சேயோனின் மிருதங்க அரங்கேற்றம் என் பார்வையில் - டாக்டர் ஜெயமோகன்

.

சென்ற சனிக்கிழமை (04-4-15) riverside  அரங்கில் நடைபெற்ற செல்வன் சேயோனின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு சென்றிருந்தேன். 6 மணிக்கே அரங்கம் நிரம்பியிருந்தது. அதீதமான "எடுப்பு சாய்ப்பு" ஒன்றுமில்லாமல் அடக்கமான  முறையில் நிகழ்வு இனிதே நடந்தது . முக்கியமாக இசைக்கு முட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தது மனதுக்கு மிக வும் இதமாக  இருந்தது.
அரங்கேற்ற நாயகன் சேயோன் 11ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளைஞன் . அதிகமாக சங்கீதம், நடனம் மற்றும் வாத்தியக்கருவிகள் பயின்று கொடிருக்கும் இளைஞர்கள் , 11,12ம் வகுப்புக்கள் வந்ததும் இசை வகுப்புகளுக்கு போவதை இறுதிப்பரீட்சை முடியும் வரை நிறுத்தி விடுவார்கள். பிள்ளைகள் விரும்பினாலும் பெற்றோர்கள் விடுவதில்லை! மாறாக சேயோன் மிகக்கடுமையான பயிற்ச்சியை மேற்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு அரங்கேற்றத்தை வேறு நிகழ்த்தி காட்டியிருக்கிறார். இது இசையின் மேல் இவர் கொண்டிருக்கும் நாட்டத்தையும் அபிமானத்தையும் காட்டுகின்றது. மிருதங்கத்தில் இவர் ஈடுபாட்டுக்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.



திரை விலகியதும்  அரங்கத்தை பார்த்தவர்களுக்கு ஒரு சந்தோஷமான வியப்பு காத்திருந்தது. அரங்கத்தை பார்த்ததும் யாழ்பாணத்து வயல் வெளியொன்றில் ஒரு சங்கீத கச்சேரி நடைபெறுவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியிருந்தார்கள். தூத்தே தெரிந்த பனை மரங்களும் நடுவே ஒரு கோயிலும் , முன்னே வயல் வரப்புகளும்….. ஆஹா! என்ன அழகான ஒரு கற்பனை. இதன் சூத்ரதாரி,கட்டட கலைஞர் திரு குணசிங்கம் என்று அறிகிறேன்.
 
இனி முக்கியாமான நிகழ்வுக்கு வருவோம். பக்கவாத்தியமாக மிருதங்கத்தை சேயோன் வாசிக்க, வாய்ப்பாட்டு பாடுவதற்கு பிரபல இசை வல்லுநர்  திரு ராம் பிரசாத்  வருகை தந்திருந்தார். அவரோடு வயலின் வாசிப்பதற்கு மேளக்காவேரி திரு தியாகராஜன் அவர்களும்  ,  கஞ்சிராவுடன்  நம் உள்நாட்டு கலைஞர் திரு ஜனகனும்  அமர்ந்திருந்தார். ஷோபா ஜெயமோகன் தம்பூரா கொண்டு சுருதி  மீட்டிகொண்டிருந்தார்.
 
இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகர் ,திரு ராம் பிரசாத் அவர்கள் தன்னுடைய கணீர் என்ற குரலில் ,  மிகவும் அருமையாகப்ப் பாடினார். எல்லோருக்கும் பரிச்சயமான விரிபோணி அட தாள வர்ணத்தோடு கச்சேரி ஆரம்பமானது. அந்த வர்ணத்துக்கு சேயோன் மிருதங்கம் வாசித்த விதத்திதிலேயே , தொடர்ந்து அவரது வாசிப்பு எப்படி இருக்க போகின்றது  என்று புரிந்து விட்டது. பாடகருடைய திறமைக்கு கொஞ்சம் கூட சளைக்காமல் துல்லியமாக வாசித்தார். தொடர்ந்து வீணை குப்பைய்யரின் விநாயக என்னும் கீர்த்தனை. அடுத்ததாக தியாகராஜ சுவாமிகளின் "எந்தரோ மகானுபாவுலு" என்ற பஞ்சரத்ன கிருதி. மிஹவும் எடுப்பான வாசிப்பு! அந்த கிருதியில் பாடப்பட்ட  ஸ் வரக்கோர்வைகளுக்கு ஏற்றாப்போல அருமையாக மிருதங்கம் சேயோனின் விரல்களில் விளையாடியது.
கண்டசாபு தாளத்தில் அமைந்த தாயே திரிபுரசுந்தரி என்ற சுத்தசாவேரி பாடலுக்கு, ராம் பிரசாத்தின் அழகான சங்கதிகளுக்கும் நடைகளுக்கும் ஏற்ற வண்ணம் சற்றும் சளைக்காமல் அத்தனை சங்கதிகளையும் மிருதங்கத்தில் வாசித்து தன வித்துவத்தை வெளிப்படுத்தினார்.
 
