்மவர்களிடையே உள்ளது. சில எழுத்தாளர்களும் இப்படியே உள்மனதில் நினைப்பதால்தான் தமக்கு தெரியாத விடயங்கள் பற்றியெல்லாம் ஏதோ உளறித்தள்ளி விடுகின்றனர் (சரியான உதாரணம் காலச்சுவடில் கருணா பற்றிய கட்டுரை). அதே நேரம் ஒரு அகதி உருவாகும் நேரம் தொகுப்பில் சொல்லப்பட்ட கற்பு, சோரம் போதல் போன்ற கற்பிதங்கள் பற்றிய விமர்சனத்துக்கு அவர் எந்த எதிர்வினையுமே ஆற்றாமல்விட்டது ஏமாற்றத்தையே தந்தது. ஏற்கனவே கருணாகரமூர்த்தியை நண்பர்களுடன் ஒருமுறை சந்தித்திருந்திருக்கின்றேன். இந்த இரண்டு சந்தரிப்பத்திலும் கருணாகரமூர்த்தி எந்த ஒளிவட்டத்தையும் தனக்கு அணிவித்துக் கொள்ளாத, பழகுவதற்கு இனிய மனிதராக, மனதுக்கு மிக நெருக்கமாக எனக்கு தோன்றினார். அதன் பிறகு அவரது பெர்லின் இரவுகளை வாசித்தபோது அவரே முன்னல் இருந்து கதை சொல்வதுபோன்ற ஒரு அனுபவத்தையே உணர்ந்தேன்.
================================================================
அங்கதம் ஆறாத கதை சொல்லலுக்கு ஐம்பது ஆண்டுகள் – அ.முத்துலிங்கம்
அ.முத்துலிங்கத்தின் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணியை முன்வைத்து ஒரு விமர்சன நிகழ்வினை காலம் குழுவினர் மே 23 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். தற்கால தமிழ் இலக்கியத்தில் ஒரு தவிர்க்க முடியாத இடத்துக்குச் சொந்தக்காரர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்தில் அவர் மௌனம் சாதிக்கும் தளங்களும் களங்களும் பற்றி எனக்கு நிறைய விசனங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் அவரது எழுத்து தருகின்ற வாசிப்பனுபவம் அருமையானது. சுஜாதா, அசோகமித்திரன், கோபிகிருஷ்ணன், சாரு போன்றவர்களிடம் நான் அனுபவித்த அதே கட்டுமானத்தை இவரிடமும் உணர்ந்திருக்கின்றேன். நிகழ்வுக்கு முன்னதாக “காலம்” குழுவினரின் “வாழும் தமிழ்” புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சுக்களாக நுஹ்மானின் பேச்சும், பொ. கருணாகரமூர்த்தியின் பேச்சும் இடம்பெற்றன.
அனேகமாக பேசியவர்கள் எல்லாம் அ.முத்துலிங்கம் இந்தியாவிலும் பிரபலமான ஈழத்து எழுத்தாளர், இந்தியாவில் அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின்றன என்று தவறாமல் குறிப்பிட்டனர். இது பற்றிய எனது பார்வை வித்தியாசமானது. அ.முவைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் பிறந்த எழுத்தாளரே தவிர அவர் எழுதுபவை ஈழத்தவரின் இலக்கியம் அல்ல. ஒரு பயணியாக தனக்கு கிடைத்த அனுபவங்களை சுவைபட கதை சொல்பதே அவரது பாணி. அப்படிப் பார்க்கும்போது அவரது எழுத்துக்கள் ஒரு பொதுவான தளத்தில் அமைந்த எழுத்துக்கள். அதாவது ஒரு ஈழத்து வாசகன் அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் இந்திய வாசகன் வாசிக்கும்போது அடையும் அனுபவத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஏனென்றால் அவர் கதைகள் ஒரு பொதுவான தளாத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியவையே. மேலும், நண்பர் ஒருவர் குறிப்பிட்டபடி தான் ஒரு கணவான் எழுத்தாளர் என்பதை அவர் தொடர்ந்து பேணிவருகின்றார். இதுவரை எந்த ஒரு சமுதாய கோபங்களோ அல்லது, காட்டமான விமர்சனங்களோ அவர் எழுத்துக்க்ளில் இருந்தது கிடையாது. இலங்கையில் பிறந்த எழுத்தாளர் ஒருவரின் புத்தகங்கள் இந்தியாவில் அமோகமாக விற்பனையாகின்றன என்று மகிழும் அதேவேளை, அவரை ஈழத்து எழுத்தாளர் என்று முழுமையாக உரிமை கொண்டாடமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு. அது மட்டுமல்ல அண்மையில் அவர் உயிர்மையில் ஜெயமோகனுடன் நடத்திய உரையாடலிலும், இந்த நிகழ்விலும் எழுத்துக்கள் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் பேசியதில் எல்லாமே மேற்கத்திய இலக்கியத்தின் ஆதிக்கமாகவே இருந்தன. தமிழ் பெயரை தேடித்தான் பார்க்கவேண்டியிருந்தது. அ. முத்த்லிங்கம் எம்மை விட்டு அந்நியமாகிக்கொண்டு போகின்றர் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கின்றது.
சில காரணங்களால் சற்று தாமதமாக சென்றதால் நுஹ்மானின் உரையை என்னால் கேட்கமுடியவில்லை. ஆனால் ஜயகரன், வெங்கட்ரமணன், மகாலிங்கம், பொ. கருணாகரமூர்த்தி போன்றவர்கள் தாம் எப்படி எப்படியெல்லாம் அ.முவை ரசித்தோம் என்று கூறினர்.
இதற்கு ஒருவாரம் முன்பாகத்தான் தனது புத்தக அறிமுக நிகழ்வில் கருணாகரமூர்த்தி என்னை வெகுவாக கவர்ந்திருந்தார். அதே எதிர்ப்பார்ப்புடன் அவரது பேச்சை எதிர்பாத்திருந்த எனக்கு அன்றைய அவரது பேச்சு மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. கிட்ட தட்ட 30 நிமிடம் பேசிய கருணாகரமூர்த்தி அ.முவின் ஒரு கதையை அரைவாசியும் இன்னுமொரு கதையை முக்கால்வாசியும் வாசித்துக்காட்டினார். அதைவிட ஏமாற்றமாக “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” ஒரு நாவலா என்ற விமர்சனத்தை எடுத்துக்கொண்ட அவர், இனிமேல் இதையும் நாவல் வடிவமாக எடுத்துக்கொள்வோம் என்றார். எனக்கு 91ம் ஆண்டு தளபதி திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வரும் என்றூ ஜீவி அறிவித்தபின் படப்பிடிப்பு தாமதமாக ஒரு ஒரு பத்திரிகையாளர் “தளபதி தமிழ் புத்தாண்டுக்கு வந்துவிடுமா என்று கேட்டபோது; ஜீவி தளபதி என்று வருகுதோ அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றூ சொன்னது ஞாபகம் வந்தது. உண்மை கலந்த நாட்குறிப்புகள் நாவல் இல்லை என்பவர்கள் சொல்லும் கருத்து, நாவலுக்குரிய இயல்புகளான சம்பவங்களின் தொடர்ச்சி, பாத்திரங்களின் தொடர்ச்சி, நிலத்தின் தொடர்ச்சி என்பன இதில் இல்லை என்பது. இதற்கு பொ. கருணாகரமூர்த்தி கிராவின் கோபல்லபுரத்து மக்களிலும் இந்ததொடர்ச்சிகள் இல்லை என்றார். ஆனால் அதில் நிலத்தின் தொடர்ச்சி, சம்பவங்களின் தொடர்ச்சி இருந்தன. மேலும் ஒரு வாதத்துக்கு உண்மை கலந்த நாட்குறிப்புகள் ஒரு நாவல் என்று எடுத்தால் 80 கள் முதல் 2008வரை சுஜாதா அவ்வப்போது எழுதிய ஸ்ரீரங்கத்து கதைகளை தொகுத்து உயிர்மை பதிப்பகம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று ஒரு புத்தகமாக வெளியிட்டதே அதுவும் நாவலா?
இறுதியில் முத்துலிங்கம் வழங்கிய உரைகூட மிகுந்த ஏமாற்றமாகவே அமைந்தது. பல மணி நேரம் சமைத்த உணவை ஒரே விள்ளலியே உப்பு சரியில்லை அது இதென்று குறை சொல்வதுபோல கஷ்டப்பட்டு எழுதிய நாவலை குறை சொல்கின்றர்கள் என்று அங்கலாய்த்தார். மேலும்தான் எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள் தாமே எழுதலாம் என்ற புத்திசாலித்தனமான ஒரு கருத்தையும் சொன்னார். ஒரு முறை ஒரு நடன போட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடனமாடிய சோடிக்கு 0 புள்ளிகள் இட்டபோது அவர்கள் தாம் கஸ்டப்பட்டு பழகியதுக்குத் தன்னும் தமக்கு புள்ளிகள் தந்திருக்கலாம் என்று சொன்னபோது சூர்யா, தான் ஒரு திரைபடத்தில் கஸ்டப்பட்டு நடித்தேன் அதனால் நீங்கள் அதனை வெற்றிப்படமாக்கவேண்டும் என்றூ எதிர்ப்பார்ப்பது, அது போலதான் உங்கள் மன நிலையும் என்று சொன்னார். அ.முவைப் பொறுத்தவரை அவரது படைப்புகள் முற்று முழுதாக நிராகரிக்கவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான விமர்சனமாக அதில் கண்ட குறைகள் பற்றிக் கூறுவதற்கான வெளியை அவர் முற்றாக மறுத்தார் என்றே சொல்ல வேண்டும்.

நன்றி arunmozhivarman.com