.
புலம் பெயர்ந்த நாடுகளில், சிறப்பாக
அவுஸ்திரேலியாவில் வளரும் பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டுமா இல்லையா என்பது என்றுமே
விவாதத்துக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. இங்கு வாழும் தமிழர் தொகையுடன்
ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ் படிக்கும் பிள்ளைகளின் தொகை மிகக் குறைவாகவே
இருக்கிறது. பல பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் தாம் வாழும் நாட்டின் மொழி அதாவது
ஆங்கிலத்தை அறிந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். இங்கு வாழ, படிக்க, தொழில் பார்க்க ஆங்கில
அறிவுதான் தேவை என்பது உண்மை. ஆனாலும் தாய்மொழியை அல்லது தமது பெற்றோரும் அவர்களது
முன்னோர்களும் பேசிய மொழியை அறிந்திருப்பது அவர்களுக்கு வேறு பல நன்மைகளை வழங்கும்
என்பதை அவர்கள் அறிவதில்லை. அல்லது நம்புவதில்லை. அவுஸ்திரேலியாவில் பாடசாலையில்
படிக்கும் பிள்ளைகளில் நான்கில் ஒருவர் இரண்டாவது மொழியாகவே ஆங்கிலத்தைக் கொண்டுள்ளார்.
நகர்புறங்களில் இந்த விகிதாசாரம் இன்னும் அதிகம். சில பாடசாலைகளில் 90 வீதமான பிள்ளைகள்
ஆங்கிலம் அல்லாத வேறு மொழி பேசுபவர்களின் பிள்ளைகள். சாதாரணமாக bilingual என்ற ஆங்கிலச் சொல்
இரண்டு மொழிகளைச் சரளமாகப் பேசுதலையே குறிக்கும். ஆனால் இங்கு மொழி அறிவு
குறித்துப் பேசும் போது இரண்டு மொழியை அறிந்திருப்பதையே குறிக்கிறது. ஆங்கிலத்தை
இரண்டாவது மொழியாகக் கொண்ட பிள்ளைகள் சமுகத்தில் பலதரப்பட்ட நிலைகளில் இருந்து வருவதுடன், தமது தாய்மொழியைச்
சிறிதளவும் தெரியாதவர்கள், தமது வீட்டுச் சூழலில் விளங்கும் திறமை கொண்டவர்கள்
ஆனால் பேசமுடியாதவர்கள் என்பது முதல், நன்கு பேசவும் எழுதவும் முடிந்தவர்கள் வரை என்று சில தரங்களில் இருக்கிறார்கள்.
தனி ஒரு மொழி தெரிந்தவர்களை விட இருமொழிகளில்
அறிவு கொண்டவர்களுக்குப் பல நன்மைகள் உள்ளன. அவர்கள் problem sloving மற்றும் lateral
thinking அதாவது ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் திறமை
உள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இருமொழிகளில் அறிவு உள்ளவர்கள் மேலும் பல
மொழிகளை இலகுவாக படிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். புத்திக்கூர்மையை பரிசீலிக்கும்
பரீட்சைகளில் வாய்மொழி மூலம் அல்லது வாய்மொழி மூலமல்லாத முறைகளில் நடத்தப்படும் போது ஒரு
மொழி தெரிந்தவர்களைவிட இருமொழிகள் தெரிந்தவர்கள் மிக அதிக புள்ளிகளை எடுப்பதாக McGill பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த உளவியல் வல்லுனர்களான Lambert, Peal ஆகிய இருவரும்
குறிப்பிட்டிருக்கின்றனர். இரண்டு மொழிகள் தெரிந்திருத்தல் என்பது இன்னொரு வகை
மக்கள், அவர்களது கருத்துக்கள், சிந்திக்கும் முறை, இலக்கியம் போன்றவற்றை அறிந்து கொள்வதாகும். இரு மொழிகளை
நன்கறிந்தவர்கள் இருமடங்காக சிந்தித்து பேசும் ஆற்றல் கொண்டவாராக இருப்பர் என
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கு பெரும்பாலும் வயது முதிரும்போது வரும் மறதி
நோய்கூட இருமொழி அறிவுள்ளவர்களுக்கு சில வருடங்கள் பிந்தியே வரும் என்றும்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலம் தெரியாது பாடசாலைக்கு வரும் பிள்ளைகள்
எவ்வளவு விரைவாக விளையாட்டிடங்களில் ஆங்கில மொழியை அறிந்து
கொள்கிறார்கள் என்பது குறித்துப் பல ஆசிரியர்கள் வியப்புத்
தெரிவித்திருக்கிறார்கள். வகுப்பறைகளில் படிப்பதைவிட
நண்பர்களுடன் விளையாட்டு இடங்களில் பிள்ளைகள் மொழியை
அதிகம் பேசப் பழகிக் கொள்கிறார்கள். ஆனாலும் வகுப்பறைகளில் படிக்கும் மொழி
வேறுபட்டது. அதனை முறைப்படி பயில நீண்ட நாட்கள் எடுக்கும். இருந்தும், தமது சொந்த
மொழியின் கோட்பாடுகளை நன்கு அறிந்து வரும் பிள்ளைகள் ஆங்கிலத்தை மிக இலகுவாகக்
கற்றுக் கொள்கின்றனர். இதனாலேயே வளர்ந்த பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு வரும்
பிள்ளைகள் மிக இலகுவாக ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். தாய்மொழியை நன்கு
அறியாது வரும் இளம் பிள்ளைகள் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள சிரமப்படுகிறார்கள்.