முக்கியமான பாடலாக "எந்துக்கு பேத்தல" என்ற தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனை. இதற்கு ராக  ஆலாபனை, நிரவல் ஸ்வரங்கள் என்று பாடகர் பாட, ஏற்றாற்போல மிருதங்கமும் இணைந்து பாடியது. முக்கியமாக நிரவல், ஸ்வரங்களின் போது சேயோன் வாசித்த விதம் மிஹவும் கச்சிதமாக இருந்தது. தொடர்ந்து வந்தது தனி ஆவர்தனம். ஒரு மிருதங்க வித்துவானின் திறமையைக் காட்டுவதற்கு  அருமையான ஒரு சந்தர்ப்பம். தன்னுடைய திறமையை பறை சாற்றுவது போல அருமையாக வாசித்தார்.


இடையே முன் வரிசையில் அமர்திருந்த குரு சுதந்திரராஜ் அவர்களையும், குரு மேளக்காவேரி பாலாஜியையும் பார்த்தேன். வழமையாக மானாக்கருடைய அரங்கேற்றத்தின் போது ஆசிரியர்கள் நாற்காலி நுனியில் உட்கார்ந்து பிழை வராமல் இருக்கவேண்டுமே என்று பயந்து கொண்டிருப்பார்கள். மாறாக இங்கே சேயோனின் ஆசான்கள் சிரித்த முகத்துடன் ஆறுதலாக  தாளம் போட்டு ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  தங்களது மாணவனது திறமையைப்ப் பற்றி அவர்களுக்குத்த் தெரிந்திருக்க வேண்டும்.
 
சேயோனுடன் கஞ்சிரா  வாசித்த ஜனகனைப்பற்றியும் இங்கே குறிப்பிடவேண்டும். மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. குரு  சுதந்திரராஜாவின் மகனும் மாணவனுமான ஜனகன் கஞ்சிரா  வாசித்த விதம் மிகவும் பாரட்டத்தக்கது. கஞ்சிரா வாசிப்பது பார்க்க இலகுவாக இருந்தாலும் மிஹக்கடினமான ஒரு தாள வாத்தியம். அதை அத்தனை அனாயசமாக ஜனகன் கையாண்டதற்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். இந்த இளைஞர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
அடதாளத்தில்  தொடங்கி, ஆதி தாளம் கண்டசாப்பு மிஸ்ரசாபு ரூபகம் என்று பல விதமான தாளங்களில் வாசித்து இறுதியாக 12 அக்ஷரங்களுடன் ஓரி வித்தியாசமான தாளத்தில் திருப்புகழுக்கு வாசித்தார்.. ( கேட்ட போது மிஸ்ரசாபும் மிஸ்ரா ஜம்பையும் கலந்த ஒரு தாளம் என்றார்கள்)
உண்மையில் இந்த நிகழ்வு ஒரு அரங்கேற்றமாகவே எனக்கு தென்படவில்லை. ஒரு தேர்ந்த மிருதங்க வித்துவான் வாசிக்கும் இசைக்கச்ரியாகத்தான் தெரிந்தது. குறை எதுவும் சொல்ல முடியாத எடுப்பான வாசிப்பு..

இறுதியாக கதனகுதூகல தில்லானா. அரங்கை அப்படியே களை கட்ட வைத்து, தூங்கப் போனவர்களையும்  தட்டியெழுப்பி விட்டது.
மிருதங்க வாசிப்புக்கு முக்கியமானது "கணக்கு"! குறிப்பிட்ட தாளங்களுக்கு மிகவும் கச்சிதமாகவும் விரைவாகவும் கணக்கு போட்டு வாசிக்க வேண்டும். சேயோனுக்கு எப்படி இந்த ஆற்றல் வந்தது என்று வியந்து கொண்டிருக்கும் போது இன்னுமொரு ஆச்சர்யம் காத்திருந்தது. சேயோன் கணிதத்தில் ஒரு  புலி என்று   சொன்னார்கள். மதமடிக்ஸ் ஒலிம்பியன் ஆக அவுஸ்த்ரேலியாவின் பிரதிநிதியாக கடந்த இரண்டு வருடங்கள் வந்திருந்தார் என் அறிந்ததும் தமிழன் என்ற முறையில் மிகவும் பெருமை படுகின்றேன். மேடையில் பேசிய திரு நந்தகுமார் அவர்கள் கூறியது போல சேயோனை பெறுவதற்கு பெற்றோர்கள் கொடுத்துவைத்தவர்களா அல்லது ராகவன் தம்பதியினரைப் பெற்றோராகப்பெறுவதற்க்கு சேயோன் கொடுத்து வைத்தவரா என்று தெரியவில்லை.
 
வயலின் வாசித்த மேலக்காவேரி திரு தியாகராஜனுடைய வயலின் வாசிப்பு அருமையாக இருந்தது. மனத்தை கொள்ளை  கொள்ளும் வகையில் மிஹவும் அடக்கமான ஒரு வாசிப்பு. ஹம்சநாதம் ராகத்தில் அவர் வாசித்த ராக ஆலாபனை  காதுகளில் இன்னும் ரீங்காரம் செய்கிறது.  திரு ராம் பிரசாத் ஆகட்டும் , தியாகராஜன் ஆகட்டும் தங்களுடைய இசை வித்துவத்தை காட்டாமல்  யாருக்காக வாசிக்கிறோம் பாடுகிறோம் என்பதை  உணர்த்து சேயோனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடியிருந்தார்கள்.
முக்கியமாக சேயோனின் இந்த வெற்றிக்கு காரண கர்த்தா அவருடைய குரு திரு சுதந்திரராஜ் அவர்கள். எத்தனையோ மிருதங்க வித்துவான்களை , புல்லாங்குழல் வல்லுனர்களை உருவாக்கி விட்டிருக்கிறார். மிஹவும் போற்றக்கூடிய ஒரு விடயம். கானலயம் சங்கீதக்கல்லூரி இன்னும் வளர்ந்து பற்பல இசை வல்லுனர்களை உருவாக்க பிரார்த்திக்கின்றோம்.
மேளக்காவேரி திரு பாலாஜி அவர்களின் வழி நடத்தல் சேயோனின் மிருதங்க இசை பயணத்தில் ஒரு பெரிய மகுடம். திரு பாலாஜி அவர்கள் கானலயத்தில் பயின்ற பல மாணவருக்கு உயர் தரமான மிருதங்க பயிற்ச்சியை அளித்திருக்கிறார் . அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
 
இந்த அரங்கேற்றத்தில் ஒரு சின்ன குறை. இதை கூறாமல் இருக்க முடியவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட ஒரு  கருத்து. அரங்கேற்றம் நிகழ்விற்கு வருபவர்கள் பலர் அழைப்பை ஏற்று வருகிறார்களே ஒழிய பலருக்கு  கர்நாடக சங்கீதம் தெரிதிருப்பதில்லை. இசையை ரசிக்க சங்கீதம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்றாலும். தமிழில்  பாட்டுக்கள் பெரிய  அளவில் இருந்தால் எல்லோரும் ரசிக்க கூடிய மாதிரி இருந்திருக்கும்.  தியாகராஜ கீர்த்தனைகளின் அழகும் பரிமாணமும் சொல்லில் அடங்காது. அத்தனை அழகு வாய்ந்தவை. ஆயினும் தமிழர்கள் பலர் கூடிய சபையில் தமிழ் பாட்டுக்களை கூடிய அளவில் பாடினால் இன்னும் எடுப்பாக எல்லோரும் ரசிக்கும்படி  இருந்திருக்கலாம். முக்கியமாக கச்சேரியின் முக்கியமான கீர்த்தனையாவது தமிழில் பாடியிருக்கலாம். மொழியும் புரியாமல் இசையும் விளங்காமல் சிலர் அரங்கில் தூங்கி வழிந்ததை பார்த்த போது மனதுக்கு  சங்கடமாக இருந்தது."என்த்கு பேத்தல" கீர்த்தனையை கேட்பதைவிட ஒரு அழகான  தமிழ் கீர்த்தனையை பாடியிருந்திருக்கலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
 
 இறுதியாக ஒரு மனநிறைவான நிகழ்வினை பார்த்த மகிழ்வோடு அரங்கை விட்டு வெளியேறினேன். வீட்டிற்கு சென்று பல மணி நேரமாகியும் சேயோனின் மிருதங்கம் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.
இந்த அரங்கேற்றத்தோடு நின்று விடாமல் சேயோன் தொடர்ந்து இன்னும் பயிற்ச்சி எடுத்து முன்னேற வேண்டும் என்று மிருதங்கக்கடவுளான நந்திதேவனை  வணங்கி நிற்கிறேன்.

No comments: