சங்க இலக்கியத் தூறல் - --- அன்பு ஜெயா, சிட்னி

.
வேதமந்திரங்கள் ஒலிக்கா திருமணம்!


அன்று திருமண நாள். ரோகிணி நட்சத்திரம் கூடிய சுபதினத்தின் காலை வேளை. வீட்டிற்கு முன்னே தரையில் புது மணல் கொண்டுவந்து பரப்பி இருந்தது. அந்த மணற்பரப்பில் பல கால்கள் நட்டு பெரிய பந்தல் போடப்பட்டு, அதில் பல மலர் மாலைகள் தொங்கவிடப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.
குழைவாக வேகவைத்த உளுத்தம் பருப்பைச் சேர்த்த பொங்கல் அந்த காலை வேளையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்த விருந்தினர்களின் பசியை ஆற்றிக்கொண்டிருந்தது.
மங்கல மகளிர் சிலர் தலையில் தண்ணீர்க் குடத்தை சுமந்தபடியும், சிலர் கைகளிலே மண்டை எனப்படும் புதிய பெரிய அகல் விளக்குகளை ஏந்தியபடியும், சிலர் மணப்பொருள்களைச் சேர்த்துவைத்தபடியும் திருமணத்தைச் செய்துவைக்கும் ஆரவாரத்துடன் கூடியிருந்தனர். சிலர் முதலில் எந்தப் பொருளைக் முதலில் கொடுக்கவேண்டும், அடுத்தபடியாக எந்தப் பொருளைக் கொடுக்க வேண்டுமென்று அறிந்து அந்த முறைப்படி தந்துகொண்டிருந்தனர்.

அந்த மங்கல மகளிரில், பிள்ளைகளைப் பெற்ற நால்வர் கூடி நின்று, கற்பு நெறி தவறாது, நீ விரும்புகின்ற கணவன் உன்னைப் பெரிதும் விரும்பும்படி வாழ்வாங்கு வாழ்வாயாக என்று மணமகளை வாழ்த்தி, மகளிர் குடங்களில் கொடுத்த தண்ணீரோடு பூக்களும் நெல்லும் கலந்து அவள் கூந்தலில் ஊற்றி நீராட்டினர். இவ்வாறு மங்கல நீராட்டல் முடிந்த பின்னர் திருமணமும் நடந்து முடிந்தது. இவ்வாறு திருமணம் முடிந்ததும் சுற்றத்தார் அனைவரும் கூடி, நீ பெருமைக்குரிய இல்லத்தரசியாக வாழ்வாய் என்று அவளுக்கு வாழ்த்துகூறி, அவளை மணமகனான என்னிடம் ஒப்படைத்தனர்.
இவ்வாறு, தன் வாழவில் நடந்த அந்த இனிமையான நிகழ்வை நினைவுகூர்ந்து தன்னை தலைமகளைப் பார்க்க விடமால் வாயிலில் தடுத்து நின்ற தோழியிடம் தலைமகன் விவரித்துக் கூறிவிட்டு, மேலும் கூறலானான்.


“அதன் பிறகு ஒரு தனி அறையிலே நானும் அவளும் சேர்ந்து இருக்க முதல் இரவு வேளையும் வந்தது. அவளோ வெட்கத்துடன் முதுகினை வளைத்துத் தனது புத்தாடைக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டு அஞ்சி நின்றாள். அவளை அணைத்து மகிழும் ஆசையில், அவள் முகத்தை மூடியிருந்த ஆடையைச் சற்று நீக்கினேன். அவள் பயத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டு தவித்தாள்.  அவளிடம், உன்னுடைய மனத்தில் உள்ளதை மறைக்காமல் கூறு என்று சொன்னேன். அதற்கு கண்களில் மானின் பார்வையுடன், காதுகளில் சிவந்த மணிகள் பதித்த குண்டலங்கள் அசைய, தன் உள்ளத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை வெளியே காட்டாதவளாக, குனிந்த முகத்துடன் நாணி நின்றாள்.
 “அன்று என்னிடம் அவ்வாறு நடந்துகொண்டவள் இப்போது என்மீது கோபம் கொண்டிருக்கமாட்டாள்,” என்று தன்னைத் தடுத்த தோழியிடம் கூறுகின்றான்.
இந்தக் காட்சியை நல்லாவூர் கிழார் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் அழகாகச் சித்தரிக்கின்றார்.
உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலை            5
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடுஇல் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துஅகல் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்       10
புதல்வற் பயந்த திதலைஅவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா அ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை அகஎன
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி                                  15
பல்இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர், ஞெரேர்எனப் புகுதந்து
பேர்இல் கிழத்தி ஆகஎனத் தமர்தர,
ஓர்இல் கூடிய உடன்புணர் கங்குல்                              20
கொடும்புறம் வளைஇ, கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரைஎன                        25
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்,
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர.
அகம்மலி உவகையள் ஆகி முகன்இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடம்கெள் மதைஇய நோக்கின்,                                       30 
ஒடுங்குஈர் ஓதி, மாஅ யோளே.
--- நல்லாவூர் கிழார், அகநானூறு. களிற்றியானை நிரை, 86.
பின் குறிப்பு:-

இந்தப் பாடலில் சங்க காலத் தமிழரின் திருமண நிகழ்ச்சிகளைப் புலவர் முறையாகக் கூறியுள்ளார். இந்தப் பாடலில், அந்தணர் வந்து ஓமம் வளர்த்து, வேதங்கள் ஓதியது போலவும், தலைமகன் தலைமகளுக்கு மங்கலநாண் அணிவித்தது போலவும், மணமக்கள் தீ வலம் வந்தது போலவும் எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. விற்றூற்று மூதெயினனார் என்ற புலவர் எழுதியுள்ள மற்றோர் அகநானூற்றுப் பாடலில் (மணிமிடை பவளம், 136) திருமண நிகழ்ச்சிகளை விவரித்துள்ளார். அவருடைய பாடலிலும் இந்தச் சடங்குகள் நடந்ததாகக் குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால், சிலப்பதிகாரத்தில் மங்கலவாழ்த்துப் பாடலில், ‘…………கோவலன், மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வதுகாண்பார்......... (மங்கலவாழ்த்துப் பாடல்) என்று  அந்தணர்கள் வேதங்களை ஓதுவதாகவும், மணமக்கள் தீ வலம் வருவதாகவும் பொருள் தருகின்ற வரிகள் காணப்படுகின்றன. எனவே, திருமண நிகழ்ச்சிகளில் வேதம் ஓதுவது, தீ வலம் வருவது போன்ற சடங்குகள் சங்க காலத்திற்குப் பின் ஏற்பட்ட வழக்கங்களாக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. மேலும் ஆய்வு செய்தால் உண்மை நிலை அறிய வாய்ப்புகள் உண்டு.

No comments: