இலங்கைச் செய்திகள்


மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம்

மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவை சென்றடைந்தார்

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு

யாழில் மினி சூறாவளி   

பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் ; அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை

கட்டாருக்கு சென்ற மகனை காணவில்லை   : தாய் முறைப்பாடு

சித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை  

வெள்ளவத்தை தொடர் ரயில்  விபத்து : தடுக்க விஷேட திட்டம்

அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்

யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில்





மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம்



11/05/2016 மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை  கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம்  ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை   பதுக்கி வைத்து இன்று வரை  அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம்   மிகவும்  சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ   நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மஹிந்த  ராஜபக்ஷவும்  அவரது மோசடிக்கார கும்பலும்  சட்டத்திலிருந்து  தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும் இந்த மோசடிக் காரர்களை  பாதுகாக்க  அமைச்சரவைக்குள்ளும் சில  புள்ளுருவிகள் இருப்பதாகவும் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டது.  
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சரவை  பேச்சாளரும், சுகாதார  அமைச்சருமான  டாக்டர் ராஜித  சேனாரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு  புதிய   திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து  விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 
அதற்கான பல நடைமுறைகள்  உள்ளன. எனவே  விசாரணைகள்  முழுமை பெற காலதாமதமாகும். ஆனால்  மஹிந்த  ராஜபக் ஷ தனது  மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. 
 விரைவில் விசாரணைகள்  முடிவடையும்.  மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த  உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள். 
 யார் என்ன  முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து  தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நன்றி வீரகேசரி 











மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவை சென்றடைந்தார்

11/05/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு உகண்டாவிற்கு பயணமானார்.  உகண்டா தேசிய இயக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு அரச நிகழ்வு ஒன்றில் விஷேட பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.


மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்றிரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவை சென்றடைந்தார். உகண்டாவின் தேசிய தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் உகண்டா தேசிய இயக்கத்தின் தலைவர் முசெவேனி வெற்றிப்பெற்றுள்ளார்.



அவரது அரச நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ உகண்டா சென்றுள்ளார். தொடர்ந்தும் மூன்று நாட்கள் உகண்டாவில் தங்கியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடு திரும்ப உள்ளாதாக அவரது ஊடக பேச்சாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார். நன்றி வீரகேசரி 












லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

11/05/2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார்.
லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 













பிள்ளையானுக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு



11/05/2016 முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை  எதிர்வரும் மே மாதம் 25ஆம்; திகிகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.முகைதீன்  இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்; கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தமை  குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 









யாழில் மினி சூறாவளி   


11/05/2016 யாழ். இளவாலை பிரதேசத்தில் சில நிமிடம்  சூறாவளியுடன் கூடிய மழை பெய்தமையால் இளவாலை கன்னியர் மடம், புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன. 
இளவாலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் போது கட்டடங்களின் கூரைகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன. உயிர் சேதமோ காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை.



  நன்றி வீரகேசரி 















பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் ; அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கை

11/05/2016 சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்­பினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில்  65 இலங்­கை­யர்­களின் பெயர்கள் இடம்­பெற்­றுள்­ளன.  உலகம் முழு­வதும்  3 இலட்­சத்து  68000 பேரின் பெயர்கள்  இந்த ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள நிலை­யி­லேயே   இலங்­கை­யர்­களின்  65 பெயர்­களும்  இடம்­பெற்­றுள்­ளன.
இந்த  65  இலங்­கை­யர்­களில்   53 தனிப்­பட்­ட­வர்­களும் 3 நிறு­வ­னங்­களும் 7  இடை­நிலை முகவர் நிறு­வன  தொடர்­பா­ன­வர்­களும்  இடம்­பெற்­றுள்­ளன.  விசே­ட­மாக  கடந்த காலங்­களில் பாரிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய எவன்ட் கார்ட் நிறு­வ­னத்தின் தலை­வரின் பெயரும் அந்­நி­று­வ­னத்தின்  நான்கு பங்­கு­தா­ரர்­களின் பெயர்­களும் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் வெளி­யா­கி­யுள்ள  65  இலங்­கை­யர்கள்  தொடர்­பாக  சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.
கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் பனாமா ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்ட நிலையில்  உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில்  இந்த ஆவ­ணங்கள்  வெளி­யி­டு­வ­தாக சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்பு கூறி­யி­ருந்­தது. அந்த வகை­யி­லேயே தற்­போது   உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இந்த ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்­டுள்­ளன.
அரசாங்கம் 
இந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள்  தொடர்­பாக  அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்கும் என்­பது  தொடர்பில்  அமைச்சர் டிலான் பெரெரா கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில்  விளக்­க­ம­ளிக்­கையில்
வரி ஏய்ப்பு செய்து இர­க­சி­ய­மாக வங்­கி­களில் பணத்தை பதுக்கி வைத்­துள்­ள­வர்கள் தொடர்­பி­லான விப­ரங்கள் அடங்­கிய பனாமா நாட்டு சட்ட நிறு­வ­ன­மான மொசாக் பொன்­சேகா நிறு­வ­னத்தின் 11.5 மில்­லியன் இர­க­சிய தக­வல்கள் பனாமா ஆவ­ணங்கள் என்ற பெயரில் கடந்த காலத்­தில்­வெ­ளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.  இந்த அறிக்­கையில் 35 நாடு­களைச் சேர்ந்த முக்­கிய வங்­கி­களின் முக்­கிய தொடர்­புகள் மற்றும் நபர்­களின் பட்­டியல், அத்­தோடு 128 அர­சி­யல்­வா­திகள்  தொடர்­பு­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் இலங்­கை­யுடன் தொடர்­பு­டைய அல்­லது இலங்­கை­யர்கள் உள்­ளனர் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் இப்­போது இலங்­கையில் நபர்­களின் பெயர்­க­ளையும் உள்­ள­டக்­கிய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர்.
இலங்­கையை சேர்ந்த 65 நபர்­களின் பெயர்­க­ளுடன்  இந்த பனாமா அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் இந்த நபர்கள் தொடர்­பிலும் இந்த நபர்­களின் பின்­னணி, எந்த நிறு­வ­னங்கள் தொடர்­பு­களில் உள்­ளது என்­பன தொடர்­பிலும்  அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும். அதேபோல் இந்த 65 பேர்­களில் முக்­கி­ய­மான நபர்கள் சிலரின் பெயர்­களும் உள்­ளன. ஆகவே அவர்கள் தொடர்­பிலும் அர­சாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவை சாதாராண விடயம் அல்ல. நிதி மோசடிகள், பணப் பதுக்கல் தொடர்புடைய விடயங்களில்  சர்வதேச தரப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது காலத்தை கடத்தினால் அவை இறுதியில் நாட்டிற்கும் அரசுக்குமே அவப்பெயரை ஏற்படுத்தும் என்றார்.
அமைச்சர் அகில கருத்து
இது தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில்
பனாமா ஆவணத்தில் சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் குறித்து சுயாதீன நீதித்துறையை கொண்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல. அதேபோன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஊழல் மோசடி மற்றும் குற்றச்செயல் நடவடிக்கைகள் மீதான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன. இதன்பிரகாரம் கடுமையான சட்ட ரீதியான தீர்மானங்களை விரைவில் மக்கள் கண்டு கொள்வர். தற்போது ஊழல் மோசடிகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இது பரவலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இறுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
பனாமா ஆவணத்தில் சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சுயாதீன நீதித்துறையை கொண்டு குறித்த ஆவணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
ஊழலுக்கு எதிரான அமைப்பு
இதேவேளை இது தொடர்பில் ஊழலுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் ரஞ்ஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில். , “ இலங்கையிலிருந்து அண்மைய வருடங்களில் பில்லியன்கணக்கான பணம் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை திரும்பப் பெற மத்திய வங்கி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிதி குற்றச்செயல்கள் தொடர்பில் பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவைப்பாட்டை மீளவும் ஞாபகப்படுத்துவதை மட்டுமே பனாமா பேப்பர்ஸ் செய்துள்ளது" "எவான்ட் கார்ட் இத்தகைய சர்ச்சைக்குள் சிக்கிக் கொள்வதும் இது முதல் தடவையல்ல. மேற்படி சர்ச்சைக்குரிய செயற்பாடு தொடர்பான விசாரணைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாதுள்ளது" எனினும் நாம் நிதி விசாரணைகளின் நிலை குறித்து மகிழ்ச்சியடைய முடியாதுள்ளது என்று தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க உலகிலுள்ள செல்வந்தர்களும் பனாமா நாட்டில் செயற்படும்  சட்ட நிறுவனமான மொஸாக் பொன்ஸேகாவைப் பயன்படுத்தி எவ்வாறு சொத்துகளை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பில் 200,000  நிறுவனங்களின்  தரவுகளை சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
மேற்படி பிந்திய ஆவணங்கள் ஹொங்கொங்,  அமெரிக்க மாநிலமான நெவாடா உள்ளடங்கலாக  ௨௧  அதிகார எல்லைகளில் ஸ்தாபிக்கப்பட்ட கம்பனிகள், நம்பிக்கை நிதியங்கள் மற்றும் மன்றங்கள்  தொடர்பான அடிப்படைத் தகவல்களை  உள்ளடக்கியுள்ளன.
ஆனால் இது பனாமா பேப்பர்ஸ் என அறியப்படும் . சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பு மிகவும் கவனமாக  பொதுமக்களின் அக்கறைகளுக்கு ஏற்ப தகவல்களை வடிகட்டி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    நன்றி வீரகேசரி 












கட்டாருக்கு சென்ற மகனை காணவில்லை   : தாய் முறைப்பாடு

09/05/2016 தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்ற தனது மகன் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு புதுநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய செந்தூரன் என்ற இளைஞரே கடந்த ஆறு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக அவரது தாய் ஜமுனா (வயது 54) முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தாய்,
எனது மகன் அவரது நண்பர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வீசாவினூடாக கடந்த 2014.01.01 திகதி காய்ச்சி வெல்டிங் தொழிலுக்காக கட்டாருக்கு சென்றார்.
அன்றிலிருந்து கடந்த 30.10.2015 வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பினார். ஆனால், அங்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை பல மாதங்களுக்குப் பின்னரே சம்பளம் தருகி;றார்கள் என்றும் இதனால் செலவுக்குக் கூட சிரமமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இறுதியாக எனது வங்கிக் கணக்குக்கு கடந்த 18.07.2015 அன்று 17800 ரூபாய் அவரது சம்பளப்; பணத்தை அனுப்பியிருந்தார்.
எனது மகன் சட்ட ரீதியாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடாகவே  மத்தியகிழக்கு சென்றிருந்தார்.
ஒரேயொரு ஆண் பிள்ளையான அவரை குடும்ப பொருளாதாரக் கஷ்டத்தின் காரணமாகவே வெளிநாடு அனுப்பினோம். எனது கணவரும் நோய்வாய்ப்பட்டவர்.
தற்சமயம் எனது மகனது தொடர்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து நான் எனது பிள்ளையை இழந்து கலங்கிப் போய் நிற்கின்றேன். காணாமல்போன எனது மகனின் சகோதரிகள் இருவரும் கல்வியைத் தொடரமுடியாத கவலையிலும் வறுமையிலும் கண்ணீரோடு காலங் கழிக்கின்றார்கள்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் காணாமல் போன எனது மகனை மீட்டுத் தருமாறு உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன். எனது தொடர்பு இலக்கம் 0652053846    நன்றி வீரகேசரி 












சித்திரவதைகளுக்குள்ளான 110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய பரிதாபம்


09/05/2016 மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்ற 110  இலங்கையர்கள் மீண்டும் இன்று காலை 5.30 மணியளவில் நாடு திரும்பியுள்ளனர்.
மாத்தளை, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், காலி மற்றும் மட்டக்களப்பு  பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் இருவர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஊனமுற்ற நிலையில் உள்ளனர்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட தனியார் கம்பனிகள் மூலம் சவுதி மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு ஒரு வருடம், இரண்டு வருடம் மற்றும் மூன்று வருடம் ஒப்பந்த அடிப்படையில் பணி பெண்களாக சென்றுள்ளனர்.
இவ்வாறு சென்றவர்கள் சம்பளமின்றி பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான நிலையில், நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 










முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: அரசாங்கத்தின் கோரிக்கை  


12/05/2016 யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூற முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 
வடக்கின் நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  
அவர் மேலும் கூறுகையில், 
யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் மே மாதம் முழுவதும் இராணுவ வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவத்தின் புகழை வெளிப்படுத்துவதை விடவும் இந்த நாட்டில் அமைதியையும், மக்கள் மத்தியில் நல்லுறவையும் ஏற்படுத்த தம்மை தியாகம் செய்த எமது இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முறை அரசாங்கம் முன்னின்று இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க தயாராக உள்ளது.  நன்றி வீரகேசரி











வெள்ளவத்தை தொடர் ரயில்  விபத்து : தடுக்க விஷேட திட்டம்


12/05/2016 வெள்ளவத்தை - மற்றும் தெஹிவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அடிக்கடி பதிவாகும் ரயில் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களை  தடுக்க வெள்ளவத்தை பொலிஸார் விஷேட திட்டங்களை  அமுல் படுத்தத்  தீர்மானித்துள்ளனர்.  
மேல் மாகாணத்தின் தென் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித பனாமல்தெனிய, உதவி பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸா ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில விஜேமான்ன இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
அதன்படி அவதானக் குறைவு காரணமாக இடம்பெறும் விபத்துக்கள் உயிரிழப்புக்களைக் கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளவத்தை முதல் தெஹிவளை வரையிலான தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் வலைகளைக் கொண்டு தடுப்பு வேலி அமைக்க பொலிஸாரினால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.  முழுமையாக  வலைகளைக் கொண்டு மறைக்கும் விதமாக தடுப்பு வேலிகளை அமைக்க போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு பொலிஸார் ஊடாக கோரிக்கை அனுப்பட்டுள்ளது.
போக்கு வரத்து அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்று வெள்ளவத்தை பொலிஸாரினால் அனுப்பட்டுள்ள நிலையில், அதற்கான நடவடிக்கைகளை போக்கு வரத்து அமைச்சு முன்னெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வெள்ளவத்தை கடல் மற்றும் கரையோர பிரதான வீதி அகிய இரண்டுக்கும் மத்தியில் கரையோர ரயில் மார்க்கம் அமைந்துள்ள நிலையில், காலை மற்றும் மாலை வேளையில் வாகன சப்தம், கடல் அலைகளின் ஓசைகளுக்கு இடையே ரயில் தொடர்பிலான கவனம் குறைவதாகவும் அதனாலேயே பெருமளவான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த  நிலையிலேயே இந்த திட்டம் தொடர்பில் பொலிஸாரினால் போக்கு வரத்து அமைச்சுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி









அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.!



12/05/2016 மட்டக்களப்பு மாநகர சபை, பொது மக்களிடமிருந்து வரிப்பணத்தை அறவிடுவதில் முன்னுதாரணமாக திகழ்கிறது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரையீ ஹட்செஸன் தெரிவத்தார். 
இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகருக்கு மாநகர ஆணையாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையலான அதிகாரிகள் வரவேற்பளித்தனர். 
மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலும் உயர் ஸதானிகர் கலந்து கொண்டார். 
இங்கு மாநகர சபையின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளர் விளக்கமளித்தார். 
இங்கு உரையாற்றிய உயர்ஸ்தானிகர், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டியெழுப்புவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்றும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. 
மட்டக்களப்பு மாநகர சபை வரியை அறவிடுவதில் முன்னுதாரணமாக விளங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக தெரிவித்தார். 
இதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலய உயர் அதிகாரிகள் ஆசிய மன்றம் மற்றும் மாநகர சபை அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர். நன்றி வீரகேசரி










முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்

12/05/2016 முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

ஆரம்ப சுடரினை ஏற்றும் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
யாழ்.மாவட்டத்தில் அதிகளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி பகுதியில் இன்று காலை 10 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வு ஆரம்பமானது. 
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


நன்றி வீரகேசரி












யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

12/05/2016 யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ். மாநகர சபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதில்  சுமார் 120 சுகாதார தொழிலாளர்களும் 8 குடும்பநல உத்தியோகத்தர்களும் ஈடுபட்டு உள்ளனர்.
போராட்டம் தொடர்பில் சுகாதார தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 

 கடந்த 7 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோது எங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
 ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்களில் 5 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆணையாளரிடம் சென்ற அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரினோம்.  குறித்த ஐந்து பேருக்குமான நிரந்தர நியமனத்தை நிறுத்தி அனைவருக்கும் சேர்த்து நியமனம் வழங்குவதாக ஆணையாளர் அப்போது கூறினார். 
ஆனால், கடந்த 10ஆம் திகதி எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் போது, அந்தப் பட்டியலில் ஐவரின் பெயர்கள் இருக்கவில்லை. இதன்மூலம் ஆணையாளர் எங்களை ஏமாற்றி ஐந்து பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கியமை தெரியவந்தது' என்றனர்.
 இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கருத்து கூறுகையில்,
 எங்களில் சிலர், 19 வருடங்களாக தற்காலிக இணைப்பில் கடமையாற்றி வருகின்றனர். நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் இதுவரையில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை' என்றனர்.



நன்றி வீரகேசரி









இந்தியாவை சென்றடைந்தார் ஜனாதிபதி



13/05/2016 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று இந்தியாவிற்கு இரண்டுநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  இன்று (13) பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
பிரித்தானியாவிற்கான இரண்டுநாள் விஜயத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஜனாதிபதி, புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்ததுடன், இந்திய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ராவோ இந்திரஜித் சிங் அவர்கள் உள்ளிட்ட குழுவினரால் விசேட மரியாதைகளுடன் வரவேற்கப்பட்டார்.   நன்றி வீரகேசரி














மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி, மோடியுடன் பேச்சுவார்த்தை

13/04/2016 இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக இரு தலைவர்கள் முக்கியமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
 இருநாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற ஜனாதிபதிக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். 
இதன்போது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
 இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இந்தியத் தரப்பின் கவலையை ஜனாதிபதியிடம்  மோடி தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
 இது தவிர இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை உஜ்ஜைன் சென்று அங்கு நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்பமேளாவில் பங்கேற்கிறார். மோடியும் அவருடன் உஜ்ஜைன் செல்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தமை தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்திய-இலங்கை உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
 "உஜ்ஜைன் கும்பமேளாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பங்கேற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தியா-இலங்கை இடையே சமூக பண்பாட்டு உறவு எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது' என்றும் மோடி கூறியுள்ளார்.
 மோடியுடனான சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , "இந்தியா-இலங்கை இடையே நிலவி வரும் நல்லுறவு மிகச் சிறந்தது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுடனான இலங்கையின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
 இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:
 இந்த சந்திப்பின்போது இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 
இலங்கையில் அனைத்து பிரிவினரும் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகளை மோடி பாராட்டினார். 
இது தவிர இரு நாடுகளிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.
 மத்தியப் பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபிக்கு இன்று சனிக்கிழமை செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தொடர்ந்து பெங்களூர் செல்கிறார். பின் அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி













முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  புதனன்று வடமாகாண சபையின் ஏற்பாட்டில்


14/05/2016 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறும். 
வடமாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. 
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர். 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.   நன்றி வீரகேசரி