காலம் சொல்லும் கதைகள்! தங்கர் பச்சான்

.

காலையில் விழித்தெழுந்ததும் கண் திறந்து நான் பார்க்கும் இரண்டு முகங்கள் என் அப்பாவும், அம்மாவும்தான். முன்பின் அறிமுகமில்லாத சென்னையில் என்னைப் போட்டுவிட்டு, இருவரும் என்னைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டே சுவரில் தொங்கும் படத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு விதம் விதமாக நான் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அப்பாவுக்கு இருப்பது ஒரே படம்தான்.
50 திரைப்படங்களுக்கு மேல் பல லட்சம் அடிகள் யார் யாரையெல்லாமோ ஓடும் படமாகப் பிடித்துள்ளேன். அப்பா நடப்பது போன்றோ, பேசுவது போன்றோ ஒரே ஒரு நொடிகூட என் பிள்ளைகளுக்குக் காண்பிக்க எதையும் நான் பதிவுசெய்து வைக்கவில்லை.
சினிமா கேமராவைத் தொடுவதற்கு முன் எனக்கும் கேமராவுக்கும் தொடர்பே இல்லை. அதுவரை நான் எடுத்துக்கொண்டப் படங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று, ஐந்தாம் வகுப்பு பயிலும்போது கடைசி நாளில் வகுப்பு மாணவர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து எடுத்துக்கொண்ட கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் அந்தப் படமும், சென்னைக் கல்லூரியில் படிக்கிறபோது பேருந்தில் பயணிக்க அடையாள அட்டைக்காக எடுத்துக் கொண்ட மார்பளவுப் படமும்தான்.
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஒளிப் படங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நெடுநாள் நான் உணரவில்லை.வாழ்வில் எனக்கு எல்லாமும் கிடைத்தபின்தான் இளம்பருவ நினைவுகளும், கடந்து வந்த உறவுகளும் கண்ணில் வந்து நின்றன. இளமைக் காலப் படங்கள் இல்லையே என நினைத்து அந்தப் படங்களைத் தேடி ஓடினேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய ஐந்தாம் வகுப்பு படம் கண்ணாடி போட்டு சட்டகம் அமைக்காமல் கிராமத்து மரப் பெட்டிக்குள் அழுக்குத் துணிகளோடு அவ்வப்போது அந்தப் படம் கண்ணில் தென்படும். அப்போது அதைத் தயார் செய்து சுவரில் மாட்டி வைக்க வேண்டும் எனத் தோன்றவில்லை. ‘அழகி’ திரைப்படம் வெளிவந்தபின் நான் கிராமத்தில் உள்ள நண்பர்களைத் தேடிப் போனபோது விவசாயக் கூலியாக வாழ்வை நடத்தும் நண்பனின் வீட்டுச் சுவரில் கண்டு கொள்ளப்படாமல் ஒட்டடைப் படிந்து, துருப்பிடித்த நிலையில் இருந்ததை எடுத்து வந்து தொழில்நுட்ப அறிவையெல்லாம் சேர்த்து அந்தப் படத்துக்கு உயிர் கொடுத்தேன்.
கணக்கற்ற நம் மனிதர்களின் வாழ்வு கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது. வாழும்போது ஒளிப்படமாகவோ, காணொலியாகவோ எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமென பெரும்பாலானோருக்கு இப்போதுகூட தோன்றவில்லை. நம் முன்னோர்களில் பலருக்கு எந்தப் படப் பதிவுகளும் இல்லை. அவ்வாறு இருந்தாலும் இறந்தபின் எடுத்தப் படங்களே இருக்கின்றன.
கிராமங்களில் நூற்றில் 90 பேர் கணவன், மனைவியோடு இருக்கும்படியான திருமணப் படம்கூட இல்லாமல் இருக்கிறார்கள். குடும்பத்துடன் ஒரு படத்தைப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டுமே என்றுகூடத் தோன்றவில்லை.
ஆனால், கிராமங்களில் வசதிபடைத்த சிலரின் வீடுகளில் இருக்கும் படங்களைப் பார்க்க எங்களுக்குப் பொறாமையாக இருக்கும். அதிலும் அண்ணாவுடனோ, எம்.ஜி.ஆருடனோ தோளில் கைபோட்டபடி இருக்கும் படங்களைப் பார்க்கும்போது கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் தோளில் யாராவது கைபோட்டுப் படமெடுத்துவிட முடியுமா? எங்கள் ஊரில் இருவர் வீட்டில் மட்டும் அதுபோன்ற உருவ அட்டையுடன் எடுத்துக்கொண்டப் படங்கள் இருந்தன. அதனைப் பார்ப்பதற்காகவே அந்த வீடுகளில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து நண்பர்களுடன் சென்று அதைக் கண்டு மகிழ்வோம்.
அந்தக் காலங்கள்தான் அப்படி. இப்போது எல்லோருடைய கையிலும் கேமரா. எல்லோருமே படம் பிடிப்பவர்கள். தூக்கம் இல்லாமல் கண்களில் படுவதை எல்லாம் படம்பிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்தப் படங்களெல்லாம் அப்போதைக்கு மற்றவர்களிடத்தில் காண்பிப்பதற்காக மட்டுமே. சில நாட்களோ, சில மாதங்களோதான் அதற்கு உயிர். என்றைக்கும் பாதுகாத்து வைக்கும் படங்கள் எது என்பது இன்றுகூடப் பலருக்கும் புரியாமலே இருக்கிறது.
நண்பர்கள் வீடுகளுக்கோ, கிராமங்களுக்கோ செல்லும்போதெல்லாம் இந்தப் படம் இவர்களுக்கு முக்கியமாக பின்னாளில் தேவைப்படும் என எண்ணி, என் கைகளாலேயே ஒரு படத்தை எடுத்துக்கொடுப்பேன். கேமரா வசதி இல்லாதவர்களுக்கு அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பலப் படங்களைப் பலருக்கு கொடுத்திருக்கிறேன். குறிப்பாக வீட்டில் உள்ள பெரியவர்கள், முதியவர்களின் படங்கள்தான் அவை.
என் சிந்தனைகளை வளர்த்தெடுத்த, நான் பெரிதும் மதிக்கிற ’அப்பா’ என்றே நான் ஆசைதீர அழைக்கிற, 93 வயது கடந்த அசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைப் பார்க்க புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். இந்த வயதில் அவர் ஆசைப்பட்டு மீசை வைத்துக் கொண்டதைப் பார்த்ததும் அவரைப் படம் பிடிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை. கைப்பேசியில் பிடித்தப் படத்தைக் காண்பித்தபோது, தனக்கும் ஒரு படம் உடனே வேண்டும் போட்டுக் கொடு எனக் கேட்டார்.
அத்துடன், அவர் என்ன நினைத்தாரோ 23 ஆண்டுகளுக்கு முன் எனது ’வெள்ளை மாடு’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டபோது ஜெயகாந்தனுடனும் என்னுடனும் அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட படத்தைக் கொடுங்கள் எனக் கேட்டார். அப்படி ஒரு படம் என்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அன்றைக்கு அவரைப் பார்த்துவிட்டு வந்த சில மணி நேரத்துக்குள்ளாகவே ஜெயகாந்தன் இறந்துபோன செய்தியை நண்பர் குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்.


நான் நேசிக்கிற எனக்கு நெருக்கமானவர்கள் இறந்துவிட்டால் அவர்களைச் சென்றுப் பார்க்கிற மனநிலை எனக்கு இல்லாமல் போய்விடுகிறது. கி.ராஜநாராயணன் இலக்கியச் சிந்தனைகளையும், கிராமத்து மனிதர்கள் பற்றியும் எனக்குள் வளர்த்தெடுத்ததுபோல ஜெயகாந்தன் எனக்கு சிந்திக்கும் பார்வையை உருவாக்கிக் கொடுத்தார். அவர் எந்த எழுத்தாளருக்கும் முன்னுரை எழுதித் தருவதில்லை. எனக்கு மட்டுமே ’ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவலுக்கு முன்னுரை அளித்தார் என பிறர் சொல்லும்போது சிலிர்ப்பாகவே இருந்தது.
ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் போன்ற சமூகத்தின் ஆதாரமான அரிய படைப்பாளிகளைப் பேசவிட்டு படம் எடுத்து வைத்துக்கொண்டே இருந்திருக்க வேண்டுமென இப்போது நினைக்கிறேன். ஜெயகாந்தனின் அசையாத படங்கள் மட்டுமே எங்கும் உலவுகின்றன. அவரின் பேச்சுக்கள்தான் இந்தத் தலைமுறைக்கு உடனடித் தேவை.
அண்மையில் நிகழ்ந்த என் அம்மாவின் இறப்புக்குப் பின் உலகத்திலிருந்தே நான் தனிமைப்பட்டுவிட்டதாக என்னை உணர்த்தியது. அம்மாவை நான் படமெடுக்கும் போதெல்லாம் “ஒனக்கு வேற வேலையே இல்லையாடா. இத எடுத்து என்னா செய்யப் போற? இம்மாம் படம் எடுக்குறியே ஒண்ணே ஒண்ண எங்கண்ணுலக் காட்டியிருப்பியா?” எனக் கேட்பார்.
இறுதிச்சடங்கின் நான்கு நாட்களுக்கு முன் அம்மா அப்படிப் பேசியது நினைவில் வந்தது. அப்பாவைத்தான் ஒரே ஒரு படம் எடுத்தோம். அம்மாவை நிறைய எடுத்தோமே என பழையதையெல்லாம் கிளறித் தேடிப் பார்த்தேன்.அதன்பின் அம்மா இப்போது நான் நினைக்கும்போதெல்லாம் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அம்மாவின் சிரிப்பு, கோபம், அழுகை, கேலிப் பேச்சு, பெருமை, தவிப்பு, ஏக்கம், நடை, உறக்கம் என எல்லாமும் காணொலியாக ஓடிக்கொண்டிருக்கிறது. சில மணி நேரங்களில் உருவான அந்த 9 நிமிடப் படம் இன்று அம்மா பற்றிய ஆவணப்படமாக மாறியிருக்கிறது.
அம்மா இறந்த பதினாறாம் நாள் இறுதிச்சடங்கின்போது பெரிய திரை அமைத்து பந்தலில் தொடர்ந்து ஓடவிட்டிருந்தேன். யாருக்கும் அங்கிருந்து போக மனமில்லை. அதனைக் காணும் சாதாரண எளிய மனிதர்கள் மட்டுமல்ல; சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருக்கிற என் நண்பர்கள் அனைவருமே உறைந்துபோய் கலங்கிவிட்டார்கள். இன்று எனக்கு எல்லாமும் இருக்கிறது. எதையெதையோ சாதித்துவிட்டதாக நினைத்தேன். எல்லாமும் பொய் என்று இந்தப் படம் என்னை உணரவைத்ததிருக்கிறது. என் தலைமுறைகள், எனக்குப் பின் வருபவர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் மூலக் காரணமாக இருந்த தன் தாய், தந்தையை இவ்வாறு அவர்களுக்கு நான்
காண்பிக்காமல் போய்விட்டேனே எனப் புலம்புகிறார்கள். தயவு செய்து இந்தப் படத்தை அனைவரும் பார்க்கும்படி செய்யுங்கள். எனக்கு உறைத்த மாதிரி அனைவருக்கும் உறைக்கட்டும் எனச் சொல்கிறார்கள். அதற்குக் காரணம் அந்தப் படத்தில் என் அம்மா இல்லை, எல்லாருடைய அம்மாக்களும் இருக்கிறார்கள். அதனாலேயே அந்தப் படத்துக்கு ’என் அம்மா’ என பெயர் வைத்திருக்கிறேன். நமக்குத் தொடர்பே இல்லாத மற்றவர்களின் படங்களையே 24 மணி நேரமும் திரைப்படமாகவும், நாடகத்
தொடர்களாகவும் பார்த்துகொண்டிருக்கும் நாம், நம் கையிலிருக்கின்ற கைபேசியில் எதையெல்லாமோ எடுத்து வைக்கிறோம். இப்படிப்பட்ட எதிர்காலத்துக்கான நம் தலைமுறைகளுக்கான நம் முன்னோர்களை ஆவணப்படுத்த நினைக்காமலிருக்கிறோம்.
- சொல்லத் தோணுது…

நன்றி:tamil.thehindu

No comments: