துண்டு -தேனம்மை லெக்ஷ்மணன்.

.

மேட்டிமையாய்த் தோளிலும்பணிவாய் இடுப்பிலும்
கரைகளை மாற்றி
கட்சி சார்பாய் ஆக்கி
வியர்வை வாசமும்
வெத்திலைக் காவியும் சுமந்து
குழந்தையின் மூக்கு சிந்தியும்
இயலாமையின் கண்ணீரும் கலந்து
வானம் பொய்க்கையில் தலையிலும்
வருத்தும் மனைவி விசும்பலிலும் பழுப்பேறி
அவ்வப்போது தலையணையும்
யதார்த்தம் மூடிமறைக்கும் போர்வையுமாய்.
வெய்யில் உறைத்தாலோ
திருவிழா வந்தாலோ தலைப்பாக்கட்டாய் மாறும்
கௌரவப் போர்வைத் துண்டு.

தேனம்மை லெக்ஷ்மணன்.
காரைக்குடி