எவ்வளவு தூரத்துக்கு அவர்கள் தமது தாய்மொழியில் மேம்படுகிறார்களோ அவ்வளவுக்கு
அவர்கள் ஆங்கிலத்தை மிக விரைவாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது மிக முக்கியமான
விஷயம். ஆனால் தாய்மொழியில் நல்ல அறிவு இல்லாமல் பாடசாலைக்கு வருகிற பிள்ளைகள்
ஆங்கிலம் படிக்க ஆரம்பித்ததும் விரைவில் தாய்மொழியை மறந்துவிடுகிறார்கள். இது இரு
மொழிகளிலும் மேம்படுவதற்குப் பதிலாகப் பிள்ளை குறைவான அறிவு கொண்ட இரு மொழிகளுக்குள்
அமிழ்ந்துவிடுகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளும்
அதே வேளையில் தாய்மொழியையும் கற்றால்தான் பிள்ளை இரு மொழிகளிலும் சிறப்புப் பெற
முடியும். இந்தக் கருத்துகள் Learning to Learn in a Second Language என்ற நூலில்
இடம்பெற்றுள்ளன. இதனை எழுதிய Pauline Gibbons என்பவர் பல ஆங்கிலம்
பேசாத நாடுகளில் ஆங்கிலம் போதித்து வந்ததுடன் இங்கும் பிறமொழி பேசும் பின்னணியில் இருந்து
வரும் வயது வந்தோர்க்கு ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தனது அனுபவங்களுடன் பல
ஆசிரியர்களின் அனுபவங்களையும் சேர்த்து இந்த நூலை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால்தான் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் என்று பாரதிதாசன் அன்று
கூறினார் போலும்.
தமிழ் மொழியை எவ்வாறு கற்பித்தல் என்பதில்
சிலருக்கு மாறுபாடான கருத்துகள் உள்ளன. அதாவது, சரியாக உச்சரிக்கவேண்டும், எழுத்துப் பிழைகளின்றி
எழுத வேண்டும் என்று பிள்ளைகளை வற்புறுத்தாது விரும்பிய மாதிரி உச்சரித்து, பிழைகளைவிட்டு எழுத
கற்றுக்கொடுப்பதே சரியானது என்று வாதிடுவோரும் இங்கு இருக்கிறார்கள். தமிழ்
இவர்களுக்கெல்லாம் ஒர் இளைத்த மொழியாகப் போய்விட்டது என்பது மிகத்
துரதிஷ்டவசமானது. ஆங்கிலம் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு இரண்டாவது மொழி.
அதற்காக நாம் அதனைத் தவறாக உச்சரித்து, எழுத்துப் பிழைகளுடன் எழுத முடியுமா? தமிழை எங்கள் பிள்ளைகள்
அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கொண்டுபோய் அவர்களும் இந்த பன்மொழி, பல கலாசார சூழலில்
வாழும்போது தாம் யாரென்பதை அறிந்து தாம் தாமாகத் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்
என்று நாம் விரும்பியே இங்கு தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கி நடத்தி வருகிறோம். அது
பேராசையாகக்கூட இருக்கலாம். ஆனாலும் நாம் முழுமனதுடன் அந்த முயற்சியைச்
செய்கிறோம். ஏனெனில், எமது சந்ததி தொலைந்துபோய் தாம் யாரென்று அறியாது வேரற்று
யாரோ போல வாழ்வதை எம்மால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. இந்நிலையில், பிள்ளைகள் தவறாக உச்சரிக்கவும் பிழைகளுடன்
எழுதவும் அனுமதித்தால் என்ன நடக்கும் என்பதை எவரும் கற்பனை செய்து பார்க்கலாம்.
தமிழைத் தமிழர் அல்லாத பல அறிஞர்கள் முறையாகக்
கற்றுத் தமிழ் இலக்கியங்கள் குறித்து நிறைய கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளனர்.
முன்னைய செக்கோஸ்லோவேக்கியா நாட்டைச் சேர்ந்த கமில் ஸ்வலிபிள் (Kamil Zvelebil) என்பவரை அறியாத
அறிஞர்கள் இருக்க முடியாது. அவர் தமிழை முறையாகப் பயின்று The Smile of
Murugan, Tamil Literature, Companion Studies to the History of Tamil
Literature, Introduction to the Historical Grammar of the Tamil Language போன்ற பல நூல்களையும் பல
பத்து கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். David Shulman என்ற யூத அறிஞர் Songs
of the Harsh Devotee என்ற பெயரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 100 பதிகங்களையும்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். Tamil Temple Myths: Sacrifice and
Divine Marriage in the South Indian Saiva Tradition என்பது அவரது ஆய்வுநூல்.
சிறுத்தொண்டரையும் ஆபிரகாமையும் ஒப்பிட்டு ஓர் அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.
Paula Richman என்ற யூத அமெரிக்கர்
மணிமேகலை என்ற காவியத்தைப் பயின்று அது குறித்து ஆய்வுசெய்து தனது கலாநிதிப்
பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அதைவிட பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழ் பற்றி
எழுதியிருக்கிறார். மிக முந்திய காலத்தில் இத்தாலியில் இருந்து வந்து தமிழ்நாட்டில்
தமிழைப் பயின்று பல தமிழ் நூல்களை எழுதியவர் Beschi என்ற வீரமாமுனிவர். அவர்
சதுரகராதி, காவலூர் கலம்பகம், தேம்பாவனி, தொன்னூல், பரமார்த்த குருவின் கதை
போன்ற இலக்கியங்களைத் தமிழிலேயே எழுதியிருக்கிறார். G U Pope நாலடியார் என்ற அற
இலக்கியத்தையும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழி
பெயர்த்திருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் George L Hart யை யார் மறக்க முடியும்? அவர் சங்ககாலம் பற்றி
எத்தனையெத்தனை கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழ்ப் படிக்கும் ஆய்வாளர்கள்
பயன்படுத்தும் முதல் தமிழ் - ஆங்கில அகராதியை எழுதிய Winslow வைத் தெரியாதவர் இருக்க
முடியுமா? இவர்களைவிட
தமிழ்நாட்டுக்கு ஆய்வு செய்ய வட அமெரிக்காவிலிருந்தும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும்
போகிறவர்களும் தமிழ்க் கற்பதற்காக தமிழை உச்சரிக்கும் முறை பற்றியும் சரியாக, முறையாக இலக்கண மரபிற்கு
ஏற்ப தமிழைப் பேசும் முறை பற்றியும் அதற்குத் தேவையான அடிப்படை இலக்கணம் பற்றியும் கூறும் நூல்கள்
அமெரிக்காவில் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமானது George L Hart இன் மனைவியால் எழுதபபட்ட Tamil
For Biginners: Reading and Writing என்பதாகும். அதில் இரு பகுதிகள் உள்ளன.
இந்த அறிஞர்கள் அனைவரும் தமிழைச் சரியாக
அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதால் ஒரு விசேடமான எழுத்துருவைப்
பயன்படுத்துகிறார்கள். அதன் பெயர் T Super French என்பதாகும். அதில் உள்ள
விசேடம் என்னவெனில், ஆங்கிலத்தில் எழுதப்படும் தமிழைச் சரியாக உச்சரிக்கும்
வகையில் எழுத்துகளுக்கு அடையாளமிட முடியும் (diacritical marks). அதாவது நெடில்
உச்சரிப்பாக இருப்பின் மேலே ஒரு சிறு கோடிடப்படும். அவ்வாறே மென் அண்ணத்தில் நா
படும் எழுத்துகளுக்குக் (ன,
ழ, ற) கீழ் ஒரு கோடும் நடு
அண்ணத்தில் நாக்குபடும் எழுத்துகளுக்கு (ள, ண) கீழ் ஒரு புள்ளியும் இடப்படும். அதுபோல ஞ, ங போன்ற எழுத்துகளுக்கும் அடையாளமுண்டு. பல்லின் பிற்பகுதியில் நா படுவதன்
மூலம் உச்சரிக்கும் எழுத்துக்கள் அதாவது ந, ர, ல போன்ற எழுத்துகள்
ஆங்கிலத்தில் உள்ளது போலவே அதாவது n, r, l என்று உச்சரிக்கப்படும்.
இந்த எழுத்துருவையே தமிழை ஆங்கிலத்தில் எழுத ஆய்வாளர்கள்
பயன்படுத்துவார்கள். இல்லாவிடின் தமிழைச் சரியான உச்சரிப்புடன் வாசிக்க முடியாது.
தற்போது வரும் தமிழ் குறுவட்டுகளில் அந்த அடையாளங்கள்
இல்லாது ஆங்கிலத்தில் எழுதப்படும் படங்களின் பெயர்களையும் பாடல்களின் தொடக்கத்தையும்
வாசிக்க முடியாது நாம் திணறுகிறோம். தமிழ் மட்டுமல்ல எல்லா மொழிகளும் சரியாக
உச்சரிப்புக்கு ஏற்ப வாசிக்கத் தனித்துவமான முறைகளைப் பின்பற்றுகின்றன.
ஸ்கந்திநேவிய நாடுகள் ஆங்கில வரிவடித்தைப் பயன்படுத்தியபோதும் அவற்றை வேறு
வகையிலேயே உச்சரிக்கின்றன. அத்துடன் மேலே இரண்டு புள்ளியிட்ட A O மற்றும் மேலே ஒரு சிறு
வட்டமிட்ட A யையும் இதற்காகப்
பயன்படுத்துகின்றன. ஜேர்மன் மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் சில ஒற்றுமைகள்
இருந்தபோதும், ஆங்கிலத்துக்குரிய வரிவடிவத்தைப் பயன்படுத்தும் ஜேர்மானிய மொழியும்
அதனை வேறு வகையிலேயே உச்சரிக்கின்றது. உதாரணமாக VW ( folksvagon) என அடையாளமிட்ட ஜேர்மன் சிற்றுந்துகளை நாம் மக்கள் சிற்றுந்து என்ற வகையில் Folks
Wagon அல்லது Volkswagon என்று ஆங்கிலத்தில் கூறுகிறோம். ஜேர்மானிய மொழியில் V ஆங்கிலத்தில் உள்ள F போல
உச்சரிக்கப்படுகிறது. W- V போல உச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவமான உச்சரிப்புகள் உள்ளன. அதை மாற்றித் தவறாக
உச்சரித்தால் அந்த மொழிக்குரியவர்கள் தமது மொழியை அவமானப்பபடுத்திவிட்டதாகப்
பெருங்கோபம் கொள்வார்கள்.
அதுபோல, தமிழுக்கும் தனித்துவமான உச்சரிப்பு உள்ளது. அதை நாம் சரியாக பிள்ளைகளுக்குச்
சொல்லிக் கொடுத்தால்தான் அவர்கள் தமிழைத் தவறின்றி எழுதக் கற்றுக் கொள்வார்கள்.
சரியாக உச்சரிப்பதும் தவறின்றி எழுதக் கற்றுக் கொடுப்பதும் பண்டிதர்
காலத்துக்குரியது என்று கேலி பேசுகிறவர்களின் வார்த்தைகளை நாம்
காதில் போட்டுக் கொள்ளதிருப்பதே தமிழுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். பிள்ளைகள்
பிழை விடுவதைத் திருத்துவதும் சரியானதைச் சொல்லிக் கொடுப்பதும்தானே தமிழ்க்
கற்பிக்கும் ஆசிரியர்களது கடமை. இந்த நாட்டில் ஆங்கில மொழியில் கற்கும், பேசும் பிள்ளைகளுக்குத்
தமிழை நாம் மிக நவீன முறைகளைப் பயன்படுத்தித்தான் சொல்லிக் கொடுக்கிறோம். நவீன
முறைகளில் உச்சரிப்பையும் எழுத்துப் பிழைகளையும் கவனிக்காது விட்டால் நாம் எம்மிடம்
தமிழ் படிக்க வரும் பிள்ளைகளுக்குப் பெரும் துரோகம் செய்தவர்களாவோம். இன்றல்ல, 30 ஆம் நூற்றாண்டில்
தமிழைக் கற்பிக்கும்போதும் சரியாகத் தமிழை உச்சரிக்கவும் எழுதவும் பழக்குவது
தமிழ்க் கற்பித்தலில் மிக அடிப்படையான விடயமாகும். 5+4 = 9 என்பது எந்தக் காலத்திலும் மாறாததுபோல், தமிழுக்கு
அடிப்படையான விஷயங்கள் எந்தக் காலத்திலும் மாறக்கூடாது. இது இரண்டும் இல்லாமல்
தமிழைப் படிப்பதில் எந்தப் பயனும் இல்லை. அதை நாம் மாற்றினால் நாமே தமிழை
அழிப்பதற்குக் காரணமாவோம். உதாரணமாக, கமம்
என்ற சொல்லின் முதல் எழுத்தை நெடிலாக எழுதினால் அல்லது உச்சரித்தால் கருத்து
எவ்வாறு விபரீதமாகும் என்பதை நாம் அறிவோம். இதுபோல ஆயிரம் உதாரணங்கள் தரமுடியும்.
பாடல் போட்டிகள் தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் நடைபெறுகின்றன. அந்தச்
சந்தர்ப்பங்களில் நடுவர்கள் பாடும் இளையோருக்கு முதலில் கூறும் விமரிசனம் அவர்களது தமிழ்
உச்சரிப்பு சரியாக இல்லை என்பதே. அதன் பின்னரே பாடுவதில் உள்ள மற்றக்
குறைபாடுகளைக் கூறுவார்கள். எனவே, உச்சரிப்பு என்பது தமிழுக்கு மிக முக்கியமான
விடயம் என்பது எல்லோராலும் சுட்டிக் காட்டப்படுகிறது. எழுத்துக்களைச் சரியாக
உச்சரிக்கப் பழகிக் கொண்டால் தமிழைச் சரியாகத் தவறுகளின்றி எழுதுவதும் பேசுவதும்
இலகுவாகும்.
தமிழ்மொழியைக் கற்பித்தல் மட்டுமல்ல, நாம் மாணவர்கள் தொடர்பான
பொது விடயங்களைச் செய்யும்போதும் மிகக் கவனமாகவும் நியாயமாகவும் நடுநிலையுடனும்
நடந்து கொள்வது மிக அவசியமானதும் முக்கியமானதுமாகும். நாம் பட்சபாதமாக நடந்துகொள்ள
முற்படுவோமாயின் தமிழருடன் மிக பட்சபாதமாக நடந்துகொள்ளும் சிங்கள அரசுகளுக்கும்
எமக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? நாமே எமக்குள் பிரிவுகளை ஏற்படுத்தி பட்சபாதத்துடன் நடந்து கொள்வது நியாயமா? எந்தப் பொது விடயமாயினும்
எம்மால் எல்லோருக்கும் நியாயமாக நடந்துகொள்ள முடியாவிடின் அப்பொறுப்பிலிருந்து
எம்மை விலத்திக்கொள்வதே எமக்கும் மற்றவர்களுக்கும் நாம் செய்யும் நல்லதும்
சிறப்பானதுமான காரியமாகும். பட்சபாதமான காரியங்களால் பாதிக்கப்படும் இளையோர் படும்
மனத்துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. அது அவர்களது மனதில் ஆறாத ஒரு வடுவாகவே
பதிந்துவிடுகிறது. ஏன் இதற்குள் போகிறீர்கள்? உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காது என்று வெளியேயுள்ளவர்களால் பலர்
அறிவுறுத்தப்படுகிறார்கள். அப்படியிருந்தும் பிள்ளைகள் வருகிறார்கள் என்றால்
மொழியில் அவர்களுக்கு உள்ள ஈடுபாடே காரணமாகும். அவர்களை நாம் பகடைக் காய்களாகப்
பயன்படுத்தாது இருப்போமாக.
ஒருவருக்குத் தாய்மொழி கற்றல் என்பது மிக
முக்கியமானது. அதனாலேயே ஐக்கிய நாடுகள் சபை ஒரு தாய்மொழி நாளை உருவாக்கி அதன்
முக்கியத்துவத்தை உலகில் வாழும் சகலருக்கும் நினைவூட்டி வருகிறது. ஒவ்வொரு
பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியும் நாம்
அறியாமலேயே சர்வதேச தாய்மொழி நாள் அதாவது International
Mother Language Day என்றொரு நாள் வந்து
போகிறது. 1999 ஆம் வருடம் நடைபெற்ற UNESCO வின் பொது மகாநாட்டில் இவ்வாறு வருடம் தோறும் தாய்மொழி
நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் தேதி அதன்
தலமையகத்தில் முதல் சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. அந்த விழாவை
ஆரம்பித்து வைத்த UNESCO இயக்குனர் நாயகம் தனது
பேச்சின் போது பின்வருமாறு அழுத்தமாகக் கூறினார். மனித இனத்தின் பண்பாட்டுப்
பாரம்பரியத்தில் தாய் மொழி என்பது மிக இன்றியமையாத பகுதி. மனித படைப்பாற்றலின்
குறைத்து மதிப்பிட முடியாத சிறப்பான வெளிப்பாடாகவும் தாய் மொழி
அமைந்துள்ளது. இன்றைய உலகில் ஏறக்குறைய 6000 மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகள் சொல்லாடலுக்கான சாதனங்களை
உருவாக்குவதில் மனித இனத்தின் வியத்தகு ஆற்றலுக்கான சான்றுகளாக விளங்குகின்றன.
மனிதர் பிறந்த சமூகங்களின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இந்த மொழிகள் விளங்குகின்றன.
அத்துடன் மொழிகள் மனிதர்களது தொடர்பு பற்றிய வரலாற்றையும் பிரதிபலிக்கின்றன. இந்த
கருத்தில் எல்லா மொழிகளும் தமது தொடர்புகளால் கலப்படைந்தவை என்று கூறலாம்.
உதாரணமாக ஒரு மொழி பேசுபவர்கள் வேறு மொழி பேசுபவர்களுடன் பழகும் போது அந்த மொழிச்
சொற்கள் இவர்களுடைய மொழியில் வந்து கலக்கின்றன. பழைய காலம் முதல் பல மொழிகளைக்
கற்கும் கல்வி முறையானது பண்பாட்டு வேறுபாடுகளைப் பாதுகாக்க மட்டுமல்ல, சர்வதேச
புரிந்துணர்வையும் சகிப்புத்தன்மையையும், பரஸ்பர மரியாதையையும் ஏற்படுத்த வழியமைத்தது.
UNESCO வின் மொழிகளுக்கான
நல்லெண்ண தூதுவர் இந்த முதல்நாள் விழாவில் கலந்து கொண்ட போது, மொழியானது அம்மொழி
பேசுபவரின் பண்பாடு, அடையாளம் போன்றவற்றை வெளிப்படுத்துவதுடன், சிறந்த தொடர்பாடல்
சாதனமாகவும் திகழ்கிறது என்பதையும், அவை மனித இனத்தின் மிக பெறுமதி வாய்ந்ததும் மென்மையானதுமான பொக்கிஷமாக
இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்
நாயமாக அப்போதிருந்த Kofi Annan அனுப்பிய செய்தியில், மொழிகளின் பெறுமதி குறித்து
அனைவரின் விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். மொழி வேறுபாடுகளை
பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறியதுடன் மனித இனத்தின் பகிரப்பட்ட
பாரம்பரியமாக மொழிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்.
உலகம் பன்மொழி கொண்டது என்ற அடிப்டையில் 12 அம்சங்கள் கொண்ட மொழிக்
கொள்கை யுனெஸ்கோ பொது மகாநாட்டால் உருவாக்கப்பட்டது. மனிதர்களிடையே தொடர்பாடலும், புரிந்துணர்வும்
மேம்படவேண்டிய தேவையை இந்த மொழிக் கொள்கையை உருவாக்கிய பொது மகாநாடு அடையாளம்
கண்டது. அத்துடன், மனித இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும் மொழியையும்
பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் அந்த பாரம்பரியம் உருவாக்கியுள்ள ஒவ்வொரு
மொழியினதும் பண்பாட்டினதும் செல்வாக்கை அகலிக்க வேண்டும் என்பதையும் இந்த பொது
மநாடு அடையாளம் கண்டு கொண்டது. உலகமயப்படுத்தப்பட்ட தொடர்பாடலினால் மொழி
வேறுபாடுகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையும், இதற்காக ஒரு மொழியை பயன்படுத்தும்
போக்கானது உலகிலுள்ள ஏனைய முக்கிய மொழிகளைப் புறந்தள்ளும் ஆபத்தை உருவாக்குகிறது
என்பதையும் இந்த மகாநாடு கவனத்தில் கொண்டது. இதனால் பிராந்திய மொழிகள் உட்பட
குறைவாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் அழியும் ஆபத்தும் உருவாகியுள்ளது. உலகம்
முழுவதும் உள்ள இளம் பிள்ளைகளைப் படிப்பிக்கும்போது பண்பாடுகளiடையே கருத்துப்பரிமாற்றம்
செய்யும்படி அவர்களை ஊக்குவிப்பதால் அது சகிப்புத் தன்மையையும் பரஸ்பர மதிப்பையும்
ஏற்படுத்தும். மொழிகளின் விஞ்ஞான பூர்வ
வளர்ச்சியில் கடந்த சில பத்தாண்டுகளாக குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், பிள்ளைகள் தமது வளர்ச்சியின் முக்கிய கட்டங்களில் சத்தங்களை பிரதி
செய்யும் அவர்களது அசாதாரண திறமை குறித்து போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை. எனவே,
மொழியியல், இலக்கணத் திறமைகளை பெறும்
பிள்ளைகளுக்கு விஞ்ஞானபூர்வமான ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று இம்மாநாட்டில்
குறிக்கப்பட்டது. இளம் பிள்ளைகள் தமது மிக இளமை அல்லது குழந்தைப் பருவத்தில்
தமக்கு இயல்பாக உள்ள மொழி கற்கும் திறமையால் குறைந்தது இரண்டு மொழிகளில் தொடர்பாடும் திறமையைப்
பெற்றுக் கொள்கின்றனர். பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைத் தமது தாய் மொழியில் பெற்றால்
அவர்களது கற்கும் திறமை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அந்த
தாய்மொழி பாடசாலையில் போதிக்கப்படவேண்டும். ஆனால் குறைவாகப் பேசப்படும் பல மொழிகள்
பாடசாலைகளில் போதிக்கப்படுவதில்லை. முன்னர் எப்போதையும்விட இப்போது பன்மொழியின் பெறுமதி
உணரப்பட்டுள்ளது. சில நாடுகள் தத்தமது மொழியை முன்னேற்ற முயலுகின்றன. ஆயினும்
அதற்கு அரசியல் பொருளாதார இடையூறுகள் ஏராளம்.
மக்களின் உரிமைக்காகப் போராடும்
சங்கங்கள் வலுவாக எதிர்த்த போதும், 1998 இல் கலிபோனியாவில் உள்ள 61 வீதமானவர் ஆங்கிலம் மட்டுமே அந்த மாநிலத்தின் ஒரே மொழியாக
இருக்க வேண்டும் என்று வாக்களித்தனர். அதன்படி அங்கு குடியேறியோரின் பிள்ளைகள்
சிறப்பாக ஸ்பனிஷ் மொழி பேசும் பிள்ளைகள் அதன் பின்னர் பாடசாலைகளில் ஆங்கிலத்தில்
கற்பதற்கே அனுமதிக்கப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு ஒரு வருடம் துரிதகதியில்
ஆங்கிலம் போதிக்கப்பட்டது. தமது தாய்மொழி என்று வரும் போது மனிதர்கள்
உணர்ச்சிகளால் தூண்டப்படுகின்றனர். மனிதர்களை அவரவர் மொழிகளுடன் ஏற்றுக் கொள்ளுதல், பன்மொழிகளால் வரும்
நன்மைகள் போன்றவற்றை நோக்கி பல வருடங்களாக உருவாக்கப்பட்டு வந்த போக்கு இந்த
ஆங்கிலம் மட்டும் என்ற கொள்கையால் நிறுத்தப்பட்fடது. பிள்ளைகளுக்கு அவர்களது தாய்மொழியில் போதிப்பதால்
ஏற்படும் நன்மைகள் குறித்து நீண்ட காலமாக ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்கிறார் Washington D C இல் உள்ள Center for
Applied Linguistics இல் ஆலோசகராக ஆக இருக்கும் Nadine Dutcher. பிள்ளைகள் தமது சொந்த
மொழியில் அடிப்படைக் கல்வியைப் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகமான
ஆய்வுகள் தெரிவித்துள்ளன. குறைந்தளவு பேர் பேசும் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட 476 மில்லியன் மனிதர்கள்
தமது மொழி பேசாத நாடுகளில் வாழ்வதால் அவர்களது பிள்ளைகள் தமது தாய்மொழியில் அடிப்படைக் கல்வியைப்
பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். நியூசிலாந்தில் தமது தாய்மொழியில் அடிப்படைக்
கல்வியைப் பெறும் மஓரி பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வி கற்கும் மஓரிப் பிள்ளைகளை விட
நன்கு கற்பதாக அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் வெஜீனியாவில் George Mason பல்கலைக்கழகத்தில் உள்ள
ஆய்வுப் பகுதி 15 மாநிலங்களில் உள்ள 23 ஆரம்பப் பாடசாலைகளின் பெறுபேறுகளை 1985 ஆம் ஆண்டிலிருந்து
அவதானித்து வந்தது. இந்த பாடசாலைகளில் ஒரு பகுதி
பாடத்திட்டம் பிற மொழி பேசும் பிள்ளைகளின் தாய்மொழியில் அளிக்கப்பட்டு வந்தது.
பதினொரு வருட பாடசாலைக் கல்வியின் பின்னர், தாய்மொழியில் படிப்பதற்கும் பெறுபேறுகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்தது
அவதானிக்கப்பட்டது. இருமொழிக் கல்வி பெற்றவர்களே உயர்தரக் கல்லூரியில் சிறந்த
பெறுபேறுகளைப் பெற்றனர். தாய்மொழியில் கற்றல் என்பது அறிவாற்றலும் உணர்வுப்
பெறுமதியும் கொண்டது. இந்த கல்வியைப் பெறும் போது சிறுபான்மையினர் தாம்
மாரியாதைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர் என்கிறார் Dutcher. வெளiநாடுகளில் வாழும் வேற்றினப்
பிள்ளைகள் தமது தாய்மொழிக்கு பதிலாக வேறு மொழியில் அதாவது அவரவர் வாழும்
நாட்டுக்குரிய மொழியில் கல்வியைப் பெறும் போது இருவித தவறான செய்திகளைப்
பெறுகிறார்கள். ஒன்று தாம் அறிவில் முன்னேற வேண்டுமாயின் அது தாய் மொழியைப்
பயன்படுத்துவதால் வராது என்பது. மற்றது தாய்மொழியால் எதுவித பயனுமில்லை என்பது
என்கிறார் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி மேம்பாட்டுத் துறை வல்லுனரான Clinton Robinson. சில செல்வந்த நாடுகள் தாய்மொழிக் கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்ந்து தமது மொழிக் கொள்கையை மாற்றி வருகின்றன. ஒருவர் தான்
வாழும் அந்நிய நாட்டில், அந்நாட்டு மக்களுடன்
ஒன்றறக் கலந்து வாழ்தல் என்பதன் கருத்து அவர் தனது தாய் மொழியை மறந்து விடுதல்
என்பதல்ல. தமது தாய்மொழியை பாடசாலையில் பேசியதற்காக பிள்ளைகள் தண்டிக்கப்பட்ட பழைய
மரபு தற்போது முற்றாக மறைந்துவிட்டது என்கிறார் பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெறுதல்
என்ற பிரான்சிய அரச துறையில் தலைவராக இருக்கும் Michel
Rabaud என்பவர்.
பிரஞ்சிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியைப் பேசுதல் என்பது ஒரு பிள்ளைக்கு
இப்போது இடையூறேயல்ல. வடக்கே உள்ள நாடுகள் மேலும் மேலும் புலம்பெயர்ந்தோரை
எடுப்பதால் அதற்கேற்ப தமது கொள்கைகளை அமைக்க வேண்டியனவாக உள்ளன. 2000 ஆம் ஆண்டில் மேற்கு
ஐரோப்பாவில் உள்ள 35 வயதுக்குட்பட்ட சனத்தொகையில்
மூன்றில் ஒரு பகுதிக்கு மேற்பட்டவர் புலம்பெயர்ந்தோரே.
நெதர்லாந்தில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின்படி
நாலுக்கும் பதினேழு வயதுக்கும் இடைப்பட்டோரில் 49 வீதமான ஆரம்ப பாடசாலை பிள்ளைகளும் 42 வீதமான உயர்தர பாடசாலை
மாணவர்களும் வீட்டில் டச் தவிர்ந்த வேற்றுமொழி பேசுபவர்கள். மொழியால்
ஒன்றுபடவேண்டும் என்ற பழைய மொழிக் கொள்கையை தொடர்ந்து வைத்திருக்க முடியாது.
அவுஸ்திரேலியாவில் உள்ள விக்ரோறியா மாநிலத்தில்
கடந்த 20 வருடங்களாக ஆரம்ப
பாடசாலைகளில் இரு மொழி என்பது உறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. 2002 இல் ஆங்கிலம் தவிர்ந்த
ஒரு மொழியைப் படித்தல் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் 41 மொழிகள் பாடசாலைகளில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தோனேஷிய, ஜேர்மானிய பிரஞ்சு மொழிகள் மாணவர்களiடையே பிரபலியம் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்வியும் பன்மொழி
அறிவும் அதிகளவில் ஏற்கப்பட்டு வருகிறது. ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவது என்பது
அவரது உரிமை. தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே யுனெஸ்கோவால் சர்வதேச
தாய்மொழி நாள் 1999 இல்
பிரகடனப்படுத்தப்பட்டது. மொழி என்பது இன்று ஒருவரின் அடையாளம். பண்பாடுகளின் வேறுபாட்டை
முன்னேற்றுவதில் மொழியின் முக்கியத்துவம் நன்குணரப்பட்டுள்ளது. இவ்வாறாக வளர்ந்து
வரும் விழிப்புணர்ச்சிக்கிடையில் இதற்குத் தடைகளும் இருக்கவே செய்கின்றன. மொழிக்
கொள்கை பற்றிய தீர்மானம் என்பது அரசியல் சார்ந்ததாகவே இன்னும் உள்ளது. அதே நேரம்
எவ்வாறு கற்பிப்பது என்ற தொழில்நுட்பத் தடைகளும் உள்ளன என்கிறார் யுனெஸ்கோவின்
தரமான கல்வியின் வளர்ச்சி என்ற பிரிவின் மூத்த உத்தியோகத்தரான Linda King. முக்கியமான அம்சம் என்னவெனில் உள்ளூர் மொழிகளை மதித்து
அதனை பாடசாலை முறையில் சட்டபூர்வமாக இணைக்க வேண்டும். அத்துடன் மாணவர்களுக்கு
தேசிய மொழியையும் பிற மொழிகளையும் கற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்
கொடுக்கவேண்டும் என்றும் மேலும் கூறுகிறார் அவர். இங்கே கூறப்பட்ட விஷயங்களி ன் அடிப்படையில் எமது தாய் மொழியாகிய தமிழைக் கற்பதன்
முக்கியத்துவம் என்ன என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ளுதல் மிக அவசியம்.
No comments:
Post a Comment