.
ஜெயகாந்தன் மறைந்தார். எழுத்தாளரின் மறைவு என்பது ஒரு தொடக்கம். அவரை முழுமையாகத் தொகுத்துக்கொள்ள, அனைத்துக் கோணங்களிலும் அவருடைய பங்களிப்பைப் பற்றி அறிந்துகொள்ள அது ஒரு வாய்ப்பு. அத்தனை பேரிலக்கியவாதிகளும் இறந்த பின்னர் உயிர்த்தெழுபவர்கள்தான்.
நமக்கு சங்க காலத்துக்குப் பிறகு, இலக்கியவாதி என்ற அடையாளம் மட்டும் கொண்ட பெரிய ஆளுமைகள் இல்லாமலாயினர். இலக்கியமும் மதமும் ஒன்றாக ஆயிற்று. நாயன்மார்களோ சேக்கிழாரோ ஆழ்வார்களோ கம்பனோ மதம் சார்ந்த மரியாதையையே பெற்றனர். மற்றபடி இலக்கியவாதிகள் என்றால் அதிகாரத்தை அண்டிப் பிழைப்பவர்கள், பரிசில் வாழ்க்கை வாழ்ந்த மொழிநுட்பத் திறனாளர்கள். இலக்கியவாதி என்பவர் பிரபுக்களின் அவையிலுள்ள பலரில் ஒருவர் என்ற எண்ணமே மக்களிடமும் இருந்தது.
இந்த மனநிலை காரணமாக இங்கு இலக்கியவாதிக்கு மதிப்பு இருந்ததில்லை.
இங்கே ஜனநாயகமும் நவீனக் கல்வியும் வந்தபோது நவீன இலக்கியமும் உருவானது. நவீன எழுத்தாளன் பிரபுக்களின் தாசன் அல்ல, அவன் மக்களை நோக்கிப் பேசுபவன், அவர்களின் கனவுகளைச் சமைப்பவன், இலக்குகளைச் சுட்டிக்காட்டுபவன், தன் காலகட்டத்தில் அவன் தனித்தவன், முன்னால் செல்பவன் என்ற நிலை உருவானது. ‘கேளடா மானுடா’என்று பீடத்தில் ஏறி நின்று பாடிய பாரதி, அந்த வகையில் தமிழுக்கு முதன்மையான நவீன இலக்கியவாதி. அரசவையைத் துறந்து இதழியல் நோக்கி அவர் போனதே அவ்வகையில் ஒரு பெரிய குறியீடு. ஆனால், அவரைப் புரிந்துகொள்ளாமல் அவமதித்துத் துரத்தியது தமிழ்ச் சமூகம்.
அந்த இழிவு என்றும் இங்கு எழுத்தாளர்களுக்கு இருந்தது. ஜனநாயகத்தின் வழியாக உருவாகிவந்த புதிய அரசர்களான அரசியல்வாதிகளுக்கு, நவீனத் தொழில்நுட்பம் மூலம் உருவாகிவந்த புதிய தெய்வங்களான நடிகர்களுக்கு இருந்த இடத்தை தமிழகம் எழுத்தாளர்களுக்கு அளித்ததில்லை - இன்னும் அளிக்கவில்லை.
தமிழிலக்கியத்தின் பதாகை
அத்தகைய சூழலில் தமிழ் எழுத்தாளர்களின் முகமாகத் தருக்கி நிமிர்ந்து நிற்க, சமூகத்தை நோக்கிக் கைசுட்டிப் பேச, எழுத்தாளருக்குரிய வாழ்க்கையை வாழத் துணிவுகொண்டவர் ஜெயகாந்தன். எழுத்தன்றி எந்தத் தொழிலும் செய்ய மாட்டேன் என அவர் எடுத்த முடிவு, எந்நிலையிலும் கலைஞனாக மட்டுமே வாழ்வேன் என அவர் கொண்ட உறுதி அவரைத் தனித்து நிறுத்தியது. அவருக்கிருந்த இடதுசாரிப் பின்புலமும் வங்காளத் தொடர்புகளும் அதற்குக் காரணமாயின. அவர் அவ்வகையில் ஒரு முன்னோடி. ஒரு அடையாளம். நவீனத் தமிழிலக்கியத்தின் பதாகை.
அடுத்து, இங்கே முற்போக்கு இலக்கியம் உருவானபோது அதன் குரலாக எழுந்துவந்தவர் அவர். இந்தியாவெங்கும் முற்போக்கு என்னும் மார்க்ஸிய அடிப்படை கொண்ட இலக்கியம் மரபை முழுமையாக நிராகரிப்பதாக, இந்திய எதிர்ப்பும் ஐரோப்பிய வழிபாடும் கொண்டதாக இருந்தபோது, ஜெயகாந்தன் இந்தியாவின் ஞானமரபிலிருந்த சாராம்சமான விஷயங்களுடன் மார்க்ஸியத்தை இணைக்க முயன்றார். மார்க்ஸியம் இந்தியாவின் ஞானமாக ஆக வேண்டுமெனக் கனவுகண்டார். ஆகவே, அவருக்கு மார்க்ஸ் அளவுக்கே விவேகானந்தரும் வள்ளலாரும் முதன்மையானவர்களாக இருந்தார்கள். வள்ளுவரும் தாயுமானவரும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களை இடதுசாரி மேடைகளில் முன்வைக்க அவரால் முடிந்தது. பொருள்முதல்வாதமான மார்க்ஸியம் மரபின் ஆன்மிக சாரத்தை இழந்துவிடலாகாது என்ற அவரது அறிவுறுத்தல் இன்றும் இடதுசாரிகள் முன் நின்றுகொண்டிருக்கிறது. இந்தியாவின் முற்போக்கு எழுத்தாளர்களிடையே ஒரு கோட்பாட்டாளராக ஜெயகாந்தன் முதன்மையானவர் என்று இந்த ஒருகாரணத்தாலேயே துணிந்து சொல்ல முடியும்.
அறிவாண்மையின் குரல்
ஒரு படைப்பிலக்கியவாதியாக, கலைஞனாக, ஜெயகாந்தனின் பங்களிப்பு என்ன? சென்ற தலைமுறையைச் சேர்ந்த ஜெயகாந்தனின் தீவிர வாசகர் ஒருவர் சொன்னார். ‘என் சொந்த வாழ்க்கையைப் பற்றி நானே முடிவெடுக்கலாம், அதற்கான உரிமையும் பொறுப்பும் எனக்கு உண்டு என்று எனக்கு ஜெயகாந்தனின் எழுத்துகள் கற்பித்தன.’ இன்று சிந்தித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
ஆனால், சாதி, மதம், சமூகக் கட்டுப்பாடுகளைக் கடந்து ‘நான் சிந்திக்கிறேன்’ என ஒவ்வொரு வாசகரையும் உணரச் செய்தவை அவரது படைப்புகள். வாழ்க்கையை, மக்களை எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் இருப்பார்கள். ஒரு காலகட்டத்தின், ஒரு சமூகத்தின் பொதுக் குரலாக ஒலிக்கும் பெரும் படைப்பாளிகள் தலைமுறைக்கு ஒருவரே. அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் அறிவாண்மையின் குரலாக ஒலித்தவர் ஜெயகாந்தன்.
அவருடைய படைப்புகள் பிரபல இதழ்களில் அன்று வந்தன. பல லட்சம் வாசகர்களை நேரடியாகச் சென்றடைந்தன. அவர்கள், வாசிப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு என நம்பியிருந்தவர்கள். அவர்களின் பிடரியில் அறைந்து சிந்தித்துப்பார் என்று ஜெயகாந்தனின் கதைகள் சொல்லின. தன்னிடம் விவாதிக்க அறைகூவிக்கொண்டே இருந்த எழுத்தாளர் அவர். இந்தக் காரணத்தால் அவரது எழுத்துகள் சற்று உரத்த குரல் கொண்டவை, கதாபாத்திரங்களும் ஒற்றைப்படையானவையாக அமைந்தன. ஆனால், அவை தமிழ்ச் சமூகத்தைச் சில அடிப்படை வினாக்களை நோக்கிக் கொண்டுசென்றன.
அவரது முக்கியமான கதாபாத்திரங்கள் அறிவார்ந்தவர்கள். அவர் வாழ்ந்த காலகட்டத்தின் பிரச்சினைகளைத் தாங்களும் ஏற்றுக்கொண்டவர்கள். அந்தக் கதாபாத்திரங்கள் வழியாக வாசகரை அந்தரங்கமாக, தனக்குள் சிலவற்றைக் கேட்டுக்கொள்ள வைத்தார் என்பதே அவரது வெற்றி. அந்த வினாக்கள் மூலம் அவன் மானுட சமத்துவத்தை, ஒருங்கிணைந்த மானுட விடுதலையை நோக்கி வரச்செய்தார். அரை நூற்றாண்டுக் காலம் இடதுசாரி லட்சியங்களின் குரலாக இங்கே அவரால் ஒலிக்க முடிந்தது.
அவரது படைப்புகளின் தலைப்புகள் மேலும் படைப்பூக்கம் கொண்டவை. ‘புதியவார்ப்புகள்’, ‘சமூகம் என்பது நாலு பேர்’, ‘அந்தரங்கம் புனிதமானது’, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, ‘எத்தனை கோணம் எத்தனை பார்வை’, ‘எங்கோ யாரோ யாருக்காகவோ’, ‘முன்நிலவும் பின்பனியும்’ போன்ற வரிகள் தமிழின் மிகச் சிறந்த கவிதை வரிகளுக்கு நிகரானவை. அவை அப்படைப்புகளின் சாரமாக வாசகர் உள்ளத்தில் வாழ்நாள் முழுக்க நீடிப்பவை.
இடதுசாரி எழுத்தாளர் என்றாலும், அவர் வன்முறையை முழுமையாக நிராகரித்தவர். வன்முறை மானுட ஆழத்திலுள்ள புன்மையைத்தான் வெளியே கொண்டுவரும் என நினைத்தார். ஆகவே, மார்க்ஸை ஏற்றுக்கொண்டதுபோலவே அவர் காந்தியையும் ஏற்றுக்கொண்டார். காந்திக்கும் மார்க்ஸுக்குமான அனைத்து முரண்பாடுகளையும் ஜெயகாந்தன் அறிந்திருந்தார். ஆனால், மானுட விடுதலை என்ற புள்ளியில் அவர்களை ஒருங்கிணைக்க முடியும் என்று அவர் எண்ணினார். அதுதான் ஒட்டுமொத்தமாக அவரது பங்களிப்பு. ஒரு தத்துவ இணைவு. ஒரு மகத்தான உரையாடல். அவர் விட்டுச்சென்றுள்ள கனவு அதுதான்!
NANTRI http://tamil.thehindu.com/
No comments:
Post a Comment